Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

மன்மதன் அம்பு

மன்மதன் அம்பு,
06 ஜன, 2011 - 17:15 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » மன்மதன் அம்பு

       

தினமலர் விமர்சனம்


உதயநிதி ஸ்டாலின், கே.எஸ்.ரவிக்குமார், கமல்ஹாசன் கூட்டணியில் வெளிவந்திருக்கும் படம் என்றதுமே புரிந்திருக்கும் "மன்மதன் அம்பு" படத்தில் பிரமாண்டத்திற்கு பஞ்சமிருக்காது... என்பது...! ஆனால், அந்த பிரமாண்டம் கதைக்கும், அது பயணிக்கும் களத்திற்கும் எந்த அளவிற்கு ஒத்துழைத்திருக்கிறது என்பது தான் புரியாத புதிர்!

கதைப்படி, ,மன்மதன் அம்பு, படத்திலும் அம்பு எனும் நடிகையாகவே வரும் த்ரிஷா, தொழில் அதிபர் மதனகோபால் எனும் மதன், மாதவனின் காதலி! நிச்சயதார்த்தம் முடிந்து கல்யாணத்திற்காக காத்திருக்கும் அந்த காதல் மீதும், காதலி நடிகை மீதும் மாதவனுக்கு சந்தேகம்! அதன் விளைவு, மிலிட்டரியில் மேஜராக இருந்து வெளியில் வந்து தனியார் டிடக்டீவாக தொழில் செய்யும் மன்னாரு கமலின் உதவியை நாடுகிறார். மேஜர் மன்னாரு கமலுக்கோ, கேன்சரால் அவதியுறும் நண்பர் ரமேஷ் அரவிந்தின் உயிரை காக்கும் சிகிச்சைக்கு பணம் தேவை எனும் நிலை! அதனால் மாதவனுக்காக த்ரிஷாவை துப்பறிய களம் இறங்குகிறார் கமல். மாதவனுடன் ஏற்பட்ட ஊடலால் கணவரை பிரிந்து வாழும் தன் வெளிநாட்டு தோழி சங்கீதா மற்றும் அவரது குழந்தைகளுடன் உல்லாச கப்பலில் உலகை சுற்றி வர புறப்படும் த்ரிஷாவை, அதேகப்பலில் ஃபாலோபண்ணுகிறார் கமல்!

ஆரம்பத்திலேயே நடிகை என்றாலும் த்ரிஷா, மாதவன் மீதே உயிராய் இருக்கிறார் என்‌பதை கண்டுபிடித்துவிடும் கமல், ரமேஷ் அரவிந்தின் சிகிச்சைக்கு பணம் கிடைக்காமல் போய்விடும் என்ற காரணத்தால் மாதவனிடம், த்ரிஷாவை பற்றி இல்லாததும், பொல்லாததும் போட்டு தருகிறார். கடைசியில் த்ரிஷா எப்படி கமலின் காதலியாக மாறுகிறார்...? கணவரை பிரிந்த சங்கீதா எப்படி மாதவனை மறுமணம் புரிய போகிறார்...? என்பதை கலகலப்பாகவும், காமெடியாகவும், சில இடங்களில் கடியாகவும் சொல்கிறது மன்மதன் அம்பு படத்தின் மீதிக்கதை!

மன்மதன் அம்பு படத்தில் மன் எனும் மேஜர் மன்னாரு(டைட்டில்) கேரக்டரில் கமல் காமெடியில் கலக்கி இருக்கிறார். ஆனால் அவரிடம் அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கும் காமநெடி..., அட்லீஸ்ட் த்ரிஷா மாதிரி ஒரு நாயகி கிடைத்தும், லிஃப்-டூ லிஃப் கிஸ் சீன்கள் கூட இல்லாதது குறை! நண்பர் ரமேஷ் அரவிந்தின் வைத்திய செலவுக்காக அவர் படும்பாடு காமெடியையும் மீறி நம் கண்களில் நீரை வரவழைப்பது டைரக்டர் டச்சா? கமல் எனும் கேரக்டரின் டச்சா? என்பது புரியவில்லை...!

