
தெலுங்கு தயாரிப்பு முருகனுக்குப் போட்டியாக தமிழ் முருகன்
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகரான ஜூனியர் என்டிஆர் நடிக்க, த்ரிவிக்ரம் சீனிவாஸ் இயக்க உள்ள புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு பத்து நாட்களுக்கு முன்பு வெளியானது.
ஜூனியர் என்டிஆர் அவரது எக்ஸ் தளத்தில் அப்படம் பற்றி, “சிவனின் மகன், பார்வதியின் பெருமை, நித்திய தளபதி” என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், அப்படத்தின் தயாரிப்பாளர் நாகவம்சி, “வட இந்தியாவில் பிறந்தவர், மையப்பகுதியில் உருவாக்கப்பட்டவர், தெற்கில் வழிபடப்படுபவர்”, என்று குறிப்பிட்டிருந்தார்.
தமிழ்க் கடவுள் என்று அழைக்கப்படும் முருகனை "வட இந்தியாவில் பிறந்தவர்" என்று கூறுவதா என சர்ச்சை எழுந்தது. அது குறித்து படக்குழுவினர் யாரும் இதுவரை எந்த ஒரு பதிலையும் அளிக்கவில்லை.
இந்நிலையில் வெற்றிமாறன், தனுஷ் கூட்டணியின் அடுத்த படமாக நேற்று அறிவிக்கப்பட்ட "தமிழ் முருகன்" படம் மேலே குறிப்பிட்ட தெலுங்குப் படத்திற்குப் போட்டியாக உருவாக்கப்படுகிறதா என்ற சந்தேகம் தெலுங்குத் திரையுலகத்தில் எழுந்துள்ளது.
தென்னிந்திய மாநிலங்களைப் பொறுத்தவரையில் தமிழகம், கேரளம் ஆகியவற்றில் முருகருக்கான கோவில்கள், முருகருக்கான பக்தர்கள் ஏராளமானோர் உள்ளனர். தெலுங்கில் உருவாகும் ஒரு படத்திற்குப் போட்டியாக தமிழில் ஒரு படம் வந்தால் அது தெலுங்குப் படத்தின் வரவேற்பையும், வசூலையும் நிச்சயம் பாதிக்கும்.
இரண்டு படங்களும் ஒரே கதையை சொல்லப் போகிறதா, இரண்டும் வெவ்வேறு கதையா, என்பது படம் வந்த பிறகுதான் தெரியும். அதுவரையில் இந்த இரண்டு படங்களும் அவ்வப்போது சர்ச்சையில் சிக்கினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!