ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அரசியல், சினிமா, சீரியல் என, 'பிசி'யாக உள்ள நடிகை குஷ்பு, தற்போது லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் நடிக்கிறார். சினிமா, சீரியல் குறித்து, அவருடன் பேசியதிலிருந்து:
மீண்டும், 'டிவி' சீரியலில் நடிப்பது ஏன்?
ஐந்தாண்டுக்கு பின், முழு வேகத்துடன், சீரியலில் நடிக்கிறேன். கடைசியாக, 2014ல், சீரியலில் நடித்தேன். இந்த கதை மிகவும் பிடித்திருந்தது. முழு பொறுப்பையும், சுந்தர்.சி என் தலையில் போட்டு விட்டார். லாப நஷ்டம் அனைத்திற்கும், நானே பொறுப்பு ஏற்றுக் கொண்டேன். குடும்பப் பாங்கான கதை. புதுமுகங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளோம்.
தொடருக்காக பிரமாண்டமாக, 'செட்' போட்டுள்ளீர்களே?
சினிமாவுக்கு இணையாக, 2 கோடி ரூபாய்க்கு, 'செட்' போட்டுள்ளோம். மனதிற்கு நிறைவாக உள்ளது.
குஷ்புவின் நிஜம், சினிமாவில், சீரியலில் பிரதிபலிக்குமா?
என் அரசியல் வாழ்க்கைக்காக, சினிமா மற்றும் சீரியலை பயன்படுத்த மாட்டேன். பொது வாழ்க்கை தனி, வேலை தனி. அரசியலுக்காக எந்த பாத்திரத்தையும், நாங்கள் உருவாக்குவதில்லை.
சினிமா தயாரிப்பெல்லாம் எப்படி போகிறது?
அவ்னி மூவிஸ், அவ்னி சினிமாஸ், அவ்னி டெலி மீடியா என, மூன்று தயாரிப்பு நிறுவனங்கள் எங்களுக்கு உள்ளன. அனைத்தும், 'பிசி'யாக போகிறது. ஆதி நடிப்பில், பட வேலை நடந்து கொண்டிருக்கிறது. அடுத்து, புதுப்படம் ஒன்றும் தயாரிக்க உள்ளோம்.
சினிமாவில் எந்த மாதிரியான பாத்திரத்தில் நடிக்க விருப்பம்?
வயதுக்கேற்ற மாதிரி நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். இயக்குனரிடமும் சொல்லி விட்டேன். இந்த வயதில், காதல் காட்சிகள் எல்லாம் வேண்டாம் என, கூறிவிட்டேன்.
இணையதள தொடர்கள் தயாரிக்கும் எண்ணம் உண்டா?
அதைப்பற்றி இன்னும் நான் யோசிக்கவில்லை. எதில் இறங்கினாலும், அது, எங்கள் பெயரை பாதிக்கும்படி இருக்கக்கூடாது என்பதில், தெளிவாக இருக்கிறோம். இணையதள தொடர் தயாரிக்கும் போது, அதை முடிக்க வேண்டும். 'டிவி' தொடர் அப்படியில்லை. டி.ஆர்.பி.,க்கு ஏற்ப, பாத்திரங்களை இணைக்கலாம்; வெளியேற்றலாம்.
வீட்டில் குஷ்பு எப்படி?
வீட்டில் எல்லா வேலையையும் நான் தான் செய்வேன். வீட்டில் எந்த துாசி, குப்பை இருந்தாலும், என் கண்ணில் பட்டு விடும். என்னைப் பார்த்தால், வீட்டில் எல்லாரும் பயப்படுவர்.
மைல்கல்லை பார்த்து கூட, தமிழ் கற்றதாக சொல்கிறீர்களே...
எனக்கு தமிழ் மொழி கற்றுக் கொள்வதில் நிறைய ஆர்வம். மொழி தெரியவில்லை என்றால், தொழிலுக்கு துரோகம் செய்வது போல் இருக்கும். மொழி தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். பழைய டிரைவர் மூர்த்தி தான், எனக்கு நாளிதழ்களை வாங்கி கொடுத்து, தமிழ் கற்றுக் கொடுத்தார்.
இந்த விஷயத்தில் உங்களுக்கு பிடித்த நடிகை?
எனக்கு தெரிந்து, தமன்னா, புதிய மொழிகளை கற்றுக் கொள்வதில் மிகுந்த ஆர்வமாக இருப்பார். தமிழ், தெலுங்கு என எதுவாக இருந்தாலும், சூப்பராக பேசுவார்.