Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமாவில் ஒவ்வொரு நாளும் போராட்டமே - ஐஸ்வர்ய லட்சுமி | ரூ.400 கோடி வட்டிக்கு வாங்கி எடுக்கப்பட்ட பாகுபலி : ராணா தகவல் | அடுத்த மாதம் ஜென்டில்மேன் 2 பட இசையை துவங்கும் கீரவாணி | ஆல்கஹால் தேவையில்லை.. டானிக்கே போதும் ; அதா ஷர்மாவின் அதிரடி | ஆந்திர முதல்வர் சுயசரிதையை படமாக்கும் ராம்கோபால் வர்மா | மகேஷ்பாபு படத்தில் மோகன்லாலை இணைக்க முயற்சி செய்யும் ராஜமவுலி | மலையாள பட விழாவில் விஜய் தேவரகொண்டா பட இயக்குனரை விமர்சித்த அல்லு அரவிந்த் | இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக ஒடிசா ரயில் விபத்து மாறியிருக்கிறது - திரைப்பிரபலங்கள் இரங்கல் | வெற்றிகரமான 'வாரம்' இல்லை, வெற்றிகரமான 'நாட்கள்' மட்டுமே.. | ஆதிபுருஷ் படத்தின் புதிய டிரைலர் அப்டேட் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி பற்றிய ‛அபூர்வ தகவல்கள்... : பிறந்தநாள் ஸ்பெஷல்

12 டிச, 2019 - 15:08 IST
எழுத்தின் அளவு:
Tit-bits-about-Rajinikanth

1. சினிமாவிற்கு வருவதற்கு முன் ஆபீஸ் ப்யூனாக, மூட்டைத் தூக்கும் தொழிலாளியாக, தச்சுப் பட்டறைத் தொழிலாளியாக, பின்னர் கர்நாடகா போக்குவரத்துக் கழகத்தில் கண்டக்டராகப் பணிபுரிந்திருக்கின்றார்.

2. சிவாஜி நகர், சாம்ராஜ்பேட்டையை இணைக்கும் 134 எண் கொண்ட பேருந்தில்தான் இவர் கண்டக்டராகப் பணிபுரிந்தார்.

3. சிவாஜிராவ் என்ற மனிதருக்குள் ஒளிந்திருந்த நடிகரை முதன் முதலில் அடையாளம் கண்டது இவரது நண்பர் ராஜ் பகதூர். சினிமாவில் நடிக்கத் தூண்டியவரும் இவரே.

4. கே.பாலசந்தரின் "அபூர்வ ராகங்கள்" தான் ரஜினி தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான முதல் படம். சிவாஜி ராவ் என்ற இவரது இயற்பெயர் ரஜினிகாந்த் என மாறியதும் இத்திரைப்படத்திலிருந்து தான். ஆகஸ்ட் 18, 1975ல் படம் வெளிவந்தது.

5. "பைரவி வீடு இதுதானா?", "நான் பைரவியின் புருஷன்" என்று தனது நண்பர் கமல்ஹாசனிடம் பேசிய வசனமே, ரஜினி திரைப்படத்தில் பேசிய முதல் வசனம்.

6. ரஜினி கதாநாயகனாக அறிமுகமான முதல் திரைப்படம், கலைஞானம் கதை, தயாரிப்பில் எம்.பாஸ்கர் இயக்கத்தில் வெளிவந்த "பைரவி" திரைப்படம். வெளியான ஆண்டு 1978.

7. ஆரம்ப காலங்களில் தொடர்ந்து வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்து வந்த ரஜினி, முதன் முறையாக குணசித்திர வேடமேற்று நடித்தது இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் இயக்கிய "புவனா ஒரு கேள்விக்குறி". படம் வெளியான ஆண்டு 1977.

8. இயக்குநர் மகேந்திரனின் முதல் பட நாயகனும் ரஜினியே. படம் "முள்ளும் மலரும்". படம் வெளியான ஆண்டு 1978.

9. ரஜினி இரட்டை வேடமேற்று நடித்த முதல் திரைப்படம் ‛பில்லா. ஆனால் இதில் ஒரு ரஜினி இறந்த பின்னரே மற்றொருவர் தோன்றுவார். ஆனால் ஒரே ஸ்கிரீனில் இரண்டு ரஜினி தோன்றிய முதல்படம் "ஜானி". இயக்கியவர் மகேந்திரன். படம் வெளியான ஆண்டு 1980.

10. ரஜினிகாந்த் பின்னணி பாடிய ஒரே திரைப்படம் "மன்னன்". பாடல் "அடிக்குது குளிரு". உடன் பாடியவர் எஸ் ஜானகி.

11. ரஜினி முதன் முறையாக கதை, திரைக்கதை அமைத்து தயாரித்து நடித்த திரைப்படம் "வள்ளி". படம் வெளியான ஆண்டு 1993.

12. "ராஜ ராஜ சோழன்" திரைப்படத்திற்குப் பின் சினிமாஸ்கோப்பில் உருவான முதல் சமூகத் திரைப்படம் ரஜினி நடித்து வெளிவந்த "காளி" திரைப்படம் ஆகும்.

13. ரஜினி நடித்த முதல் முழுநீள நகைச்சுவை திரைப்படம் "தில்லு முல்லு". கே பாலசந்தர் இயக்கிய இத்திரைப்படம், ஹிந்தியில் அமோல் பலேகர் நடித்த "கோல்மால்" திரைப்படத்தின் தமிழாக்கம்.

14. எம்.ஜி.ஆரை வைத்து ஏராளமான திரைப்படங்களை தயாரித்து வந்த "தேவர் பிலிம்ஸ்", ரஜினியை வைத்து தயாரித்து வெளியிட்ட முதல் திரைப்படம் "தாய் மீது சத்தியம்". வெளியான ஆண்டு 1978.

