விமர்சனம்
----------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
காக்காமுட்டை, குற்றமே தண்டனை ஆகிய வெற்றிப்படங்களைத் தந்த எம்.மணிகண்டன் இயக்கம். படத்துக்கு படம் ஹாட்ரிக் அடித்துவிடும் விஜய் சேதுபதியின் நடிப்பு. முதல் படத்திலேயே தேசிய விருதை அள்ளிய ரித்திகாசிங் இந்த கூட்டணியில் இப்போது ஆண்டவன் கட்டளை. இன்றைய சூழலில் அவசியமான படம்.
ஊரைச்சுற்றிக் கடன். அதை அடைப்பதற்கு நண்பன் யோகிபாபுவுடன் வெளிநாடு செல்ல முயற்சிக்கிறார் விஜய் சேதுபதி. சென்னைக்கு வந்து ஒரு போலி ஏஜெண்ட் மூலம் பாஸ்போர்ட், விசா எடுக்கிறார்கள். பாஸ்போர்ட்டில் மனைவி பெயர் போட்டால் ஈஸியாக விசா கிடைக்கும் என்று சொல்லப்பட, கார்மேகக்குழலி என்ற பெயரை மனைவியாக சேர்க்கிறார். வம்பு இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது.
யோகிக்கு பாஸ்போர்ட் கிடைக்க, விஜய் சேதுபதி விசா கிடைக்காமல் அல்லாடுகிறார். தற்காலிகமாக, நாசரின் நாடகக் கம்பெனியில் வேலைக்குச் சேர, நாடகக்குழுக்கு லண்டன் போகும் வாய்ப்பு, இவர்களுடன் சேதுபதியும் போக வேண்டிய கட்டாயம், அதற்கா பாஸ்போர்ட்டில் உள்ள கார்மேகக்குழலி என்ற பெயரை நீக்க முயற்சிக்கிறார்.
டி.வி. செய்தியாளர் ரித்திகாசிங்கின் பெயரும் கார்மேகக்குழலி. அது எதேச்சையாக மாட்ட, அவரிடம் உதவி கேட்கிறார். அவர் உதவினாரா? விஜய் சேதுபதி லண்டன் போனாரா? நண்பன் என்ன ஆனார்? என்று எங்கேயும் நெருடல் இல்லாமல் ஒன்றுக்கு ஒன்று முடிச்சுப்போட்டு எதார்த்தமாக திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர்.
விஜய் சேதுபதி நடிப்பில் ஹாட்ரிக் அடிக்கிறார். மதுரைக்காரனாக வரும்போதும் சென்னையில் வாடகை வீடு தேடி அலையும்போதும், பாஸ்போர்ட்டுக்காக அலையும்போதும், நாசரிடம் பணிவைக் காட்டும்போதும், ரித்திகாசிங்கிடம் விருப்பத்தை வெளிப்படுத்தும்போதும். அவரது நடிப்பு மொழியில் புதுப்புது பரிமாணங்கள். அதுவம் வாய்பேச முடியாதவராக கோர்ட்டில் தன் குமுறலைக் கொட்டும்போது கைதட்டல் பெறுகிறார். இன்றைய இளைஞர்களின் மனவார்ப்பாக அவர் வாழ்ந்து காட்டியிருக்கிறார்.
யோகிபாபு கலகலக்க வைக்கிறார். லண்டன் விசா கிடைத்ததும், லண்டன் சிட்டிசன் மேலயே கை வைக்கிறமாதிரியான வசனங்களால் திரை அரங்கமே கலகலப்பில் அதிர்கிறது.
விஜய் சேதுபதியுடன் போட்டி போட்டு நடித்திருக்கிறார் ரித்திகா சிங் டி.வி ரிப்போர்ட்டராக அவரது தோற்றம். அவரது தைரியம், சேதுபதியிடம் கோர்ட்டில், வக்கீலிடம் அவர் காட்டும் முகபாவம், ஏ கிளாஸ், அதுவம் கிளைமாக்ஸில் வெட்கப்படும் இடம் செம ஸ்மார்ட்.
பூஜா தேவாரியா மனதில் நிற்கிறார். அவரைப் போலவே நாசரும், இலங்கைத் தமிழராக வந்தவரும் விசாரணை அதிகாரியும் நம் மனதை விட்டு அகலா பாத்திரங்கள்.
கே-யின் இசை, இயக்குநரின் வசனம், ஒளிப்பதிவு என்று அத்தனையும் படத்தின் ப்ளஸ்.
பாஸ்போர்ட்டில் எவ்வளவு முறைகேடுகள் நடக்கின்றன? குறுக்குவழியில் போனால் எவ்வளவு பிரச்னைகள்? என்பதை உணர்த்தியதோடு, சென்னையில் வீட்டு வாடகைப் பிரச்னையைத் தொட்டு, விவாகரத்து பற்றி இன்றைய சூழலில் வாழும் தம்பதிகளுக்கு அறிவுரையும் கூறிய விதத்திற்காக இயக்குநர் மணிகண்டனுக்கு ஒரு சல்யூட்.
ஆண்டவன் கட்டளை - சமூகத்தின் அக்கறை.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!