3

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்
இயக்கம் - கவுதம் வாசுதேவன் மேனன்
இசை - ஏஆர் ரகுமான்
நடிப்பு - சிம்பு, சித்தி இட்னானி
வெளியான தேதி - 15 செப்டம்பர் 2022
நேரம் - 2 மணி நேரம் 53 நிமிடம்
ரேட்டிங் - 3/5

'ரவுடியிசம், தாதா, கேங்ஸ்டர்' வகைப் படங்களுக்கு தமிழ் சினிமாவில் முன்னுதாரணமாய் இருக்கும் படம் முப்பது வருடங்களுக்கு முன்பு வெளிவந்த 'நாயகன்'. அது ஒரு மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கைப் படமாக ஒரு வாழ்வியலைச் சொன்ன படமாக அமைந்தது. அதற்கடுத்து வந்த 'பாட்ஷா' படம் ஒரு மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கைப் படமாக ஒரு கமர்ஷியல் ஆக்ஷன் படமாக அமைந்தது.

அந்தப் படங்களின் பாதிப்பு இல்லாமல் அதற்கடுத்து வந்த எந்த ஒரு 'கேங்ஸ்டர்' படமும் வந்ததில்லை. ஏன், சமீபத்தில் வந்து பெரிய வரவேற்பைப் பெற்ற கன்னடப் படமான 'கேஜிஎப் 2' கூட அதில் அடக்கம்தான். இந்த 'வெந்து தணிந்தது காடு' படம் கூட அப்படிப்பட்ட ஒரு படம்தான். ஆனால், கவுதம் வாசுதேவ் மேனன் ஸ்டைல் படம்.

தென் தமிழ்நாடு பக்கம் இருந்து பிழைப்பைத் தேடி மும்பை சென்று அங்கு ஒரு தாதாவாக வளரும் வரையில் 'முத்து' என்ற ஒரு இளைஞனின் வாழ்வியல் கமர்ஷியல் ஆக்ஷன் படம்தான் இது. முதல் பாதி வரை ஊரிலிருந்து புறப்பட்டு மும்பை சென்று பரோட்டா கடையில் வேலைக்குச் சேர்ந்த முத்துவின் வாழ்வியலை அழுத்தமாகப் பதிய வைத்திருக்கிறார் இயக்குனர். இரண்டாம் பாதியில் ஒரு தாதாவுக்கு 'பாடிகார்ட்' ஆக வளர்ந்து நிற்கும் அதே முத்துவின் ஆக்ஷனை சராசரியாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் கவுதம்.

முத்து என்கிற முத்துவீரன் ஆக மாறுபட்ட தோற்றத்தில் சிம்பு. ஊர்ப் பையனாக ஒரு ஏழை இளைஞனாக அதற்கான உடல் மொழி, நடை, உடை, பாவனை என தன்னை முழுவதுமாக மாற்றிக் கொண்டுள்ளார் சிம்பு. இதற்கு முன்பு சிம்பு இப்படியெல்லாம் நடித்ததில்லையே என ஆச்சரியப்பட வைக்கிறார். ஒரு இடத்தில் கூட சிம்புவின் முந்தைய படங்களின் நடிப்பு, கதாபாத்திரம் மனதிற்குள் வரவில்லை. முத்து என்கிற ஒரு தென் தமிழ்நாடு இளைஞனை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார். நெல்லைத் தமிழ்ப் பேச்சு, தாங்கித் தாங்கி நடப்பது போல ஒரு நடை, அடிக்கடி இடது கையால் முகத்தைத் துடைப்பது, சட்டை காலரில் முகத்தைத் துடைப்பது என நிறையவே கதாபாத்திரத்தை உள் வாங்கியிருக்கிறார். இடைவேளைக்குப் பின் அப்படியே முழுமையான மாற்றம். ஒரு தாதாவுக்கு அடியாள், பாடிகார்ட் என பல படங்களில் பார்த்த கதாபாத்திரம் என்றாலும் அதிலும் தனித்துத் தெரிகிறார் சிம்பு. இரண்டாம் பாகத்தில் என்ன அதிரடி செய்யப் போகிறார் என அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் இருப்பதைத் தியேட்டரில் புரிந்து கொள்ள முடிகிறது.

