Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

வால்மீகி

வால்மீகி,
13 ஜூலை, 2009 - 00:00 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » வால்மீகி


தினமலர் விமர்சனம்


இராமயணத்தை எழுதிய வால்மீகி அதற்கு முன் திருட்டு தொழில் செய்து வந்ததால்., அதே தொழிலை செய்யும் கதாநாயகரையும், அவர் கூட்டாளிகளையும் பற்றிய கதை என்பதால் இந்த படத்திற்கு வால்மீகி என பெயர் சூட்டியிருக்கிறார்கள் பொருத்தமாக! அந்த வால்மீகி திருந்தி இராமாயணம் படைத்தார். இந்த வால்மீகி திருந்தி பிக்பாக்கெட், ஜேப்படி, ராப்பரி, வழிப்பறி இத்யாதி... இத்யாதி.. திருடர்களை திருத்தி நல்வழிப்படுத்தும் புதிய இராமயணம் படைத்திருக்கிறார்.

கதைப்படி பிக்பாக்கெட் பேர்வழி ஹீரோ அகில். அவரை நல்லவராக கருதும் ஹீரோயின் மீரா நந்தன் அகில் மீது காதல் கொள்கிறார். ஒரு கட்டத்தில் அகில் திருடரென்று தெரிய வர... திருட்டால் பிறருக்கு ஏற்படும் தீமைகளை விளக்கி, அவரை திருத்த முற்படுகிறார் மீரா. ஒரு பக்கம் இந்த இருவரின் காதல் என்றால்... மற்றொரு பக்கம் அகிலுக்கு அடைக்கலம் கொடுக்கும் இன்னொரு நாயகி தேவிகாவிற்கும் அகில் மீது காதல்! ஆனால் அது ஒரு தலைக்காதல்! இதில் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் யார் காதலை ஜெயிக்க வைத்தது? யாரை தோற்க வைத்தது? மீரா திருத்தினாரா? அகில் வருந்தினாரா? என்பதை சூடாகவும், சுவையாகவும் சொல்லியிருக்கிறார்கள் மீதிக் கதையில்!!

கல்லூரி நாயகனாக முதல் படத்தில் பொருந்தாமல் நடித்த அகில், வால்மீகியில் பிக்பாக்கெட் ஆசாமியாக கேரக்டரை பிக்கப் செய்து கொண்டு சபாஷ் வாங்கி விடுகிறார். கதாநாயகியர் மீராநந்தன், தேவிகா இருவருமே புதுமுகம் என சொல்ல முடியாத அளவிற்கு பழகிய முகமாக பாவனை செய்திருக்கிறார்கள். சில இடங்களில் முதல் நாயகி மீராவை தேவிகா தூக்கி சாப்பிட்டு விடுகிறார் என்றாலும் மிகையல்ல..! இந்த மூனர் மாதிரியே அஜய், படவா ‌கோபி, கராத்தே வெங்கடேசன் உள்ளிட்டவர்களும் பாத்திரத்திற்கு ஏற்ற பளீச் தேர்வு!

பிக்பாக்கெட் , ஜேப்படி திருடர்களின் வாழ்க்கையை சொல்வதாக படத்தை ஆரம்பித்து, அவர்கள் பார்த்தாலும் திருந்தும்படி கதையையும், கதையில் இடம்பெறும் காதலையும் நகர்த்தியிருக்கும் இயக்குனர் ஜி.அனந்தநாராயணன் கெட்டிக்காரர்தான். ஆனால் காதல், கழுத்து சங்கிலி என கதை பயணிக்கும்போது, அடுத்து காட்ட நிறைய விஷயம் இருந்தும் என்ன செய்வது? எனத்தெரியாமல் பாடல் காட்சிகளை காட்டி பரிதவிக்க விட்டிருப்பது பரிதாபம்!

எப்படி பார்த்தாலும் ஆறாயிரம் ரூபாய் பணத்திற்காகவும், பத்து பவுன் நகைக்காகவும் கொள்ளையர்களிடம் தன் குடும்பத்தையே சின்ன வயதில் பறிகொடுக்கும் கதாநாயகி மீராவும், அவர் சம்பந்தப்பட்ட பிளாஷ் பேக்கிற்காகவும் டைரக்டர் அனந்த நாராயணனுக்கு சபாஷ் சொல்லியே ஆக வேண்டும்!

