3.25

விமர்சனம்

Advertisement

நடிப்பு - சிவகார்த்திகேயன், அர்ஜுன், கல்யாணி
தயாரிப்பு - கேஜேஆர் ஸ்டுடியோஸ்
இயக்கம் - பி.எஸ்.மித்ரன்
இசை - யுவன்ஷங்கர் ராஜா
வெளியான தேதி - 20 டிசம்பர் 2019
நேரம் - 2 மணி நேரம் 44 நிமிடம்
ரேட்டிங் - 3.25/5

தமிழ் சினிமாவில் வரும் ஒவ்வொரு ஆக்ஷன் படமுமே சூப்பர் ஹீரோ படங்கள் தான். எந்த ஒரு மாஸ்க் அணியாமல் அவர்கள் திரையில் புரியும் சாகசங்கள் ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்கள் செய்வதை விட அதிகமாகவே இருக்கும்.

உண்மையில் ஹீரோ என்றால் யார் என்பதற்கு இந்தப் படத்தில் ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார் இயக்குனர் பி.எஸ்.மித்ரன். சுயமாக சிந்திக்கத் தெரிந்த ஒவ்வொருவரும் ஹீரோ தான் என்கிறார்.

நம் நாட்டில் இருக்கும் கல்வி முறை குளறுபடிகளை சொல்லியிருக்கும் படம் இது. வீட்டில் மாணவ, மாணவிகளின் பாடப் புத்தகங்களைப் பார்ப்பதை விட அவர்கள் ரப் நோட்ஐப் பார்த்து அவர்கள் அதில் என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து அதற்கேற்றபடி அவர்களைப் படிக்க வையுங்கள் என்கிறார் இயக்குனர்.

அந்த ரப் நோட்டில்தான் அவர்கள் கனவுகள் இருக்கும், அவர்கள் லட்சியம் இருக்கும். அதைப் புரிந்து கொண்டு மார்க் என்பதை மட்டும் பார்க்காமல் அவர்களிடம் மாற்றத்தைக் கொண்டு வாருங்கள் என்கிறார்.

இங்குள்ள சிஸ்டம் சரியில்லை என சிவகார்த்திகேயனை வைத்து வசனம் பேச வைத்திருக்கும் இயக்குனர் பல இடங்களில் வசனங்களாலும் சில அரசியல் பேசியிருக்கிறார்.

12வது வகுப்பில் மாவட்டத்தில் முதல் மாணவனாகத் தேர்வாகியும், அப்பாவின் உயிரைக் காப்பாற்ற தன் சான்றிதழை விற்கிறார் சிவகார்த்திகேயன். அப்படிப்பட்டவர் சென்னை வந்து, போலி சான்றிதழ்களை அச்சடித்தும், கல்லூரிகளுக்கு மாணவர்களைப் பிடித்துக் கொடுக்கும் ஏஜன்ட் ஆகவும் வேலை பார்க்கும் ஒரு பிராடு. அந்த பிராடு எப்படி சூப்பர் ஹீரோ ஆகிறார் என்பதுதான் படத்தின் கதை.

வழக்கம் போல் நம்ம வீட்டுப் பிள்ளை கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன். ஏழை குடும்பத்து மாணவன், அப்பா உயிரைக் காப்பாற்ற சான்றிதழை விற்று அவரைப் பிழைக்க வைத்து தன் பிழைப்பை கெடுத்துக் கொள்பவர். பின்னர் அதே சான்றிதழ்களை அச்சடித்துக் கொடுத்து பிழைப்பு நடத்துகிறார். மதிப்பெண்கள் மட்டுமே ஒருவருக்கான மதிப்பீடு இல்லை, அவர்களது திறமைதான் அவர்களின் மதிப்பீடு என்பதை மற்றவர்களுக்கும் உணர வைக்கும் ஒரு கதாபாத்திரம். அதற்காக சூப்பர் ஹீரோவாக மாறித்ததான் அதைச் செய்ய வேண்டும் என்பதில்லை. சாமானியனாக இருந்து கூட செய்யலாம். ஏற்கெனவே, தமிழ் சினிமாவில் பல ஹீரோக்கள் அப்படித்தானே செய்திருக்கிறார்கள், அதே வழியில் பயணித்திருக்கலாமே. இருப்பினும் தன் சக்தி கதாபாத்திரத்தில் சறுக்காமல் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

பிராடு சிவகார்த்திகேயனை சூப்பர் ஹீரோவாக மாற்றும் மாஸ்டர் ஆக அர்ஜுன். முன்னணியில் ஒருவர், பின்னணியில் மற்றொருவர், ஆகா... அடுத்தடுத்து அசத்தப் போகிறார்கள் எனப் பார்த்தால் அர்ஜுன் கதாபாத்திரத்திற்கு எதிர்பார்க்காத ஒரு அதிர்ச்சியைக் கொடுத்துவிடுகிறார் இயக்குனர். தான் இருக்கும் காட்சிகளில் மீண்டும் தனி முத்திரை பதிக்கிறார் அர்ஜுன்.

படத்தின் அறிமுக நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன். படத்தின் ