பட்டாஸ்,Pattas

பட்டாஸ் - பட காட்சிகள் ↓

Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

நடிப்பு - தனுஷ், சினேகா, மெஹ்ரின்
தயாரிப்பு - சத்ய ஜோதி பிலிம்ஸ்
இயக்கம் - ஆர்.எஸ்.துரை செந்தில்குமார்
இசை - விவேக் மெர்வின்
வெளியான தேதி - 15 ஜனவரி 2020
நேரம் - 2 மணி நேரம் 22 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

தமிழ் சினிமாவில் இன்னும் சொல்லப்படாத களங்கள், கதைகள் பல இருக்கின்றன. அப்படி சொல்லப்படாதவற்றைத் தேடிப் பிடித்து, களங்களாக்கி, கதைகளாக்கி புதிய விஷயங்களைச் சொல்ல சில இயக்குனர்கள் ஆசைப்படுகிறார்கள். அவர்களில் ஒருவராக இப்படத்தின் இயக்குனர் துரை செந்தில்குமார் இருக்கிறார்.

தமிழ்நாட்டின் பாரம்பரியத் தற்காப்புக் கலையான அடிமுறை என்ற சண்டை முறையை கதையின் மையமாக வைத்திருக்கிறார் இயக்குனர். இதிலிருந்து பிரிந்தது தான் டேக்வோன்டோ, கராத்தே, குங்பூ போன்ற கலைகள். கையாலும், காலாலும் எதிராளியைத் தாக்கி வீழ்த்தும் சண்டை முறைதான் அடிமுறை. இப்படி ஒரு கலை இருக்கிறது என்பது இந்தப் படத்தைப் பார்த்த பிறகுதான் பலருக்கும் தெரிய வரும். அதற்காக இயக்குனருக்கு சிறப்புப் பாராட்டு.

ஒரு வெள்ளைக்காரனைக் கொன்றதற்காக கேரளாவில் உள்ள சிறையில் தள்ளப்படுகிறார் சினேகா. தன் கணவன், மகன் இழந்த சோகத்தில் சிறையில் தன் வாழ்க்கையைப் பல வருடம் கழித்து விடுதலையாகிறார். விடுதலையானதும், சென்னைக்கு வந்து நவீன் சந்திராவைக் கொல்ல முயற்சிக்கிறார். அப்போது தனுஷைப் பார்க்கிறார். பார்ப்பதற்கு தன் கணவன் முக ஜாடையில் இருக்கும் தனுஷ் தான் தன் மகன் என்பதைக் கண்டுபிடிக்கிறார். இறந்ததாக நினைத்த தன் மகன் உயிரோடு இருப்பதில் அவருக்கு மகிழ்ச்சி. மகனிடம் தான் சிறை சென்றதைப் பற்றியும், தனது கணவன் கொல்லப்பட்டது பற்றியும் தெரிவிக்கிறார். நவீன் சந்திராவை ஏன் கொல்ல வந்தேன் என்பதையும் சொல்கிறார். அதன் பின், என்ன நீங்கள் யூகிப்பது சரிதான், அப்பா தனுஷைக் கொன்ற நவீன் சந்திராவைப் பழி வாங்க மகன் தனுஷ் துடிக்கிறார். அதுதான் படத்தின் கதை.

காலம் காலமாக நாம் பார்த்து வரும் பழி வாங்கல் கதைதான். இருந்தாலும் அடிமுறை என்ற கலையை மையப்படுத்தி எடுத்திருப்பதால் கொஞ்சம் புதிதாக ரசிக்கத் தோன்றுகிறது. பிளாஷ்பேக் காட்சிகளை பிரமாதமாக எடுத்திருக்கும் இயக்குனர், நிகழ்கால கதையிலும் கொஞ்சம் அழுத்தத்தைக் கூட்டியிருந்தால் பட்டாஸ் பயங்கரமாய் வெடித்திருக்கும்.

அசுரன் படத்தில் அப்பா கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய தனுஷ், இந்தப் படத்திலும் அப்பா கதாபாத்திரத்தில் தான் நம் மனதில் அழுத்தமாய் அடம் பிடிக்கிறார். சந்தனமும், குங்குமமும் கலந்து வைத்த பொட்டு, வேட்டி சட்டை, முறுக்கு மீசை, தாடி அடிமுறையின் அடவு என திரவியப்பெருமான் கதாபாத்திரத்தில் திடகாத்திரமாய் நடித்திருக்கிறார். மகன் பட்டாஸ் என்கிற சக்தி கதாபாத்திரம் வழக்கமான தனுஷ். திருடிக் கொண்டு ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார். அம்மா சினேகாவைச் சந்தித்த பின் மாறி, அடிமுறை கற்று அடி பின்னி எடுக்கிறார்.