திருட்டுக்கும், ஜேப்படிக்கும், வழிப்பறிக்கும் பின் பொருளை பறிகொடுத்தவர்களின் நிலையை ஒவ்வொரு திருடர்களும் உணர்ந்தால் திருட்டு, களவு எனும் கதையே இருக்காது என்ற உண்மையை உரக்கச் சொல்லி இருக்கும் இயக்குனருக்கு ஒளிப்பதிவாளர் என்.அழகப்பன் எழுபத்தைந்து சதவீதம் உதவியிருக்கிறார் என்றால் இசையமைப்பாளர் இளையராஜாவின் நூறு சதவிகிதம் உறுதுணையாக இருந்திருக்கிறார். காமெடியும், கவர்ச்சியும், கமர்ஷியல் அயிட்டங்களும் இல்லாத வால்மீகி படத்தை இளையராஜாவின் இசையே தூக்கி நிறுத்துகிறது.

விகடன் டாக்கீஸ் வால்மீகி படத்தை எடுத்து கலாச்சார காவலனாக உயர்ந்து நிற்கிறது என்றே சொல்ல வேண்டும்!

வால்மீகி : திரையரங்குகளில் வாழ வேண்டிய நல்யோகி!

-----------------------------------

விகடன் விமர்சனம்


சாவுற வரைக்கும் வாழணும்' என்பதற்காக எத்தனையோ பேர் வாழ்க்கையில் பரமபதப் பாம்பாக விளையாடுகிற திருடன் ஒருவனை, மூன்று பெண்கள் ஏணிகளாக நின்று மனிதனாக மாற்றுகிற கதை!

அகில்... ஒரு பிக்பாக்கெட் திருடன். சென்னைத் தமிழும், அழுக்கு முகமும், மூர்க்கக் குணமுமாக சரியான டகால்டி பார்ட்டி.

காசு வேண்டுமெனில், எதையும் செய்யத் தயாராக இருக்கிற அகில் (பிக்பாக்கெட் அடித்து மாட்டிக்கொள்ள நேரிடும்போது, ஓர் அப்பாவி முகத்தில் துண்டு பிளேடுகளைத் துப்பித் தப்பி ஓடுகிற அளவு குரூரம்), கோயில் குளத்தில் ஒரு மனநோயாளியால் தாக்குதலுக்கு உள்ளாகும் மீரா நந்தனை, ஆக்ரோஷமாகப் போராடிக் காப்பாற்றுகிறார். தன் உயிரைக் காப்பாற்றிய அகிலை 'இப்படி ஒரு நல்லவனா' என மீரா நினைக்க, அகிலோ... மீராவின் கழுத்துச் சங்கிலியை நைஸாக லவட்டிக்கொண்டு போகிறார்.

உறவென யாரும் இல்லாமல், ஊர் உலகத்துக்கே உதவியாக இருக்க விரும்புகிற, குழந்தைகள் காப்பகம் நடத்துகிற மீரா, அகில் ஒரு திருடன் என அறியாமல் பழகுகிறார். இருவருக்கும் இடையே ஓர் ஈர்ப்பு. அகில் தன் நெஞ்சில் பச்சை குத்திக்கொள்ளும் அளவுக்குப் பரவுகிறது காதல்.

குடிசை எரிஞ்சுபோச்சு எனப் பொய் சொல்லி, பூக்காரி கனகாவிடம் பணமும் மனமும் பெறுகிற அகில், அவர் வீட்டிலேயே தங்குகிறார். சதா கனவுகளிலும், அகில் மீது காதலுடனும் வளைய வருகிற கனகாவுக்கும் தெரியாது அகில் ஒரு திருடன் என்பது.

பிக்பாக்கெட், சங்கிலி பறிப்பது என நீளும் அகிலின் திருட்டு வாழ்க்கை, புதிய சிறைத் தொடர்புகளால், உப்புமா சினிமா கம்பெனி ஆரம்பித்து அப்பாவி இளம்பெண்ணின் வாழ்க்கையில் விளையாடும் வரை குரூரமாகிறது. அந்த அஸ்வதாவுக்கும் தெரியாது இவர் திருடன் என்பது.

தன் உயிரைக் காப்பாற்றியவன் என மீரா நெகிழ, தன் மானத்தைக் காப்பாற்றியவன் என கனகா கலங்க, தன் கனவுக்கு வண்ணம் பூசப் போகிறவன் என அஸ்வதா உருக... மூவருக்குமே உண்மை தெரிய வரும்போது தொடங்குகிறது... வாழ்வின் கதை!

'இன்னாடா பாண்டி' என்று இளையராஜாவின் உலுக்கும் குரலுடன் தடதடக்கிறது கிளைமாக்ஸ் நோக்கிய பயணம்!

