எனை நோக்கி பாயும் தோட்டா,ennai nokki paayum thotta

எனை நோக்கி பாயும் தோட்டா - பட காட்சிகள் ↓

Advertisement
3.5

விமர்சனம்

Advertisement

எனை நோக்கி பாயும் தோட்டா - விமர்சனம்


தயாரிப்பு - எஸ்கேப் ஆர்ட்டிஸ் மோஷன் பிக்சர்


இயக்கம் - கௌதம் மேனன்


இசை - தர்புகா சிவா


நடிப்பு - தனுஷ், சசிகுமார், மேகா ஆகாஷ்


தமிழ் சினிமாவில் தாமதமாக வரும் படங்களுக்குப் பெரிய வரவேற்பு இருக்காது என்று சொல்வார்கள். ஆனால், படம் வருமா, வராதா என்ற கேள்வி படத்தின் முதல் காட்சி ஆரம்பிக்கும் வரையிலும் இருந்த சூழ்நிலையில் இந்தப் படத்தைப் பார்க்க ரசிகர்கள் காலை 8 மணிக்கே திரண்டிருந்தது ஆச்சரியமாகத்தான் இருந்தது.



இயக்குனர் கௌதம் மேனன், நாயகன் தனுஷ் ஆகியோரது திறமை மீது ரசிகர்கள் வைத்திருக்கும் எதிர்பார்ப்புதான் இதற்குக் காரணம். இந்த எதிர்பார்ப்பை இருவரும் பொய்யாக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.



படத்தின் கதையைச் சொல்ல வேண்டுமென்றால் ஒரு பத்திக்குள் அடக்கிவிட முடியாது. கொஞ்சம் நீட்டி முழக்கித்தான் சொல்ல வேண்டியதிருக்கும்.



சசிகுமார், தனுஷ் அண்ணன் தம்பிகள். இளம் வயதிலேயே காதலியின் மரணத்தால் வீட்டை விட்டு வெளியேறி எங்கோ சென்று விடுகிறார் சசிகுமார். இஞ்சினியரிங் கல்லூரியில் படிக்கும் தனுஷுக்கும் அந்தக் கல்லூரியில் படப்பிடிப்புக்காக வரும் நடிகை மேகா ஆகாஷுக்கும் பார்த்ததும் காதல் பற்றிக் கொள்கிறது. ஆதரவற்ற மேகாவைப் படிக்க வைத்து வளர்த்தவர்தான் மேகாவை வைத்து படமெடுத்து பணம் சம்பாதிக்க நினைக்கிறார். அவரது மிரட்டலால் தனுஷை விட்டுப் பிரிகிறார் மேகா. நான்கு வருடங்கள் கழித்து மேகாவிடமிருந்து தனுஷுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு. தனுஷ் அண்ணன் சசிகுமார் ஆபத்தில் இருக்கிறார், உடனே மும்பை வரவும் என்கிறார் மேகா. மும்பை செல்கிறார் தனுஷ். அது வரையில் காதலில் பாய்ந்த கதை ஆக்ஷனில் பாய்கிறது. அந்த ஆக்ஷன் என்ன என்பதுதான் 'எனை நோக்கி பாயும் தோட்டா'.



கௌதம் மேனன் படம் என்றாலே இப்படித்தான் இருக்கும் என்ற வரையறைக்குள்தான் படம் இருக்கிறது. ஆங்கிலம் பேசும் நாயகன், நாயகி, ஸ்டைலிஷான கதாபாத்திரங்கள். அற்புதமான விஷுவல், மனதை வருடும் இசை என இளம் ரசிகர்களிடம் தனக்கான இடத்தை இந்தப் படத்திலும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.



'அசுரன்' படத்தில் ஒரு மாறுபட்ட தனுஷைப் பார்த்துவிட்டு, இந்தப் படத்தில் ரகு கதாபாத்திரத்தில் பார்ப்பது நிச்சயம் வித்தியாசமாகத்தான் இருக்கும். மேகா ஆகாஷை முதன் முதலில் பார்த்து காதல் வயப்படுவதில் ஆரம்பமாகும் அவரது இயல்பான நடிப்பு காதல் காட்சிகளில் அப்படியே தொடர்கிறது. ஆக்ஷனுக்கு மாறியதும் அதற்கான மாற்றத்தையும் சரியாகவே கொடுத்திருக்கிறார். தனுஷை கௌதம் மேனன் இயக்கி உள்ளார் என்று சொல்வதை விட கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.