15. "அபூர்வ ராகங்கள்", "மூன்று முடிச்சு", "அவர்கள்", "16 வயதினிலே", "ஆடு புலி ஆட்டம்", "இளமை ஊஞ்சலாடுகிறது", "தப்புத் தாளங்கள்", "அவள் அப்படித்தான்", "அலாவுதீனும் அற்புத விளக்கும்", "நினைத்தாலே இனிக்கும்", "தாயில்லாமல் நானில்லை", "தில்லு முல்லு" ஆகிய திரைப்படங்கள் ரஜினியும், கமலும் இணைந்து நடித்த தமிழ் திரைப்படங்கள்.

16. எம்.ஜி.ஆரை வைத்து பல வெற்றிப் படங்களைத் தந்த "சத்யா மூவீஸ்", ரஜினியை வைத்து தயாரித்த முதல் திரைப்படம் "ராணுவ வீரன்". இந்நிறுவனத்தில் மூன்று வேடங்களில் ரஜினி நடித்த திரைப்படம் ‛‛மூன்று முகம்''.

17. நடிகர் சிவாஜியின் ரசிகரான ரஜினி, திரைத்துறைக்கு வருவதற்கு முன் அவர் மனம் கவர்ந்த நடிகராக இருந்தவர் நாகேஷ்.

18. "அந்தா கானூன்" திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் நாயகனாக அறிமுகமானார் ரஜினி. படம் வெளியான ஆண்டு 1983.

19. "அண்ணாமலை", "வீரா" படங்களின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில் ரஜினி நடித்து மிகப் பெரிய வெற்றியைக் கண்ட திரைப்படம் "பாட்ஷா". கோயம்புத்தூர் கே ஜி காம்ப்ளக்ஸ் திரையரங்கில் ஒரு வருடத்திற்கும் மேலாக ஓடியது. ரஜினியின் திரைப்பயணத்தில் ஒரு மைல் கல்லாக அமைந்தது இத்திரைப்படம் என்றால் அது மிகையன்று.

20. ஏ.வி.எம். நிறுவனத்திற்காக ரஜினி நடித்த முதல் திரைப்படம் "முரட்டுக் காளை". இத்திரைப்படத்திற்காக ரஜினியின் சம்பளத்தை மூன்று மடங்காக உயர்த்தியதோடு மட்டுமின்றி பியட் கார் ஒன்றையும் பரிசாக வழங்கினார் மெய்யப்ப செட்டியார்.

21. "ப்ளட் ஸ்டோன்" ரஜினி நடித்து வெளிவந்த ஒரே ஹாலிவுட் திரைப்படம். படம் வெளியான ஆண்டு 1988.

22. 1995ம் ஆண்டு இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளிவந்த திரைப்படம் "முத்து". தமிழ்நாட்டில் 175 நாட்கள் ஓடி மிகப் பெரிய வெற்றியை பெற்றது. 1998ல் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஜப்பான் நாட்டில் வெளியிட்டு வெற்றி பெற்றதோடு அங்கும் ரஜினிக்கு ஒரு ரசிகர் கூட்டம் உருவானது.

23. அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினிகாந்தை அறிமுகப்படுத்திய இயக்குனர் கே.பாலசந்தர் தொடர்ந்து, மூன்று முடிச்சு, தப்புத் தாளங்கள், நினைத்தாலே இனிக்கும், தில்லு முல்லு ஆகிய படங்களில் ரஜினிகாந்தை நடிக்க வைத்தார்.

24. ரஜினிகாந்த் - ஸ்ரீபிரியா இணைந்து நடித்த படங்கள்: ‛‛மாங்குடி மைனர், பைரவி, தாய்மீது சத்தியம், இளமை ஊஞ்சலாடுகிறது, அவள் அப்படித்தான், அன்னை ஓர் ஆலயம், அலாவுதீனும் அற்புத விளக்கும், பொல்லாதவன், பில்லா, தீ, தனிக்காட்டு ராஜா.

25. ரஜினிகாந்த் - ஸ்ரீதேவி இணைந்து நடித்த படங்கள்: ‛‛16 வயதினிலே, ப்ரியா, தாயில்லாமல் நானில்லை, தர்மயுத்தம், ஜானி, ராணுவ வீரன், போக்கிரி ராஜா, அடுத்த வாரிசு, நான் அடிமை இல்லை.

26. ரஜினிகாந்த் - பிரபு இணைந்து நடித்த படங்கள்: ‛‛தர்மத்தின் தலைவன், குரு சிஷ்யன், மன்னன், சந்திரமுகி.

27. ரஜினிகாந்த் - மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி இணைந்து நடித்த படம் - தளபதி.

28. ரஜினிகாந்த் - இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இணைந்த படங்கள்: ‛‛அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, ஆறு புஷ்பங்கள், ஜஸ்டிஸ் கோபிநாத், நினைத்தாலே இனிக்கும், குப்பத்து ராஜா, பொல்லாதவன், பில்லா, ராணுவ வீரன், தீ, தில்லு முல்லு, போக்கிரி ராஜா, சிவப்பு சூரியன்.

