Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

தமிழ்ப்படம்

தமிழ்ப்படம்,
  • தமிழ்ப்படம்
  • மிர்ச்சி சிவா
  • திஷா பாண்டே
  • இயக்குனர்: சி.எஸ்.அமுதன்
08 பிப், 2010 - 00:00 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » தமிழ்ப்படம்

தமிழ்ப்படம்

தமிழ் சினிமாவை கிண்டலடித்து எடுக்கப்பட்டிருக்கும் முழுநீள காமெடி தமிழ் திரைப்படம்தான் தமிழ்ப்படம்!

கதைப்படி, அந்த கிராமத்தில் ஆண் குழந்தை பிறந்தாலே ஆகாது எனும் ஐதீகம் காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வர., அந்த ஊர் மொக்கை பெரியார்தாசனுக்கு பிறக்கும் ஆண் குழந்தையை அவரே மருத்துவச்சி பரவை முனியம்மா மூலம் கள்ளிப்பால் கொடுத்து கொல்லச் சொல்லி அனுப்புகிறார். கொல்லை வழியாக குழந்தையை தூக்கிக் கொண்டு கூட்ஸ் வண்டியில் தப்பிக்கும் பரவையோ சென்னைக்கு வந்து ஒரு குடிசைப் பகுதியில் குழந்தையை வளர்த்து ஆளாக்குகிறார். ஒரே சண்டை காட்சியில் சைக்கிள், பெடல் சுற்ற... வளர்ந்து ஆளாகும் குழந்தை, ஊர் பிரச்னையில் எல்லாம் மூக்கை நுழைத்து அடுத்த சில காட்சிகளில் பரத், நகுல், சித்தார்த் ஆகியோருக்கு நண்பன் ஆகி ரோட்டோரம் திருட்டு தம்மும் கையுமாக பிகர் வெட்டுகிறது. கதாநாயகி திஷா பாண்டடேவை பார்த்ததும் நண்பர்கள் சொன்னது மாதிரியே சாலையோரம் எங்கோ மணி அடிக்க அவர் முகத்தில் பிரகாசமாக பல்ப் எறிய காதல் தீ பற்றுகிறது. அதன் பின் ஹீரோ ஷிவா, கோடீஸ்வரி திஷா பாண்‌டேயை பெண் கேட்டு அவர் வீட்டுக்கு போக, அவரது வசதியான அப்பால ஷிவாவின் ஏழ்மையை சுட்டிக்காட்டி பெண் தர மறுக்கிறார். என் ஏழ்மைதானே உங்கள் குறை நான் கோடீஸ்வரனாகி வருகிறேன் எனச் சொல்லி திஷாவின் அப்பாவிற்கு காப்பி வருவதற்குள், பால் பாக்கெட் போட்டு, பேப்பர் போட்டு, கார் துடைத்து காசு சம்பாதித்து திரும்பிய திசையெல்லாம் ஷிவா பெயரில் பிஸினஸ் ஆரம்பித்து பெரிய புள்ளியாகி, பெரிய காரில் வந்து திஷாவை பெண் கேட்கிறார். சொன்னபடி திருமணத்திற்கு சம்மதிக்கிறார் பெண்ணின் அப்பா. அப்புறம் என்ன... நினைத்தபடி திருமணம், சுபம்... என எண்ணினால் அதுதான் இல்லை. திருமண ‌மேடையில் விருந்தாளியாக வந்த சிலர் ஷிவா அப்பன் பேர் தெரியாதவர் எனக் கூற., அதனால் என்ன? என பெண் வீட்டிர் மறுத்தும், அப்பாவையும், குடும்பத்தையும் தேடி பாட்டி தந்த பேமிலி பாட்டுடன் ஊருக்கு புறப்படும் ஷிவா, அப்பாவையும், குடும்பத்தையும் கண்டு பிடித்தாரா, திஷா பாண்‌‌டேயை திரும்பி வந்து கைப்பிடித்தாரா? என்பது மீதிக்கதை!