மதன் எனும் மதன கோபலாக, தொழில் அதிபராக மாதவன் தண்ணியும், கையுமாக சந்தேகபுத்தி ஆண்களை சரியாக எடுத்துகாட்டி இருக்கிறார். அதுவும், அவ அப்பவே சொன்னா, "லோக்கல் ஷூட்டிங்கில் கேராவேனில் எல்லாம் எதுவும் முடியாது, வெளிநாட்டு லொகேஷன்களில் தான்..." த்ரிஷாவை நினைத்து போனில் கமலிடம் அடிக்கடி புலம்பும் காட்சிகளில் கைதட்டலால் தியேட்டரே அதிர்கிறது...

அம்பு எனும் பெயர் சுருக்கத்துடன் த்ரிஷா நடிகையாகவே நடித்திருக்கிறார். தனக்கு நிஜத்திலும் கவிதை எழுத தெரியும் என்பதையும் சுட்டிகாட்டியிருக்கும் அம்மணி கமலின் முதல் மனைவி இறந்ததற்கு தான் செய்த கார் ஆக்ஸிடண்ட் தான் காரணம் என்பதால், கமல் மீது காதல் கொள்வதும், மாதவனை கைவிடுவதும் சினிமாவிற்கு வேண்டுமானால் ஓ.கே.!

ஆஸ்பத்திரியில் படுத்துக்கொண்டே ரமேஷ் அரவிந்தும், அவர் அருகே அழுதபடியே ஊர்வசியும், கமலை செமகட்டை என கமெண்ட் அடிக்கும் சங்கீதாவும் தங்கள் பங்கை சரியாக செய்து சபாஷ் வாங்கிவிடுகின்றனர்! த்ரிஷாவிற்காக ஸ்கிரிப்டும் கையுமாக அலையும் குஞ்சுகுரூப், மோகன்தாஸ், மஞ்சுபிள்ளை, மகன் மாதவனை உசுப்பேற்றிவிடும் உஷாஉதுப், டாக்ஸி டிரைவர் துரைஸ், ஆகாஷ், ஸ்ரீமன், குழந்தை நட்சத்திரங்கள் ஆஷிஸ், பாரதி பூஜா உள்ளிட்டவர்களும் பேஷ், பேஷ் சொல்ல வைக்கின்றனர்.

களவாணி ஓவியாவிடம் கமல் படம் என்று சொல்லி கெளரவ வேடத்தில் இரண்டே சீன்கள். மாதவனுக்கு தாதிப் பெண்ணாக்கி அவரையும், அவரது கேரியரையும் கவிழ்த்து விட்டிருப்பது யார் செய்த பாவமோ...? படத்தில் ஒரு காருக்கு தரப்படும் முக்கியத்துவம் கூட ஓவியாவுக்கு இல்லாதது வருத்தம்! கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கத்தில் தான் தயாரித்த ஆதவன் படத்தில் உதயநிதி ஸ்‌டாலின் தலைகாட்டினார். இதில் அவரது ஒரு கோடி ரூபாய் ஹம்மர் கார் மட்டும் தலை காட்டி இருக்கிறது. (உதயநிதி இனி ஹீரோவாக மட்டும் தான் நடிப்பாராம்!)

இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதியிருக்கும் கமலுக்கு தமிழ் மீதும், நடிகைகள் மீதும் என்ன கோபமோ தெரியவில்லை. கிடைக்கும் இடங்களில் எல்லாம் அந்த இரண்டையும் தன் வசன சாட்டையால் விலாசு., விலாசு என்று விலாசி இருக்கிறார். அதுவும் செம்மொழி ஆகிவிட்ட தமிழ் மொழியை... தமிழ் இனி மெல்ல சாகும்... இப்ப நான் சாகுறதுக்குள்ள த்ரிஷாவை பற்றி சொல்லுங்க... என மாதவன் குடிபோதையில் கமலிடம் போனில் கேட்கும் இடத்தில், குஞ்சு குரூப்பிடம் கமல் பேசும் ஓர் இடத்தில் தமிழ் கொஞ்சம் தெருபொறுக்கும் நீங்க பேசுங்க... என்று கமல் பேசுவதும், தமிழ் வளர்க்கும் முதல்வர் கருணாநிதியின் பேரன் உதயநிதி தயாரித்திருக்கும் படத்தில் கமல் இப்படி தமிழை சாடி வசனம் எழுதவேண்டிய அவசியம் என்ன? என யோசிக்க வைக்கிறது. அறம் பேசாதே, அறம் செய்... என்று இதே படத்தில் ஆரம்பகாட்சி ஒன்றில் பேசும் கமல், இப்படி அறம் பேசுவது ஏன் கமல் சார் இப்படி...?

இது மாதிரி வம்பான வசனங்களில் காட்டிய அக்கறையை க்ளைமாக்ஸ்க்கு முன் வச, வச... என்றும் சவ, சவ... என்றும் இழுத்து போரடிக்கும் காட்சிகளில் கமல் காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

மன்மதன் அம்பு படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, தேவிஸ்ரீ பிரசாத் இசையில் ஒரு பாடலை தவிர மற்ற பாடல்களையும் எழுதி இருக்கிறார் கமல்ஹாசன். இப்படத்தின் தொலைக்காட்சி விளம்பரங்களில் அடிக்கடி கேட்பதாலோ, என்னவோ.. கமல் எழுதிய தகடுத்தோம் பாடல் மட்டுமே மனதில் நிற்கிறது. மற்றவை இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத்துடன் கமலையும் தேட வைக்கிறதென்றால் மிகையல்ல!

அவ்வளவு பெரிய துப்பறியும் நிபுணரான கமல், அதுவும், மாஜி மிலிட்டரி மேஜர் வேறு...  கார்கில் போரில் தன்னால் காப்பாற்றப்பட்ட பிரான்சு நாட்டை சேர்ந்த தன் காதல் மனைவி, அதுவும் கருவுற்றிருக்கும் மனைவி, அவரது இறப்பிற்கு காரணமான காரையும், காரை ஓட்டி வந்த நபரையும் ஒரு துப்பறியும் நிபுணரான கமல் கண்டுபிடிக்க களம் இறங்காதது மன்மதன் அம்பு படத்தின் மேஜர் லாஜிக் மிஸ்டேக் என்றால், ஐரோப்பிய கண்டத்தில் இருக்கும் கமல், த்ரிஷா, இங்குள்ள மாதவன், ரமேஷ், ஊர்வசி உள்ளிட்டவர்களுக்கு ஃபோனிலும், நெட்டிலும் பேசும் போது அங்கு இரவாக இருந்தால், இங்கு பகலாகவும், இங்கு இரவென்றால் அங்கு பகலாகவும் இருக்க வேண்டும் என்பது தானே இ‌யற்கை! ஆனால் அங்கு பகலில் கமல் பேசுகிறார் என்றால் இங்கு பகலாகவே இருக்கிறது. மாதவன் பேசும் போது அங்கிருந்து த்ரிஷா இரவில் பேசினால் இங்கும் இரவாகவே இருக்கிறது. இதுவும் படத்தின் லாஜிக் மிஸ்டேக் தான்! இதற்கெல்லாம் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பொறுப்பா? அல்லது எழுத்தாளர் கமல்ஹாசன் பொறுப்பா? என்பது அவர்களுக்கே வெளிச்சம்! அதேமாதிரி இந்த கதைக்கு அவ்வளவு பெரிய கப்பலும், அயல்நாட்டு லொகேஷனும் தேவையா? என்பதும் அவர்களு‌க்கே வெளிச்சமாகும்!!!

