Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

அவள் பெயர் தமிழரசி

அவள் பெயர் தமிழரசி,
17 மார், 2010 - 00:00 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » அவள் பெயர் தமிழரசி

தினமலர் விமர்சனம்

தோல்பாவை கூத்து, தெருக்கூத்து போன்ற அழிந்து வரும் இந்திய பாரம்பரிய கலைகளை அடையாளம் காட்டி அழகாக பதிவு செய்ய முயன்றிருக்கும் படம் அவள் பெயர் தமிழரசி. இதனூடே பருவம் வராத வயதிலேயே வரும் ஒரு பால் ஈர்ப்பையும், பருவம் வந்ததும் அதுவே காதலாக கசிந்து உருகும் நிலைக்கு மாறுவதையும், பின்... காமத்தால் அந்த காதல் நாயகியின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி சந்தி சிரிக்க விடுவதையும் கலந்து ‌கட்டி கலக்கலாக கதை சொல்லி படம் முடிந்ததும் நம்மை எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்யும் வகையில் படம் பண்ணி இருக்கிறார் அறிமுக இயக்குனர் மீரா கதிரவன்.

கதைப்படி ஊர், ஊராக சென்று தோல்பாவை கூத்து நடத்தும் குடும்பம் கதாநாயகி நந்தகியுடையது. நந்தகிக்கு ஆறேழு வயது இருக்கும்போது நாயகன் ஜெய்யின் ஊரில் ‌கூத்து நடத்த குடில் போடுகிறது நந்தகி குடும்பம். கூத்துக்கு தினமும் ஆஜராகி விடும் சிறுவன் ஜெய்க்கு நந்தகி மீது இனம்புரியாத ஓர் ஈர்ப்பு. பத்து நாள் கூத்து முடிவதற்குள் அது டெவலப் ஆகி, நந்தகியின் குடும்பம் நம்ம ஊரிலேயே தங்க வேண்டும் என ஊர் பெரிய மனிதரான தன் தாத்தாவிடம் சிறுவன் ஜெய் பிடிவாதம் கொள்ளும் அளவுக்கு போகிறது. பேரனின் ஆசைக்காக அன்றாடங்காய்ச்சியான கூத்து குடும்பத்திற்கு வீடு கொடுத்து வாழ்க்கை கொடுக்கிறார் தாத்தா தியோடர் பாஸ்கர். அப்புறம் ஒரு பள்ளியில் 12ம் வகுப்பு வரை படிக்கும் நந்தகியும், ஜெய்யும் இனம் புரியாத ஈர்ப்புடன் நல்ல நட்புடன் உலா வர, ஒருவழியாக 12ம் வகுப்பு ரிசல்ட் வருகிறது.

நாயகி நந்தகி ஸ்கூல் பர்ஸ்ட். தமிழ் சினிமா வழக்கம்போல நாயகன் பெயில். அப்புறம்? அப்புறமென்ன....? கோட்டாவில் நந்தகிக்கு புனே பொறியியல் கல்லூரியில் சீட் கிடைக்கிறது. சுற்றமும் - நட்பும் போதையில் உசுப்பேற்றி விட..., எங்கே நந்தகி நிரந்தரமாக தன்னை விட்டு பிரிந்து விடுவாளோ? எனும் பயத்தில் அழகான ஒரு மழைநாளில் அவரது கற்பை சூறையாடுகிறார் ஜெய். இதை சற்றும் எதிர்பார்க்காத நந்தகி சம்பவத்தினாலேயே திக்க பிரமை பிடித்தவர்போல் இருக்க... நாட்கள் நகர்கின்றன. வயிறும், வாட்டமும் காட்டிக் கொடுக்கிறது. என்ஜினியரிங் கனவு மட்டுமல்ல... தாய் - தாத்தா என எல்லாமும் தகர்ந்தும், மறைந்தும் போக., நந்தகி என்ன ஆனார்? அவருக்கு செய்த கெடுதலுக்கு ஜெய் என்ன பிரயசித்தம் செய்தார் என்பது யாராலும் யூகிக்க முடியாத வித்தியாசமும், விறுவிறுப்புமான மீதிக் கதை!

