Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

தம்பி வெட்டோத்தி சுந்தரம்

தம்பி வெட்டோத்தி சுந்தரம்,
  • தம்பி வெட்டோத்தி சுந்தரம்
  • கரன்
  • அஞ்சலி
  • இயக்குனர்: வி.சி.வடிவுடையான்
21 நவ, 2011 - 10:00 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » தம்பி வெட்டோத்தி சுந்தரம்

 

தினமலர் விமர்சனம்



தமிழக-கேரள எல்லையான கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை கருவாகவும், கதைக்களமாகவும் கொண்டு வெளிவந்திருக்கும் படம் தான் "தம்பி வெட்டோத்தி சுந்தரம்!"

தமிழகத்திலேயே கல்வி அறிவு பெற்றவர்கள் நிரம்பிய கன்னியாகுமரி மாவட்டத்தில்தான் ரவுடிகளும், தாதாக்களும் கூட அதிகமாம். அது ஏன்? அதற்கு காரணம் என்ன...? என்பதை அலசியிருக்கும் இப்படத்தின் கதைப்படி, வெட்டோத்தி எனும் குமரி மாவட்ட, கிராமத்தை சார்ந்த படித்த இளைஞன் சுந்தரம் எனும் கரண், தகுதி இருந்தும் படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காததால் குடும்பசூழல் காரணமாக கடத்தலில் இறங்குகிறார். கூடவே குமரி மாவட்டத்திலேயே பெரிய கடத்தல் பார்ட்டியும், கள்ளச்சாரய வியாபாரி தாதாவுமான, சிலுவையின் மகள் லூர்து எனும் அஞ்சலியையும் காதலிக்கிறார். கரணின் கடத்தல், காதல் இரண்டும் அவரை சோதித்ததா...? இல்லை சாதிக்க செய்ததா...? என்பது வெட்டோத்தி சுந்தரம் படத்தின் வித்தியாசமும், விறுவிறுப்புமான மீதிக்கதை!

வெட்டோத்தி சுந்தரமான கரண்-பிரமாதம். வாத்தியார் வேலைக்கு படித்துவிட்டு, போலீஸ் வேலைக்கு முயற்சித்து, இரண்டும் கைகூடாமல் கடத்தலில் இறங்கும் கரண், நண்பர் சரவணனுக்காக உயிரையும் கொடுக்க துணிவது ஓ.கே., அதே நேரம் சரவணனால், தன் கல்யாணத்தில் முடிய வேண்டிய காதல், கலாட்டாவில் முடிவதை பொறுத்துக்கொள்வதெல்லாம் ரொம்பவும் ஓவர். என்னதான் உண்மை சம்பவம் என்றாலும் கரண், ‌க்ளைமாக்ஸில் வில்லன்களால் வீழ்த்தப்பட்டு, கண்தெரியாமல் போய், கஷ்டப்பட்டு உயிரை விடுவது உருகாதோர் நெஞ்சையும் உருக வைத்துவிடும் உணர்ச்சிமிகு காட்சிகள். அதில் கரணைத்தவிர வேறு ஒரு நடிகரால் இவ்வளவு உருக்கமாக நடிக்க முடியுமா...? என்பது கேள்விக்குறியே!

துருதுரு லூர்துவாக அஞ்சலி, செம ஜாலி பேர்வழி! மரமண்டை, மரமண்டை என கரனை திட்டிக் கொண்டே தன் காதலை வெளிப்படுத்தும் காட்சிகளில் அஞ்சலி, பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கிறார். அதேநேரம், டைரக்ஷ்ன் டச்சாக அஞ்சலியின் துறுதுறுப்பும், பரபரப்புமே கரணுக்கு வினையாய் வந்து முடிவது வேதனை! வேலையில்லா திண்டாட்டம், அதனால் "சிட்டிசன்" சரவணன் சுப்பையா, குடித்துவிட்டு பண்ணும் கலாட்டா மற்றும் தற்கொலை டிராமாக்கள் உள்ளிட்டவைகளை தவிர்த்திருந்தால் இயக்குநரை இன்னும் அதிகமாக பாராட்டலாம்!

சாலை எனும் பாத்திரத்தில் சரவணனும், அவரது கூட்டாளி ஆப்பையாக வரும் சுப்புராஜூம் காமெடிக்கு, காமெடியும் செய்து நட்புக்காக உருகவும் செய்கிறார்கள். கரண்ட் கஞ்சா கருப்பு, சிலுவை ஜே.எஸ்.பாலாசிங், சண்முகராஜன், போலீஸ் வில்லன் நந்தா சரவணன் உள்ளிட்ட எல்லோருமே பாத்திரமறிந்து நடித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றனர். பேஷ்! பேஷ்!!