29. ரஜினிகாந்த் - இசையமைப்பாளர் இளையராஜா இணைந்த படங்கள்: ‛‛புவனா ஒரு கேள்விக்குறி, 16 வயதினிலே, ப்ரியா, பைரவி, இளமை ஊஞ்சலாடுகிறது, அவள் அப்படித்தான், நான் வாழவைப்பேன், தர்மயுத்தம், அன்னை ஓர் ஆலயம், ஆறிலிருந்து அறுபது வரை, முரட்டுக் காளை, நான் போட்ட சவால், காளி, ஜானி, எல்லாம் உன் கைராசி, அன்புக்கு நான் அடிமை, நெற்றிக் கண், கர்ஜனை, கழுகு, புதுக்கவிதை, தனிக்காட்டு ராஜா, எங்கேயோ கேட்ட குரல், பாயும் புலி, தங்க மகன், அடுத்த வாரிசு, நான் மகான் அல்ல, நல்லவனுக்கு நல்லவன், தம்பிக்கு எந்த ஊரு, கை கொடுக்கும் கை, அன்புள்ள ரஜினிகாந்த், ஸ்ரீ ராகவேந்திரர், படிக்காதவன், நான் சிகப்பு மனிதன், மிஸ்டர் பாரத், மாவீரன், வேலைக்காரன், தர்மத்தின் தலைவன், குரு சிஷ்யன், ராஜாதி ராஜா, மாப்பிள்ளை, சிவா, பணக்காரன், அதிசய பிறவி, தளபதி, தர்மதுரை, மன்னன், பாண்டியன், எஜமான், உழைப்பாளி, வீரா.

30. ரஜினிகாந்த் நடித்த தொடர்ச்சியான 10 படங்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா. ரஜினிகாந்த் நடித்த அதிக படங்களுக்கும் இசையமைத்தவர் இளையராஜாவே.

31. ரஜினிகாந்த் - ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்த படங்கள்: ‛‛முத்து, படையப்பா, பாபா, சிவாஜி, எந்திரன், கோச்சடையான், லிங்கா, 2.0.

32. ரஜினிகாந்த் - இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் இணைந்த படங்கள்: ‛‛புவனா ஒரு கேள்விக்குறி, ப்ரியா, ஆறிலிருந்து அறுபது வரை, முரட்டுக் காளை, ராணுவ வீரன், நெற்றிக் கண், கழுகு, போக்கிரி ராஜா, புதுக் கவிதை, எங்கேயோ கேட்ட குரல், பாயும் புலி, அடுத்த வாரிசு, நான் மகான் அல்ல, நல்லவனுக்கு நல்லவன், ஸ்ரீ ராகவேந்திரர், மிஸ்டர் பாரத், வேலைக்காரன், மனிதன், தர்மத்தின் தலைவன், குரு சிஷ்யன், ராஜா சின்ன ரோஜா, அதிசய பிறவி, பாண்டியன்.

33. ரஜினிகாந்த் - பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இணைந்த படங்கள்: ‛‛சிவாஜி, எந்திரன், 2.0.

34. ரஜினிகாந்த் - இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் இணைந்த படங்கள்: ‛‛முத்து, படையப்பா.

35. ரஜினிகாந்தை, ஜானி, முள்ளும் மலரும் படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வைத்தவர் இயக்குனர் மகேந்திரன்.

36. ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த சில முக்கிய நாயகிகள்: ஸ்ரீவித்யா, சுமித்ரா, சரிதா, ஜெயசித்ரா, ஜெயப்பிரதா, படாபட் ஜெயலட்சுமி, ரதி, லட்சுமி, ரீனா, சீமா, மாதவி, ராதிகா, ஜோதி, அம்பிகா, ராதா, அனிதா ராஜ், சுஹாசினி, பூர்ணிமா ஜெயராம், சுலக்ஷணா, ரேவதி, அமலா, ரூபிணி, குஷ்பு, கௌதமி, சீதா, நதியா, ஷோபனா, கனகா, ஷீபா, ஜுஹி சாவ்லா, பானுப்ரியா, விஜயசாந்தி, மீனா, ரோஜா, நக்மா, ரம்பா, சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், மனிஷா கொய்ராலா, ஜோதிகா, ஸ்ரேயா, ஐஸ்வர்யா ராய்.

37. ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த சில முக்கிய நாயகர்கள்: சிவகுமார், சரத்பாபு, விஜயகுமார், கார்த்திக், பாக்யராஜ், சிரஞ்சீவி, சத்யராஜ், பிரபு, மோகன்பாபு, வி.ரவிச்சந்திரன், அமிதாப்பச்சன், அக்ஷய்குமார், விஜய்சேதுபதி.

38. ரஜினிகாந்த் அறிமுகமான அபூர்வ ராகங்கள் படம் கருப்பு வெள்ளை. அவர் முதலில் நடித்த கலர் படம் - 16 வயதினிலே, தமிழின் முதல் 70எம்எம் படமான மாவீரன் ரஜினிகாந்த் நடித்தது தான். 2டியில் இருந்து 3டிக்கு மாற்றுப்பட்டு வந்துள்ள படம் சிவாஜி 3D . கோச்சடையான் ஒரு அனிமேஷன் படம். 2.0 ஒரு 3டி படம். இப்படி பல வகை தொழில்நுட்பங்களில் நடித்த ஒரு நடிகர் ரஜினிகாந்த்.

39. ரஜினிகாந்துடன் நடித்துள்ள முக்கிய நகைச்சுவை நடிகர்கள்: நாகேஷ், சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன், ஒய்.ஜி.மகேந்திரன், ஜனகராஜ், கவுண்டமணி, செந்தில், விவேக், வடிவேலு, கருணாஸ், சந்தானம்.

40. ரஜினிகாந்த் நடித்த ஹிந்திப் படங்களின் எண்ணிக்கை 23, தெலுங்குப் படங்கள் 14, கன்னடம் 9, மலையாளம் 1 , பெங்காலி 1.

41. 2002 ஆம் ஆண்டு வெளிவந்த "பாபா" திரைப்படம் எதிர்பார்த்த அளவு ஓடாததால் 3 ஆண்டுகள் எந்த படங்களிலும் நடிக்காமல், 2005 ஆம் ஆண்டு சிவாஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பி வாசு இயக்கத்தில் இவர் நடித்து வெளிவந்த "சந்திரமுகி" தென் இந்தியாவில் மிக அதிக நாட்கள் ஓடிய திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றது. 890 நாட்கள் ஓடியது.

