மாஸ்டர் 2ம் பாகத்தை விரும்பும் லோகேஷ் | ராம் பொத்தினேனி படத்தில் உபேந்திரா | இளையராஜா படத்தை மிஸ் செய்த கார்த்திக் சுப்பராஜ் | பென்ஸ் படம் பூஜையுடன் துவங்கியது | தோனி குறித்து நெகிழ்ந்த மீனாட்சி சவுத்ரி | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் தண்ணீருக்கடியில் அதிரடி சண்டைக்காட்சி | நம் வீரம் மிகுந்த ராணுவத்தை வணங்குகிறேன் : கமல் | ரஜினி நினைக்கும் விஷயம் | விக்னேஷ்சிவன், நயன்தாரா ஊடலா? | திருநெல்வேலியில் சிம்ரன் பேசியது ஏன்? |
10 படம் நடித்து முடித்து விட்டாலே ஆர்ப்பாட்டம் பண்ணுகிற நட்சத்திரங்களுக்கு மத்தியில் சத்தமே இல்லாமல் 100 படங்களில் நடித்து முடித்து விட்டார் பிரதாப் போத்தன். தற்போது பிரதாப் போத்தன் மலையாளத்தில் நடித்து வரும் ஒன்சப்பானிய டைம் என்ற மலையாளப்படம் அவரது 100வது படம். இதில் அவர் 70 வயது முதியவராக நடிக்கிறார். முதிய தம்பதிகளின் கஷ்டமான வாழ்க்கையை சொல்லும் படம். அவரது மனைவியாக ஸ்ரீலட்சுமி நடிக்கிறார்.
"100 படங்கள் வரை ரசிகர்கள் மனதில் நான் நிலைத்திருப்பது அபூர்வமான விஷயம். ரசிகர்களுக்கும், இறைவனுக்கும் நன்றி. போட்டிகள் நிறைந்த சினிமா உலகில் நான் நிலைத்து நிற்பதற்கு ரசிகர்கள்தான் காரணம். எனது 100 வது படத்தை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறேன்" என்று பிரதாப் தனது பேஸ்புக்கில் எழுதியிருக்கிறார்.
100 படங்களை எட்டியிருக்கும் பிரதாப்பை வாழ்த்துவதோடு அவரைப் பற்றி ஒரு சின்ன பிளாஷ் பேக் ஓட்டிப் பார்த்துவிடலாமா...
ஊட்டி கான்வெண்டிலும், சென்னை கிறிஸ்டியன் கல்லூரியிலும் படித்த பிரதாப் போத்தன் பிறந்தது திருவனந்தபுரத்தில். அவரது அண்ணன் ஹரிபோத்தன், மலையாளத்தில் பெரிய டைரக்டர். அண்ணன் வழியில் தம்பிக்கும் சினிமா மீது ஆசை. படிக்கும்போதே நாடகம் போட்ட பிரதாப் விளம்பர கம்பெனியில் சேர்ந்து பணியாற்றினார். அவ்வப்போது நாடகங்கள் நடத்துவார். அதில் ஒரு நாடகத்தில் பிரதாப்பின் நடிப்பை பார்த்த மலையாள இயக்குனர் பரதன் அவரை அரவம் என்ற மலையாளப் படத்தில் அறிமுகப்படுத்தினார். அந்தப் படத்தை பார்த்துவிட்டு பாலுமகேந்திரா தனது அழியாத கோலங்கள் படத்தில் அறிமுகப்படுத்தினார். அதைப் பார்த்து விட்டு கே.பாலச்சந்தர் வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் நடிக்க வைத்தார். இப்படித்தான் ஆரம்பித்தது பிரதாப்பின் சினிமா வாழ்க்கை.
மூடுபனி, கரையெல்லாம் செண்பகப்பூ, குடும்பம் ஒரு கதம்பம், தில்லு முல்லு, வாழ்வே மாயம், சிந்து பைரவி படங்கள் பிரதாப்புக்கு தமிழில் முக்கியமான படங்கள். மலையாளப் படங்களில்தான் அதிகம் நடித்துள்ளார். தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
மீண்டும் ஒரு காதல் கதை படத்தின் மூலம் இயக்குனரானார். அந்த படம் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை குவித்தது. ஜீவா, வெற்றி விழா, மைடியர் மார்த்தாண்டன், சீவலப்பேரி பாண்டி உள்பட 12 படங்களை இயக்கி உள்ளார். சில காலம் சினிமாவை விட்டு விலகி இருந்த பிரதாப் போத்தன். மும்பை மற்றும் சென்னையில் விளம்பர கம்பெனிகள் நடத்தி வந்தார். இப்போது மீண்டும் மலையாளத்தில் பிசியாக நடிக்க ஆரம்பித்துவிட்டார். 100வது படத்தையும் தொட்டுவிட்டார்.
சைக்கோத்தனமாக அல்லது அப்நார்மலான கேரக்டர்களிலேயே பிரதாப் நடிப்பதால் நிஜத்திலும் அவர் அப்படிபட்டவர்தான் என்று சிலர் நினைப்பார்கள். ஆனால் நிஜத்தில் நிறைய கூச்சசுபாவம் உள்ளவர், அமைதியையும், தனிமையையும் விரும்புகிறவர். அதனால் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டேன். இதுவரை பிரதாப் பொது மேடைகளிலோ, சினிமா விழாக்களிலோ மேடையேறி பேசியது இல்லை. விருதுகளை வாங்க மட்டுமே மேடை ஏறியிருக்கிறார்.
பிரதாப்பின் பூர்வீக சொத்து சம்பந்தமாக ஒரு வழக்கு பல ஆண்டுகளாக நடந்து வந்தது. சில வருடங்களுக்கு முன்பு பிரதாப்புக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. கோடிக் கணக்கில் மதிப்பிருந்த அந்த சொத்தை விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தை தனது உறவினர்களில் வறுமையில் வாடுகிறவர்களை தேடிப்பிடித்து பிரித்து கொடுத்துவிட்டு வந்துவிட்டார். இப்படி பல சுவாரஸ்யமான செய்திகள் பிரதாப்பின் வாழ்க்கையில் இருக்கிறது.
பிரதாப்பின் கலைப் பணி தொடர வாழ்த்துக்கள்!!