கருத்தம்மா படத்தில் தொடங்கி தளபதி, சின்னத்தம்பி, அபூர்வ சகோதரர்கள், என் ராசாவின் மனசிலே, மொழி என சகல தமிழ் சினிமாக்களையும் வுட்டு ஓட்டியிருக்கும் தமிழ்ப்படத்தில் விஜய், அஜித், கமல், ராஜ்கிரண், முரளி, கார்த்திக், பிரபு என உச்ச நடிகர் முதல் ஓய்ந்த நடிகர் வரை யாரையும் தப்ப விடவில்லை. ஒரு சண்டைக்காட்சியை வெயிட்டிங்கில் விட்டு, சிறுவன் சைக்கிள் பெடலை சுற்றி ஹீரோ ஷிவாவாகி விட்டு, அத‌ன் பிறகு பைட் முடிக்கும் ஆரம்ப பார்முலாவிலேயே தமிழ் சினிமாவின் தப்பிதங்களை பட்ட வர்த்தனமாக படம் பிடித்து காட்ட ஆரம்பிக்கும் இயக்குனர் சி.எஸ்.அமுதன், இறுதிவரை அந்த பெப் குறையாமல் பார்த்துக் கொள்வதுடன் அழகான ஒரு காதல் கதையையும் நல்லதொரு மெசேஜையும் இத‌னூடே சொல்ல முயற்சித்திருப்பது சபாஷ் சொல்ல வைக்கிறது.

ஷிவாவின் தோழர்களாக, கல்லூரி மாணவர்களாக பரத் எனும் பெயரில் வெ.ஆ.மூர்த்தியையும், நகுலாக எம்.எஸ்.பாஸ்கரையும், சித்தார்த்தாக மனோபாலாவையும் இளம் தமிழ் சினிமா ஹீரோக்கள் பெயரில் புத்தகமும் கையுமாக அலைய விடுவதில் தொடங்கி, பேமிலி பாட்டு என ஒரு இங்கிலீஷ் பாட்டை போட்டு ‌பெரியார்தாசனை ஷிலா கண்டுபிடிப்பது வரை செம நக்கல்... நையாண்டி!

படக்காட்சிகளில் மட்டுமின்றி பாடல் காட்சிகளிலும் தமிழ் சினிமா பாடல்களில் இடம்‌பெறும் புரியாத வார்த்தைகளை சாடி ஓமகசியா... என ஒரு பாடல் காட்சியே வைத்திருக்கும் இயக்குனர் பாடல் காட்சி ஒன்றில் உங்கள் ஷிவா இப்பாடலை பாடுகிறார் என கார்டு போட்டு நம் ஹீரோக்களின் பெருந்தன்மையை கிண்டலடித்திருப்பது பிரமாதம்!

இப்படி தமிழ் சினிமாவை சாடும் துணிச்சலான ஒரு படத்தை வழங்க தயாநிதி அழகிரி தவிர வேறு யாராலும் முடியாது. தமிழ் சினிமா உலகமும் வேறு யாரையும் விடாது!

தமிழ்ப்படம் : சினிமா உலகிற்கு நல்ல பாடம்! ரசிகர்களுக்கு நல்ல காமெடி படம்!!

---------------------------------

விகடன் விமர்சனம்

பன்னெடுங்காலமாக பரவி வந்திருக்கும் தமிழ்ப்படங்களின் கமர்ஷியல் பில்ட் அப் அபத்தங்களை தகர அடி அடித்திருக்கும் தமிழ் படம். திரையுலகில் தான் இயக்கும் முதல் படத்திலேயே ஸ்பூஃப் ட்ரீட்மென்ட் கொடுத்திருக்கும் சி.எஸ்.அமுதனுக்கு வாழ்த்துக்கள்.

