
முன்பதிவில் முந்திச் செல்லும் தி ஒடிசி
அடுத்த வாரம் "ஜனநாயகன்" வர இருப்பதால் நேற்று ஜூலை 17ல் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட படங்கள் தள்ளிப் போகலாம் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், ஐந்து நாள் கிடைத்தால் கூட பரவாயில்லை, வந்துவிடுகிறோம் என நேற்று நான்கு படங்கள் வெளியாகின.
ஆனால், அந்தப் படங்களுக்கு ஹாலிவுட் படமான "தி ஒடிசி" கடும் போட்டியாக உள்ளது. ஆன்லைன் இணைய தளத்தில் முன்பதிவு நிலவரத்தைப் பார்த்த போது "தி ஒடிசி" முன்பதிவுதான் முந்திச் சென்று கொண்டிருக்கிறது. சுமார் 10 மடங்கு முன்னணியில் உள்ளது இப்படம்.
கடந்த ஒரு மணி நேரத்தில் "தி ஒடிஸி" படத்திற்கு 13,000 டிக்கெட்டுகள் முன்பதிவாகி உள்ளன. கடந்த வாரம் வெளியான "இதயம் முரளி" படத்திற்கு 1,000 டிக்கெட்டுகள், கட்டா குஸ்தி 2" படத்திற்கு 1,600 டிக்கெட்டுகள் முன்பிதிவு நடந்துள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில், நேற்று வெளியான "அன்பே டயானா" படத்திற்கு 7,700 டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. நேற்று வெளியான மற்றொரு படமான "அருள்வான்" படம் முன்பதிவு டிரெண்டிங்கிலேயே வரவில்லை.
"அன்பே டயானா, அருள்வான்" இரண்டு படங்களுக்கும் விமர்சன ரீதியாக வரவேற்பு உள்ளது. ஆனால், அதை மக்களிடம் சரியான விதத்தில் கொண்டு போய் சேர்க்காமல் இருக்கிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!