
திலீப் படத்தில் விஜய் புகழ் பாடிய மோகன்லால்
டிச 21, 2025
Advertisement
மலையாள திரையுலகிலும் அங்குள்ள முன்னணி நடிகர்களுக்கு சமமாக நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அங்குள்ள பிரபலங்கள் பலரே தங்களை விஜய்யின் ரசிகர்கள் என பல பேட்டிகளில் கூறி வருகிறார்கள். அதை நிரூபிப்பது போல கடந்த சில தினங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான திலீப், மோகன்லால் இணைந்து நடித்த ‛ப ப பா" திரைப்படத்தில் பட துவக்கத்திலிருந்து இறுதிவரை பல இடங்களில் ஒரே விஜய் புராணமாக இருந்தது.
அதிலும் சிறப்பு தோற்றத்தில் நடித்த மோகன்லாலின் கதாபாத்திர பெயரே ‛கில்லி பாலா" என்பது தான். அது மட்டுமல்ல விதவிதமான கார்களை தாதாவான மோகன்லால் சேகரித்து வைத்திருப்பார். அதில் ஒரு ஜிப்ஸி வண்டியும் இடம் பெற்று இருக்கும். இது கில்லி படத்தில் விஜய், பிரகாஷ்ராஜிடம் இருந்து திரிஷாவை காப்பாற்றி செல்வதற்காக பயன்படுத்திய அதே எண் கொண்ட வண்டி.. இந்த ப ப பா படத்தில் அந்த வண்டியை திலீப்பிடம் காட்டும் மோகன்ல்லால் “ஒரு முறை கில்லி படப்பிடிப்பின் போது விஜய் என்னுடைய இந்த ஜிப்ஸி வண்டியை பார்த்துள்ளார். உடனே தனது படத்தில் பயன்படுத்திக் கொள்ள விரும்புவதாக சொல்லி அனுப்பினார். நான் தர மறுத்து விட்டேன். அதன்பிறகு அன்றைய இரவு அவரே எனது தொலைபேசியில் அழைத்து கோரிக்கை வைத்தார். அவரது பேச்சை கேட்டதுமே மற்றவர்களைப் போல நானும் மயங்கி விட்டேன். உடனடியாக எனது வண்டியை அவரிடம் கொடுத்தேன்.. அதன் பிறகு அந்த கில்லி படமும் சூப்பர் சூப்பர் ஹிட் ஆகி விஜய் மிகப்பெரிய உயரத்துக்கு போய்விட்டார்” என்று ஜிப்ஸி வண்டிக்கு பின்னால் இருக்கும் ஒரு கதையை கூறுவார்.
அதைக் கேட்ட திலீப் அண்ணா உங்களை பார்த்து, நானும் விஜய் ரசிகராக மாறிவிட்டேன் என்று சொல்வார். இப்படி முன்னணி நட்சத்திரங்கள் இருவர் நாங்கள் விஜய்யின் ரசிகர்கள் என்று சொல்லிக்கொண்டு ஒரு படத்தில் நடித்திருப்பது மலையாள ரசிகர்களுக்கு மட்டுமல்ல படம் பார்க்கும் தமிழ் ரசிகர்களுக்கு ரொம்பவே ஆச்சரியமாக இருக்கும்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!