நடிப்பு - ராஜன் தேஜேஸ்வர், தருஷி, சமக் சந்திரா மற்றும் பலர்
தயாரிப்பு - திவ்ய ஷேக்த்ரா பிலிம்ஸ்
இயக்கம் - ரவி அப்புலு
இசை - சித்தார்த் விபின்
வெளியான தேதி - 18 மே 2018
நேரம் - 2 மணி நேரம் 10 நிமிடம்
ரேட்டிங் - 2.25/5
தமிழ் சினிமாவில் வருடா வருடம் புதுமுகங்கள் நடித்து வெளிவரும் படங்கள் அதிகமாகவே வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், சில படங்களைத்தான் ரசிகர்களைச் சென்றடையும் விதத்தில் செயல்படுத்துகிறார்கள். இந்த 'செயல்' படமும் அப்படிப்பட்ட ஒரு படம்தான்.
விஜய், ரிச்சா பலோட் நடித்து சூப்பர் ஹிட் பாடல்களுடன் 2001-ம் ஆண்டு வெளிவந்த 'ஷாஜகான்' படத்தை இயக்கிய ரவி, அவருடைய பெயரை ரவி அப்புலு என மாற்றிக் கொண்டு 'செயல்' படத்தை இயக்கியிருக்கிறார்.
வட சென்னை பகுதியைச் சேர்ந்தவர் ராஜன் தேஜேஸ்வர். அந்தப் பகுதியைச் சேர்ந்த தாதாவான சமக் சந்திரா-வை ஒரு முறை பலமாக அடித்துவிடுகிறார். அதனால், அவமானமடைந்த தாதா, மார்க்கெட் ஏரியாவையும் அவருடைய கட்டுப்பாட்டில் இருந்து இழக்கிறார். பதிலுக்கு ராஜன் தேஜேஸ்வரை அவர் அடி வாங்கிய அதே இடத்தில் வைத்து அடித்ததால் தான் இழந்த ஏரியாவைப் பெற முடியும் என அவருடைய குரு மூலம் சொல்லப்படுகிறது. தாதா சமக் சந்திரா, ராஜன் தேஜேஸ்வரை அடித்து பழி தீர்த்துக் கொண்டாரா, இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
ஒரு தாதா கதையை கலகலப்பாகக் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ரவி அப்புலு. கூடவே காதல், மெசேஜ் என வழக்கமான தடத்திலிருந்து கொஞ்சம் விலகி வித்தியாசப்படுத்துகிறார். கல்வியின் சிறப்பை சொன்னதற்காகத் தனியாகப் பாராட்டலாம். மற்றபடி இது ஆக்ஷ்ன் படமா அல்லது காமெடி படமா அல்லது சென்டிமென்ட் படமா என பிரித்துப் பார்க்க முடியாமல் குழப்பி அடித்திருக்கிறார் இயக்குனர்.
புதுமுகம் ராஜன் தேஜேஸ்வர், வட சென்னை இளைஞனாக பொருத்தமாகத் தெரிகிறார். ஆனால், அவர் பேசும் தமிழில், தெலுங்கு வாடை நிறைய அடிக்கிறது. ஒரு இடத்தில் கூட தமிழ், தமிழாக இல்லை. யாரையாவது டப்பிங் கொடுக்க வைத்திருக்கலாம். மற்றபடி அதிரடி ஆக்ஷ்னில் புயலாய் பாய்ந்திருக்கிறார். நடிப்பில் முதல் படம் என்று சொல்ல முடியாத முயன்ற வரை நடித்திருக்கிறார்.
நாயகியாக தருஷி, அதிக வேலையில்லை. ஹீரோவைப் பார்த்து வழக்கம் போல் கோபப்படுகிறார், பின்னர் காதல் கொள்கிறார். நாயகனின் அம்மாவாக ரேணுகா, வழக்கம் போல மீட்டருக்கு மேலேயே நடித்துத் தள்ளுகிறார்.
வில்லனாக சமக் சந்திரா, அவரை வில்லன் என ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றாலும் அவருடைய தோற்றமும், அவருக்குக் கொடுக்கப்பட்ட டப்பிங்கும் அதை ஏற்றுக் கொள்ள வைக்கின்றன.
நகைச்சுவைக்கு முனிஷ்காந்த், சுப்பிரமணி, ஆனால் சிரிப்புதான் வரவில்லை. இருப்பினும் தாதாவுடன் இருக்கும் சிலர் சிரிக்க வைக்கிறார்கள். தாதா சமக் சந்திராவின் மனைவியாக வினோதினி. தாதா கணவரையே புரட்டி எடுக்கும் கதாபாத்திரம்.
சித்தார்த் விபின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் என்று சொல்லும் அளவிற்குக் கூட இல்லை. பின்னணி இசை பரவாயில்லை. இளையராஜாவின் ஒளிப்பதிவும், கனல் கண்ணனின் சண்டைக் காட்சிகளும் குறிப்பிட வேண்டியவை.
முடிந்தவரையில் போரடிக்காத அளவிற்குப் படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர். புதுமுகங்கள் படம் என யோசிக்காமல் சென்றால் கொஞ்சமாக ரசித்துவிட்டு வரலாம்.
செயல் - கல்வியின் சிறப்பு