நம்ம வீட்டுப் பிள்ளை,Namma Veettu Pillai

நம்ம வீட்டுப் பிள்ளை - பட காட்சிகள் ↓

Advertisement
3

விமர்சனம்

Advertisement

நடிப்பு - சிவகார்த்திகேயன், அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ்
இயக்கம் - பாண்டிராஜ்
இசை - இமான்
வெளியான தேதி - 27 செப்டம்பர் 2019
நேரம் - 2 மணி நேரம் 33 நிமிடம்
ரேட்டிங் - 3/5

அண்ணன், தங்கை பாசக் கதைகளை எத்தனை படங்களில் பார்த்தாலும் அதை சொல்ல வேண்டிய விதத்தில் சொன்னால் ரசிக்கலாம். இந்த அண்ணன், தங்கை பாசக் கதையில் அப்படி சொல்லியிருக்கிறாரா பாண்டிராஜ்?.

கடைக்குட்டி சிங்கம் படத்திற்குப் பிறகு பாண்டிராஜ் மீண்டும் ஒரு குடும்பக் கதையை, அதுவும் பெரிய குடும்பக் கதையை படமாக்க உள்ளார் என்றதும் மீண்டும் என்ன புதிதாக சொல்லப் போகிறார் என யோசித்திருப்போம்.

இந்தப் படத்தில் அப்பா இல்லாத மகனின் பாசத்தையும், அவன் தன்னுடன் பிறக்காத தங்கை மீது வைத்திருக்கும் பாசத்தையும் அங்கங்கே, நெகிழ வைக்கும் விதத்தில் சொல்லியிருக்கிறார் பாண்டிராஜ்.

சிவகார்த்திகேயன் சிறு வயதிலேயே அப்பாவை இழந்தவர். அம்மா அர்ச்சனா, தங்கை ஐஸ்வர்யா ராஜேஷ் என ஒருவர் மீது மற்றவர் பாசமாக இருக்கும் குடும்பம். பெரியப்பா வேலராமமூர்த்தி, சித்தப்பா சுப்புபஞ்சு ஆதரவில்லாமலேயே தங்கை ஐஸ்வர்யாவை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க நினைக்கிறார். நிச்சயதார்த்தம் மேடை ஏறாமலேயே ஐஸ்வர்யாவின் திருமணம் தடைபட்டு நிற்கிறது. அவரைத் திருமணம் செய்து கொள்கிறார் ஊரில் ரவுடித்தனமாகத் திரியும் நட்டி. சிவகார்த்திகேயனுடன் தனக்கிருக்கும் முன் பகையால் ஐஸ்வர்யாவைக் கொஞ்சம் கொடுமைப்படுத்துகிறார். ஒரு கொலை வழக்கில் நட்டி சிக்கிக் கொள்ள அவரை காப்பாற்ற சிவகார்த்திகேயன் முயற்சிக்கிறார். அது நடந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

கிராமத்துக் கதை என்றாலே அதற்குள் வந்து மிகச் சரியாகப் பொருந்தி விடுகிறார் சிவகார்த்திகேயன். வழக்கமாக கிராமத்து இளைஞன் அறிமுகமாகும் கபடி விளையாட்டில் அரும்பொன் ஆக வந்து அறிமுகமாகிறார். அப்பா இல்லாத மனக்குறை, அம்மா வருத்தப்படக் கூடாது என்ற கவனம், தங்கை மீது அளவு கடந்த பாசம், அண்ணன் சூரி மீது கிண்டல் செய்யாத மரியாதை என நம்ம வீட்டுப் பிள்ளையாக பாசமழை பொழிகிறார். மிஸ்டர் லோக்கல் ஆக நடிப்பதை விட நம்ம வீட்டுப் பிள்ளை கதாபாத்திரத்தில் நடிப்பதுதான் அவருக்கும் பொருத்தமாக இருக்கிறது.

நாயகி அனு இம்மானுவேலுக்கு சிவகார்த்திகேயனைக் கிண்டல் செய்து கொண்டே காதலிப்பது மட்டுமே வேலை. அதைக் கடைசி வரை சரியாகச் செய்கிறார்.

அண்ணன் சொல்வதை எதற்குக் கேட்க வேண்டும் என்று கேள்வி கேட்கும் பாசமான தங்கை ஐஸ்வர்யா ராஜேஷ். உடன் பிறக்காத அண்ணன் மீதும், பெற்றெடுக்காத தாய் அர்ச்சனா மீதும் பாசமோ பாசம் வைத்திருப்பவர். தனக்காக அண்ணன் திருமணம் தள்ளிப் போகக் கூடாது என்பதற்காக அவர் நல்லவர் என நினைக்கும் நட்டியைத் திருமணம் செய்து கொண்டு தத்தளிக்கிறார். தமிழ் சினிமாவில் ஒரு தங்கை என்னவெல்லாம் செய்வோரோ அது அத்தனையையும் அப்படியே செய்கிறார்.

சிவகார்த்திகேயனுடன் நடிப்பது என்றால் சூரிக்கு காமெடி சூப்பராக வந்துவிடுகிறது. இந்தப் படத்தில் சூரியின் மகனாக நடித்திருக்கும் இயக்குனர் பாண்டிராஜ் மகன் சிவா, சூரியுடன் ஏட்டிக்குப் போட்டியாக கவுண்ட்டர் அடித்து காமெடி பண்ணுகிறார். பல காட்சிகளில் அந்தச் சிறுவன் கைத்தட்டலை அள்ளிக் கொள்கிறார்.

