விஜய்க்கு சிலை வைத்த கர்நாடக ரசிகர்கள் | பிக்பாஸ் வெற்றியாளர்கள் சாதித்தார்களா? | ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை | ஒழுங்குமுறையற்ற ஓ.டி.டி. தளங்கள் : குடும்ப கட்டமைப்பு சிதையும் அபாயம் | கமலுக்கு காலில் அறுவை சிகிச்சை : நலமாக இருப்பதாக மகள்கள் அறிக்கை | 'மாஸ்டர்' தமிழ்நாட்டில் மட்டும் 75 கோடி வசூல் | பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் |
மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியமிற்கு நினைவஞ்சலி கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பல திரைக்கலைஞர்கள் பங்கேற்று அவர் குறித்த நினைவுகளை பகிர்ந்ததோடு அவருக்கு புகழாரம் சூட்டினர். அதன் விபரம் வருமாறு :
கண்கலங்கிய பார்த்திபன்
பார்த்திபன் பேசுகையில், என் சோகத்தை வெளிப்படுத்த இந்த மைக்கிற்கு சக்தி கிடையாது. எஸ்.பி.பிக்கு காதல் மனைவியாக 50 ஆண்டுகள் இந்த மைக் இருந்துள்ளது. அதன் சோகத்தை யார் சொல்ல முடியும். மனதிற்கு நெருக்கமான மனிதர் எஸ்பிபி. இன்னும் அதிலிருந்து என்னால் மீண்டும் வர முடியவில்லை. எனக்கும், சரணுக்கும் பெயர் வேண்டுமானால் வேறாக இருக்கலாம். ஆனால் எஸ்பிபி மீது அவரும், நானும் வைத்த அன்பு ஒன்று தான் என கண் கலங்க பேசினார்.
சித்ரா
பாடகி சித்ரா பேசுகையில், இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் பேச வருவேன் என நினைக்கவில்லை. எஸ்.பி.பி. சாருடன் நிறைய பாடல்கள் பாடியிருக்கிறேன். அவரிடம் நிறைய கற்றிருக்கிறேன். சக மனிதர்களிடம் எப்படி பேசணும் என்று அவரிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.
வித்யாசாகர்
இசையமைப்பாளர் வித்யாசாகர் பேசுகையில், பாட்டு பாடி மட்டும் ஒரு மனிதன் சாதிக்க முடியாது. அவரின் அன்பு, பண்பு, மனித நேயம் இனி யாருக்கும் இருக்குமா என தெரியவில்லை. இசையமைப்பாளர்களின் உணர்வை அறிந்து பாடுபவர் எஸ்.பி.பி., உங்களை நாங்கள் மிகவும் இழந்து வருந்துகிறோம் சார் என்றார்.
சிவக்குமார்
சிவக்குமார் பேசுகையில், ''முழுவதுமாக வாழ்ந்த ஒரு மனிதர் எஸ்.பி.பி. 50 ஆண்டுகளாக தான் சுவாசித்த காற்றையெல்லாம் பாட்டாக தந்தவர். இல்லாவிட்டால் 42 ஆயிரம் பாடல்களை அவர் தந்திருக்க முடியுமா'' என்றார்.
நடிகர் கார்த்தி
கார்த்தி பேசுகையில், ''எனது உணர்வுகளை வார்த்தைகளால் சொல்ல தெரியவில்லை. அவருடைய பாடல்களை கேட்டு வளர்ந்தவன், அந்தவகையில் எனக்குள் அவர் வாழ்கிறார். என்னை பொறுத்தவரை வானம், பூமி, காற்று போன்று இயற்கையாக தான் அவரை பார்க்கிறேன். என் அப்பாவுக்கு அவர் பாடிய பாடலை தான் என் பொண்ணுக்கும் நான் பாடி தூங்க வைக்கிறேன். அவரின் குரல் எப்படி இனிமையோ அதைப்போன்று அவரும் இனிமையான மனிதர். சக மனிதரை எப்படி நேசிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை அவரிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும் என எனக்குள் நானே தினமும் சொல்கிறேன். என் உயிர் உள்ள வரை உங்களை என் இதயத்தில் வைத்திருப்பேன்'' என்றார்.
