டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
1995ல் வெளிவந்த 'பாட்ஷா' படம் மாதிரி ஒரு முழுமையான ரஜினி படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் ரஜினி ரசிகர்களுக்கு நீண்ட காலமாகவே இருக்கிறது. அந்தப் படம் திருப்திப்படுத்திய அளவிற்கு அதன் பின் வந்த ரஜினி படங்கள், முழுமையான ரஜினி படங்களாக இல்லாமல், சென்டிமென்ட் அதிகமான படங்களாகவோ, காமெடி அதிகமான படங்களாகவோ தான் இருந்தன.
இடையில் வந்த 'படையப்பா, சிவாஜி' ஆகிய படங்கள் ரஜினி ரசிகர்கள் எதிர்பார்த்த படங்களாக இருந்தன. 'பாட்ஷா' படம் போன்று காட்சிக்குக் காட்சி ரஜினியிசம் மட்டுமே இருக்கும் படம் வருமா என்று ஏங்கித் தவித்த ரசிகர்களுக்கு 'பேட்ட' படம் சரியான பொங்கல் விருந்தாக சில நாட்கள் முன்பாக ஜனவரி 10ம் தேதியே இருக்கும் என்று நிச்சயமாகச் சொல்ல முடியும்.
இன்று காலை சொன்ன நேரத்திற்கு அரை மணி நேரம் முன்பாகவே 'பேட்ட' படத்தின் டிரைலரை யு டியுபில் வெளியிட்டார்கள். விஜய் சேதுபதியின் குரல் பின்னணியில் ஒலிக்க, “20 பேரை அனுப்பி வச்சேன், எல்லாரையும் அடிச்சி துவைச்சிட்டான்” என டிரைலரின் ஆரம்பமே ரஜினிக்கான பில்ட்அப்புடன் ஆரம்பமாகிறது. அடுத்து 'ஒருத்தனே யாரோ ஹாஸ்டல் வார்டனா, மரண காட்டு காட்டிட்டான்' என மீண்டும் ஒரு பில்ட்அப்.
'பார்க்காத்தானே போற, இந்த காளியோட ஆட்டத்தை' என இருட்டின் பின்னணியில் இருந்து வெளிச்சத்துக்கு வந்து கொண்டே வசனம் பேசி டிரைலரில் அறிமுகமாகிறார் ரஜினிகாந்த். அடுத்து தான் அறிமுகமான 'அபூர்வ ராகங்கள்' பட பாணியில் ஒரு கேட்டை ஸ்டைலாகத் திறந்து ஒரு என்ட்ரி கொடுக்கிறார்.
அதன்பின் ஏற்கெனவே நாம் கேட்டு கேட்டு பழகிப் போன ரஜினிக்கே உரிய தேவா ஸ்டைல் பின்னணி இசையில் கொஞ்சம் காப்பியடித்து அனிருத் போட்டிருக்கும் இசையுடன் ரஜினியின் பலவிதமான மான்டேஜ் ஷாட்கள். அடுத்து படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர்களான சிம்ரன், த்ரிஷா, சசிகுமார், பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக், விஜய் சேதுபதி கதாபாத்திர அறிமுகங்களும் வருகின்றன.
கல்லூரி மாணவியாக நடிக்கும் மேகா ஆகாஷ், “பார்க்கிறதுக்கு சின்னப் பையன் மாதிரி ஸ்டைலா இருக்கீங்க,” என்று சொன்னதும் இளமையான ரஜினிகாந்த், 'ஸ்டைலா இருக்கனா, நேச்சுரலி' என தன்னை ரசித்து சிரிக்கிறார். சிம்ரனுடன் காதல் பார்வையுடன் சில சந்திப்புகள் என மகிழ்ச்சியாக நகரும் டிரைலர் அடுத்து ஆக்ஷனை நோக்கிப் பயணிக்கிறது.
“சிறப்பான தரமான சம்பவங்களை இனிமேதான் பார்க்கப் போற” என ரஜினிகாந்தின் பன்ச் வசனத்துடன் அடுத்தடுத்த காட்சிகள், போராட்டம், வில்லனின் கோபம், துப்பாக்கி சூடு, கத்திச் சண்டை என பரபரக்கிறது.
விஜய் சேதுபதியின் அட்டகாசமான சிரிப்பு ஒன்றிற்குப் பிறகு, “ஏய்..ஏய்..சத்தியமா சொல்றேன், அடிச்சி அன்டர்வேரோட ஓடவிட்டுருவேன், மானம் போனா திருப்பி வராது பார்த்துக்கோ,” என தன் நக்கல் வசனத்தைப் பேசி அசத்துகிறார் ரஜினிகாந்த்.
“ஏய், எவனுக்காவது, பொண்டாட்டி, குழந்தை, குட்டின்னு சென்டிமென்ட், கின்டிமென்ட் இருந்தால், அப்படியே ஓடிப் போயிடு, கொல காண்டுல இருக்கேன், மவனே, கொல்லாம விட மாட்டேன்,” என மாஸ் வசனம் பேசி மிரட்டுகிறார் ரஜினிகாந்த்.
'எ கார்த்திக் சுப்பராஜ்' படம் என்ற டைட்டிலுடன் இயக்குனரின் பெயர் இடம் பெறுகிறது. ஒரு தெள்ளத் தெளிவான ரஜினிகாந்த் படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்பராஜ் என்பது டிரைலரிலிருந்தே புரிகிறது.
கடைசியாக 'ஸ்வீட் சாப்பிடப் போகிறோம்,' என ரஜினியின் வசனத்துடன் படம் பொங்கல் வெளியீடு என்ற கார்டுடன் வேற ஒரு ரஜினி ஜாலியாக நடனமாடி வருவதுடன் டிரைலர் இனிதே முடிகிறது.
2 நிமிடம் 29 வினாடிகள் உள்ள டிரைலர் முழுவதையும் ரஜினிகாந்த்தே ஆக்கிரமித்திருக்கிறார். மற்றவர்களுக்கும் மறக்காமல் டிரைலரில் சில வினாடிகள் இடம் கொடுத்திருக்கிறார்கள்.
டிரைலருக்கான பின்னணி இசையில் எங்குமே அனிருத் தெரியவில்லை. இளையராஜாவும், தேவாவும் கலந்து தெரிகிறார்கள். டிரைலரில் பெயருக்குக் கூட ஒரு சில பாடல்களையும் சேர்க்கவில்லை, மறந்துவிட்டார்களா, வேண்டுமென்றே விட்டார்களா?.
ரஜினியின் தோற்றமும், சுறுசுறுப்பும், பரபரப்பும், ஆக்ஷனும் இன்றைய இளம் ஹீரோக்களை பொறாமை கொள்ள வைக்கும். வசனங்கள் ஒவ்வொன்றும் ரஜினிமார்க் ரகம். ஒரு தீவிர ரஜினி ரசிகர் இயக்கியுள்ள படம் என்பது டிரைலரிலேயே தெரிகிறது.
கடந்த சில படங்களாக வயதான ரஜினிகாந்த்தைப் பார்த்து சோர்ந்து போயிருந்த ரஜினி ரசிகர்களுக்கு இந்த 'பேட்ட' பொங்கலுக்கான கட்டிக் கரும்பு, சர்க்கரைப் பொங்கல் தான்.
பேட்ட டிரைலர் - வெற்றிக் கோட்டை டிரைலர்லயே தொட்டாச்சி...!