ஒரு டிபிக்கல் தமிழ் சினிமா ஹீரோ எப்படி உருவாகிறார் என்பதை ஹிட் தமிழ் சினிமாக்களின் காட்சிகளையே உல்டா உட்டாலக்கடி ஆக்கி அதகளம் செய்திருக்கிறார்கள்.
மாமூல் கேட்டு ரவுடிகள் அட்டகாசம் செய்வதை கண்டு சிறுவன் சிவாவுக்குள் எரிமலை துடிக்கிறது. பாட்டி நான் எப்ப பெரியவன் ஆகி இந்த அநியாயத்தை தட்டிக்கேக்குறது? என்று கேட்கிறான் சிறுவன். அந்த சைக்கிளில் ஏறி பெடல் போடு என்று பாட்டி சொல்ல, ஒற்றை சுற்று பெடல் போட்டு முடிப்பதற்குள் ஹீரோ சிவா என்ட்ரி. ரவுடிகளை கபடி ஆடி நிமிர்ந்தால், தமிழகத்தின் அடுத்த அகில உலக சூப்பர் ஸ்டார், புதிய தளபதி, வைஸ் கேப்டன் 2011ன் முதல்வர் தயார்.

சொல்லிய காபி வருவதற்குள் சிவா மல்ட்டி மில்லியனர் ஆவது. குடும்ப பாட்டு அடங்கிய சி.டி.யில் இங்கிலீஸ் பாப் ஒலிப்பது, போலீஸின் ரகசிய மீட்டிங்கில் தீவிரவாதியே டீ சப்ளை செய்வது, ஹீரோயினின் கதறல் காதில் விழுந்ததும் ஹாஸ்பிட்டல் ட்ரிப்ஸை பிடுங்கி எறிந்து வெகுண்டெழும் சிவா உடனே உச்சா போவது, சப்வேயில் ரவுடிகளிடமிருந்து தப்பிக்க ரன் ட்ரிக்கை ட்விஸ்ட் செய்வது எனப் படம் முழுக்க பாஸ்பரஸ் பட்டாசு.

ஒரே படத்திலேயே இத்தனை டாப் ஹீரோக்களின் சூப்பர் டூப்பர் காட்சிகளை இமிடேட் செய்யும் வாய்ப்பு சிவாவுக்கு, டெல்லி கணேஷை கொல்ல முயற்சிக்கும்போது, ஆடாம நில்லு சார். உனக்கு இன்ட்ரஸ்ட்டே இல்லையே? என்று கெஞ்சிக் கொஞ்சிக் கொல்வதாகட்டும், காதலனாக பரத ஓவியம் வரைய பவுலிங் போட்டு, எக்சர்சைஸ் பண்ணி பெர்பார்மன்ஸ் செய்வதிலாகட்டும்... பிரித்து மேய்கிறார் மனுஷன். எரிமலையாக பொருமும்போதும், அடுத்த காட்சியிலேயே போங்கு வாங்குவதற்கும் கச்சிதமாக செட் ஆகும் காமெடி பாடி லாங்குவேஜ் சிவா ப்ளஸ். சிவாவின் கல்லூரி தோழர்களாக டிஷர்ட், கூலிங் கிளாஸ் மாட்டிக்கொண்டு மச்சான், மாப்ள என்று எம்.எஸ்.பாஸ்கர், வெண்ணிற ஆடைமூர்த்தி, மனோபாலா குரூப் திரிவது... ஆனாலும் அக்குறும்பு.

நான் எட்டு வயசுலயே கத்தி தூக்கினேன். ஹலோ... நான் மூணு வயசிலயே கத்தி ஊரை கூட்டினேன் என்று தெறிக்க வைக்கும் சந்துரு வசனங்கள் துறுதுறு ஸ்கோர். ஒரிஜினல் மாஸ்டர் பீஸ்களின் கேமரா ஆங்கிளில் டுபுக்கு காட்சிகளை செட் செய்ததில் நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு படத்துக்கு டெம்போ ஏற்றுகிறது.

இரண்டாவது பாதி முழுக்க தனித்தனியாக ரசிக்க வைக்கும் பல காட்சிகள் ஏன் எதற்கு என்று தெரியாமலேயே கடந்து செல்வதை தவிர்த்திருக்கலாம். இத்தனை நாள் கை தட்டி விசிலடித்து கொண்டாடிய தமிழ் படங்களையே கிண்டலடித்து, அதற்கும் நம்மை கை தட்டி விசிலடிக்க வைத்த வகையில் இந்த தமிழ்ப்படம் வெற்றிதான்.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

தமிழ்ப்படம் தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in