
தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர், இயக்குனர் செழியன் காலமானார் : திரையுலகில் அடுத்த சோகம்
தமிழ் சினிமாவில் பிரபல ஒளிப்பதிவாளர் செழியன். சிவகங்கையை சேர்ந்த இவர் சினிமா மீதுள்ள ஆர்வத்தில் ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராமிடம் உதவியாளராக பணியாற்றினார். பாலாஜி சக்திவேல் இயக்கிய ‛கல்லூரி" படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். தொடர்ந்து பாலாவின் ‛பரதேசி, தாரை தப்பட்டை", சீனுராமசாமியின் ‛தென்மேற்கு பருவக்காற்று", ராஜூ முருகனின் ‛ஜோக்கர்", பாலசந்தர் - பாரதிராஜா இணைந்து நடித்த ‛ரெட்டை சுழி" உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். ‛டூலெட்" என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்திற்கு அவரே ஒளிப்பதிவும் செய்தார். இந்த படம் தேசிய விருது பெற்றது.
யதார்த்த படைப்புகளை காட்சிகள் வாயிலாகவும், கதை சொல்லலிலும் பிரபலமானவர் செழியன். புதிய படைப்பாளிகளை உருவாக்கும் நோக்கில் பயிற்சி மையம் ஒன்றையும் நடத்தினார். இதில் பயின்ற 34 பேர் ஒரே நேரத்தில் படம் இயக்கும் வாய்ப்பை பெற்றனர். சில மாதங்களுக்கு முன் இதன் அறிமுக விழா சென்னையில் நடந்தது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மற்றும் எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆகியோரை பற்றி ‛ஏ லிட்டில் டிரீம், திருவிழா" என குறும்படங்களையும் இயக்கி உள்ளார். செழியன் எழுத்தாளரும் கூட. சினிமா தொடர்பாக உலக சினிமா புத்தகம் ஒன்றையும் எழுதியும் உள்ளார்.
சம்பள விஷயத்தில் கறாராக இருக்க மாட்டார் செழியன். பல படங்களில் சம்பளம் வாங்காமலும் பணியாற்றி இருக்கிறார்.
உடல் தகனம்
செழியனின் உடல் சென்னையில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகமான ராவணன் குடிலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது இறுதி ஊர்வலம் மாலை 5 மணிக்கு மேல் புறப்பட்டது. பின்னர் சென்னை, போரூர் மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.
வெகுசிலரே அஞ்சலி
செழியன் மறைவுக்கு திரையுலகில் இருந்து வெகு சிலரே அஞ்சலி செலுத்தினர். அவரது குருவான ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம், இயக்குனர்கள் பாலா, சசி, மிஷ்கின், ரமணா உள்ளிட்டோரும், நடிகர் அருள்தாஸ் ஆகியோரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அவரது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.
சமீபத்தில் தான் இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் என அடுத்தடுத்து காலமாகினர். இப்போது செழியனின் திடீர் மறைவும் திரையுலகினர் இடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!