நட்டி தான் படத்தின் வில்லன். கிராமத்தில் பார் வைத்து நடத்திக் கொண்டிருப்பவர். மாமா ஆடுகளம் நரேனுக்காக அடியாள் வேலை பார்ப்பவர். ரவுடித்தனமான ஒரு கதாபாத்திரம். திடீரென ஐஸ்வர்யா ராஜேஷைக் கல்யாணம் பண்ண சம்மதித்து ஆச்சரியப்பட வைக்கிறார். வில்லனாக களமிறங்கினாலும் நட்டியின் நடிப்பு கெட்டிதான்.

சிவகார்த்திகேயன் தாத்தாவாக பாரதிராஜா. அவ்வப்போது அனுபவப் பாடங்களை வசனங்களாக அவிழ்த்துவிடுகிறார். சொந்தத்துகிட்டயே தோத்து போகணும்னு நினைக்கிறவனை யாராலயும் ஜெயிக்க முடியாது என்ற அவரது வசனத்தில் அவ்வளவு உண்மைகள்.

வேலராமமூர்த்தி, சுப்பு பஞ்சு, சண்முகராஜன், ஆடுகளம் நரேன், ரமா, அர்ச்சனா, மைனா, அருந்ததி, ஷீலா என மற்ற கதாபாத்திரங்களில் பல நடிகர்கள், நடிகைகள். ஒவ்வொருவருக்கு ஒரிரு காட்சிகளில் தனி முத்திரை பதிக்க சில காட்சிகளைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர். யோகி பாபு, திடீரென வக்கிலாக வருகிறார்.

பிளாஷ்பேக்கில் சிவகார்த்திகேயன் அப்பாவாக சமுத்திரக்கனி. அவரது நெருங்கிய நண்பராக ஆர்.கே.சுரேஷ். நீட்டி முழக்காத சீக்கிரமே முடிக்கப்பட்ட பிளாஷ்பேக். சினிமாவுக்குரிய அத்தனை இலக்கணங்களுடன் இருக்கிறது.

இமான் இசையில் எங்க அண்ணன், காந்தக் கண்ணழகி பாடல்கள் ரிபீட் கேட்க வைக்கும். பின்னணி இசையில் ஏற்கெனவே கேட்ட சில இசைகளைக் கேட்பது போல ஒரு உணர்வு.

படத்தில் தனித் தனியாக ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வடிவமைப்பும் சிறப்புதான். ஆனால், படத்தின் அண்ணன், தங்கை பாசத்தை அழுத்தமாக வெளிப்படுத்தும் காட்சிகள் ஆரம்பத்திலேயே இல்லை. ஒரு பாடலில் மட்டுமே அவர்களின் பாசத்தை வெளிப்படுத்திவிட்டு போதும் என்று விட்டுவிட்டார்கள் போலும். அதிலும் அது வளர்த்த தங்கை என்று தெரிய வரும் போது அந்த சோகத்தை நாம் உணரும் அளவிற்கு, முன்னதாக இரண்டு மூன்று காட்சிகளை கண்கலங்க வைக்கும் அளவிற்கு வைத்திருக்க வேண்டாமா ?.

சிவகார்த்திகேயன், நட்டி இருவருக்கும் இடையில் நேரடியாக எந்தப் பகையும் இல்லை. நட்டி அவரது மாமாவுக்காகத்தான் இறங்கி வேலை செய்கிறார். மாமாவை சிவகார்த்திகேயன் தொழில் செய்ய விடாமல் தடுக்கிறார் என்பதற்காக அவருடைய தங்கையைத் திருமணம் செய்து பழி வாங்க நினைப்பது சுற்றி வளைத்து செய்கை செய்ய முயற்சிப்பதாக உள்ளது.

இடைவேளைக்குப் பின் காட்சிகள் சட், சட்டென்று நகர்ந்து சீக்கிரமே முடிவுக்கு வருகிறது. இடைவேளைக்கு முன்பாக ஐஸ்வர்யாவுக்கு சடங்கு செய்யும் காட்சி, பாடல் ஆகியவற்றைத் தவிர்த்துவிட்டு, அதற்குப் பதில் சிவகார்த்திகேயன் குடும்பம் அவர்களது பங்காளி குடும்பங்களால் தனித்துவிடப்பட்டதைக் காட்டியிருந்தால், கிளைமாக்சில் அவர்களிடம் சிவகார்த்திகேயன் பேசும் அப்பா இல்லாத வசனத்திற்கு பெரும் அழுத்தம் கிடைத்திருக்கும்.

சில பல குறைகள் இருந்தாலும் நம்ம வீட்டுப் பிள்ளை என்ன தவறு செய்தாலும் விட்டுக் கொடுக்க மாட்டோம். தவறுகளைச் சுட்டிக் காட்டுவோம். கடைக்குட்டி சிங்கம் போல கட்டி அணைத்து கொஞ்ச முடியவில்லை என்றாலும்.....

நம்ம வீட்டுப் பிள்ளை - கிள்ளி கொஞ்சலாம்...

 

நம்ம வீட்டுப் பிள்ளை தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

நம்ம வீட்டுப் பிள்ளை

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