டி.ராஜேந்தரின் உடல்நலனை விசாரித்த முதல்வர் ஸ்டாலின் | ரஜினியை சந்தித்த கமல், லோகேஷ் | பிபியை எகிறச் செய்யும் சிவானியின் பேரழகு | குமரிப்பெண், முதல் நீ முடிவும் நீ, காஞ்சனா 2 - ஞாயிறு திரைப்படங்கள் | சீரியலில் என்ட்ரி கொடுக்கும் சாக்ஷி அகர்வால் | ஸ்ருதி சண்முகப்ரியாவின் பேச்சுலர் பார்ட்டி புகைப்படங்கள் வைரல் | சித்ரா மாதிரி ஆகிடுமோனு பயமா இருக்கு : நக்ஷத்திரா பற்றி பகீர் கிளப்பும் ஸ்ரீநிதி விஜய் | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ஷங்கர் பட நாயகி | மன்சூரலிகானிடம் ரூ. 50 லட்சம் மோசடி | சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக் - அக்சய்குமார் லுக் வெளியானது |
உயிரினங்களில் மனிதர்கள் மட்டுமே சிரிக்க கூடியவர்கள். அந்த சிரிப்பை நகைச்சுவையால் திரையுலகிற்கு கொடுத்தவர்கள் ஏராளமான பேர். அவர்களில் முக்கியமானவர் கிரேஸி மோகன். சினிமா, இணையதளம், வெப்சீரிஸ் என சினிமாவின் பரிணாம வளர்ச்சி அடுத்தக்கட்டத்திற்கு சென்றாலும் சினிமாவிற்கு முதல் அடித்தளமான நாடகம் இன்றளவும் ஓரளவிற்கு பேசப்படுகிறது என்றால் அதற்கு இவர் போன்ற கலைஞர்கள் தான் முக்கிய காரணம் என்றால் மிகையல்ல.
மேடை நாடகங்களிலும், சினிமாவிலும் ஏராளமான நகைச்சுவைகளை அள்ளித் தெளித்தவர். கடந்தாண்டு இதே நாளில் அவர் மறைந்தது நாடக மற்றும் திரையுலகினர் இடையே பேரிடியாக அமைந்தது. பேச்சுவாக்கில் நகைச்சுவையை அடுக்கி கொண்டே போகும் கிரேஸி மோகன் இன்று நம்மோடு இல்லை. அவர் இறந்து ஓராண்டுகள் ஆன நிலையில் அவர் மறைந்த நாளில் அவர் பற்றிய சில நினைவலைகளை இங்கு பார்ப்போம்.
வாழ்க்கையின் எல்லா நிகழ்வுகளையும் நகைச்சுவையாக பார்த்தாலே போதும் வாழ்க்கை சிறப்பாக என்பார் கிரேஸி. அதை அப்படியே கடைபிடித்தும் வந்தார். சினிமாவிலும் அதை பிரதிபலித்தார். கூட்டு குடும்ப வாழ்க்கை முறையில் அதிக நம்பிக்கை உடையவர். ஆன்மிகம் நம்பிக்கையும் உடையவர். ஆபாசம், விரசம் இல்லாத வசனங்கள் இவரின் பலம். கிரேஸி மோகன் என்றாலே வார்த்தைக்கு வார்த்தை நகைச்சுவை, கேள்விக்கு பதில் சொன்னாலும் நகைச்சுவை என நகைச்சுவையே தன் வாழ்க்கையாக வாழ்ந்தவர் என்று சொன்னால் அது மிகையாகாது.
கிரேஸி மோகனின் இயற்பெயர் மோகன் ரங்காச்சாரி, பெரிய பாரம்பரியமிக்க கலைகுடும்பத்தில் பிறந்தவர் இல்லை. ஆனால் கல்வி குடும்பத்தில் பிறந்தவர். அவர் குடும்பத்தினர் அனைவருமே அந்த காலத்திலேயே பட்டப்படிப்பு படித்து டாக்டர், வக்கீல், என்ஜினீயர், ஆசிரியர் என பணியாற்றிவர்கள். அந்த வரிசையில் கிரேஸியும் ஒரு படிப்பாளி.
