
சினிமா ரசிகர்களின் பேஷன் உலகையே மாற்றி அமைத்த சினிமா பிரபலங்கள்
ஆக 09, 2026
Advertisement
தனக்கு பிடித்த நடிகரின் படங்களை அதிகம் விரும்பி பார்ப்பது, ஒரே படத்தை அதிக முறை பார்ப்பது ஒரு காலமாக இருந்தது. ஆனால் சினிமா பிரபலங்களின் ஆடை, ஹேர் ஸ்டைல் மற்றும் பேஷன் டிரெண்டுகள் திரையைத் தாண்டி ரசிகர்களின் நிஜ வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கங்கள், மாற்றங்கள் ஏராளம். அப்படி சினிமா பிரபலங்களை போலவே ஹேர் ஸ்டைல், உடை, தோற்றம், பயன்படுத்தும் பொருட்கள் என ரசிகர்களின் பேஷன் உலகையே மாற்றிய சினிமா பிரபலங்கள் மற்றும் அவர்கள் சினிமாவிற்காக பயன்படுத்திய தனித்துவமான விஷயங்களின் விபரங்கள் இதோ...
ஆண்களுக்கான ஹேர் ஸ்டைல் & பேஷன்:
அஜித்குமார் "சால்ட் அண்ட் பெப்பர்" ஸ்டைல்:
மங்காத்தா படத்திற்குப் பிறகு நரை முடியை மறைக்காமல், அதை ஒரு கெத்தான பேஷனாக மாற்றிய பெருமை அஜித்தையே சாரும். வயதான தோற்றமாகக் கருதப்பட்ட வெள்ளை முடியை இளைஞர்கள் கூட டிரெண்டாக பின்பற்றத் தொடங்கினர்.
சூர்யா "அஞ்சான் கட்டிங்" & பிட்னஸ்:
அஞ்சான் திரைப்படத்தில் சூர்யா வைத்திருந்த ஹேர் ஸ்டைலும் தாடி அமைப்பும் சலூன்களில் "அஞ்சான் கட்டிங்" என்றே அழைக்கப்பட்டு இளைஞர்களிடம் செம ஹிட் அடித்தது. அதேபோல் வாரணம் ஆயிரம் படத்தின் சிக்ஸ்பேக், பிட்னஸ் டிரெண்டும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
ரஜினிகாந்த் ஸ்பெஷல் கூலிங் கிளாஸ் & ஸ்டைல்:
ரஜினியின் தலை முடியை கோதும் ஸ்டைல், கண்ணாடி போடும் விதம் தலைமுறை கடந்து பிரபலமானது. பாட்ஷா லெதர் ஜாக்கெட் முதல் கபாலி த்ரீ-பீஸ் சூட் வரை ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றன.
கமல்ஹாசன் மீசை :
தேவர் மகன், விருமாண்டி போன்ற படங்களுக்காக கமல்ஹாசன் வைத்த வித்தியாசமான மீசை ரசிகர்களிடம் மிக பிரபலமாக இருந்தது. குறிப்பாக கிராமப்புறங்களில் பலரும் இந்த மீசை தோற்றத்திற்கு மாறினார்கள்.
தனுஷ் "மாரி" கிளாஸ் & லோக்கல் கெத்து:
மாரி திரைப்படத்தில் தனுஷ் அணிந்த வட்ட வடிவ சன் கிளாஸ் மற்றும் பூ போட்ட சட்டைகள் தமிழக கடைவீதிகளில் அதிகளவில் விற்பனையாகின.
பெண்களுக்கான ஆடை & பேஷன் :
திரிஷா "ஜானு" குர்தா & "VTV" புடவைகள்:
‛96" திரைப்படத்தில் திரிஷா அணிந்த மஞ்சள் நிற குர்தா மற்றும் நீல நிற துப்பட்டா மாடல் "Janu Kurta" என்ற பெயரிலேயே துணிக்கடைகளில் வைரலாகி விற்பனையானது. அதேபோல் விண்ணைத்தாண்டி வருவாயா காட்டன் புடவைகளும் கல்லூரி பெண்களின் பேவரைட் ஆனது.
நதியா - நதியா கொண்டை, தோடு & வளையல்:
80-90களில் நதியாவின் ஹேர் ஸ்டைல், அகலமான தோடு, ‛நதியா தோடு" மற்றும் ‛நதியா பேக்" ஆகியவை பெண்கள் மத்தியில் ஒரு தனி பேஷன் அலைக்கற்றையையே உருவாக்கியது.
குஷ்பூ - குஷ்பூ பிளவுஸ் & புடவைகள்:
90களில் தமிழகத்தில் குஷ்பூவின் ஆடை வடிவமைப்பு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. "குஷ்பூ பிளவுஸ்", "குஷ்பூ புடவை" என்ற பெயரிலேயே ஜவுளிக் கடைகளில் பிரத்யேகமாக ஆடைகள் விற்கப்பட்டன.
நயன்தாரா - காஞ்சிபுரம் & செக்கடு காட்டன் புடவைகள்:
‛விஸ்வாசம்" படத்தில் நயன்தாரா அணிந்த செக்கடு காட்டன் புடவைகள் (கன்டாங்கி புடவை) மற்றும் அவரது சிம்பிள் மேக்கப் லுக் இல்லத்தரசிகள் மற்றும் பணிபுரியும் பெண்களிடம் மிகவும் பிரபலம் அடைந்தது. அதே போல் லோ நெக் மற்றும் முழு கை வைத்த சுடிதார் மற்றும் ப்ளவுஸ் ஆகியவையும் நயன்தாரா பல படங்களில் பயன்படுத்திய பிறகு பல இளம் பெண்கள் அந்த ஸ்டைலை பின்பற்ற துவங்கினார்கள்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!