மும்பையில் அடிதடி, கட்டப் பஞ்சாயத்து என ரவுடியிச வேலைகளைச் செய்பவர்களுக்கு நடக்கும் போட்டிதான் படத்தின் மையக்கரு. ஒரு கூட்டம் தமிழர்கள், மற்றொரு கூட்டம் மலையாளிகள். அதில் தமிழர்கள் கூட்டத்திற்காக வேலை செய்பவராக மாறுகிறார் சிம்பு. அந்தக் கூட்டத்தின் தலைவனாக நடித்திருப்பவர் புது நடிகர் சரா. புதுமுகம் என்று சொல்ல முடியாதபடி நடித்திருக்கிறார். மலையாளிகள் கூட்டத்தின் தலைவனாக சித்திக். இவரும் மிரள வைக்கிறார்.

சிம்புவின் காதலியாக சித்தி இத்னானி. இவருக்கும் இடையில் அதிகமான காதல் காட்சிகள் இல்லையென்றாலும் அந்த ஒரு சில காட்சிகளிலேயே காதலை அழுத்தமாக வெளிப்படுத்தும் காட்சிகளாக அமைந்துள்ளன. சித்தியின் நடிப்பும் சிறப்புதான். புதுமுகம் என்று சொல்ல முடியாத நடிப்பு.

அப்புக்குட்டி, நீரஜ் மாதவ், ராதிகா சரத்குமார் இவர்களுக்கான வாய்ப்புகள் குறைவுதான் என்றாலும் அவர்கள் கதாபாத்திரங்களைப் பற்றி பேச வைக்கிறார்கள்.

'மறக்குமா நெஞ்சம்..., மல்லிப்பூ...' ஆகிய மறக்க முடியாத பாடல்களைப் பதிவு செய்துள்ளார் ஏஆர் ரகுமான். பின்னணி இசையிலும் வேறு ஒரு உலகத்திற்குக் கொண்டு சென்றுள்ளார். சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு மும்பையை புதிதாகக் காட்டுகிறது. ராஜீவனின் புரொடக்ஷன் டிசைன் படத்திற்கு மிக முக்கியமானது. உத்தரா மேனனின் ஸ்டைலிங், காஸ்ட்யூம்ஸ் சிம்புவை மாற்றியதில் பெரும் பங்கு வகிக்கிறது.

இடைவேளைக் காட்சிக்கு தியேட்டரில் அப்படி ஒரு கைத்தட்டல். அது போல் மேலும் சில காட்சிகள் புதிதாக அமைந்து ரசிக்க வைக்கிறது. சில காட்சிகள் இப்படித்தான் அடுத்து நகரும் என யூகிக்க முடிவது மைனஸ். இதற்கு முன்பு பல படங்களில் பார்த்த சம்பவங்கள் இதிலும் இடம் பெற்றுள்ளது. ஆனாலும், கவுதம் மேனனின் மேக்கிங் ஸ்டைலும், சிம்புவின் நடிப்பும் படத்தைக் காப்பாற்றுகிறது. சிம்பு ரசிகர்களுக்கு படம் அதிகம் பிடிக்கலாம். மற்ற ரசிகர்களுக்கு வழக்கமான ஒரு கேங்ஸ்டர் படமாகப் பிடிக்கலாம். இரண்டாம் பாகத்தில் 'கேஜிஎப்' சாயல் நிறைய வருமோ என கொஞ்சம் அதிர்ச்சியாக உள்ளது.

வெந்து தணிந்தது காடு - பற்ற வைத்த நெருப்பொன்று…

 

வெந்து தணிந்தது காடு தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

வெந்து தணிந்தது காடு

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

மேலும் விமர்சனம் ↓