எம்ஐடி கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் முடித்து விட்டு பின்னர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கிரேஸி குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருமே எதையுமே காமெடியாக, கிண்டலாக பேசும் வழக்கம் உள்ளவர்கள். வாழ்க்கையை இலகுவாக எடுத்துக் கொண்டு ரசிக்கிறவர்கள். அந்த குடும்பத்தில் பிறந்ததால் கிரேஸிக்குள்ளும் காமெடி ஓடிக்கொண்டிருந்தது. கல்லூரியில் படிக்கும் காலத்தில் அது நாடகமாக வெளிப்பட்டது.
கல்லூரி ஆண்டு விழாவில் கிரேட் பேங் ராப்பரி எனும் சிறிய காமெடி நாடகம்தான் கிரேஸி மோகனின் முதல் நாடகம். அதன் பிறகு அவர் எழுதிய முழுநீள காமெடி நாடகம் கிரேஸி தீவ்ஸ் இன் பாலக்காட் மிகப்பெரிய ஹிட். அதன் பிறகுதான் மோகன் ரங்காச்சாரி கிரேஸி மோகன் ஆனார். அதன் பிறகு வேலை பார்த்துக் கொண்டே நாடகங்கள் எழுத ஆரம்பித்தார். எஸ்.வி.சேகர் நாடக குழுவிற்கு அலாவுதீனும் 100 வாட்ஸ் பல்பும் என்ற நாடகம் எழுதினார். அது பெரிய வெற்றி பெற்றது. பல கம்பெனிகளுக்கு நாடகம் எழுதிக் கொடுத்தார்.
அதன் பிறகு நண்பர்களுடன் சேர்ந்து கிரேஸி கிரியேஷன்ஸ் என்ற நாடக கம்பெனியை தொடங்கினார். அவருடைய நாடகங்களில் மாது, சீனு கேரக்டர் பிரதானமாக இருக்கும். ஹீரோ மாதுவாக அவர் தம்பி பாலாஜியும் சீனுவாக மோகனும் நடிப்பார்கள். ஹீரோயின் பெயர் பெரும்பாலும் ஜானகி என்று இருக்கும். மேரேஜ் மேட் இன் சலூன், மீசை ஆனாலும் மனைவி போன்ற நாடகங்கள் சினிமாவுக்கு நிகரான வெற்றியை பெற்றது.
மேரேஜ் மேட் இன் சலூன் என்ற நாடகத்தை எல்லோரும் பெரிதாக பேச, யாருக்கும் தெரியாமல் வாணி மகாலில் போய் பார்த்தார் கே.பாலச்சந்தர். அந்த நாடகம்தான் பின்னர் பொய்க்கால் குதிரை என்ற பெயரில் படமாக தயாரானது. இந்த படம் வெற்றி பெறாததால் கிரேஸிக்கு பெரிய வாய்ப்புகள் இல்லை. சினிமாவில் சாதிக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருந்த வேலையையும் ராஜினாமா செய்திருந்தார்.
அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் கமல்ஹாசனிடம் இருந்து அழைப்பு வந்தது. "கிரேஸி வேலையை விட்டு விட்டு என்னோடு வாருங்கள்" என்றார் கமல். என் குருநாதர் (கே.பாலச்சந்தர்) உங்களை பற்றி நிறைய சொல்லி இருக்கிறார். என்று சொல்லி அபூர்வ சகோதரர்கள் படத்திற்கு வசனம் எழுத வைத்தார். படம் பெரிய வெற்றி. அதில் குள்ள கமல் பேசும் வசனம் பெரிய அளவில் புகழ்பெற்றது.
"டேய் குள்ளா 4 அடி இருந்துட்டு என்ன கொல்லப்போறியா?" என வில்லன் டெல்லி கணேஷ் கேட்க, அதற்கு அப்பு "திருக்குறள் கூட ரெண்டே அடிதான் என்னைவிடச் சின்னது. அதுல எத்தனை விஷயம் இருக்கு" என்பார். தியேட்டரே அதிர்ந்த வசனம் இது.
