தேன்,Thaen

தேன் - பட காட்சிகள் ↓

Advertisement
3

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - எபி புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - கணேஷ் விநாயகன்
இசை - சனத் பரத்வாஜ்
நடிப்பு - தருண்குமார், அபர்ணதி
வெளியன தேதி - 19 மார்ச் 2021
நேரம் - 1 மணி நேரம் 44 நிமிடம்
ரேட்டிங் - 3/5

சினிமாவில் கதைக்களம் என்பது ஒரு படத்திற்கு அச்சாணி போல. சொல்ல வரும் கதையை சமயங்களில் அந்த கதைக்களம் சரியாக அமைந்தால் அதுவே படத்திற்கான பாதி வெற்றியைக் கொடுத்துவிடும்.

தமிழ் சினிமாவில் மலைக்கிராம மக்களின் வாழ்வியல், அவர்களது பிரச்சினைகளை, துயரங்களை அவ்வப்போது சில படங்களில் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்கள் சில இயக்குனர்கள்.

கும்கி, மேற்குத் தொடர்ச்சி மலை போன்ற சில படங்கள் அழுத்தமான தடத்தையும் பதித்துவிட்டுச் சென்றிருக்கின்றன. அந்த வரிசையில் இந்த தேன் படமும் ஒரு மலைக்கிராம படமாக வந்திருக்கிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் சிறு கிராமம் ஒன்றில் தேன் எடுப்பதைத் தொழிலாக வைத்திருப்பவர் தருண்குமார். பக்கத்து கிராமத்தில் உள்ள நாயகி அபர்ணதியின் அப்பா உடல்நலனுக்காக தேன் எடுத்து வந்து தருகிறார். அந்தப் பழக்கத்தில் அபர்ணதியும், தருணும் காதலர்களாகிறார்கள். ஊர் வழக்கப்படி வாழை மட்டையை சரி பாதியாகக் கிழித்தால் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால், மட்டை அப்படிக் கிழியவில்லை. அதனால், ஊர்க்காரர்கள் திருமணத்திற்கு சம்மதம் சொல்லவில்லை. இருந்தாலும் அதையும் மீறி தருணும், அபர்ணதியும் திருமணம் செய்து கொள்கிறார்கள். அவர்களுக்கு மகளும் பிறக்கிறாள். பின்னர் கடும் வயிற்றுவலியால் அவதிப்படுகிறார் அபர்ணதி. மனைவிக்கு சிகிச்சை அளிக்க மலைக்கிராமத்தை விட்டு கீழே ஊருக்கு வருகிறார் தருண். ஆனால், அதிகார வர்க்கம் அவரை அலைக்கழிக்கிறது. மனைவிக்கு சிகிச்சை அளித்தாரா, அபர்ணதி நலமடைந்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

பேரழகுடன் இருக்கும் மலைக்கிராமத்தில் அந்த மண்ணின் மைந்தர்களாய் வாழும் மக்கள் சில பல பிரச்சினைகளைத் தாங்கிக் கொண்டுதான் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கான உண்மையான நலத்திட்டங்களைக் கொடுக்காமல் தனியார் நிறுவனங்களுக்காக செயல்படும் அதிகார ஆட்களை படத்தின் ஆரம்பத்தில் தட்டிக் கேட்கிறது படம். அதன்பின் காதல் கதையாகக் கொஞ்சம் நகர்ந்து மீண்டும் ஒரு அப்பாவி மனிதன் அவனுக்காக நலத்திட்டங்களைப் பெற எப்படி அலைகிறான் என மீண்டும் இந்த சமூகத்தில் சாமானியனுக்கு உள்ள வலிகளைச் சொல்கிறது படம். இயக்குனர் கணேஷ் விநாயகன் ஒரு அப்பாவி மனிதனின் வாழ்க்கையில் உள்ள சில பல பிரச்சினைகளை யதார்த்தமான பதிவாக இந்தப் படத்தில் கொடுத்திருக்கிறார்.

சில படங்களில் வில்லனாக நடித்த தருண் குமார் இப்படத்தில் கதாநாயகனாக உயர்வு பெற்றுள்ளார். அப்பாவி மலைக்கிராமத்து மனிதராக இயல்பாகப் பொருந்திப் போகிறார். இடைவேளைக்குப் பின்தான் அவருக்கு நடிக்க நல்ல வாய்ப்பு. மனைவியை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று அவர் அனைத்து கஷ்டங்களையும் தாங்கிக் கொண்டு அலையும் போது நம் அனுதாபத்தை அள்ளிக் கொள்கிறார்.

காதலியாக இருக்கும் போதும் சரி, மனைவியாக மாறும் போதும் சரி, அம்மாவான பின்பும் சரி அபர்ணதி அந்தந்த காலகட்டத்திற்கத் தேவையான பொருத்தமான நடிப்பை வழங்கியிருக்கிறார். இந்தக் காலத்து இளம் நாயகியர் இப்படியான கதாபாத்திரங்களில் நடிப்பது ஆச்சரியம்தான். கதையும், கதையில் தன் கதாபாத்திரத்திற்கு இருக்கும் முக்கியத்துவத்தையும் உணர்ந்து நடித்திருக்கிறார்.

மற்ற கதாபாத்திரங்களில் சூப்பர் குட் லட்சுமண் முக்கியத்துவம் பெறுகிறார். எங்கிருந்தோ வந்த தருண் குமாருக்குத் தேவையான ஆவணங்களைப் பெற்றுத்தர உதவியாக இருந்து மனதில் இடம் பிடிக்கிறார். மக்களுக்கு சேவை செய்வதாகச் சொல்லி அவர்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் இடைத்தரகராக அருள்தாஸ், நாயகி அபர்ணதியின் அப்பாவாக தேவராஜ் அவரவர் கதாபாத்திரத்தில் இயல்பாய் நடித்திருக்கிறார்கள். வாய் பேச முடியாத தருண், அபர்ணதியின் குழந்தையும் சில காட்சிகளில் அழ வைத்துவிடுகிறார்.

மலைக்கிராமங்களின் அழகை தன் காமிராவுக்குள் அப்படியே பதித்திருக்கிறார் சுகுமார். குரங்கணி தீ விபத்து நடந்த பகுதிகளில்தான் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது என்கிறார்கள். பேரழகிலும் இயற்கையின் ஆபத்து எப்படியெல்லாம் வருகிறது என்பதை நினைக்கும் போது பதைபதைப்பு வருகிறது. சனத் பரத்வாஜின் பின்னணி இசை உணர்வுபூர்வமான காட்சிகளில் கூடுதல் பலத்தைக் கொடுக்கிறது.

மலையை விட்டு கதை கீழே வந்ததும் கொஞ்சம் தடுமாற ஆரம்பிக்கிறது. அடையாள அட்டைகளை வாங்க கதாநாயகன் அலைவதையும், ஒவ்வொரு அட்டையை வாங்க எவ்வளவு சிரமப்படுகிறார் என்பதைக் காட்டுவதிலும் கொஞ்சம் டாகுமென்டரி உணர்வு வந்துவிடுகிறது. ஆனாலும், முடிவில் நாட்டில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை வைத்து கிளைமாக்ஸ் காட்சியை அமைத்திருப்பது கண்ணீர் வரவழைத்துவிடும்.

தேன் - ருசி

 

தேன் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

தேன்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