2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்
இயக்கம் - வம்சி பைடிபள்ளி
இசை - தமன்
நடிப்பு - விஜய், ராஷ்மிகா மந்தனா
நேரம் - 2 மணி நேரம் 50 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் இந்த வருடப் பொங்கலுக்கு விஜய் நடித்துள்ள இந்த 'வாரிசு' படம் வெளிவந்துள்ளது. இதற்கு முந்தைய படங்களில் ஆக்ஷனை மட்டுமே நம்பி களமிறங்கிய விஜய் இந்தப் படத்தில் குடும்ப சென்டிமென்ட்டை நம்பி களமிறங்கியிருக்கிறார்.

தெலுங்கு இயக்குனரான வம்சி பைடிபள்ளி தெலுங்கில் இதற்கு முன்பு வெளிவந்த சில பல படங்களின் சாயலில் ஒரு குடும்பக் கதையை எழுதி, அதில் விஜய்யின் ஹீரோயிசத்தையும் சேர்த்து இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார். விஜய்யின் முழுமையான ஆக்ஷன் இல்லை என்றாலும் அவருடைய எமோஷன் ரசிகர்களை ரசிக்க வைக்க வாய்ப்புள்ளது.

மிகப் பெரும் பிசினஸ்மேன் சரத்குமார். அவருக்கு மூன்று மகன்கள். ஸ்ரீகாந்த், ஷாம், விஜய். தன்னுடைய வாழ்க்கையை தன் விருப்பத்திற்கு வாழ நினைப்பவர் விஜய். அதனால் அப்பாவுடன் சண்டை வர வீட்டை விட்டு வெளியேறி அவருக்குப் பிடித்தமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். அப்பா, அம்மாவின் அறுபதாம் கல்யாணத்திற்காக அம்மா வற்புறுத்தலால் வீட்டிற்கு வருகிறார். அப்பா சரத்குமார் கேன்சரால் பாதிப்படைந்திருப்பதை விஜய்யிடம் மட்டும் சொல்ல, அப்பாவுக்காக அவர்களது கம்பெனி நிர்வாகப் பொறுப்பை ஏற்கிறார் விஜய். அது பிடிக்காத அவரது அண்ணன்கள் ஸ்ரீகாந்த், ஷாம் வீட்டைவிட்டு வெளியே போகிறார்கள். ஒரு பக்கம் குடும்பம் கலைய, மறுபக்கம் பிசினஸ் எதிரியான பிரகாஷ்ராஜ், சரத்குமார் பிசினஸை அழிக்க நினைக்கிறார். அவற்றை விஜய் எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

“குடும்பம்னா குறை இருக்கும்தான், ஆனா, நமக்குன்னு இருக்கிறது ஒரே ஒரு குடும்பம்தான்,” என அந்த ஒரு குடும்பத்தை எப்படி ஒற்றுமையாக வைத்துக் கொள்ள வேண்டும் எனப் போராடுகிறார் விஜய். அண்ணன்களுக்கும், ஏன் அப்பாவுக்கும் கூட குடும்பம் என்றால் என்ன என்று புரிய வைக்கிறார். குடும்ப உறவுகளைப் பற்றிய ஒரு அழுத்தமான கதையை எடுத்துக் கொண்ட இயக்குனர் மனதில் பதியும்படி கொஞ்சம் ஆழமாக, இன்னும் உணர்வுபூர்வமாகக் கொடுத்திருக்கலாம். அதற்கான பல சந்தர்ப்பங்கள் படத்தில் இருந்தும் நம்மை எந்த ஒரு காட்சியும் கலங்க வைக்கவில்லை என்பது படத்தில் பெரும் குறை.

'ஆட்ட நாயகன்' என படத்தில் இருக்கும் வசனத்திற்கேற்ப விஜய்க்கான மைதானமாக படம் முழுவதும் இருக்கிறது. ஆக்ஷன், சென்டிமென்ட், காதல், காமெடி என அவருடைய வழக்கமான ஆட்டத்தை ஆடியிருக்கிறார். அவருக்காக எழுதப்பட்ட 'பன்ச்' வசனங்கள், அவருக்காகவே உருவாக்கப்பட்ட பாடல்கள், அதற்கான நடனம், அதிரடி ஆக்ஷன் என எந்த இடத்திலும் அவர் குறை வைக்கவில்லை. ஆனால், விஜய் என்ற விராட் கோலியை வைத்துக் கொண்டு டி 20 ஆடாமல், டெஸ்ட் மேட்ச்சில் ஆட வைத்தது போன்ற ஒரு உணர்வே படம் முழுவதும் இருக்கிறது.

ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்றால் அதில் ஹீரோயின்களுக்கு வேலையில்லை என்பது இந்தப் படத்திலும் நிரூபணம் ஆகியிருக்கிறது. 'ரஞ்சிதமே' பாடலைத் தவிர ராஷ்மிகாவுக்கு படத்தில் பெரிய வேலையில்லை. ராஷ்மிகாவுக்கு மேக்கப் போட்டிருக்கிறார்களா, அல்லது சரியாகப் போடவில்லையா என்ற சந்தேகம் வருகிறது. பல காட்சிகளில் பளிச்சென இருக்காமல் டல்லடிக்கிறார்.

விஜய்யின் இரண்டு அண்ணன்களில் மூத்த அண்ணனாக தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், அடுத்த அண்ணனாக ஷாம். அப்பா நிழலில் வாழ்ந்து கொண்டு அப்பாவுக்கே குழி பறிக்கிறார்கள். விஜய்யின் அப்பாவாக சரத்குமார், அம்மாவாக ஜெயசுதா. விஜய்க்குப் பிறகு படத்தில் இவர்களுக்குத்தான் முக்கியத்துவம் அதிகம். வில்லனாக பிரகாஷ்ராஜ், பல படங்களில் பார்த்த அதே நடிப்பு. படத்தின் முதல் பாதியில் அவ்வப்போது சிரிக்க வைக்கிறார் யோகிபாபு.

தமனின் இசையில் 'ரஞ்சிதமே' பாடல் மட்டுமே படத்தோடு ஈர்க்கிறது. மற்ற பாடல்கள் சுமார் ரகமாகவே உள்ளன. பெரும் பணக்காரர் என்பதால் சரத்குமார் வீட்டை பிரம்மாண்டமான செட்டாக உருவாக்கியிருக்கிறார்கள். படம் முழுவதும் அதே வீட்டில் அதிகம் நகர்வதால் ஒரு டிவி சீரியலைப் பார்க்கும் உணர்வு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. விஎப்எக்ஸ் காட்சிகளை இவ்வளவு சுமாராக செய்திருக்க வேண்டாம். வீட்டில் நடக்கும் சில காட்சிகள் கூட விஎப்எக்ஸ் எனத் தெரிகிறது.

அவ்வளவு பெரிய குடும்பத்தில் விருந்தினர்களுக்கு முன்பாகத்தான் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்கிறது விஜய்யின் குடும்பம். பணக்காரக் குடும்பத்தின் கதை என்பதால் சாமானிய ரசிகர்களுக்கு நெருக்கமா படம் அமைய வாய்ப்பில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரப் படம். இரண்டு பாடல்களையும், சில காட்சிகளையும் தாராளமாக வெட்டி எறியலாம். விஜய் எப்படிப்பட்ட படங்களில் நடித்தாலும் பார்ப்போம் என்ற ரசிகர்களுக்கு மட்டும் படம் பிடிக்கும்.

வாரிசு - தந்தையைக் காத்த தனயன்

 

வாரிசு தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

வாரிசு

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

விஜய்

டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் - ஷோபா தம்பதியரின் மகன் நடிகர் விஜய். 1974ம் ஆண்டு ஜூன் 22ம்தேதி பிறந்த இவரது இயற்பெயர் ஜோசப் விஜய். 1984ம் ஆண்டு டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில், விஜயகாந்த் நாயகனாக நடித்த வெற்றி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதன் பின்னர் 1992ம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு படம் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார். இந்த படத்தைம் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரே இயக்கினார். ஆரம்ப காலத்தில் தந்தையின் இயக்கத்தில் நடித்து வந்த விஜய் பின்னர் துறையில் தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். விஜய்யின் ரசிகர்கள் அவரை "இளைய தளபதி" என்றும் இளைய சூப்பர்ஸ்டார் என்றம் பட்டப் பெயருடன் அழைக்கிறார்கள். பூவே உனக்காக, லவ் டூடே, ப்ரியமுடன், துள்ளாத மனமும் துள்ளும், குஷி, பிரண்ட்ஸ், கில்லி, மதுர, திருப்பாச்சி, போக்கிரி உள்ளிட்ட பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்திருக்கும் விஜய் தனது படங்களில் இடம் பெறும் ஏராளமான பாடல்களையும் பாடியிருக்கிறார்.

மேலும் விமர்சனம் ↓