ஸ்பெயின் பறந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் | மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பும் மீனா : 40 நாட்களுக்கு பின் வெளி உலகத்திற்கு வந்தார் | லோகேஷ் கனகராஜை பாராட்டிய ரஜினி, விஜய் | விஜய் யேசுதாஸை இயக்கும் 10ம் வகுப்பு மாணவி | மீண்டும் ஐதராபாத்தில் அஜித் குமார் | சந்திரமுகி 2வில் வடிவேலுவின் கேரக்டர் விபரம் வெளியானது | சண்டைக்காட்சியில் நடித்தபோது மீண்டும் விபத்தில் சிக்கிய விஷால் | நயன்தாராவின் ரக்ஷா பந்தன் கொண்டாட்டம் | ரஜினியின் ஜெயிலர் படத்தில் தமன்னா? | ரஜினி செய்த மாற்றம் |
மறைந்த இயக்குனர் விசுவிற்கு அவரிடம் உதவியாளராக இருந்து இயக்குனராக, நடிகராக திகழ்ந்த டி.பி.கஜேந்திரன் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியருப்பதாவது : ஒவ்வொரு மனிதனுக்கும் தாய், தந்தையை தேர்ந்தெடுக்கும் உரிமையும் இல்லை, வழியும் இல்லை. ஆனால் குருவை தேர்ந்தெடுக்கலாம். ஆனால் ஒரு குரு தன் சிஷ்யனை தேர்ந்தெடுப்பது, இன்னும் கொடுப்பினை. அந்த கொடுப்பினையை எனக்கு தந்தவர் என் குருநாதர் விசு. அவர் குருவாய் வந்ததால் நான் நிறைவாய் வாழ்ந்தேன்.
அவரின் மறைவுச் செய்தி என் தலையில் பேரிடியாக விழுந்தது. அவர் இந்த உலகில் இப்போது இல்லை என்பதை மனம் ஏற்க மறுக்கிறது. காரணம் அவர் வெறும் குருவாக எனக்கு பாடம் மட்டும் நடத்தவில்லை. வாழ்க்கையை சொல்லிக் கொடுத்தார், சினிமாவை சொல்லிக் கொடுத்தார். எனக்கு எந்த பிரச்சினை என்றாலும் அவரிடம் சொல்வேன். அடுத்த நிமிடமே அதற்கு தீர்வு சொல்வார்.
சினிமா என்னை நிராகரித்து தள்ளியபோது அள்ளி அணைத்துக் கொண்டவர் அவர். பொள்ளாச்சி படப்பிடிப்பில் "நீங்களே படம் இயக்குகிறீர்களே உங்கள் உதவியாளர்கள் இயக்குனராக மாட்டார்களா?" என்று ஒரு பத்திரிகையாளர் கேட்டபோது சிறிதும் யோசிக்காமல் "இதோ என் உதவியாளர் கஜேந்திரன் அடுத்த படத்தை இயக்குவார்" என்று சொன்னதோடு, அடுத்த சில மாதங்களிலேயே வீடு மனைவி மக்கள் மூலம் என்னை இயக்குனராக்கி அழகு பார்த்தவர்.
அன்று அவர் போட்டுக் கொடுத்த பாதையில்தான் நான் இன்றும் பயணித்துக் கொண்டிருக்கிறேன். அவர் காட்டிய நெறிமுறையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். விசு ஒரு படைப்பாளி மட்டுமல்ல நல்ல வழிகாட்டி, தத்துவவாதி. உடைந்து வரும் கூட்டுக் குடும்பங்களை மீண்டும் உருவாக்க அவர் இயக்கிய படங்களே போதும். அரட்டை அரங்கம் மூலம் தமிழ் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கியவர். இளைஞர்களை தட்டி எழுப்பியவர்.
ஒவ்வொரு பொங்கல், தீபாவளிக்கும், அவர் இல்லம் சென்று அவர் பாதம் தொட்டு வணங்கி ஆசி பெற்று வருவேன். அந்த பாக்கியம் இனி இல்லை என்பதுதான் என் நெஞ்சை பிளக்கும் வேதனை. படைப்புகள் வாழும் வரை படைப்பாளிகள் மரணிப்பதில்லை. என் குருநாதர் தன் படைப்புகள் மூலம் இன்னும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருப்பதாகவே நம்புகிறேன். விண்ணுலகில் இறைவன் அவருக்கு சாந்தியையும், சமாதானத்தையும் தந்து அவரை இளைப்பாற வைக்கட்டும் என்று வேண்டுகிறேன்.
இவ்வாறு கூறியுள்ளார்.