நடிகர் ஜெயராம்
ஜெயராம் பேசுகையில், ''மிகவும் உணர்ச்சிகரமான தருணம் இது. முதன்முதலில் 1988ல் அவரை சந்தித்தேன். திருமணத்திற்கு பின் என் மனைவியை சென்னைக்கு கூட்டி வந்தேன். அப்போது அவர் என்னிடம் கேட்ட வார்த்தை எஸ்.பி.பி.யை நேரில் காண முடியுமா என்று. ஐந்தாறு முறை அவரை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளேன். அதன்பின் கனடாவில் ஒரு இசை நிகழ்ச்சி நடப்பதை கேட்டு அங்கு போய் அவரை சந்தித்தோம். அதன்பின் நிறைய மேடைகளில் அவருடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் பாடிய பாடல்களுக்கு நான் வாயசைத்துள்ளேன் என்பதே எனக்கு பெருமை'' என்றார்.
இயக்குனர் பி.வாசு
வாசு பேசுகையில், ''என்ன பேசுவது, எப்படி பேசுவது என்று தெரியாத ஒரு இடம் இது. செப்., 25ம் தேதி உலகத்தையே அழ வைத்து சென்றுவிட்டார் எஸ்.பி.பி. நான் உதவி இயக்குனராக இருந்த காலத்தில் இருந்து அவரோடு என் பழக்கம். இதுவரை அவர் என்னை வாசு என அழைத்ததில்லை. கண்ணா என்று தான் அழைப்பார். எஸ்.பி.பி.க்கு நாம மட்டும் ரசிகர் இல்லை கடவுளே ரசிகர். அதனால் தான் சங்கரா என பாடிய பாலசுப்ரமணியமை தன் மடியில் தூக்கி கொண்டு போய் விட்டார். எஸ்.பி.பி இடத்திற்கு சரணை கொண்டு வர வேண்டும். அதற்கு திரையுலகினர் ஆதரவு தர வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.
கவிஞர் பிறைசூடன்
பிறைசூடன் பேசுகையில், ''எனது நூற்றுக்கணக்கான பாடல்களை எஸ்.பி.பி. பாடியிருக்கிறார். கர்வம் இல்லாமல் சர்வமும் இசையாக வாழ்ந்தவர் எஸ்.பி.பி. என்றைக்காவது ஒருநாள் நாம் இந்த மண்ணை விட்டு போக வேண்டும் என்று இறைவன் வகுத்துள்ளான். அதன்படி நடக்கிறது. நீங்கள் எஸ்.பி.பி.க்கு மணிமண்டபம் கட்டலாம், அவர் பெயரில் விருது கொடுக்கலாம். அதனால் அவரின் ஆன்மா நிச்சயம் சாந்தி அடையாது. உங்களுக்குள் இருக்கும் இசையை வெளிக் கொண்டு வந்து அவரின் பெயரை காப்பாற்றுங்கள் சரண். அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது. எஸ்.பி.பி. ஒரு மகா மனிதர். அவருக்கு இறப்பு கிடையாது. இந்த காற்று உள்ள வரை, மொழிகள் உள்ள வரை எஸ்.பி.பி. உயிர் வாழ்வார்'' என்றார்.
பாடகர் மனோ
மனோ பேசுகையில், ''எனக்கு அவர் தான் உலகம். 14 வயதிலிருந்து அவரை பார்த்து வளர்ந்தேன். எனக்கு அவர் ஒரு பல்கலைக்கழகம். அவரைப் பற்றிய ஆயிரக்கணக்கான நினைவுகள் என்னுடன் பயணிக்கிறது. அதை சொல்ல வார்த்தைகள் இல்லை'' என்று கூறி கண்கலங்கிய படியே மேடையை விட்டு இறங்கினார்.
