
13 வருடங்களுக்கு பிறகு படம் இயக்கும் தினந்தோறும் நாகராஜ்
முரளி, சுவலட்சுமி நடித்து 1998ம் ஆண்டு வெளியான படம், "தினந்தோறும்". இதை நாகராஜ் இயக்கி இருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதால் அவர் தினந்தோறும் நாகராஜ் என்றே அழைக்கப்பட்டார். பின்னர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய "மின்னலே, "காக்க காக்க" படங்களுக்கு வசனம் எழுதினார். 2013ம் ஆண்டு "மத்தாப்பு" என்ற படத்தை இயக்கினார்.
தற்போது 13 வருடங்களுக்கு பிறகு "ஆகாயம்" என்ற படத்தை இயக்கி உள்ளார். "கன்னி மாடம்" படத்தில் நடித்த ஸ்ரீராம் கார்த்திக் இப்படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஆலிஷா மிராணி அறிமுகமாகிறார். மேலும் ஷீலா, கனிகா, சந்தான பாரதி, ஜெயபிரகாஷ், கிரி துவாரகிஷ், ஸ்ரீ தேவகிருஷ்ணன், "மகாராஜா" திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்ற சஞ்சனா நமீதாஸ், ரோசாரி, ரைட்டர் ஹரிஹரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கார்த்திக் நல்லமுத்து, ஒளிப்பதிவு செய்துள்ளார். ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.
படம் குறித்து நாகராஜ் கூறும்போது “கதை நாயகன் குட்டி, அவனிடம் ஆதார் கார்டிலிருந்து ரேஷன் கார்டு வரை எதுவுமே இல்லை. காலையிலிருந்து போதையில் இருக்கிற ஆள். கல்யாணத்தின் மீது அவனுக்கு நம்பிக்கையே இல்லை. கெட்ட பழக்கம் இருந்தாலும், கெட்டவன் கிடையாது. அப்படி ஒருத்தன் ஒரு பெண்ணை, ஒரு சூழலில் சந்திக்கிறான். கஷ்டப்பட்டு அந்தப் பெண்ணைக் காப்பாற்றி தன் வீட்டில் கொண்டுவந்து வைத்துவிட்டு, வெளியே சென்று திரும்பும்போது அந்தப் பெண் இல்லை. அங்கே என்ன நடந்தது என்பதுதான் கதை. அளவில்லாதது அன்பு. அதனால் அந்த அன்புக்கு "ஆகாயம்" என்று டைட்டில் வைத்துள்ளேன்"" என்றார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!