ராங்கி,Raangi

ராங்கி - பட காட்சிகள் ↓

Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - லைக்கா புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - சரவணன்
இசை - சத்யா
நடிப்பு - த்ரிஷா, அனஸ்வரா ராஜன்
வெளியான தேதி - 30 டிசம்பர் 2022
நேரம் - 2 மணி நேரம் 2 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

'பொன்னியின் செல்வன்' படத்தின் வரவேற்புக்குப் பிறகு த்ரிஷா அடுத்த இன்னிங்ஸ் ஒன்றிற்கு மீண்டும் தயாராகிவிட்டார். இந்த 'ராங்கி' படம் சில வருடங்களுக்கு முன்பே வெளியாகி இருக்க வேண்டிய படம். ஆனால், சென்சார் சிக்கல்களால் வெளியீடு தள்ளிப் போய் தற்போதுதான் வெளியாகி உள்ளது.

'எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி, வலியவன்' படங்களை இயக்கிய சரவணன் இயக்கியிருக்கும் படம் இது. இப்படத்தின் கதையை ஏஆர் முருகதாஸ் எழுதியிருக்கிறார். இன்றைய சமூக வலைத்தள யுகத்தில் போலியான கணக்குகளை வைத்து நடக்கும் சில விஷயங்கள், அதன் மூலம் நடக்கும் ஒரு இளம் தீவிரவாதியின் காதல் என யோசித்து கதை எழுதியிருக்கிறார் முருகதாஸ். கதையை சிதைக்காமல் ஒரு மென்மையான காதல் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சரவணன்.

ஆன்லைன் இணையதளம் ஒன்றில் ரிப்போர்ட்டர் ஆக வேலை பார்ப்பவர் த்ரிஷா. அவருடைய அண்ணன் மகள் அனஸ்வரா ராஜனின் புகைப்படத்தை வைத்து அவள் வகுப்புத் தோழி பேஸ்புக்கில் போலியான கணக்கை ஆரம்பித்து சில ஆபாச வீடியோக்களைப் பதிவேற்றியுள்ளார். அது பற்றி விசாரித்து அனஸ்வராவின் வகுப்புத் தோழியைக் கண்டுபிடித்து அறிவுரை சொல்கிறார். ஆனால், எங்கோ ஒரு நாட்டில் இருக்கும் இளம் தீவிரவாதி அந்த போலியான பேஸ்புக் கணக்கில் உள்ள அனஸ்வராவின் புகைப்படத்தைப் பார்த்தே காதலிக்க ஆரம்பிக்கிறார். அது பற்றி த்ரிஷாவுக்குத் தெரிய வருகிறது. உளவுத்துறைக்கும் தெரிய வருகிறது. அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

த்ரிஷா முதன்மைக் கதாநாயகியாக இதற்கு முன்பு நடித்த படங்கள் அவருக்கு பெரிய பெயரைப் பெற்றுத் தரவில்லை. ஆனால், இந்தப் படத்தில் ரிப்பேர்ட்டர் தையல் நாயகி கதாபாத்திரத்தில் பெயர் வாங்கும் அளவிற்கு நடித்திருக்கிறார். இத்தனை வருடங்களுக்குப் பிறகும் இவ்வளவு ஸ்லிம்மாக இருக்கிறாரே என ஆச்சரியப்பட வைக்கிறார். அண்ணன் மகள் அனஸ்வராவை எந்த பிரச்சினையிலும் சிக்காமல் காப்பாற்றத் துடிக்கிறார். கிளைமாக்சில் அதிரடி ஆக்ஷன் ஹீரோயினாகவும் மாறி கொஞ்சம் அசத்துகிறார்.

படத்தில் த்ரிஷாவைத் தவிர தெரிந்த முகங்கள் யாருமில்லை. த்ரிஷாவின் அண்ணன் மகள் அனஸ்வரா அந்த பதினைந்து வயதுக்குரிய அப்பாவித்தனத்துடன் இயல்பாய் நடித்திருக்கிறார். அந்த இளம் தீவிரவாதியாக நடித்திருக்கும் வெளிநாட்டு நடிகர் ஆலிம் கூட கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

சத்யாவின் பின்னணி இசை காட்சிகளின் பரபரப்பைக் கூட்டியிருக்கிறது. த்ரிஷாவின் வீடு சம்பந்தப்பட்ட காட்சிகளில் லைட்டிங்கும், வெளிநாட்டுக காட்சிகளில் கேமரா கோணங்களும் ஒளிப்பதிவாளர் சக்திவேலின் பணியைப் பேச வைக்கின்றன.

சில பல லாஜிக் மிஸ்டேக்குகள் படத்தில் உள்ளன. பேஸ்புக் கணக்கை டெலிட் செய்வதை விட்டுவிட்டு அதிலேயே அண்ணன் மகள் அனஸ்வரா போல த்ரிஷா தொடர்ந்து 'சாட்' செய்து வருவது சரியா என்ற கேள்வியும் எழுகிறது. அந்த இளம் தீவிரவாதி மீது த்ரிஷாவுக்கும் ஒரு ஈர்ப்பு ஏற்படுவது போலக் காட்டுவதும் கொஞ்சம் அதிர்ச்சிதான். படத்தில் பல சென்சார் 'கட்'கள் இருப்பதால் குறைவான தாக்கத்தையே ஏற்படுத்துகிறது.

ராங்கி - பார்க்காத காதல்…

 

ராங்கி தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

ராங்கி

  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