42. ரஜினி பல படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும் கொடூர வில்லனாக நடித்த படம் ஆடுபுலி ஆட்டம். கண்டக்டராக இருந்து சூப்பர் ஸ்டாரான ரஜினி, பஸ் டிரைவராக நடித்த படம் ஆறு புஷ்பங்கள். சூப்பர் ஸ்டார் பட்டத்தை பைரவி படத்தின்போது தந்தது அந்தப் படத்தின் விநியோகஸ்தரான கலைப்புலி எஸ்.தாணு. டைட்டில் கார்டில் சூப்பர் ஸ்டார் என்று போடப்பட்டது நான் போட்ட சவால் என்ற படத்தில்தான்.

43. ரஜினி நடித்த முதல் திகில் படம் ஆயிரம் ஜென்மங்கள். படத்தில் அவருக்கு ஜோடி இல்லை. ஒன்பது நாட்களில் நடித்து முடித்த படம் மாங்குடி மைனர். 6 நாட்களில் நடித்த படம் அன்புள்ள ரஜினிகாந்த். அக்ரஹாரத்து இளைஞனாக பிராமண லாங்குவேஜ் பேசி நடித்த ஒரே படம் சதுரங்கம். குப்பத்து சென்னை தமிழ் பேசி நடித்த படம் தப்பு தாளங்கள் மற்றும் கொடி பறக்குது.

44. ஆங்கிலத்தில் வெளிவரும் கவ்பாய் ஸ்டைலில் நடித்த படங்கள் தாய்மீது சத்தியம், அன்னை ஓர் ஆலயம்.

45. நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் ரஜினி இணைந்து நடித்த முதல் திரைப்படம் "ஜஸ்டிஸ் கோபிநாத்". படம் வெளியான ஆண்டு 1978. அதன் பிறகு நான் வாழ வைப்பேன், விடுதலை, படிக்காதவன், படையப்பா படங்களில் நடித்தார்.

46. மேனியாக் டிப்ரெசிங் நோயால் பாதிக்கப்பட்ட ரஜினி குணமடைந்த பிறகு நடித்த படம் தர்மயுத்தம். படத்திலும் அதே மாதிரியான நோயால் பாதிக்கப்பட்டவராகவே நடித்திருந்தார். இளைஞன், நடுத்தர வயதுகாரர், முதியவர் என்ற மூன்று பருவ கேரக்டரில் நடித்த படம் ஆறிலிருந்து அறுபது வரை.

47. சிறந்த நடிப்புக்காக பல விருதுகளை அவருக்கு பெற்றுத் தந்த படம். முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த படமும், முதல் வெள்ளி விழா படமும் பில்லா.

48. முதல் சினிமாஸ்கோப் படம் காளி. முதல் 70 எம்எம் படம் மாவீரன். முதல் அனிமேஷன் படம் கோச்சடையான், முதல் 3டி படம் 2.0. குறைந்த பட்ஜெட்டில் தயாரான படம் குப்பத்து ராஜா (10 லட்சம்), அதிக பட்ஜெட்டில் தயாரான படம் 2.0 (550 கோடி). குறைவான நாட்கள் ஓடிய படம் மாங்குடி மைனர் (2 வாரம்), அதிக நாட்கள் ஓடிய படம் சந்திரமுகி. (890 நாட்கள்).

49. ஆர்.எம்.வீரப்பன், எம்.ஜி.ஆருக்காக எழுதி வைத்திருந்த கதைதான் ராணுவ வீரன். அவர் முதல்வராகிவிட்டதால். அந்த கதையில் நடிக்க தகுதியானவர் ரஜினிதான் என்று அவரை வைத்து படம் எடுத்தார். ஆனால் எம்.ஜி.ஆருடன், ரஜினி நடித்ததில்லை.

50. ரஜினிக்கு தேசிய விருது எதிர்பார்க்கப்பட்ட படம் எங்கேயோ கேட்ட குரல். பண்பட்ட கிராமத்து மனிதராக நடித்திருந்தார். சகோதரி நடிகைகள் அம்பிகாவும், ராதாவும் அக்கா தங்கையாகவும் ரஜினிக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார்கள். அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் ரஜினி அங்கிள் என்று செல்லமாக அழைத்த குழந்தை நட்சத்திரம் மீனா. எஜமான் படத்தில் ஜோடியாக நடித்தார்.

51. தன்னை பேட்டி எடுக்க வந்த மாணவி உங்களுக்கு எப்படிப்பட்ட மனைவி அமைய வேண்டும் என்று கேட்க? உங்களைப்போன்று சிம்பிளாக இருந்தால் போதும் என்று ரஜினி சொல்ல, என்னை கட்டிக்குவீங்களா என்று மாணவி கேட்க, காதல் மலர... கல்யாணம் நடந்தது. அந்த மாணவி லதா ரஜினிகாந்த்.

52. பாண்டியன் படம் தன்னை வைத்து 27 படங்கள் இயக்கிய எஸ்.பி.முத்துராமன் குழுவிற்காகவும், அருணாச்சலம் படம் பல்வேறு காலகட்டங்களில் தனக்கு உதவிய நண்பர்களுக்காவும், அன்புள்ள ரஜினிகாந்த், வள்ளி படங்கள் தன் நண்பர் நட்ராஜுக்காகவும், குசேலன் படம் பாலச்சந்தருக்காகவும், சிவாஜி படம் ஏவிஎம் நிறுவனத்துக்காகவும், லிங்கா படம் நண்பர் ராக்லைன் வெங்கடேசுக்காகவும் ரஜினி நடித்துக் கொடுத்த படம்.