நாயகி நந்தகி, தமிழரசியாகவே வாழ்ந்திருக்கிறார். நாயகன் ஜெய்யும் சம்பந்தப்பட்ட பாத்திரமாகவே வாழ முற்பட்டிருக்கிறார். ஆனால் கூத்து கட்டும் கிராமத்து பெண்ணாக பாவாடை - சட்டையில் புதுமுகம் ‌நந்தகி ஜெயித்த அளவிற்கு ஜெய்யால், கிராமத்து பெரிய இடத்து பிள்ளையாக ஜொலிக்க முடியவில்லை. காரணம், அவரது நண்பர்கள் மாதிரி லுங்கி - சட்டையில் படத்தில் ஒரு இடத்தில்கூட ஜெய்யை பார்க்க முடியாததும், அவரது சிட்டி வாய்ஸூம்தான் என்றால் மிகையல்ல. இயக்குனர், நாயகியிடம் வாங்கிய வேலையில் கால்வாசியை நாயகனிடமும் வாங்க முற்பட்டிருக்கலாம். அட்லீஸ்ட் சதா சர்வகாலமும் பேண்ட்- சர்ட்டிலேயே திரியும் ஜெய்யை, சில சீன்களிலாவது வேட்டி, லுங்கி, முண்டா பனியன், சட்டை காஸ்ட்யூம்களில் விட்டிருக்கலாம்.

நாயகியின் தாத்தாவாக பிரபல ஓவியர் வீரசந்தானம், தாயாக என் உயிர்த்தோழன் ரமா, நாயகனின் தாத்தா பிரபல விமர்சகர் தியோடர் பாஸ்கர், நண்பர் எஸ்.எஸ்.குமரன் உள்ளிட்ட ஒவ்வொருவரும் தங்கள் பாத்திரம் உணர்ந்து பளிச்சிட்டிருக்கிறார்கள். சபாஷ்!

ஜெய்யின் காமத்தால் சுற்றம், நட்பு அத்தனையையும் இழந்து, எத்தனையோ இன்னல்களை அனுபவித்து வடக்கே எங்கோ கண்காணாத இடத்தில் விபச்சாரியாக வாழ்ந்தாலும், உன்னுடன் முதன் முதலாக இருந்த அந்த ஐந்து நிமிடம்தான் சந்தோஷம். அதை மீண்டும் தருகிறாயா? என நந்தகி க்ளைமாக்ஸில் கேட்கும்போது நம்மை அறியாமல் கண்ணீரும், நமது முதல் காதலும் ஞாபகத்திற்கு வந்து போவது படத்திற்கும், படைப்பாளிக்கும் கிடைத்த வெற்றி!

விஜய் ஆண்டனியின் இசை, முத்தையாவின் ஒளிப்பதிவு, ராஜா முகமதுவின் எடிட்டிங் என சகலமும் மீரா கதிரவனின் எழுத்திற்கும், இயக்கத்திற்கும் பக்கபலமாக படம் முழுக்க பவனி வந்திருக்கின்றன. பேஷ்...பேஷ்...!

ராமன்தேடிய சீதை, பூ போன்ற படங்களின் வரிசையில் தயாரிப்பாளர் மோசர்பியர் தனஞ்செயன் தயாரிப்பில் மீண்டும் ஒரு காவியமாக அவள் பெயர் தமிழரசி அவதரித்திருக்கிறது. ஆனால் அந்த படங்களுக்கு கிடைக்காத வெற்றி அவள் பெயர் தமிழரசிக்கு கிட்டும் என்பது திண்ணம்!

அவள் பெயர் தமிழரசி : தமிழ் சினிமா சரித்திரத்தில் ஆட்சி செலுத்தும் பேரரசி!

-----------------------------------

விகடன் விமர்சனம்

தோல்பாவைக் கூத்தினைக் கட்டிக் காப்பாற்ற விரும்பும் குடும்பத்தைச் சேர்ந்தவள் அவள்.   காலம் காதல் வடிவில் அவளின் வாழ்க்கையையும்  தோல்பாவையையும் கலைத்துச் சிதைக்கிறது "அவள் பெயர் தமிழரசி!''

கூத்து போட கிராமத்துக்கு வந்த நந்தகியோடு சிறு வயதில் இருந்தே சிநேகம் வளர்த்து, வளரவும் காதல் கொள்கிறார் கிராமத்தின் பெரிய குடும்பத்துப் பிள்ளை ஜெய்.   படித்து முன்னேறுவது மட்டுமே நந்தகியின் லட்சியமாக இருக்க, ஜெய்க்கோ படிப்பு என்றால் எட்டிக்காய். ""நந்தகி உன்னை வெறுக்காமல் இருக்க, அவளோடு கலப்பது ஒன்றுதான் வழி!'' என்று நண்பர்கள் ஞானம் புகட்ட, அதை வன்மையாகச் செயல்படுத்துகிறார். அதன் விளைவுகள் நந்தகியை எந்த எல்லைக்குத் துரத்துகிறது என்பதே மீதிக்கதை!

நசிந்து விட்ட தோல்பாவைக் கூத்தைக் கதைக் களமாகத் தேர்ந்தெடுத்ததற்காக அறிமுக இயக்குனர் மீரா கதிரவனுக்கு பெரிய சபாஷ்!

