Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

ஆறுமுகம்

ஆறுமுகம்,
06 அக், 2009 - 00:00 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » ஆறுமுகம்


தினமலர் விமர்சனம்


தன் ஆஸ்தான இசையமைப்பாளர் தேவா பாணியில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவும் களம் இறங்கி விட்டார் போலும்! தேவா தன் முந்தைய பாடல்களை தானே ஸ்வாஹா செய்து திரும்ப திரும்ப தருவார்! சுரேஷ் கிருஷ்ணா, தன் முந்தைய படங்களுள் ஒன்றான அண்ணாமலையை ஆறுமுகமாக்கி இருக்கிறார். அவ்வளவுதான்!

ரோட்டோரம் தள்ளுவண்டியில் இட்லி கடை நடத்தும் ஹீரோ பரத்தும், கோடீஸ்வரி ரம்யா கிருஷ்ணனின் ஒரே தம்பி சத்யாவும் உயிர் நண்பர்கள். ஸ்டேட்டஸ் பார்க்காமல் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் வளரும் இந்த நட்பு ரம்யாவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதன் விளைவு... அவர்களை திட்டம் போட்டு பிரிக்கிறார். அது கண்டு பொங்கி எழும் பரத்தை கட்டம் கட்டி, தனக்கும் தன் பணத்திமிருக்கும் சாதகமான சட்ட திட்டங்களை பயன்படுத்தி பரத்தின் பாசமான குடும்பத்தாரையும், அவரது அம்மாவின் சமாதியையும் சின்னா பின்னாமாக்குகிறார். விடுவாரா பரத்? ஒரே பாட்டில் ரம்யா கிருஷ்ணனின் ரூட்டிலேயே போய் அம்மணி ரம்யாவையும், தாண்டிய கோடீஸ்வரராகி, செல்வாக்கும், சொல்வாக்கும் உள்ளவராக உயர்ந்து வில்லி ரம்யாவை வீதியில் தள்ளுகிறார். அட.., அப்புறம்? அப்புறமென்ன? வீதிக்கு வந்ததும் பரத்தின் அம்மா சீதாவின் சமாதிக்கு போய் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கும் ரம்யா, மனம் மாறுகிறார். வில்லியே மனம் மாறியதும் ஹீரோ சும்மா இருப்பாரா? நட்பிற்காகவும், தன் நண்பனின் அக்கா ஆளே மாறியதற்காகவும் அவர்கள் இழந்த சொத்துக்களை பரத்தே ஏலத்தில் எடுத்து அவர்களுக்கு ‌திரும்ப தருவதுதான் அண்ணாமலை... சாரி..., ஆறுமுகம்! இத‌னிடையே ரஜினிக்கு குஷ்புவுடனான... இல்லை, இல்லை... பரத்திற்கு ப்ரியாமணி உடனான காதல், கருணாஸின் காமெடி உள்ளிட்டவைகளை கலந்து கட்டி அழகாக (?) பரத் ரசிகர்களுக்கு படம் காட்டியிருக்கிறார்கள்.

அண்ணாமலையில் ரஜினியாவது பிற்பாதியில் ஓல்டு கெட்-அப்பில் காட்சிக்கு கச்சிதமாக பொருந்தி இருப்பார். ஆனால் இதில் ஓவர் நைட்டில் அல்லது ஒரு மாத கால டே-நைட்டிலேயே ரம்யாவை பின்னுக்கு தள்ளி முன்னுக்கு வரும் பரத், ப்ளாஷ்பேக் தாய் (சீதா), பாசத்திலும் சரி, கரண்ட் சீன்களின் தங்கை (சரண்யா மோகன்) பாசத்திலும் சரி., அப்படியே ரஜினியையும் அவரது மேனரிசங்களையும் பின்பற்றி இருந்தாலும்., குருவி தலையில் பனங்காய் வைத்த கதையாக இளைஞராகவே பரிதாபமாக காட்சியளிக்கிறார். பாவம்!

சரி.. நாயகர்தான் மேற்படி, இப்படி என்றால்... நாயகி ப்ரியாமணியை (பரத்திற்கு ஜோடியாக ப்ரியாமணியை சிபாரிசு செய்த புண்ணியவான் யாரோ தெரியவில்லை)  பரத்துடன் பார்க்கும் போதெல்லாம் அக்கா பாசம்தான் ஞாபகத்திற்கு வருகிறது. இதனாலேயே ப்ரியாமணி அத்தன திறந்து காட்டியும் பிடித்தம் ஏற்படாமல் போவது வருத்தம்.