53. ஒரு பிரச்னையில் ரஜினிக்கு விநியோகஸ்தர்கள் சங்கம் ரெட் போட்டது. இதனால் உழைப்பாளி படம் வெளிவந்தபோது அதை வாங்க விநியோகஸ்தர்கள் முன்வரவில்லை. ரஜினி தானே சொந்தமாக வெளியிட்டார். படம் 100 நாட்கள் ஓடியது. விநியோகஸ்தர் சங்கம் பகிரங்க மன்னிப்பு கேட்டது. தயாரிப்பாளர்கள் நேரடியாக படத்தை திரையிடும் வழியையும் திறந்து வைத்தது. படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க முடியாத சோகத்தில் இரண்டு ரசிகர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள்.

54. எந்த அடையாளமும் இல்லாமல் ஊர்சுற்றுவது பிடிக்கும், நீண்ட தூர கார் பயணம் பிடிக்கும். கையேந்தி பவனில் சாப்பிட பிடிக்கும். பாபா தரிசனம் பிடிக்கும். அண்ணன் சத்யநாராயணராவ், இயக்குனர் கே.பாலச்சந்தர், அமிதாப் பச்சன் இவர்கள் காலில் விழுந்து வணங்கும் பழக்கம் ரஜினிக்கு உண்டு.

55. மூன்று முறை தனது சுயசரிதையை எழுத முயற்சித்து, பாதி எழுதிய நிலையில் கிழித்து போட்டு விட்டார். பொய்யாக என்னால் சுயசரிதை எழுத முடியவில்லை. உண்மையை எழுதினால் பலர் மனது புண்படும் என்று கூறிவிட்டார். ரஜினியை பற்றி இதுவரை 140 வரலாற்று புத்தங்கள் வெளிவந்துள்ளது. "அவற்றில் பாதி தான் உண்மை. என் நிஜ வரலாறு எனக்கு மட்டுமே தெரியும்" என்பார் ரஜினி.

56. ஆறிலிருந்து அறுபதுவரை படத்தை முதலில் ஜி என் ரங்கராஜன் இயக்குவதாக இருந்தது. ஆனால் எஸ் பி முத்துராமன் இயக்க வேண்டும் என்பது ரஜினியின் விருப்பம். "புவனா ஒரு கேள்விக்குறி" திரைப்படத்திற்குப் பின் "ஆடு புலி ஆட்டம்", "ப்ரியா", "ஆறிலிருந்து அறுபதுவரை" என்று ரஜினி, எஸ் பி முத்துராமன் கூட்டணி ஒரு வெற்றிக் கூட்டணியாக தொடர்ந்து பயணித்தது.

57. "முரட்டுக்காளை"க்குப் பின் ஏ வி எம் நிறுவனத்திற்காக ரஜினி நடித்த இரண்டாவது படம் "போக்கிரி ராஜா". ஏ வி எம் தயாரிப்பில் இரட்டை வேடம் ஏற்று நடித்த முதல் பிரபலமான நடிகர் ரஜினி. ரஜினி, ராதிகா ஜோடி சேர்ந்து நடித்த முதல் படமும் இதுவே. நடிகர் முத்துராமனின் கடைசிப் படமும் இதுவே.

58. ரஜினி நடித்து வெளிவந்த "ரங்கா" திரைப்படத்தில், ரஜினியின் அக்கா வேடத்திற்கு முதலில் நடிக்க ஒப்பந்தமானவர் ஜெயலலிதா. பின்னர் அவர் அரசியலில் கால் பதித்ததால் அந்த கதாபாத்திரத்தில் கே.ஆர்.விஜயா நடித்தார்.

59. ஆக்ஷன் பாணி படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, முழுக்க முழுக்க தனது இயற்கையான நடிப்பில் வெளிவந்த கடைசி திரைப்படம் "எங்கேயோ கேட்ட குரல்". நிஜ வாழ்க்கையில் சகோதரிகளான நடிகை அம்பிகாவும் நடிகை ராதாவும் படத்திலும் சகோதரிகளாக நடித்ததோடு மட்டுமல்லாமல் ரஜினியோடு இந்த இருவரும் இணைந்து நடித்த முதல் படமும் இதுவே.

60. 1983 தீபாவளி வெளியீடான ரஜினியின் "தங்கமகன்" மதுரை மீனாட்சி திரையரங்கில் 280 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. 1995ல் ரஜினியின் "பாட்ஷா" ரிலீஸாகும் வரை "தங்கமகன்" திரைப்படமே ரஜினி நடித்து அதிக நாட்கள் ஓடிய ஒரே படம் என்கிற அந்தஸ்த்தைப் பெற்றிருந்தது.

61. தமிழில் "அபூர்வ ராகங்கள்", தெலுங்கில் "அந்துலேனி கதா", மலையாளத்தில் "அலாவுதீனும் அற்புத விளக்கும்" என்பதைப் போல் "அ" என்ற எழுத்தில் ஆரம்பமாகும் "அந்தா கானூன்" திரைப்படத்தின் மூலம் ஹிந்தியிலும் அறிமுகமானார் ரஜினிகாந்த். மேலே குறிப்பிட்;ட மூன்று படங்களிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது. காரணம் இத்திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அமிதாப்பச்சன் துணைக் கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார்.

62. ரஜினி நடித்த படங்களிலேயே சென்சாரில் சிக்கி, ரிலீஸிற்கு முன்பே பரபரப்பை ஏற்படுத்திய திரைப்படம் 1984ல் வெளிவந்த "நான் மகான் அல்ல". இத்திரைப்படத்திற்கு முதலில் வைத்த தலைப்பு "நான் காந்தி அல்ல". இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், தயாரிப்பு நிறுவனமான "கவிதாலயா" பெயரை மாற்றியது.

63. ரஜினியின் நம்பிக்கைக்குரிய இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் ராஜசேகர். இவருடைய இயக்கத்தில் ரஜினி நடித்த முதல் படம் "தம்பிக்கு எந்த ஊரு". "தில்லு முல்லு" திரைப்படத்திற்குப் பிறகு முழுநீள நகைச்சுவை நாயனாக ரஜினி நடித்திருந்த திரைப்படம் இது எனலாம்.

