ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரபல மலையாள நடிகர் கேப்டன் ராஜூ. கடந்த சில மாதங்களாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் இன்று காலை கொச்சியில் அவரது வீட்டில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 68.
1981-ல் மலையாளத்தில் ரக்தம் என்கிற படத்தில் அறிமுகமான கேப்டன் ராஜூ, கிட்டத்தட்ட 500 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். எண்பதுகளில் மலையாளத்தில் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு மொழிகளிலும் பிஸியான வில்லன் நடிகராக வலம் வந்தார். ஹிந்தி மற்றும் ஆங்கில படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
தமிழில், ரஜினியின் தர்மத்தின் தலைவன், கமலின் சூரசம்ஹாரம், சின்னப்பதாஸ், ஜல்லிக்கட்டு, ராஜகுமாரன் உட்பட பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார் கேப்டன் ராஜூ. குறிப்பாக அவரது ஆஜானுபாகுவான தோற்றத்தை பார்த்து ஹைடெக் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு அடிக்கடி அவரை தேடிவந்தது.. ராணுவத்தில் பணியாற்றி ஒய்வு பெற்றவர் என்பதால் அவரது பெயருடன் கேப்டன் பட்டமும் கடைசிவரை ஒட்டிக்கொண்டது.
கடைசியாக மலையாளத்தில் கடந்த வருடம் வெளியான மம்முட்டியின் மாஸ்டர் பீஸ் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் கேப்டன் ராஜூ நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மறைந்த ராஜூவுக்கு பிரமீளா என்கிற மனைவியும், ரவி ராஜூ என்கிற மகனும் உள்ளனர்.
நடிகர் சங்கம் இரங்கல்
நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர் , பிரபல நடிகர் கேப்டன் ராஜு அவர்கள் மறைந்த செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. நடிகர் சங்கத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். அவரது இழப்பு தென்னிந்திய திரைத்துறைக்கு ஈடு கட்ட முடியாத மாபெரும் இழப்பாகும். அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கமும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, அன்னாரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம் என நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.