கமல் - கிரேஸி கூட்டணி மகளிர் மட்டும், சதிலீலாவதி, அவ்வை சண்முகி, தெனாலி, மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள், பஞ்சதந்திரம், பம்மல் கே சம்மந்தம், தசாவதாரம் எனத் தொடர்ந்தது. பிறகு வந்த படங்களில் கிரேஸி வசனம் இல்லை என்றாலும் அவர் பங்களிப்பு இல்லாமல் படம் இல்லை. கிரேஸி மோகன். சினிமாவில் நடிப்பதற்கு அவருக்கு பெரிய அளவில் ஆர்வம் இல்லை. என்றாலும் கமலின் வற்புறுத்தலுக்காக சில படங்களில் நடித்தார். வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் அவர் நடித்த புரொபசர் கேரக்டர் இன்றளவும் பேசப்படுகிறது.
கிரேஸி மோகன் நல்ல ஓவியர் என்பது பலருக்கு தெரியாது. குறிப்பாக கடவுள் படங்கள் வரைவதில் அவருக்கு அலாதி விருப்பம். ஒருமுறை கிரேஸி அம்பாள் படத்தை வரைந்து அதை தன் தாத்தாவிடம் காட்டினார். அவர் அதை பார்த்து விட்டு "என்னடா வேலைக்காரி மாதிரி இருக்கு" என்று கிண்டல் செய்திருக்கிறார். அம்பாளை வேற மாதிரி வரைந்து காட்டினார். அப்போதும் தாத்தா வேலைக்காரி மாதிரி இருக்கு என்றே சொன்னார். இதற்காக கிரேஸி கோபப்படவில்லை. ஒரு நாள் வீட்டு வேலைக்காரியை அம்பாளாக பாவித்து அதையே படமாக வரைந்து தாத்தாவிடம் காட்டினார் அதை பார்த்த தாத்தா "அட சாட்சாத் அம்பாளை பார்த்த மாதிரியே இருக்கு!" என்றார். சாமி கோவிலில் இல்லை. சக மனிதனிடம் செலுத்தும் அன்பில் இருக்கிறது என்பார் கிரேஸி. இதுதான் கிரேஸி.
கிரேஸியின் இன்னொரு முகம் யாரும் அறியாதது. கிரேஸி தன் குழுவில் உள்ளவர்களை தன் குடும்ப உறுப்பினர்கள் போன்று நடத்துவார். அவர்களுக்கு ஏராளமான உதவிகள் செய்திருக்கிறார் . அவர் குழுவில் இருந்த கிரேஸி வெங்கடேஷ் என்பவர் மகளுக்கு திருமணம் நடக்க இருந்த நிலையில் திடீரென மரணம் அடைந்து விட அவரின் மகள் திருமணத்தைத் தந்தையாக நின்று நடத்தி வைத்தார்.
காலங்கள் மாறினாலும் கிரேஸி கூட்டு குடும்ப கலாச்சாரத்தை விடாமல் காப்பாற்றி வந்தார். ரமண மகரிஷியின் தீவிரமான பக்தராக இருந்தார். ரமண மகிரிஷி பற்றி நிறைய பாடல்கள் எழுதியிருக்கிறார்.
அதேபோல எந்த வேலைக்கும் எனக்கு இவ்வளவு பணம் வேண்டும் கேட்பதில்லை. "கொடுக்கிறது கொடுங்க குறைஞ்சா போயிடுவேன்" என்பார். "என் பணி காமெடி செய்து கிடப்பதே" என்பதுதான் அவரின் கொள்கை. அந்த கொள்கைப்படியே வாழ்ந்தார்.
கிரேஸி மோகன் கைவண்ணத்தில் அமைந்த திரைப்பட நகைச்சுவை வசனங்கள்
01. சின்ன வாத்தியார்
இடிச்சபுளி செல்வராஜ்: என் பொண்ணு செவிடுங்கறத உங்க ப்ரண்ட்டு காதுல போட்டீங்களா
கவுண்டமணி: என்ன டாக்டர் போட்டீங்களா
கிரேஸி மோகன்: ஒரு வாரமா இவன் காதுல போட நான் ட்ரை பண்ணிகிட்டு இருக்கேன் முடியலயேப்பா.
கவுண்டமணி: இவன் காதுல வார்த்தையெல்லாம் போட முடியாது குண்டுதான் போடனும்
கிரேஸி மோகன்: போடு
02. படம்: சதி லீலாவதி
கமல்ஹாசன்: பழனி கண்ணு ஸ்பீட கொற கண்ணு
கோவை சரளா: முடியாது நான் போறேன் கோயம்புத்தூருக்கு
கமல்ஹாசன்: இப்புடி போனா கோயம்புத்தூர் வராது கண்ணு, கும்முடிபூண்டி தான் வரும் கண்ணு என்று கோயம்புத்தூர் ஸ்லாங்கில் பேசுவது போல் அமைத்திருப்பார்.
