
சினிமாவில் இப்போது முருகன் சீசன்
இந்த நிலையில் இப்போது முருகனை மையமாக வைத்து பிரமாண்ட படங்கள் உருவாகி வருகிறது. "ஸ்ரீவள்ளி" படத்தில் இருந்து "வருவான் வடிவேலன்" படம் வரைக்கும் ஏராளமான முருக பக்தி படங்கள் வெளிவந்தன. தற்போது மீண்டும் அந்த டிரண்ட் உருவாகி உள்ளது. தற்போது முருகனை மையமாக வைத்து 3 படங்கள் ஒரே நேரத்தில் உருவாகி வருகின்றன.
சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் "சேயோன்", முருக பக்தியை அடிப்படையாக கொண்டது. இதனை "தாய்கிழவி" படத்தின் இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்குகிறார். விருமாண்டிக்கும், முருகனுக்கும் இடையேயான மோதலை மையமாக வைத்து தான் இப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போஸ் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
அறிவுமதி எழுதிய "தமிழ் முருகன்" என்ற நூலை தழுவி அதே பெயரில் படம் தயாராகிறது. வெற்றிமாறன் இப்படத்தை இயக்குகிறார். இதில் தனுஷ் முருகனாக நடிக்கிறார். சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார். தனுஷின் உண்டர்பார் நிறுவனம் தயாரிக்கிறது. முருகன் முதலில் கடவுள் இல்லை. மலையில் பிறந்த முருகன் என்ற இளைஞன். தமிழ் மக்களுக்காக வீரம் செரிந்த போராட்டங்களை நடத்தியவன், எதிரிகளை தாக்க வசதியாக அவன் குன்றுகளின் மீது வாழ்ந்தான். பின்னாளில் தமிழ் மக்கள் அவனை தெய்வமாக வணங்க ஆரம்பித்தார்கள். அதுவே முருக கடவுள் என்பது இந்த படத்தின் கதையாக இருக்கும் என்கிறார்கள்.
முருகனை மையமாக வைத்து தெலுங்கு படம் ஒன்று தயாராகிறது. திரிவிக்ரம் இயக்குகிறார். இதில் ஜூனியர் என்.டி.ஆர் ஹீரோவாக நடிக்கிறார். இது சிவனுக்கும், முருகனுக்குமான பந்தத்தை மையமாக வைத்து உருவாகிறது. முருகன் வட இந்தியாவில் பிறந்தவர் என்று இயக்குனர் சொல்ல தமிழ்நாட்டில் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. சிவன் இமயமலையில் வாழ்ந்த கடவுள் அப்படியென்றால் முருகன் இமயமலையில்தானே பிறந்திருக்க முடியும் என்பது அவர்களின் வாதம். எப்படி இருந்தாலும் இன்னும் சில ஆண்டுகள் சினிமாவில் முருகனின் ஆட்சி இருக்கும்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!