படத்தின் கதாநாயகி என மெஹ்ரின் பிர்சதாவைச் சொல்வதை விட சினேகாவைத்தான் கதாநாயகி என சொல்ல வேண்டும். பிளாஷ்பேக் காட்சிகளில் அவ்வளவு அழகாக இருக்கிறார். ஆச்சரியப்படும் அளவிற்கு அடிமுறை சண்டை போடுகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சினேகாவிற்கு மனதில் பதியும்படியான ஒரு கதாபாத்திரம்.

பெயருக்கு ஒரு நாயகி வேண்டும் என்பதற்காக மெஹ்ரின். தனுஷுக்குப் பொருத்தமில்லாத ஒரு ஜோடி. ஏதோ நடிக்க முயற்சித்திருக்கிறார். கதாநாயகி என்பதற்காக இவருக்கு ஒரு டூயட்டாவது வைத்திருக்கலாம்.

வில்லனாக நவீன் சந்திரா. பிளாஷ்பேக்கில் அப்பாவால் உதாசீனப்படுத்தப்படும் ஒரு கதாபாத்திரம். பெற்ற அப்பாவையே கொல்வதெல்லாம் டூ மச். இவரின் அப்பாவாக அடிமுறை கற்றுத்தரும் ஆசான் ஆக நாசர். வழக்கம் போல் கதாபாத்திரத்திற்குள் அப்படியே செட்டாகிவிடுகிறார்.

கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் இருந்து வந்துள்ள சதீஷ். ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார். முயன்றால் முன்னுக்கு வரலாம். பல இளம் திறமைசாலிகளை அடையாளப்படுத்தி அழைத்து வருகிறார் தனுஷ்.

விவேக் மெர்வின் இசை இந்தப் படத்திற்கப் பொருத்தமில்லாமல் இருக்கிறது. கிராமிய வாசம் தெரிந்தவர்கள் இம்மாதிரியான படங்களுக்கு இசையமைப்பது நல்லது. ஆரம்பத்தில் சில் ப்ரோ பாடுகிறார் தனுஷ். அதன் பின் ஜிகிடி கில்லாடி என அனிருத் பாடுகிறார். இந்தப் பாடல்கள் எல்லாம் கதையுடன் ஒட்டவேயில்லை. பிளாஷ்பேக்கிலாவது மண் மணத்துடன் ஒரு பாடலை அழுத்தமாய் பதிவிட்டிருக்கலாம்.

அடிமுறைப் பயிற்சி பெறும் அரங்கு பிரம்மாண்டமாய் அமைந்துள்ளது. அதற்காக கலை இயக்குனரைப் பாராட்ட வேண்டும். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் கிராமமும், நகரும் அதனதன் தன்மையுடன் தெரிகின்றன.

இடைவேளைக்கு முன்பாகவே படம் இப்படித்தான் நகரப் பேகிறது என்பது தெரிந்துவிடுகிறது. பின்னர் வரும் பிளாஷ்பேக் காட்சிகள் கொஞ்சம் நீளம் என்றாலும் ரசிக்க வைக்கின்றன. கிளைமாக்ஸ் இப்படித்தான் முடியும் என்பது ஏற்கெனவே பல தமிழ் சினிமாக்களில் நாம் பார்த்தவைதான். கதைக் களத்தை புதிதாக யோசித்த அளவிற்கு திரைக்கதையையும் யோசித்திருக்கலாம்.

பட்டாஸ் - சாதா வெடி

 

பட குழுவினர்

பட்டாஸ்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

தனுஷ்

டைரக்டர் கஸ்தூரி ராஜாவின் 2வது மகன்தான் தனுஷ். 1983, ஜூலை 28ம் தேதி பிறந்த இவரது நிஜப்பெயர் வெங்கடேஷ் பிரபு. இவரது அண்ணன் செல்வராகவன் திரைக்கதையில் அப்பா கஸ்தூரி ராஜா இயக்கத்தில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அந்த படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து செல்வராகவனின் இயக்கத்தில் நடித்த காதல் கொண்டேன் படமும் சூப்பர் ஹிட் ஆனது. இதனைத் தொடர்ந்து நடித்த திருடா திருடி, தேவதையை கண்டேன், சுள்ளான், திருவிளையாடல் ஆரம்பம், குட்டி, பொல்லாதவன், உள்ளிட்ட படங்களின் மூலம் முன்னணி நடிகர் அந்தஸ்துக்கு உயர்ந்தார். இரண்டு தேசிய விருது வென்றுள்ள தனுஷ் தமிழ் சினிமா மட்டுமல்லாது ஹிந்தி சினிமா, ஹாலிவுட் படத்திலும் முத்திரை பதித்துள்ளார்.

மேலும் விமர்சனம் ↓