அழகிய ஆஞ்சமநாயலுவின் ஒளிப்பதிவும், வித்யாசாகரின் மெலோடி பாடல்களும், வி.சி.வடிவுடையானின் எழுத்து, இயக்கத்தில் "தம்பி வெட்டோத்தி சுந்தரம்" படத்தை "அண்ணன் அழகு சுந்தரமாக" ஜொலிக்க செய்திருக்கின்றனர் என்றால் மிகையல்ல!



-------------------------------------------------------------


குமுதம் விமர்சனம்



வறுமை, சிறை வாழ்க்கை, கடத்தல் தொழில், தேடிவரும் காதல், அதனால் வெடிக்கும் பிரச்னைகள் என இளம் வயதில் அசாதாரண வாழ்க்கை வாழ விதிக்கப்பட்டவன்தான் "தம்பி வெட்டோத்தி சுந்தரம்".

அரசாங்க வேலைக்காகக் காத்திருக்கும் காலத்தில் தடம் மாறும் சுந்தரமாக கரண். போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் சவால் விட்டு சாராயம் கடத்தும்போது கலகல கரண். சில காட்சிகளில் "ஓவர் ஆக்டிங்கைத் தவிர்த்திருக்கலாம். கரணை துரத்தித் துரத்திக் காதலிக்கும் லூர்துவாக அஞ்சலி அசத்தியிருக்கிறார். போலீஸிடம் வடிவேலு ஸ்டைலில் அடிவாங்குவது. அந்த சுவடே தெரியாமல் அரிசி கடத்துவது என கடத்தல் மன்னன் சார்லஸாக வருகிற சரவணன், மனசில் நங்கூரம் போட்டு நிற்கிறார். நள்ளிரவில் கடன் கேட்டுப்போகும் இடத்தில் அவமானப்படுத்தப்படும் சரவணன், கண்ணீரும் காமெடியுமாக அதைச் சமாளிக்கும் காட்சி மனதை அதிர வைத்துவிடுகிறது.

சாராய வியாபாரி சிலுவை தனது மனைவியைக் கொன்றவர்களை பல வருடங்கள் காத்திருந்து அதே குரூரம் குறையாமல் பழி வாங்கும் காட்சி பகீர்! போலீஸ் இன்ஸ்பெக்டரும் ஒரு பழிவாங்கும் ஃப்ளாஷ்பேக்கோடு அலைவது சலிப்பூட்டுகிறது. கடைசியில் இந்த ரிவேஞ்ச் வெட்டுக்குத்து ரிலே ரேஸ் கணக்கில் தொடர்ந்து ஒரு சின்னப்பையனிடம் வந்து முடிவது பல முறை பார்த்த டிராமா.

காதல் பூக்கும் காட்சிகளில் மட்டும் வித்யாசாகரின் இசை கவனிக்க வைக்கிறது. கதைக்குச் சமமாக கைகொடுத்துள்ள விஷயம், தமிழக - கேரள எல்லையோரத்தைச் சார்ந்த கதைக்களம். அன்றாட நிகழ்வுகளாகிப்போன கடத்தல்கள், தூக்குத்திருவிழா, வேண்டுதலுக்காக மோர் ஊற்றுவது என அந்த வட்டாரத்தின் இயல்புகளை ஆஞ்சநேயலுவின் கேமரா நேர்த்தியாக அள்ளிவந்துள்ளது.

கனமான கேரக்டர்களை யோசித்ததற்காக இயக்குநர் வி.சி.வடிவுடையானைத் தட்டிக்கொடுக்கலாம். அவரோ சுந்தரம் என்ற தனிநபரின் வீழ்ச்சியை ஒட்டுமொத்த கன்னியாகுமரி மாவட்ட இளைஞர்களின் வாழ்க்கையாகச் சொல்லி பயமுறுத்தாமல் இருந்திருக்கலாம்.

தம்பி வெட்டோத்தி சுந்தரம் - தவிர்க்கப்பட வேண்டியவன் அல்ல.

குமுதம் ரேட்டிங் - ஓகே




--------------------------------------------------------


கல்கி சினி விமர்சனம்


தமிழக-கேரள எல்லையில் நடந்த உண்மைச் சம்பவம் என்னும் அறிவிப்போடு வந்திருக்கும் திரைப்படம் “தம்பி வெட்டோத்தி சுந்தரம். தனது முதல் படத்தில் ஒரு வலுவான கதையோடு வந்திருக்கிறார் இயக்குனர் வடிவுடையான்.

