
சுக்கு காபி விற்றாலும் விற்பேனே தவிர சுயமரியாதையை விட்டுத்தர மாட்டேன் - டி.ராஜேந்தர் பேட்டி
நான் பிறந்தநாளான இன்று நலத்திட்டங்களை வழங்கினேன். நான் கடவுளிடம் கேட்கிறேன். அவர் எனக்கு கொடுக்கிறார். நான் இங்கே உட்கார்ந்து பேச கடவுள்தான் காரணம். கவண் படத்துக்குபின் 4 ஆண்டுகளாக சினிமாவில் இல்லை. உடல்நலக்குறைவால் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்தேன். இப்போது சாய்ரமணி இயக்கும் கன்னடத்து பைங்கிளி படத்துக்கு பாடல் எழுதி, இசையமைத்துள்ளேன். அந்த படத்தில் ஒரு பாடலை இளையராஜா பாடியிருக்கிறார். அவரின் ரசிகன் நான். அவர் பாடுவாரா என எனக்கு தயக்கம் இருந்தது. பலருக்கும் பாடுவாரா என பலருக்கும் சந்தேகம் இருந்தது. ஆனால் நான் கேட்டதும் மறுக்காமல் பாடிக்கொடுத்தார்.
என்னை வாழ வைத்த ரசிகர் பெருமக்களை மறக்க மாட்டேன். நான் தஞ்சைக்காரன், தன்மானம் மிக்கவன். சுங்குவார் சத்திரத்தில் சுக்கு காபி விற்றாலும் விற்பேன். நான் சுயமரியாதை விட்டு, சொர்க்கத்தை கூட விரும்பமாட்டேன். அந்த காலத்தில் ஏகப்பட்ட நல்ல விஷயங்களை செய்தேன். எனக்கு ஆண்டவன்தான் முக்கியம். நான் என்ன செய்தேன் என மக்களுக்கு தெரியும். இன்று நான் வந்தபோது மக்கள் அன்போது வாழ்த்தினார்கள். எனக்கு அது போதும்.
நான் சென்னைக்கு வந்தபோது தாடியுடன் வந்தேன். கோடியுடன் வரவில்லை, பணப்பெட்டியுடன் வரவில்லை, ரயில் பெட்டியை தட்டிவிட்டு வந்தேன். ஒரு தாயின் சபதம் வெற்றி விழாவுக்கு, என் தங்கை கல்யாணி வெற்றி விழாவுக்கு நுாறுக்கும் அதிகமான தங்கைகளுக்கு தங்கதாலி கொடுத்தேன். அந்த நிலையை ஆண்டவன் எனக்கு கொடுத்து இருக்கிறான். இன்று 3 ஆயிரம் கிலோ அரிசி கொடுத்து இருக்கிறேன்.
2 கே கிட்ஸ், ஜென்ஸீ தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு விஷயத்தை சொல்கிறேன். நான் ஏகப்பட்ட அவமானம், கேலி, கிண்டல், புறக்கணிப்பு, தடைகளை சந்தித்து இருக்கிறேன். அதை எல்லாம் ஒரு காதில் வாங்கி, இன்னொரு காதில் அனுப்பிவிட வேண்டும். அதை மனதில் வைத்து கொள்ளக் கூடாது. இதயத்தில் தன்னம்பிக்கையை மட்டும் கொண்டு செல்ல வேண்டும். அதுதான் என் வெற்றி ரகசியம்"" என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!