03.இந்தியன்
இந்தியன் படத்தில் லைசென்ஸ் பெற இவர் நடித்த பார்த்தசாரதி கேரக்டரும், அது தொடர்பான வசனங்களும் நகைச்சுவையில் தெறிக்க வைத்தன.
04.மைக்கேல் மதன காமராஜன்
இந்தப்படத்தில் சாம்பாரில் விழுந்த ஒரு மீனை வைத்து ஐ மீன் வாட் ஐ மீன் என தொடங்கி அந்த காட்சி முழுவதும் மீன் என்ற ஒரு வார்த்தையை வைத்து காமெடி டிராக் பண்ணியிருப்பார்.
05. வசூல்ராஜா எம்பிபிஎஸ்
இந்தப் படத்தில் கமல்ஹாசன் தேர்வில் 98.5 மதிப்பெண் பெற்று முதல் இடத்தை பிடித்ததை கேட்கும் பிரகாஷ்ராஜிடம் "ஹவ் டு ஐ நோ தட் சார்" என அடிக்கடி இவர் சொல்வதையும், அந்த மார்க்கபந்து கேரக்டரரையும் ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறக்க இயலாது.
06. பஞ்சதந்திரம்
இந்தப்படத்தில் கமல், ஜெயராமன், ரமேஷ் அரவிந்த், நாகேஷ் உள்ளிட்டவர்களுடன் பெங்களூரு செல்லும் காட்சியில் போலீஸ் தடுத்து நிறுத்தும்போது வரும் முன்னாடி, பின்னாடி, என்ன இருந்தது கண்ணாடி போன்ற வசனங்கள் மறக்க முடியாதவை.
கிரேஸி மோகன் வசனகர்த்தாவாக பணியாற்றிய திரைப்படங்கள்
1. பொய்க்கால் குதிரை - 1983
2. கதாநாயகன் - 1988
3.அபூர்வ சகோதரர்கள் - 1989
4. மைக்கேல் மதன காமராஜன் - 1990
5. உன்னை சொல்லி குற்றமில்லை - 1990
6. இந்திரன் சந்திரன் - 1990
7. சின்ன மாப்பிள்ளை - 1993
8. மகளிர் மட்டும் - 1994
9. வியட்நாம் காலனி - 1994
10. சின்ன வாத்தியார் - 1995
11. எங்கிருந்தோ வந்தான் - 1995
12. சதி லீலாவதி - 1995
13. அவ்வை சண்முகி - 1996
14. மிஸ்டர் ரோமியோ - 1996
15. ஆஹா - 1997
16. அருணாச்சலம் - 1997
17. ரட்சகன் - 1997
18. சிஷ்யா - 1997
19. தேடினேன் வந்தது - 1997
20. காதலா காதலா - 1998
21. கண்ணோடு காண்பதெல்லாம் - 1999
22. என்றென்றும் காதல் - 1999
23. பூவெல்லாம் கேட்டுப்பார் - 1999
24. தெனாலி - 2000
25. லிட்டில் ஜான் - 2001
26. பஞ்ச தந்திரம் - 2002
27. பம்மல் கே சம்பந்தம் - 2002
28. வசூல்ராஜா எம் பி பி எஸ் - 2004
29. இதயத்திருடன் - 2006
30. ஜெர்ரி - 2006
31. கொல கொலயா முந்திரிக்கா - 2010
32. நான் ஈ - 2012
கிரேஸி மோகன் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் அவர் கொடுத்து சென்ற நகைச்சுவை என்றும் அழியாதவை. இன்று அவரது முதலாம் ஆண்டு நினைவேந்தலை, டோக்கியோ தமிழ் சங்கம், என்றும் வாழும் கிரேஸி என்ற தலைப்பில் நடத்தி அவருக்கு அஞ்சலி செலுத்துகிறது. ஜுன் 10 மாலை 6மணிக்கு நடக்கும் இந்நிகழ்வு, நேரலையில் ஒளிப்பரப்பாகிறது. இதில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்கிறார்.