தம்பி,Thambi

தம்பி - பட காட்சிகள் ↓

தம்பி - சினி விழா ↓

Advertisement
2

விமர்சனம்

Advertisement

நடிப்பு - கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ், நிகிலா விமல்
தயாரிப்பு - வியாகாம் 18, பேரலல் மைன்ட்ஸ்
இயக்கம் - ஜீத்து ஜோசப்
இசை - கோவிந்த் வசந்தா
வெளியான தேதி - 20 டிசம்பர் 2019
நேரம் - 2 மணி நேரம் 29 நிமிடம்
ரேட்டிங் - 2/5

தமிழ் சினிமா ரசிகர்கள் சில மலையாளப் படங்களையும், சில மலையாள இயக்குனர்களையும் பார்த்து பிரமித்து ரசித்திருக்கிறார்கள். அவர்கள் தமிழில் வந்து படம் பண்ண மாட்டார்களா என்று எதிர்பார்த்திருக்கிறார்கள்.

மலையாளத்தில் 2013ல் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற படம் 'த்ரிஷ்யம்'. அந்தப் படம்தான் தமிழில் கமல்ஹாசன் நடிக்க 'பாபநாசம்' என்ற பெயரில் ரீமேக் ஆகி வெற்றி பெற்றது. தெலுங்கு, ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது.

ஒரு அழகான நடுத்தரக் குடும்பத்தில் உள்ள அம்மாவும், அவரது மகளும் தங்கள் குடும்ப மானத்தைக் காக்க ஒருவனைக் கொலை செய்துவிடுவார்கள். அந்தக் கொலையை மறைக்க குடும்பத் தலைவர் திட்டப்படி போலீசிடம் எப்படி சிக்காமல் தப்பிப்பார்கள் என்பதுதான் அந்தப் படத்தின் கதை.

அந்த 'த்ரிஷ்யம்' கதையையே வேறு ஒரு கோணத்தில் யோசித்து இந்த 'தம்பி' படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஜீத்து ஜோசப். அவரின் முதல் நேரடித் தமிழ்ப் படம் இது. இப்படி ஒரு படத்தை அவரிடமிருந்து தமிழ் ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசியல்வாதி சத்யராஜ். மனைவி சீதா, மகள் ஜோதிகாவுடன் வசித்து வருகிறார். அவரது மகன் 15 வருடங்களுக்கு முன்பு காணாமல் போய்விடுகிறார். அந்த மகன் கோவாவில் இருப்பதாகத் தகவல் வர கோவாவிற்குச் சென்று அவரை அழைத்து வருகிறார். அவர் தான் கார்த்தி. ஆனால், கார்த்தி பணத்திற்காக எதையும் செய்யும் ஒரு பிராடு. திட்டமிட்டே தன்னை சத்யராஜ் மகன் என ஏமாற்றித்தான் அந்தக் குடும்பத்திற்குள் நுழைகிறார். ஒரு கட்டத்தில் கார்த்தியை யாரோ கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். எதற்காக அந்த கொலை முயற்சி, அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

'கைதி' மாதிரி ஒரு தரமான படத்தில் நடித்துவிட்டு, இப்படி ஒரு கதையையும், கதாபாத்திரத்தையும் கார்த்தி எப்படி தேர்வு செய்து நடித்தார் என்பது அதிர்ச்சியாக உள்ளது. அவருக்கு இந்த பிராடு கதாபாத்திரத்தில் நடிக்கவும் வரவில்லை. 'சிறுத்தை' படத்தில் அம்மாதிரியான கதாபாத்திரத்தில் தான் நடித்திருப்பார். அந்த நடிப்பில் கால்வாசி கூட இந்தப் படத்தில் இல்லை. என்ன ஆச்சு கார்த்தி?.

கார்த்தியின் அக்காவாக ஜோதிகா. படம் வெளிவருவதற்கு முன்பு 'தம்பி' என தலைப்பு வைத்ததால் அக்கா ஜோதிகா கதாபாத்திரம்தான் படத்தில் வெயிட்டான கதாபாத்திரமாக இருக்கும், நடிப்பில் மிரட்டியிருப்பார் ஜோதிகா என்று எதிர்பார்த்தால், அக்கா கதாபாத்திரத்தில் அம்சமான விஷயங்கள் என ஒன்று கூட இல்லை.

கார்த்தியின் அரசியல்வாதி அப்பாவாக சத்யராஜ். வில்லத்தன நடிப்பை விட்டு சத்யராஜ் எப்போதோ மாறிவிட்டார். இந்தப் படத்தில் திடீரென கொஞ்சம் வில்லனாகவும் மாறுகிறார். எதிர்பாராத ஒரு திருப்பம் அது. ஆனால், அது அழுத்தமாகச் சொல்லப்படவில்லை.

கார்த்தியின் காதலியாக நிகிலா விமல். ஓரளவிற்கு குழப்பமில்லாமல் தன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் இவர் மட்டுமே என்று சொல்லலாம். ஆனால், திடீரென காணாமல் போய் பின்னர் என்ட்ரி கொடுக்கிறார்.

கார்த்தியன் பாட்டியாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு சௌகார் ஜானகி. எதுவும் பேசாமல் பார்வையிலேயே மிரட்டுகிறார். தமிழை விட்டு மலையாளப் பக்கம் சென்று விட்டதால் பாலா பேச்சில் கூட மலையாள வாடை அடிக்கிறது.

படத்திற்கு கோவிந்த் வசந்தா இசை என டைட்டிலில் வருகிறது. '96' படத்திற்கு இசையமைத்தவரா என அதிர்ச்சியடைய வைக்கிறார். பாடல்களில் மலையாள வாடை தூக்கலாக இருக்கிறது.

இரண்டரை மணி நேரப் படத்தில் கடைசி பதினைந்து நிமிடங்கள் மட்டுமே எதிர்பாராத விதமாகவும், பரபரப்பாகவும் அமைந்துள்ளது. அந்த பதினைந்து நிமிடங்களுக்காக இரண்டே கால் மணி நேரத்தை பொறுமையுடன் பார்த்து ரசிக்க ஒரு தைரியம் வேண்டும்.

தம்பி - கம்பி

 

தம்பி தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

தம்பி

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

கார்த்தி

நடிகர் சிவக்குமாரின் இளைய வாரிசு கார்த்தி. 1977ம் ஆண்டு, மே 25ம் தேதி பிறந்த கார்த்தி, அமெரிக்காவில் இன்ஜினியரிங் படித்தவர். அப்படிப்பட்டவர் பருத்தி வீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல்படத்திலேயே கிராமத்து முரட்டு இளைஞனாக அனைவரையும் கவர்ந்த கார்த்தி, தொடர்ந்து பையா, சிறுத்தை போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறார். 2011ம் ஆண்டு, ஈரோட்டை சேர்ந்த ரஞ்சனி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் நடித்து வருகிறார் கார்த்தி.

மேலும் விமர்சனம் ↓