64. ரஜினியின் நூறாவது திரைப்படம் "ஸ்ரீராகவேந்திரர்". திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் கே பாலசந்தரே இவரது 100வது படத்தை தயாரித்திருந்தது ரஜினிக்கு மட்டுமல்ல அவருடைய ரசிகர்களுக்கும் இரட்டிப்பு சந்தோஷத்தை வழங்கியது அந்நாளில். படம் தோல்விப் படமாக அமைந்தாலும், அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர், இத்திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளித்து இருந்தார்.

65. ரஜினியை வைத்து இயக்குநர் மனோபாலா இயக்கிய ஒரே திரைப்படம் சத்யா மூவீஸின் "ஊர்க்காவலன்". இசையமைப்பாளர்கள் சங்கர் கணேஷ். இசையமைப்பில் வந்த கடைசி ரஜினி படமும் இதுவே.

66. ரஜினியின் 125வது படம் "ராஜாதி ராஜா". ரஜினியை வைத்து ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய ஒரே திரைப்படம். முதன் முதலாக ஒரு லட்சத்து இருபத்திரண்டாயிரம் கேஸட்டுகள் விற்று சாதனை படைத்தது இத்திரைப்படம். அன்றைய முதல்வர் மு.கருணாநிதி தலைமையில் பிளாட்டினம் டிஸ்க் வெளியீட்டு விழா நடைபெற்றது. மதுரையில் மட்டும் 181 நாட்கள் ஓடியது.

67. ரஜினி இயக்குநர் பி.வாசு இணைந்த முதல் திரைப்படம் "பணக்காரன்". சத்யா மூவீஸ் தயாரிப்பான இத்திரைப்படமும் 180 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்ற திரைப்படம். இதனைத் தொடர்ந்து "மன்னன்", "உழைப்பாளி", "சந்திரமுகி", "குசேலன்" என ரஜினியின் பல படங்களை இயக்கும் வாய்ப்பு பெற்றார்.

68. ரஜினி - இயக்குநர் ராஜசேகர் கூட்டணியில் 1991 பொங்கல் ரிலீஸாக வெளிவந்த திரைப்படம் "தர்மதுரை". இயக்குநர் எஸ்.பி.முத்துராமனுக்குப் பிறகு ரஜினிக்கு தொடர்ந்து நாலு சில்வர் ஜுபிளி படங்களை கொடுத்தவர் இயக்குநர் ராஜசேகர். இதுவே ரஜினியை வைத்து இவர் இயக்கியிருந்த கடைசி திரைப்படமும் ஆகும்.

69. 1991 தீபாவளி ரிலீஸாக "தளபதி". முதன் முறையாக இயக்குநர் மணிரத்னத்துடன் கை கோர்த்தார் ரஜினி. மகாபாரதத்தை மூலமாகக் கொண்ட சமூகக் கதையில் கர்ணனாக ரஜினி, அர்ஜுனனாக அர்விந்த்சாமி, துரியோதனனாக மம்மூட்டி. ரஜினியின் மாறுபட்ட நடிப்பு, இளையராஜாவின் இசை, "ராக்கம்மா கைய தட்டு", "சுந்தரி கண்ணால் ஒரு சேதி" ஒலிக்காத இடமே இல்லை. முதன் முதலாக நூறு தியேட்டர்களில் வெளியிடப்பட்ட தமிழ் படம் "தளபதி". இதுவே ஜி.வி.பிலிம்ஸின் முதல் தயாரிப்பு.

70. ஆசியாவிலேயே மிக அதிக பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் "எந்திரன்". வெவ்வேறு நாடுகளில் மூவாயிரம் தியேட்டர்களில் திரையிடப்பட்ட முதல் தமிழ் படமும் இதுவே. தமிழர்களால் எதையும் சாதித்துக் காட்ட முடியும் என்பதற்கு சான்றாகவும் இப்படத்தைக் கூறலாம்.

71. சென்னை சி.ஐ.டி. காலனி பக்கமுள்ள விவேகானந்தா கல்லூரியின் பின்பக்கம், ‛அவர்கள் படத்தின் படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்பில் ரஜினிகாந்த் சுஜாதா இருந்துள்ளனர். அந்த சமயம் சுஜாதா புகழின் உச்சத்தில் இருந்ததால் அவரை சுற்றி ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆனால் அதே படப்பிடிப்பில் ஒரு பெஞ்சில் அமைதியாக உட்கார்ந்து இதையெல்லாம் ரசித்து கொண்டிருந்தார் ரஜினி.

72. ‛அவர்கள் படத்தில் ரஜினியின் வில்லத்தனத்தை பார்த்த பலர் அவரிடம் நெருங்கவே பயப்பட்டனர். ஆறிலிருந்து அறுபது வரை படத்திற்கு பிறகே இந்த நிலை மாறியது.

73. ரஜினியின் ‛முரட்டுக்காளை, பில்லா நேரங்களில் உச்சத்திற்கு வந்துவிட்டார் ரஜினி. ரசிகர்கள் அவரை ஒவ்வொரு படத்துக்கும் கொண்டாட தொடங்கிய காலம் அது. அதே சமயத்தில் தான் ரஜினி பற்றிய பல்வேறு வதந்திகளும் வந்தன.

74. இப்போதைய காலகட்டத்தில் ஒரு வருஷத்துக்கு ஒரு படம் பண்ணுகிறார் ரஜினி. ஆனால் 80களில் காலம் நேரம் பார்க்காமல், தூக்கமின்றி ஆண்டிற்கு 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.