'வாழ்க்கை என்பது இரண்டாவது வாய்ப்புகளால் நிறைந்தது' என்ற தத்துவத்தை அதன் அர்த்தம் ஆழம் இரண்டுடனும் காட்டுகிற கதை.

சென்னையின் இருட்டுப் பக்கத்தைக் களமாக்கி, கவனிக்கப்படாத மனிதர்களைக் காட்சிப்படுத்தியிருக்கிறார் அறிமுக இயக்குநர் அனந்த நாராயணன். உட்கார்ந்த இடத்தில் இருந்துகொண்டே எந்தெந்தத் திருடர்கள் எந்தெந்த இடத்தில் திருடுவார்கள் என்று சொல்லும் அடாவடி அக்கா, மனநோயாளியாக வந்து குணமாகிச் சிலுவை சுமக்கும் முருகா, பிளே ஸ்கூல் போனாலும் சென்னை பாஷையை விடாத ஸ்லம்டாக் சிறுவன், கூடப் பிறக்காத தங்கைக்காக கண்கள் கசியும் கருணா, நண்பனின் காதலி என்று பார்க்காமல் சரமாரியாக முகத்தில் பிளேடு போடும் சண்டியர் பங்காளிகள், ஆண் போலவே சுற்றித் திரியும் பிக்பாக்கெட் பொம்மு எனப் படத்தில் வந்து செல்லும் பல கேரக்டர்கள் மிகத் தனித்துவமானவை.

அப்படியே அழுக்குப் பாண்டியாக... அகில். அடையாள அணிவகுப்பில் தன் காதலியின் முன்பு முகத்தைக் காட்டும்போது திகைப்பு, மறுகணமே அவளிடம் திருடிய சங்கிலியைத் திருப்பிக் கொடுத்துவிட்டு கிரிமினல் சகாக்களின் தோளில் கை போட்டுச் செல்கிற அசால்ட்டு எனத் திகில் பிகில்.

கதாநாயகி மீரா நந்தன்... குறைகளைக் கண்டுகொள்ளாமல் அன்பும் நேசமும் மட்டுமே பாவிக்கிற பாத்திரத்துக்கு மீராவின் பிள்ளைச் சிரிப்பும் குண்டு மிளகாய் மூக்கும் அழகாக ஒத்துழைக்கின்றன. அவரின் ஃப்ளாஷ்பேக்... அதிர்ச்சி குண்டு!

இன்னொரு நாயகி, தேவிகா. தன்மானம்கொண்ட சேரிப் பெண்ணின் பாத்திரத்தை அப்படியே பிரதிபலிக்கிறார். 'உழைச்ச காசுதான் உடம்புல ஒட்டும். உழைச்சுச் சம்பாதிக்கிறவன்தான் உண்மையான ஆம்பள!' எனும் இடங்களில் அவரின் பெரிய கண்களே பிரமாதமாகப் பேசுகின்றன. ஆனால், தேவிகா அகிலைக் காதலிக்க ஆரம்பித்ததுமே, கவர்ச்சி நடனத்துக்குத் தாவியிருப்பது... கலெக்ஷன் குலுக்கல்.

இத்தனை உணர்ச்சிமயமான கதையைப் படமாக்கி இருக்கும்விதத்தில்தான் அப்படி ஓர் அநாவசிய வேகம். எடிட்டிங்கிலும் அவசரக் கத்திரிகள் அதிகம்.

ராஜாவின் இசை, அழகப்பனின் ஒளிப்பதிவு என்று தேர்ந்த கலைஞர்கள்கூட கதையின் தன்மைக்கு ஏற்ப பல இடங்களில் ஒளிந்து சிரிக்கிறார்கள்.

அரட்டலும் மிரட்டலுமாக நகர்கிற சீரியஸ் கதையில், கண்ணப்ப நாயனார் ஸ்கூல் டிராமாவும் உப்புமா சினிமா கம்பெனி இன்டர்வியூவும் ஷோக்கான குபுக் ரிலாக்ஸ். பின்பாதியிலும் தூக்கலாகவே தூவி இருக்கலாம்.

மீரா, தேவிகா இருவருடனுமான காதல் காட்சிகள் நேர்த்தியாக நெய்யப்பட்டு இருந்தால், அதன் ஆழம் முழுமையாக மனசுக்குள் இறங்கி இருக்கும்.

சரசரவென ஓடும் கதையில் அன்பும், நட்பும், காதலும், துரோகமும் சடசடவென மழையாகப் பெய்திருக்க வேண்டாமா? இன்னமும் வெக்கை குறையாத சென்னை போல இருப்பதுதான் உறுத்தல்.