மனுஷ் நந்தனின் ஒளிப்பதிவில் ப்ளாஷ்பேக்கில் ஒரே பாடலில் பின்னோக்கி விரியும் கமலின் கார்கில் போரும், கார் விபத்து காட்சி படுத்தியிருக்கும் விதம் புதுமை! ‌ தேவிஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை மட்டுமே இனிமை!

மன்மதன் அம்பு படத்தில் கமலுடன் த்ரிஷா, சங்கீதா, ஊர்வசி எல்லாம் இருக்கிறார்கள், என்று மன்மதன் மாதிரி கமலை பார்க்கலாம் என்று போனால் காமெடி மதன்(கார்டூனிஸ்ட்) மாதிரி கமலை காண்பித்து ஏமாற்றுகிறார்கள். கமல், காதல், காமம் மூன்றையும் எதிர்பார்க்காமல் போனால் காமெடியை மட்டும் ரசித்து சிரித்துவிட்டு வரலாம்!

மொத்தத்தில் "மன்மதன் அம்பு" கார்டூனிஸ்ட் "மதன்பாணி வம்பு" ஹீ...ஹீ...!----------------------------குமுதம் விமர்சனம்ஒரு உக்கிர வேட்டைக்கு முன்னாலோ பின்னாலோ கமல் தருகிற ஜாலியான "கெட்டுகெதர்களின் வரிசையில் இப்போது "மன்மதன் அம்பு. கண்ணாடிக் கோப்பைகள் நாசூக்காக உரசிக்கொள்ளும் காக்டெயில் பார்ட்டி மாதிரி நளினமாகத்தான் விருந்து தொடங்குகிறது. கடைசியில்...?

ஓர் அழகான நடிகை. அவளுக்கு ஒரு சந்தேகக் காதலன். காதலியைக் கண்காணிக்க நியமிக்கப்படுகிற உளவாளி. காதல், சந்தேகம் உளவு இம்மூன்றுக்கும் நடக்கிற மியூசிக் சேர் தள்ளுமுள்ளுதான் "மன்மதன் அம்பு ஒரு பக்கம் பண நெருக்கடி. இன்னொரு பக்கம் மூன்றாம் தர வேலையில் ஈடுபடுகிற தயக்கம் என வேவு பார்க்கும் மேஜர் மன்னராக கமல் புகுந்து விளையாடியிருக்கிறார். தான் கொடுக்கிற உண்மையான ரிப்போர்ட்டே தன் வேலைக்கு ஆப்பு வைக்கும்போது, கமல் தொண்டையைச் செருமிக்கொண்டு பொய் சொல்லத் தயராகும் காட்சி விசில் அடிக்க வைக்கிறது. இந்த செருமல் அத்தோடு முடிந்துவிடுவதுதான் ஏமாற்றம்.

சந்தேகப் பார்வை, பணத்திமிர், போதை தள்ளாட்டம் என ஏறக்குறைய அசட்டு வில்லனாகி விடுகிற கேரக்டரை மாதவன் கொண்டாடி நடித்திருக்கிறார். நடிகை நிஷாவாக வரும் த்ரிஷாவிடம் சொந்தக் குரல், இயல்பான  எக்ஸ்பிரஷன்கள், அளவான மேக்கப் என எக்கச்சக்க இனிய ஆச்சர்யங்கள். ஒத்துவராத கணவனை விவாகரத்து செய்துவிட்டு, "சூப்பர் ஜீவனாம்சம் என ஆறுதல் பட்டுக் கொள்கிற சங்கீதாவின் கேரக்டர் தமிழ் சினிமாவில் இதுவரை பார்த்திராது. உருவத்தையே மாற்றிக்கொள்ளும் கமலின் வேலையை இந்தப் படத்தில் ரமேஷ் அரவிந்த் செய்திருக்கிறார். "கொஞ்சம் சேட்டிங், கொஞ்சம் வாமிட்டிங் என ரமேஷ் ஜோக் அடித்து புற்றுநோயின் வலியை மறைக்கிற வீடியோ கான்ஃப்ரன்ஸ் காட்சிகள் மனசைப் பிசைந்தாலும், ஓரளவுக்கு மேல் ஓவர் டோஸ், அவரது மனைவி ஊர்வசி உட்கார்ந்த இடத்தை மாற்றாமல் கமலுடன் போனில் அழும் காட்சிகளுக்கு தியேட்டரில் போகப் போக "சும்மா பயமுறுத்தாதம்மா ரெஸ்பான்ஸ்.