75. முரட்டுக்காளை படம் முடித்து, ‛தில்லு முல்லு படப்பிடிப்பின் போது தான் போயஸ் கார்டனில் ரஜினிகாந்த் வீடு வாங்கினார்

76. தில்லு முல்லு படத்தின் படப்பிடிப்பு சவுகார் ஜானகி வீட்டில் தான் நடந்துள்ளது. அந்த வீட்டில் தான் ஒய்.ஜி.மகேந்திரன் உதவியோடு ரஜினியை பேட்டி எடுத்தார் லதா. இவர்களின் முதல் சந்திப்பும் அது தான்.

77. ‛அபூர்வ ராகங்கள் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கே.பாலச்சந்தர் பேசும்போது ரஜினி மிகக் குறைந்த அளவே படத்தில் வந்திருக்கிறார். ஆனால் இவர் எதிர்காலத்தில் மிகப் பெரிய நடிகராக வருவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

78. ரஜினியின் பால்ய கால நண்பர்களாக ராஜேந்திரா கிருபா, பத்மா உமாபதி, கோவிந்தன், நாராயணன் இருந்துள்ளனர்.

79. ‛ஸ்ரீ வள்ளி படத்தை பெங்களூரிலுள்ள டென்ட் கொட்டாயில் மழைபெய்ய நண்பர்களோடு படம் பார்த்து ரசித்திருக்கிறார் ரஜினி.

80. அந்த சமயத்தில் ஒரு ரூபாய்க்கு 20 பஜ்ஜி கொடுப்பார்களாம் அதை ரஜினி தன் நண்பர்களோடு சேர்ந்து சாப்பிடுவாராம்.

81. 50 ஆண்டுகளுக்கு முன், பெங்களூர் எம்பிளாய்மென்ட் அலுவலகத்தில் தன் நண்பர்களோடு சேர்ந்து பதிவு செய்துள்ளார்.

82. ஹிந்தியில் வெளிவந்த பல படங்களை ரஜினி ஒன்று விடாமல் பார்த்து விடுவாராம். ‛மேரா நாம் ஜோக்கர், பந்தம் படங்களை நண்பர்களோடு சேர்ந்து பலமுறை இரவு காட்சி பார்த்துள்ளார்.

83. சினிமாவுக்கு வரும் முன்பே, உடைகளுக்கு எல்லாம் தனி கவனம் செலுத்தி ஸ்டைலாக ஆடைகள் அணியும் பழக்கம் உள்ளவர் ரஜினி.

84. 1978 ரஜினி ரசிகர் மன்றத்தை முதன்முதலில் மயிலாப்பூரைச் சேர்ந்த பூக்கடை ராஜா என்பவர் ஆரம்பித்தார். பூக்கடை ராஜா, சம்பத்குமார், நட்ராஜ் ஆகியோர் ஆரம்பக்கட்ட ரஜினி ரசிகர் மன்றத்தில் முக்கிய பொறுப்புக்கள் எடுத்து நடத்தியுள்ளனர்.

85. மதுரையில் நடந்த ‛திரிசூலம் பட விழாவில் கலந்து கொள்ள சிவாஜி உடன் ரஜினி சென்றுள்ளார்.

86. ‛மூன்று முகம் படத்திற்காக மதுரையில் மிகப் பெரிய விழா ரஜினிக்காக அந்தக்காலத்திலேயே எடுத்துள்ளனர். இதில் கலந்துகொள்ள சத்யா மூவிஸ் சார்பில் ரயிலில் சென்று வந்தாராம் ரஜினி. ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் அரைமணிநேரம் கொண்டாடப்பட்டதாம். அதனால் அடுத்தநாள் அந்த ரயில் மதுரையை காலதாமதமாக சென்றடைந்துள்ளது.

87. ரஜினி பிப்ரவரி 26-ஆம் தேதி லதாவை திருமணம் செய்து வந்த பிறகு அவரை வீட்டில் விட்டுவிட்டு நேராக ‛நெற்றிக்கண் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அன்றைய தினம் லட்சுமியும், ரஜினியும் சேர்ந்து நடித்த காட்சி படமாக்கப்பட்டது. தாலி கட்டியவுடன் மனைவியை வீட்டில் விட்டுவிட்டு படப்பிடிப்பில் ரஜினி கலந்து கொண்டார் என்ற செய்தி தான் அன்றைய காலத்து பத்திரிகைகளில் பரபரப்பாக பேசப்பட்டது.

88. ‛ஜானி படம் 1980 ஆகஸ்ட் 15 வெளிவந்த சமயம், தினமலர் பத்திரிக்கையில் இரண்டு பக்கமாக பல்வேறு ரஜினியின் புகைப்படங்கள் கலரில் வெளிவந்தது.

89. முதல் முதலில் ஹிந்தி படத்தில் அமிதாப்புடன் நடித்தபோது ரஜினிகாந்த் ஏற்பட்ட நட்பு இன்று வரை தொடர்கிறது. ஒரு சமயம் ரஜினிகாந்த் தொடர்ந்து சபரிமலைக்கு சென்று வந்துள்ளார். அப்போது அமிதாப் பச்சனும் அவருடன் சபரிமலை சென்று வந்ததாக தகவல்.

90. நடிகர் தியாகராஜன் 1979 கன்னடத்தில் ‛மாத்து தப்படா மகா என்ற படத்தை ரஜினியை வைத்து தயாரித்துள்ளார். அதில் ஹீரோ அனந்த்நாக். வில்லன் ரஜினி. தமிழில் ‛இன்ஸ்பெக்டர் ரஜினி என்ற பெயரில் டப் செய்யப்பட்டது. இளையராஜா கன்னடத்தில் இந்த படம் மூலம் அறிமுகம் ஆனார்.

91. ரஜினி தன் பாதுகாவலர்களிடம் ரசிகர்கள் என்னை பார்க்க வந்தால் கடுமையான வார்த்தைகளால் பேசாதீர்கள், அடிக்காதீர்கள். நான் அவர்களை வந்து பார்த்தால் போய்விடுவார்கள். அதனால் அவர்களை காக்க வைக்காதீர்கள் என்று சொல்வாராம்.

