விவேக் மறைவு என்னை மிகுந்த துக்கத்தில் ஆழ்த்தியது - இளையராஜா | மரக்கன்று நட்டு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்துவோம் - சிம்பு | பிக்பாஸ் வீட்டுக்கு ஒரு வாரம் லீவு போட்ட சுதீப் | ஆறு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மீரா ஜாஸ்மின் | சித்தார்த் பிறந்தநாளில் மகாசமுத்ரம் போஸ்டர் வெளியீடு | தமிழில் உருவாகும் மோசன் காமிக்ஸ் சூப்பர் ஹீரோ படம் | இறுதிக்கட்டத்தில் அதர்வா படம் | எம்.ஜி.ஆர் மகன்: தந்தை மகன் ஊடலை சொல்லும் படம்: பொன்ராம் | ஹிந்தி டிவி நடிகை பாருல் சவுத்ரி குடும்பம் கொரோனாவால் பாதிப்பு | விடைபெற்றார் விவேக் : அரசு மரியாதையுடன் உடல் தகனம் - மரக்கன்றுகள் ஏந்தி ரசிகர்கள் அஞ்சலி |
மறைந்த நடிகரும், வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் உடல் சென்னை, பெசன்ட் நகரில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. கடைசி நிமிடம் வரை வாழ்க்கையை, "டேக் இட் இஸி"யாக வாழ்ந்து, எல்லோரையும் சிரிக்க வைத்தவர், இப்போது அழவைத்து சென்றுவிட்டார்.
நடிகர், காமெடியன், எழுத்தாளர், நாடக ஆசிரியர், ஓவியர், வசன கர்த்தா என பன்முக திறமை கொண்டவர் கிரேஸி மோகன் 67. எளிமையான நகைச்சுவை வசனங்களால் ரசிகர்களின் இதயங்களை கொள்ளை அடித்தவர். திடீர் மாரடைப்பு அதுவும் முதன்முதலாக வந்த மாரடைப்பில் அவரது உயிர் பிரிந்தது.
கே.பாலசந்தரின் பொய்க்கால் குதிரை படம் மூலம் வசனகர்த்தாவாக சினிமாவில் அறிமுகமானவர், பின்னர் கமலின் நட்பு கிடைக்க, அவருடன் அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராசன், அவ்வை சண்முகி, தெனாலி, வசூல்ராஜா எம்பிபிஎஸ்., இந்தியன், பஞ்சதந்திரம் உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களில் பணியாற்றினார். நாடகத்திலும் வெற்றி கண்ட கிரேஸி, தமிழகம் தவிர்த்து இந்தியா முழுக்க தனது நாடகத்தை அரங்கேற்றி ரசிகர்களை கவர்ந்தார்.
பிரபலங்கள் அஞ்சலி
மறைந்த கிரேஸியின் உடல் சென்னை, மந்தைவெளியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. கமல்ஹாசன், எஸ்பி பாலசுப்ரமணியம், சுரேஷ் கிருஷ்ணா, சூர்யா, சிவக்குமார், எஸ்வி சேகர், ஜெயராமன், கவுண்டமணி, கவுதமி, கோவை சரளா, நாசர், விவேக், மனோபாலா, பிரசாந்த், பாரதிராஜா, கேஎஸ்.ரவிக்குமார், ஐசரி கணேஷ், ரமேஷ் கண்ணா, சிஆர்.சரஸ்வதி, ஜிவி பிரகாஷ், ரமேஷ் திலக், குட்டி பத்மினி, சிவகார்த்திகேயன், சாம் சிஎஸ், பிசி ஸ்ரீராம், மும்தாஜ், சித்ரா லட்சுமணன், இயக்குநர் விஜய், வையாபுரி, தாமு, இசையமைப்பாளர் தேவா, பிரசன்னா, பாண்டியராஜன், வஸந்த், பாஸ்கி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.
தகனம்
பின்னர் அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின்மயானத்தில் வைத்து தகனம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அவருடன் நடிகை பூஜா குமாரும் உடன் வந்திருந்தார். மதன்பாபு, கணேஷ்(ஆர்த்தி கணவர்), காத்தாடி ராமமூர்த்தி போன்றவர்களும் பங்கேற்றனர்.
"டேக் இட் ஈஸி... லைப் இஸ் கிரேஸி" என்ற தாரக மந்திரத்துடன் தன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்தவர் கிரேஸி. கிரேஸி மோகன் என்றாலே வார்த்தைக்கு வார்த்தை நகைச்சுவை, கேள்விக்கு பதில் சொன்னாலும் நகைச்சுவை என நகைச்சுவையே தன் வாழ்க்கையாக வாழ்ந்தவர். பேச்சுவாக்கில் நகைச்சுவையை அடுக்கி கொண்டே போகும் கிரேஸி மோகன் இன்று நம்மோடு இல்லை. ஆனால் அவரின் நகைச்சுவை என்றும் நம்மோடு இருக்கும்.