கமலின் மனைவியாக வருகிற பிரெஞ்சு அழகியைக் கண்டுபிடித்த கண்களுக்கு சபாஷ் போடலாம். கமலின் திருமண வாழ்க்கையை ஒரே பாடலில் முழுக்க முழுக்க ரிவர்ஸ் மோடில் சம்பவங்களைக் காட்டியே சொல்லி விடுவது அருமை. ""நேர்மையா இருக்குறவங்களுக்கு திமிர்தான் வேலி போன்ற வசனங்களில் கமலின் டச் மின்னுகிறது. மஞ்சள் வெயில் அடிக்கும் பார்சிலோனா, அழகு துள்ளும் லொக்கேஷன்கள், பிரம்மாண்டமான கப்பல் பயணம் என தனக்குக் கிடைத்த ப்ளஸ் பாயிண்ட்களை அறிமுக ஒளிப்பதிவாளர் மனுஷ்நந்தன் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார். "ஹூஸ் தி ஹீரோ?, "தகிடுதத்தோம் பாடல்களில் தேவிஸ்ரீ பிரசாத் தாளம் போட வைக்கிறார்.

கமலின் உளவு வேலை தெரிந்தால் த்ரிஷா என்ன செய்வார், த்ரிஷாவுக்கு மாதவன் விடுகிற தந்திர அம்பே அவருக்கு ஆப்பாக மாறும்போது அவரது ரெஸ்பான்ஸ் என்ன... என பதற்றக்கேள்விகளோடு நாம் காத்திருக்க, "சேச்சே, சீரியஸா எடுத்துக்காதீங்க, சும்மா சிரிச்சுட்டுப் போங்க என்று கிச்சு கிச்சு நாடகம் போட்டு கமல் குரூப் நம்மை ஏமாற்றி விடுவது மன்மத அல்வா. அபத்தமாகப் பேசி, ஆளுக்கு ஆள் அசடுவழிந்து, தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் கலாட்டா கமலுக்குச் சலிக்கவே செய்யாதா? முதல் பாதியில் முதிர்ச்சியாக வருகிற கேரக்டர்கள் எல்லாம் திடீரென தடம் புரண்டு தத்துபித்து ஆகிவிடுகிற இரண்டாம் பாதியை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் கட்டுப்படுத்தியிருந்தால் மன்மதன் அம்பு இன்னும் வலுவாகத் துளைத்திருக்கும். சரி, மன்னாரு, மதனகோபால், அம்புஜாஸ்ரீ என கேரக்டர்களுக்கு பெயர் வைத்து இத்தனை கஷ்டப்பட்டிருக்க வேண்டுமா?

-குமுதம் ரேட்டிங்-- ஓகே
---------------------------------------------


கல்கி - திரைவிமர்சனம்


அப்பா சம்பாதித்து வைத்த ""ரொம்ப பணத்தில் தாராளமாகக் குடித்து, நண்பர்களோடு இன்றைய மகளிர் ஒழுக்கத்தைப் பற்றி கதைத்து கொண்டிருக்கிறான் மதன். நடிகை அம்புவிடம் காதலாகி விடுகிறான்.

