
தமிழ் மண்ணின் பெருமை சிவாஜி : முதல்வர் விஜய் புகழாரம்
முதல்வர் விஜய் வெளியிட்ட பதிவில், ‛‛தனது நிகரற்ற நடிப்பாற்றலாலும், கம்பீரக் குரலாலும், ஏற்றுக்கொண்ட கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டி, திரையுலகின் இமயமாய் திகழ்ந்து, உலகத் தமிழர்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்த நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசனின் பிறந்தநாளில் அவரது மகத்தான கலைப்பணியை நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன்.
வரலாற்று நாயகர்கள், புராண மாந்தர்கள், சமூகத்தின் எளிய மனிதர்கள் என அனைத்து கதாபாத்திரங்களையும் தன் அசாத்திய நடிப்பால் நம் கண்முன்னே நிறுத்தி, தமிழின் செழுமையையும் பெருமையையும் திரைப்படங்களின் வழியே உலகறியச் செய்து நடிப்பிற்கு இலக்கணமாய் திகழ்ந்தவர்.
அன்பு, பாசம், வீரம், கோபம், சோகம் போன்ற மானுட உணர்வுகளின் பரிமாணங்களைத் தனது நடிப்பால் வெளிப்படுத்திய நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசனின் கலையுலகச் சாதனைகள் தலைமுறைகளைக் கடந்தும் தமிழ் மண்ணின் பெருமையாக என்றும் நிலைத்திருக்கும்"" என குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் விஜய் நடிகராக இருந்தபோது சிவாஜி உடன் ‛ஒன்ஸ்மோர்" (1997ம் ஆண்டு) என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
99 முதலே கொண்டாட்டம்
சென்னையில் உள்ள நடிகர் சிவாஜியின் மணிமண்டபத்தில் பிரபு, ராம்குமார் உள்ளிட்ட சிவாஜி குடும்பத்தினர் மற்றும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், அமைச்சர் ராஜ்மோகன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரபு, "அப்பாவின் 99வது பிறந்தநாளில் இருந்தே 100வது ஆண்டுக்கான கொண்டாட்டங்களை ஆரம்பித்துவிடலாம் என தம்பி முதல்வர் விஜய் சொல்லி இருக்கிறார். நிச்சயம் நடக்கும் என நம்பிக்கை இருக்கிறது" என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!