காட்ரகட்ட பிரசாத்
தயாரிப்பாளர் காட்ரகட்ட பிரசாத் பிரசாத் பேசுகையில், ''எஸ்.பி.பி.க்கு பாரத ரத்னா வழங்க வேண்டும். இதற்கு தென்னிந்திய முதல்வர்கள் அனைவரும் மத்திய அரசுக்கு வலியுறுத்த வேண்டும். ஏற்கனவே ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அனுப்பி உள்ளார். இதேப்போன்று மற்றவர்களும் கோரிக்கை வைக்க வேண்டும். தினமும் காலை எழும்போதே அவரது பாடல்கள் தான். ஒரு நாளைக்கு குறைந்தது அவரின் 15 பாடல்களாவது நாம் தினமும் ஏதோ ஒரு வகையில் கேட்கிறோம் என்றார்.
பாரதிராஜா
நிகழ்வில் பாரதிராஜாவின் வீடியோ ஒளிபரப்பட்டது. அதில் அவர் பேசுகையில், ''எஸ்.பி.பி. நல்ல கலைஞன் என்பதையும் தாண்டி நல்ல மனிதர். எனக்கு நல்ல நண்பன். அவரிடம் துளி கூட கர்வம் இருந்தது கிடையாது. சின்ன குழந்தைக்கு கூட மரியாதை தருபவர். கோடிக்கணக்கான நபர்கள் பிரார்த்தனை செய்தோம். அவர் குணமாகி வர வேண்டும் என்று, ஆனால் அது நடக்கவில்லை. எஸ்.பி.பி. மறைவு, சரண் குடும்பத்திற்கு மட்டும் இழப்பு அல்ல. ஒட்டுமொத்த இசை உலக்கே இழப்பு. அந்த இழப்பை ஈடு செய்ய முடியாதது. எஸ்.பி.பி.யின் பெருமையை சரண் காப்பாற்ற வேண்டும். யாராவது ஒருவரிடம் எப்படி நீங்கள் வாழ வேண்டும் என்று சொன்னால் அவர்களிடம் எஸ்.பி.பி. போல வாழ வேண்டும் என்பேன்'' என்றார்.
மயில்சாமி
நடிகர் மயில்சாமி பேசுகையில், ''அண்ணன் எஸ்.பி.பி உடன் உலகம் முழுக்க நான் பயனித்துள்ளேன். அவருக்கு மரணம் என்பதே கிடையாது. அவரின் பாடல்கள் என்றும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும் என பேசியதோடு அவருடன் தான் பயணித்தபோது நிகழ்ந்த மலரும் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார்.
நடிகர் பிரசன்னா
பிரசன்னா பேசுகையில், ''நான் செய்த புண்ணியம், அவர் எனக்காக ஒரு பாடல் பாடினார். அவர் பாடி சென்ற பாடல்களை அவர் வாழ்ந்த காலத்தில் கேட்டபோது வேறு மாதிரி இருந்தது. இப்போது அது அவருக்கான பாடல் போன்று தோன்றுகிறது. அவருக்காக நிறைய அழுதுவிட்டேன். அவர் எப்போதும் நமது மனதில் இருப்பார்'' என்றார்.
இசையமைப்பாளர் டிஎஸ்பி
தேவி ஸ்ரீபிரசாத் பேசுகையில், ''ஒரு மாதமாக எல்லோரும் ரொம்ப கஷ்டத்தில் இருந்தோம். கடந்த நான்கு நாட்களாக நிறைய அழுதுவிட்டோம். எஸ்.பி.பி.க்கும் நமக்குமான உறவு ஒரு குடும்ப உறவையும் தாண்டியது. எல்லோரின் இதயத்தையும் அவர் வென்றுவிட்டார். இந்த உலகம் இருக்கும் நிச்சயம் பாலு சார் இருப்பார்'' என்றார்.
