தினமலர் விமர்சனம்
கொஞ்சும் மைனாக்களே கதைப்படி நாயகர் உதய் வங்கியில் பணிபுரியும் அதிகாரி. அவருக்கும் இப்படத்தின் ஒரு நாயகி அக்ஷதாவுக்கும் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடக்கிறது. கிராமத்து பின்னணியில் வளர்ந்து ஆளான அக்ஷ்தா, நகரத்து பின்னணியை கொண்ட உதய் எதிர்பார்க்கும் தாம்பத்ய வாழ்க்கைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார். இதனால் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இச்சமயத்தில் திருமணம் ஆன கொஞ்ச நேரத்திலேயே விபத்தில் கணவனை பறிகொடுத்து வாழ்க்கையின் விளிம்பில் நிற்கும் படத்தின் மற்றொரு நாயகி மோகனப்ரியாவின் நட்பு நாயகருக்கு ஏற்படுகிறது. அந்த நல்ல நட்பு காதலாக கசித்துருகி கள்ளத்தொடர்பானதா...? அல்லது அதுவே கருத்து வேறுபட்டால் பிரிந்திருக்கும் கணவன் - மனைவியை சேர்த்து வைத்ததா...? என்பது கொஞ்சும் மைனாக்கள் படத்தின் மிச்சமும், சொச்சமுமான மீதிக்கதை!
உதய், அக்ஷ்தாவுடன் அந்தரங்கங்கள் நிறைவேறாத சோகத்தை வெறுபாக்கி உமிழும் காட்சிகளிலும், மோகனப்ரியாவுடன் தன்னை மறந்து நெருக்கமாகும் காட்சிகளிலும் ரசிகர்களை தன் பக்கம் திரும்புகிறார்.
அக்ஷ்தா, மோகனப்ரியா இருவருமே நடிப்பை விட கவர்ச்சி விருந்து படைப்பதில் முன்னணியில் இருக்கின்றனர். மீரா கிருஷ்ணா, டெல்லி கணேஷ், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டவர்கள் வழக்கம்போல் பளிச் அதிலும் அரவாணி மகன், எம்.எஸ்.பாஸ்கர் எபிசோட் ரொம்ப உருக்கம். புதியவர் ஏ.பி.கே.கார்த்திகேயனின் இயக்கத்தில் நல்ல கருத்துக்கள் நிரம்பிய இப்படம் சரியான காட்சிப்படுத்துதல் இல்லாததால், கவன ஈர்ப்பு ஏற்படுத்தாது நிஜம்!
ஆகமொத்தத்தில் கொஞ்சும் மைனாக்களே - கெஞ்சும் ரசிகர்களே!!