தேச, மாநில எல்லைகளில் வாழும் மக்களுக்கென பிரத்யோகமான வாழ்வியல் சிக்கல்களும், குற்றப்பின்னணியும் உண்டு. எல்லையைக் கடப்பதும். கடத்துவதும் அவற்றுள் முக்கியமானவை. தனி மனித வாழ்வின் குரூர முகத்தின் பிம்பத்தை சம்பவங்களின் கோவையோடு கட்டமைத்திருக்கிறார் இயக்குனர். படித்து ஆசிரியராக விரும்பும் கரண், நிர்ப்பந்தத்தால் தடம் மாறுகிறார். வாழ்வின் சுழற்சியல் சிக்கியபின் அது திட்டுச்செல்லும் இடமே தவிர்க்க முடியாதாக உள்ளது. சுந்தரமாக காணும், சோலையாக சரவணனும் வாழ்ந்திருக்கிறார்கள் அஞ்சலி, கஞ்சா, கருப்பு, காதல் தண்டபாணி, சண்முகராஜன், நந்தா சரவணன் பாத்திரங்களுக்கு பலம், வித்யசாகரின் இசையில் “கொலைகாரா’ பாடல் ரசிகர்களை முணுமுணுக்க வைக்கும்.

“கடவுள் பூமிக்கு வர்றது அம்மா, அக்கான்னு ரத்த உறவோட மட்டுமில்ல நல்ல நட்பாகவும்தான்.... “படிச்சவனுக்கு வேலை கிடைக்கலன்னா பாழாப்போறது அவன் இல்ல; இந்தச் சமூகம்.. என திரைப்படத்துக்கு நல்ல எழுத்தாளரின் தேவையை உணர்த்தும் பா.ராகவனின் உரையாடல் பாராட்டுக்குரியது.

திரையரங்கை விட்டு வெளியே வரும் போது ரசிகர்களின் மனம் கனத்துப் போவதற்குக் காரணம், படத்தின் முடிவுமட்டுமல்ல-முடிவை வேண்டி சமூக பிரக்ஞையோடு எழுப்பும் கேள்வியும்தான்.

-தமிழ்மணவாளன்-



வாசகர் கருத்து (35)

madhu - tiruppur,இந்தியா
20 டிச, 2011 - 11:54 Report Abuse
 madhu நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல திரைப்படம் பார்த்த திருப்தி.நன்றி கரன் வாழ்த்துக்கள்
Rate this:
MUTHU - erode,இந்தியா
17 டிச, 2011 - 09:54 Report Abuse
 MUTHU அஞ்சலி குட்டி உனக்காதான் படத்துக்கே போனேன்டி தங்கம்.
Rate this:
Remo - mayavaram,இந்தியா
12 டிச, 2011 - 17:56 Report Abuse
 Remo தமிழ் படம் தயாரரிப்பதில் சைக்கோ எல்லாம் களம் இறங்கிட்டாங்கன்னு தெரியுது ,,, இதுபோல படத்தை ஒளிபரப்பாதிர்கள்,ரேணிகுண்ட படம் போல இருக்கு , அதுபோல காசி ,நான் கடவுள் ,நடுநிசி நாய்கள் ..நான் மகன் அல்ல ..இன்னும நிறைய படம் இருக்கு இதுபோல பைத்தியங்கூலி படங்களை எல்லாம் ஒளிபரப்பி மக்களை சைக்கோவாக மற்றிவிடாதிர்கள் ,, டைரக்டர் எல்லாம் சோறு தான திங்குரானுங்க .இதுல்ல வில்லனுங்க வேறு சேவிங் பண்ணுன கொரங்கு மாதிரி . இந்த படத்தையே இன்னும் நல்லா கொண்டுகிட்டு போயிருக்கலாம் .
Rate this:
Suresh - Mayavaram (Kalahashthinathapuram),சிங்கப்பூர்
12 டிச, 2011 - 08:16 Report Abuse
 Suresh போராளி படத்துக்கு அப்புறம் நல்ல படம்ன்னு சொன்னா இந்த படத்தையும் சொல்லலாம் ... நல்ல கதை ..ஆனா என்ன ஒன்னு படிச்சிபுட்டு வேலைகடைக்கிலேன்னு ,சாராயம் கடத்துறது மிகவும் தப்பான செயல் , அதற்க்கு பதிலாக விவசாயம் செய்து முன்னேருவதாக படத்தில் காட்டியிருக்கலாம் ,மக்களிடம் விவசாயத்தை பற்றி ஒரு விழிப்புனர்வாது தோன்றும் ,, படத்தில் அஞ்சலி கலைக்கிட்டங்க போங்க நல்ல நடிப்பு அவுங்க நல்ல வர என்னோட வாழ்த்துக்கள் . by சுரேஷ் currently in Singapore
Rate this:
venkat - mahalapye,போஸ்ட்வானா
11 டிச, 2011 - 00:27 Report Abuse
 venkat என்ன அருமையான படம் கரன் சூப்பர் நடிப்பு பாராட்ட வார்த்தை கிடைகவில்லை மனம் என்னறேமும் நினைத்து கொண்டே உள்ளது எப்பிடி படம் எடுங்க வேண்டும் என்று கற்றுகுல்லுங்கள் .....சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ....வெங்கட் ஆப்ரிக்கா
Rate this:
மேலும் 30 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in