காதலாய் ஒருத்தி... கனலாய் ஒருத்தி... கண்ணீராய் ஒருத்தி இப்படி எல்லா ஆண்களின் வாழ்விலும் ஏதாவது ஒரு ரூபத்தில் ஒரு பெண்ணின் சின்சியரான பங்கு இருக்கவே செய்கிறது. பெண்களின் அன்பும், நம்பிக்கையும், சகிப்பும்தான் முள்ளையும் மலராக மாற்றும் என்பதை உள்ளது உள்ளபடிச் சொல்லும் படம்!

'திரும்பிப் பார்த்தால் தெரியும் வலி... திருந்திவிடு' என்கிற மெசேஜ், சின்னதோ, பெரியதோ தப்புப் பண்ணுகிற யாருக்குமே பொருந்தும்.

விகடன் மார்க் : 41/100


----------------------------------

குமுதம் விமர்சனம்


அழகான ஹீரோயின் திருத்தி, திருட்டு ஹீரோ திருந்துகிற வால்மீகி காலத்து கதைதான். ஆனால் ஒவ்வொரு மோசடிக்குப் பின்னாலும் ஒளிந்திருக்கும் யாரோ ஒருவருடைய வேதனைகளை சூடு போட்டது போல அழுத்தமாய் சொல்ல முயன்றிருப்பதில்தான் "வால்மீகி' வித்தியாசப்படுகிறான்.

சிட்டி பஸ் கூட்டத்தில் பிளேடு போடுகிற 420 கேரக்டர் "கல்லூரி' அகிலுக்கு பொருந்துகிறது சில சமயங்களில் மட்டும். திருடினாலும் திருந்தினாலும், அவரது பாடி லாங்வேஜில் ஒட்டிக்கொண்டே இருக்கும் தயக்கம் வெளிப்படையாய் தெரிகிற மைனஸ். கேரளத்து வரவான மீரா நந்தன் திருடனிடமும், பைத்தியத்திடமும் மனிதனைப் பார்க்கிற பாஸிட்டிவ் பொண்ணு கேரக்டருக்கு செம பொருத்தம். ஆபத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிய அகிலை மீரா அடுத்த சில காட்சிகளிலேயே ரொமான்ஸ் பார்வை பார்ப்பது தொட்டுத்தொடரும் சினிமாத்தனம். அகிலை ஒரு தலையாய் காதலிக்கும் கனகா கேரக்டரும் அப்படியே.

ஸ்ரீபெரும்புதூரில் திருடு போன மீராவின் பணத்தை வடசென்னையில் உள்ள ஒரு சொர்ணக்கா செல்போனில் விசாரணை நடத்தி மீட்டுத் தருகிற காட்சி, திருட்டு உலகின் நெட்வொர்க்கிற்கு பிரமிப்பூட்டுகிற பதிவு. பிக்பாக்கெட் கும்பலில் ஆண்களோடு ஆணாக அலைகிற அந்த பெண் கேரக்டர் கவனத்தை நிறையவே ஈர்க்கிறது. என்.அழகப்பனின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு ஃப்ரேமிலும் யாதார்த்தம் தவறாத அழகு. திருட்டுப் பழக்கத்தை ஜாலியாய் அலசுகிற "அச்சடிச்ச காசை' பாடலிலும், அதே விஷயத்தை கூர்மையாய் நக்கல் பண்ணுகிற "என்னடா பாண்டி' பாடலிலும் பளிச்சிடுவது இளையராஜா, வாலி கூட்டணியின் சீனியாரிட்டி.

ஏதோ ஃப்ளாஷ் பேக்குக்கு கூட்டிச் செல்லும் இசையோடு அகிலை ஒரு என்.ஜி.ஓ. நபராக அறிமுகப்படுத்தும் ஆரம்பக்காட்சியிலேயே வால்மீகியின் முழு வாழ்க்கையும் தெரிந்துவிடுவதுதான் படத்தின் பெரும் பலவீனம்.

குத்துப் பாடல்கள், அடிதடிகள், இரட்டை அர்த்த வசனங்கள் ஏதுமின்றி குடும்பத்தோடு வந்து பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் படத்தை எடுத்திருக்கிறார் அறிமுக டைரக்டர் அனந்த நாராயணன். ஆனால் குடும்பங்களை நச்சென்று தியேட்டருக்குள் இழுக்கும்படி புதிதாய் ஏதாவது சொல்லியிருந்தால் வால்மீகி வெற்றிகரமாய் ராமாயணம் எழுதியிருப்பான்.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in