மேகா ஆகாஷ், அந்த ஒரு சிரிப்பே போதும், மறு வார்த்தை பேச முடியவில்லை. கிளாமர் காட்டாமல் லேசான சிரிப்பில், காந்தப் பார்வையில் ஒரு நாயகியால் ரசிகர்களைக் கவர முடியும் என மேகா நிரூபித்திருக்கிறார். ஒரு ஏக்கத்துடனேயே இருக்கும் அவரது குரலும் அவருக்கு பிளஸ் பாயின்ட். மேகாவை சரியாக அடையாளப்படுத்த எப்போதே வந்திருக்க வேண்டிய படம், தாமதமாக வந்தாலும் மேகாவை, ஆகாவென்றே சொல்ல வைத்திருக்கிறது.



தனுஷ் அண்ணனாக சசிகுமார். கிராமத்துக் கதாபாத்திரங்களிலேயே அவரை அதிகம் பார்த்துவிட்ட ரசிகர்களுக்கு சசிகுமார் இங்கிலீஷில் வசனம் பேசுவது கொஞ்சம் சிரிப்பாக இருக்கிறது. அவர் கொடைக்கானலில் இன்டர்நேஷனல் ஸ்கூலில் படித்தவர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். மும்பை போலீசில், டெபுடி போலீஸ் கமிஷனர் ஆக இருக்கும் கதாபாத்திரத்தில் சசிகுமார். இவரது கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் தெளிவாகச் சொல்லி இருக்கலாம். சஸ்பென்ஸ் வைக்க வேண்டும் என்பதற்காக அதில் கொஞ்சம் குழப்பியிருக்கிறார்கள்.



தர்புகா இசையில் 'மறு வார்த்தை பேசாதே' மறுமுறை, மறுமுறை எனக் கேட்க வைக்கும். இடைவேளைக்குள்ளாக அடிக்கடி பாடல்கள், நன்றாக இருந்தாலும் அவற்றைத் தவிர்த்திருக்கலாம். பின்னணி இசையில் தனி கவனம் செலுத்தியிருக்கிறார் தர்புகா. கௌதம் படம் என்றாலே டெக்னிக்கல் விஷயங்கள் மிரட்டும். அதற்கு ஒளிப்பதிவாளர்களும், படத் தொகுப்பாளரும் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள்.



இடைவேளை வரை தனுஷ், மேகாவின் அழகான காதலால் படம் சுவாரசியமாக நகர்கிறது. அடிக்கடி முத்தக் காட்சிகள் வேறு, ரசிகர்களை கூக்குரலிட வைக்கின்றன. இடைவேளைக்குப் பின் கதை அப்படியே ஆக்ஷனை நோக்கி தடம் மாறுகிறது. ஆயுதக் கடத்தல், போலீசார் அதற்கு உடந்தை, அண்ணனைக் காப்பாற்ற தம்பி களம் இறங்குகிறார் என தோட்டா நேராகப் பாயாமல் கொஞ்சம் வளைந்து நெளிந்து சென்று குறி தப்பி பாய்கிறது. நம்ப முடியாத சில ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்ளை சிரிக்க வைக்கின்றன.


 

பட குழுவினர்

எனை நோக்கி பாயும் தோட்டா

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

தனுஷ்

டைரக்டர் கஸ்தூரி ராஜாவின் 2வது மகன்தான் தனுஷ். 1983, ஜூலை 28ம் தேதி பிறந்த இவரது நிஜப்பெயர் வெங்கடேஷ் பிரபு. இவரது அண்ணன் செல்வராகவன் திரைக்கதையில் அப்பா கஸ்தூரி ராஜா இயக்கத்தில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அந்த படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து செல்வராகவனின் இயக்கத்தில் நடித்த காதல் கொண்டேன் படமும் சூப்பர் ஹிட் ஆனது. இதனைத் தொடர்ந்து நடித்த திருடா திருடி, தேவதையை கண்டேன், சுள்ளான், திருவிளையாடல் ஆரம்பம், குட்டி, பொல்லாதவன், உள்ளிட்ட படங்களின் மூலம் முன்னணி நடிகர் அந்தஸ்துக்கு உயர்ந்தார். இரண்டு தேசிய விருது வென்றுள்ள தனுஷ் தமிழ் சினிமா மட்டுமல்லாது ஹிந்தி சினிமா, ஹாலிவுட் படத்திலும் முத்திரை பதித்துள்ளார்.

மேலும் விமர்சனம் ↓