இயக்குனர் சீனு ராமசாமி
சீனு ராமசாமி பேசுகையில், ''என் இரத்தத்தில் கலந்தவர் எஸ்பிபி. எனக்கு நினைவு தெரிந்த நாளில் எனக்கு உற்சாகத்தை தரும் ஒரு குரல் எஸ்.பி.பி. திறமையாளர்கள் நல்லவர்களாக இருப்பதில்லை. ஆனால் அவரிடம் இருந்தது. குழந்தைகளிடம் குழந்தையாக, இளைஞர்களிடம் ஊக்கம் தருபவராக, பெரியவர்களிடம் மதிப்பவராக அவர் திகழ்ந்தார். எஸ்.பி.பி. அவர்களை என் படத்தில் ஒரு பாடல் பாட வைக்க இருந்தேன். ஆனால் அது நடக்கவில்லை. அதை இப்போது சரண் பாடி தரணும் என கேட்டுக் கொள்கிறேன். பஞ்சபூதங்களுக்கு நன்மை செய்தவர்களை பஞ்சபூதங்கள் மறக்காது. அவர் நம்மோடு தான் இருக்கிறார்'' என்றார்.
நடிகர் கமல்
கமல் பேசிய வீடியோ : ''என் உடன் சேர்ந்து பயணித்த அண்ணய்யா அவர். பல மொழி நடிகர்களுக்கு மார்க்கெட்டை தக்க வைக்கும் குரலாக இருந்தவர். இந்த மாதிரி சாதனை வேறு எந்த பாடகரும் செய்திருக்க முடியாது. அவர் உடல்நிலை சரியில்லை என்று கேள்விப்பட்டதும் அவரை சந்திக்க சென்றேன். மிகவும் சோர்வாக இருந்தார். அந்த மாதிரி அவரை நான் பார்த்ததே இல்லை. எனக்குள் அழுகை வந்தது. அதை அடக்கி சரணுக்கு ஆறுதல் சொன்னேன். எனக்கு மட்டும் தான் அப்படி இருந்ததா என யோசித்தேன். ஆனால் நான் பேசிய பலரும் அப்படி இருப்பதாக சொன்னார்கள். இந்த சோகம் இன்னும் எத்தனை நாளுக்கு நீடிக்கும் என தெரியவில்லை. நினைத்து பார்க்க முடியாத ஒரு மரணம். 5 தலைமுறை கலைஞர்களுக்கு கூட அவர் பாடியிருக்கலாம் ஆனால் அவரின் புகழ் இன்னும் 7 தலைமுறைக்கு நீடிக்கும் என இந்த ஐந்தாறு நாட்களில் காண முடிந்தது. நடிகர்களுக்கு மட்டுமல்ல எல்லா மத கடவுள்களுக்கும் இவர் தான் ஹீரோ'' என்றார்.
விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி பேசுகையில், ''நான் பெரிதாக எதற்கும் வருத்தப்பட்டது கிடையாது. ஆனால் எஸ்பிபி., அவர்கள் இறந்துவிட்டார் என கேள்விப்பட்டதும் எனக்குள் மிகப் பெரிய வருத்தம். இதற்கு முன் பேசிய கமல், கங்கை அமரன் அல்லது அவர்கள் நண்பர்கள் பேசியபோது அதற்குள் ஒரு பேரிழப்பை, நீண்ட பயணத்தை, ஆத்மார்த்தமான நட்பை சொன்னது. அவர் கலை வடிவமாக இருந்தார். அவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியவில்லை என மிகவும் வருத்தப்பட்டேன். ஆனால் இந்த ஒரு வாய்ப்பாவது எனக்கு கிடைத்ததற்கு நன்றி'' என்றார்.
மோகன் ராஜா : வார்த்தைகளால் சொல்ல முடியாத ஒரு இழப்பு. சரண் உங்களுக்கு நாங்க இருக்கோம் என்றார்.