நடிகை அம்பு ஐரோப்பிய சுற்றுப்பயணம் செல்லும்போது அம்புவின் அந்தரங்கத்தை அறிய - வேவு பார்க்க -  முன்னாள் ராணுவ வீரர் மன்னாரை மதன் அனுப்புகிறான். வாழ்வின் மீது கண்ணியமான கண்ணோட்டம் உண்டென்றாலும், கேன்சரில் துயர்படும் தன் நண்பனின் மருத்துவச் செலவை சமாளிக்க, சாவி துவாரத்தில் கண் பதிக்கும் சங்கட வேலைக்கு சம்மதிக்கிறார் மன்னார். பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

தன் மனைவியை ஒரு விபத்தில் பறிகொடுத்தவர் மன்னார். அந்த விபத்துக்குக் காரணமாயிருந்தவர்கள் அம்பு-மதன் என்ற சின்ன முடிச்சு கதையில் உள்ளது. எளிமையான கதை என்றாலும் பல சிக்கல்கள்-முக்கியமாக உளச்சிக்கல்கள் நிறைந்த மதனின் காதல் அம்பில் ; காயம் படாமல் தப்பிக்கும் அம்பு.

தமிழ் சினிமாவில் நாம் பார்த்திராத காட்சிகள், நாம் கேட்டிராத வசனங்கள். வித்தியாசமாகப் பின்னப்பட்டிருப்பது சுகம். மலையின் மீது காரில் போகும்போ கமல் (மன்னார்) வானத்தில் ஒலி எழுப்பிச் செல்லும் பறவைகளைப் பார்த்து, தன் நண்பனை நினைந்து பாரம் கொள்வாரே...அந்தக் காட்சி ஒரு சங்க சித்திரம். எல்லோரையும் ரசிகனாக்கி விடும் கமலின் ஆரம்ப காட்சிகள் எதிர்பார்ப்புகளை கூட்டி விடுகிறது. ஃப்ளாஷ்பேக் சிறுகதையில் -இதழ்கள் ஒவ்வொன்றாக இணைந்து மலர் உருக்கொள்வது கிராஃபிக்ஸில் எழுதப்பட்ட கவிதை.

இத்தனை நாளாய் எங்கிருந்தாய் மாதவா எனக் கேட்க வைக்கிறது மாதவனின் நடிப்பு. நுட்பத்தோடும், கூர்மையோடும் வசனங்கள்-படம் முழுக்க. ஜனரஞ்சகமான மசாலாதான். ஆனால், புத்திசாலித்தனமான மசாலா.வாசகர் கருத்து (199)

மணி - Chennai,இந்தியா
13 பிப், 2011 - 09:42 Report Abuse
 மணி ரொம்ப ஒரு கேவலமான படம்..
Rate this:
அற. Natarajan - kuwait,இந்தியா
31 ஜன, 2011 - 14:09 Report Abuse
 அற. Natarajan கமல் அண்ட் த்ரிஷா அக்டிங் இஸ் சுபெர்ப். டைரக்சன் இஸ் அலசோ குட். இன் டோடல் எ குட் film
Rate this:
venki - pmk,இந்தியா
29 ஜன, 2011 - 15:30 Report Abuse
 venki kamal sir,,,i am frm ur native city.....please give good flims...choose good story....please....
Rate this:
கார்த்திக் - Bodinayakanur ,இந்தியா
25 ஜன, 2011 - 09:37 Report Abuse
 கார்த்திக் ஐயோ முடியல சாமி, 100 ரூபாய் போச்சு பா
Rate this:
ananthram - trichy,இந்தியா
23 ஜன, 2011 - 10:03 Report Abuse
 ananthram பாக்ஸ் ஆபீஸ் பலப் ஒப் தி இயர்.உட்ட்டர் வேஸ்ட்.அகைன்ச்ட் எக்ஸ்பெக்டதியன்.
Rate this:
மேலும் 194 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in