களிமண் உருண்டை மினுக்கட்டான் பூச்சிகள், ""குஜூ குஜூ வண்டி'' பாடல், குலசேகரப்பட்டின தசரா காட்சிகள் எனக் கடந்து செல்லும்  பல காட்சிகள் குறுங்கவிதைகள்.  திருநெல்வேலி வட்டார வழக்கு  இயல்பாகப் பிரதிபலித்திருப்பது அழகு.  ஆனால், பல சமயம்  காட்சிகள் உணர்த்த வேண்டியதை, வசனங்களில் கடந்து போவதும், எல்லாக் கதா பாத்திரங்களும் பேசிக் கொண்டே இருப்பதும் அலுப்பு!

ஜெய்யுடனான குறும்புச் சேட்டைகளின் போதும், தன் கர்ப்பத்துக்குக் காரணம் யார் என்று சொல்லாமல் இறுக்கமாக  அமர்ந்திருக்கும் போதும்  கவனிக்க வைக்கிறார் நந்தகி. ஆனால், பள்ளி இறுதி வகுப்பு மாணவியுடன் பொருந்திப் போகாத ஒரு முதிர்ச்சி அவர் முகத்தில்!

நெல்லை பேச்சு வழக்கு, உடல் மொழி இரண்டுமே ஜெய்யிடம்  இல்லை. தனக்கும் கதைக்கும்  சம்பந்தம் இல்லை  என்பது போல சவசவவென  வந்து போகிறார். அதிகபட்சமாகத்  தாடி மட்டும் வளர்த்துக் காதல்  சோகம் காட்டுவதோடு  அவர் பங்கு முடிந்து விடுகிறது. (அதுவும் ""கோவா'' ஸ்பெஷல்  தாடி!)  மகன் மீதான கோபமும், யாசகம் கேட்டுச் சாப்பிடும்போது பிழியும் சோகமுமாக கூத்துக் கலைஞனின் பாத்திரத்துக்குக் கச்சிதமாக உயிர் கொடுத்திருக்கிறார் வீரசந்தானம். கிராமத்துக்களம்  என்றாலும் கட்டவிழ்த்து விடாமல் "கட்டுப்பாட்டாக'' சிரிக்க வைக்கிறார் "கஞ்சா கருப்பு''.

"நாக்க முக்க'' வாடையே இல்லாத விஜய் ஆண்டனி இசை. "குஜூ குஜூ வண்டி'', "கெழக்கா மேக்கா'', "ஒத்த சொல்லு'' பாடல்களில் கிராமத்துக் கம்மாக் கரையோரம் அழைத்துச் செல்கிறார்.  பி.ஜி.முத்தையாவின் கேமரா கிளாஸிக் படங்களுக்கான  தரத்தை அளிக்கிறது, ஒவ்வொரு காட்சியிலும். ஆனால், இத்தனை ப்ளஸ்கள் இருந்தும் முழுமையான ஒரு சினிமாவாக நம்மை ஈர்க்காமல் தவிக்கிறாள் தமிழரசி. சிறு வயதில்  இருந்தே பழகிய நந்தகி மீது ஜெய்க்கு அத்தனை இறுக்கமாகக் காதல் மலரும் காட்சிகளே இல்லை. எட்டு ஆண்டுகள் பிரிந்த காதலியை ஜெய் தேடிச் செல்வது வசனங்களாக கடக்கிறதே தவிர, வலி மிகுந்த காட்சிகளாகப் பதியவில்லை. நந்தகி, ஜெய்யிடம் சொல்லாமல் சென்னைக்கு செல்வதுதான் ஜெய்யிடம் நம்பிக்கையின்மை ஏற்படுத்தி, பாலியல் மீறல் வரை செல்கிறது. ஆனால், அவர் ஏன் ஜெய்யிடம் சொல்லாமல் சென்றார் என்பதற்கான ஒரு வரிக் காரணம் கூட இல்லை.

மனதைத் தைக்க வேண்டிய ஒரு கலைப் படைப்பு, மெல்லிய தடம் பதிக்கிறது!வாசகர் கருத்து (3)

mohana - madurai,இந்தியா
30 ஜூலை, 2010 - 15:38 Report Abuse
 mohana படம் பார்த்த அனுபவம் கதை படிக்கும்போது உணர்த்தியவிதம் மிகவும் அருமை.
Rate this:
அருண் - namakkal,இந்தியா
13 ஜூலை, 2010 - 18:00 Report Abuse
 அருண் குட் movie
Rate this:
aarthi - CHENNAI,இந்தியா
17 ஜூன், 2010 - 14:28 Report Abuse
 aarthi நல்லாதான் இருக்கு .....................
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in