அண்ணாமலை ரஜினியை பரத் பாலோ செய்திருக்கிறார் என்றால், படையப்பா நீலாம்பரியை வில்லி ரம்யா கிருஷ்ணன் செய்திருக்கிறார். ஆனாலும் நாயகி ப்ரியாமணி உள்ளிட்டவர்களை எல்லாம் ஓடங்கட்டி விடுகிறது ரம்யாவின் நடை, உடை, பாவனை.. இத்யாதி..., இத்யாகி..., எல்லாம்! அம்மணியை வில்லி என்பதை விட ஆன்ட்டி ஹீரோயின் எனலாம். அனைத்து தரப்பு ஆடியன்ஸூக்கும் பிடித்த ஆன்ட்டி எனவும் கொள்ளலாம். பரத், ப்ரியாமணி, கருணாஸ், சத்யா (ரம்யாவின் தம்பி), சரண்யா மோகன், இளவரசு, சீதா என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே இருந்தாலும் ஆறுமுகம் படத்தின் ஒரே ஆறுதல் ரம்யா கிருஷ்ணன் மட்டும்தான் என்றால் மிகையல்ல..!

ரம்யா மாதிரியே தளபதி தினேஷின் சண்‌டைகாட்சிகள், எஸ்.கே.பூபதியின் ஒளிப்பதிவு உள்ளிட்டவைகள் ஆறுமுகத்தின் பலம். தேவாவின் பாடல்கள் சற்று பெரிய இடைவெளிக்குப் பின் மீண்டும் மெலடி ஆறுதல் என்றாலும் பின்னணி இசையில் அண்ணாமலை.. அண்ணாமலை.. என்பது போல ஆறுமுகம்... ஆறுமுகம்... என பாடல் ஒலிக்காத குறையாக அதே அண்ணாமலை எபெக்ட் இருப்பதும், சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த அண்ணாமலையை மீண்டும் சாதாரண நடிகர் பரத் நடிக்க பார்க்கும்போது ஏற்படும் சலிப்பும் பெரும் பலவீனம்!  பில்லாவை அஜித் நடிக்க அல்ட்ரா மார்டனாக தந்தது போன்று அண்ணாமலையை பரத் நடிக்க அல்ட்ரா மார்டனாக இந்த காலத்திற்கு ஏற்ற மாதிரி தந்திருந்தாலாவது தப்பித்திருக்கலாம்.

மொத்தத்தில் ஆறுமுகம் பரத்திற்கு, அவரது மனதிற்கும் வேண்டுமானால் ஏறுமுகமாக இருக்கலாம். ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்ற(முகம்)மாகும்.

ஆறுமுகம் : ஏறுமுகமுமல்ல.. இறங்குமுகமுமல்ல...!

------------------------------------

குமுதம் விமர்சனம்


அண்ணாமலை இட்லி, கொஞ்சம் பாட்ஷா சட்னி, கூடவே தொட்டுக்கொள்ள படையப்பா காரக்குழம்பு. இதுதான் "ஆறுமுகம்' படத்தோட ஒன்லைன் ஸ்டோரி.

சுரேஷ்கிருஷ்ணா அண்ணே... நீங்க ஏற்கெனவே சுடச்சுட வடிச்சுக் கொட்டின அந்த சுடு சோற்றை இத்தினி வருஷம் கழிச்சு பரத் கையால பரிமாறி ஓட வச்சுட்டீங்களேண்ணே.

பரத்தோட ஃப்ளாட்பார இட்லிக் கடையில பணக்கார பய கார்த்திக் ப்ரெண்ட்லியா இட்லி சாப்பிடுகிறார். இது அவங்க அக்கா ரம்யாகிருஷ்ணனுக்கு புடிக்கலை.
தன்னோட பழைய நீலாம்பரி புடவையை தூசு தட்டி துவைச்சுக் கட்டுறார் ரம்யா. கார்த்திக் - பரத் நட்பு பிரியுது.

படத்தோட மையமே பரத்தின் அம்மா சீதாவோட சமாதிதான். ஏடாகூடமா ரம்யாகிருஷ்ணன் அதை உடைக்கப்போயி... அதுவரைக்கும்கூட ஆறிப்போன இட்லி கணக்கா இருந்த பரத் திடீர்னு சூடாகிறாரு. வேறென்ன? ஒன்னைவிட ஒத்த ரூபா கூட சம்பாதிச்சு... உன்னை முச்சந்தியில நிறுத்தல... எம்பேரு ஆறுமுகம் இல்லைன்னு சபதம் போடுறாரு. அதே மாதிரி ஜெயிக்கவும் செய்யறார்.

படத்துல மாடர்ன் மங்கை ப்ரியாமணி பரத்தை மாமா மாமான்னு கூப்பிடுறாரு. வயக்காட்டுல மடோனா பாட்டுப் பாடுன மாதிரி பூச்சுற்றல் காதல். படத்துல இளவரசன், சரண்யா மோகன், கருணாஸ்னு நிறைய பேரு இருக்காங்க. இட்லி மாவு  ஆட்டுறதும், தோசை வார்ப்பதுமா வந்து போறாங்க.

ஆறுமுகம் : தியேட்டர் கதவை யாராச்சும் திறந்துவிட்டா சட்டுனு வெளியிலே ஓடிரலாம்.

குமுதம் ரேட்டிங் : சுமார்வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in