92. ரஜினியின் குருசாமி நம்பியார் தான். திருமணத்துக்கு பிறகும் ரஜினிகாந்த் பல ஆண்டுகள் சபரிமலைக்கு சென்று வந்துள்ளார்.

93. ரஜினிக்கு நெருங்கிய நண்பராக ஜெய்சங்கர் இருந்துள்ளார். படப்பிடிப்பு முடிந்தவுடன் சில மணிநேரங்கள் ஜெய்சங்கருடன் நேரத்தை செலவிட்டுள்ளார்.

94. 1980 வரை ரஜினி படப்பிடிப்பிற்கு வெளியில் செல்வதற்கு முன் தன் வீட்டில் வெளியே நின்றிருக்கும் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து விட்ட பிறகே படப்பிடிப்புக்கு செல்வார்.

95. ஆன்மிக புத்தகங்கள் யார் கொடுத்தாலும் விரும்பி படிப்பார். அப்படி விரும்பி படித்ததில் தான் இமயமலைக்கு போக வேண்டும் என்ற ஆர்வமும் ஏற்பட்டது.

96. சினிமாவின் ராசியான எண் என்றால் அது ஒன்பது. ஷங்கரின் இயக்கத்தில் ரஜினியின் "சிவாஜி" 9வது படம். ஏ.விஎம் - ரஜினி கூட்டணியில் வந்த 9வது படம் "சிவாஜி". மேலும் ரஜினியின் 100வது தமிழ் படம். ஏ.வி.எம் நிறுவனத்தின் 168வது தயாரிப்பு "சிவாஜி". என்று இத்திரைப்படத்திற்கு பல சிறப்புகள் சேர்க்கப்பட்டது.

97. நான் மனிதனாக பிறந்து வளர்ந்தது வேண்டுமானால் கர்நாடகாவாக இருக்கலாம். ஆனால், கலைஞனாகப் புது அவதாரம் எடுத்தது தமிழ்நாட்டில்தானே. என்னால் எப்படி தமிழ்நாட்டையும், தமிழர்களையும் விட்டுக் கொடுக்க முடியும்? என்று காவிரி பிரச்சனையில் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார் ரஜினி.

98. நடிகர் திலகம் சிவாஜிகணேசன், மற்றும் கன்னட நடிகர் ராஜ்குமார் ஆகியோர் பார்த்து பாராட்டிய ரஜினி படம் "நெற்றிக்கண்". சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்த்திய படம் "அண்ணாமலை". எல்லை கடந்து அயல்நாடுகளிலும் புகழைத் தேடித் தந்த படம் "முத்து".

99. ரஜினிக்கு உலகில் மிகவும் பிடித்தமான விஷயம் இறை உணர்வு. இரவு படுக்கைக்குப் போகும் முன்பும் "ஸ்ரீராகவேந்திரர்" படத்தைக் கும்பிடுவது அவரது வழக்கம். தினமும் அரைமணி நேரம் தியானத்தில் ஆழ்ந்திருப்பார் ரஜினி. ராகவேந்திர சுவாமிக்கு பூஜை செய்யாமல் காபி கூட அருந்தமாட்டார்.

100. கமல்ஹாசனுக்காக சுஜாதா எப்போதோ எழுதிய கதைதான் "ரோபோ". காலத்தின் கட்டாயம் "சிவாஜி"யின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினி நடிக்க இருப்பதாக முடிவானது. இரண்டரை வருட கடின உழைப்பில், 2010 அக்டோபர் 1ம் தேதி "ரோபோ" "எந்திரன்" என்ற பெயரில் அவதரித்தான்.

101. இங்கிலாந்தில் டாப் 10 படவரிசையில் ரஜினியின் "சிவாஜி" முதன் முதலாக இடம் பிடித்தது. ஒரு தமிழ் படம் அத்தகைய அரிய கௌரவத்தை அடைந்தது சூப்பர் ஸ்டார் ரஜினியால் மட்டுமே என்றால் அது மிகையல்ல.

102. நடிகர் ராகவா லாரன்ஸ் திருமுல்லைவாயிலில் ஏழு கிரவுண்டில் ஸ்ரீராகவேந்திரருக்கு கோயில் கட்டியிருக்கின்றார். ஆதரவற்றோர் ஆசிரமம் நடத்துகின்றார். "தலைவணங்கி உள்ளே வா. கேட்டது கிடைக்கும்" என ரஜினி அன்புடன் கட்டளையிட்ட வாசகத்தைத் தன் ஆலயத்தில் எழுதி வைத்திருக்கின்றார் லாரன்ஸ். பணிவு மட்டுமே ரஜினியின் ஒரே பாணி.

103. "வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரமான விஷயமல்ல என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். நமக்கு இன்பம் கிட்டும் பொழுது அது நிலையானது அல்ல என்ற உணர்வு நம்முள் இருந்தால் நாம் அடக்கத்துடன் அந்த இன்பத்தை அனுபவிப்போம். அதேபோல் கஷ்டம் வரும்போது அதுவும் நிலையானதல்ல என்று நாம் உணர்ந்து கொண்டால் அந்தக் கஷ்டத்தின் சுமை தாங்க முடியாமல் நொந்துபோய் நொறுங்கிவிட மாட்டோம். வாழ்க்கையில் இரண்டும் கலந்துதான் இருக்கும். அதுதான் நல்லதும் கூட. இது ரஜினியின் கூற்று.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
படையப்பாவின் படிக்கட்டுகள்...: ரஜினி 69 பிறந்தநாள் ஸ்பெஷல்படையப்பாவின் படிக்கட்டுகள்...: ரஜினி 69 ... கேப்மாரிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி கேப்மாரிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in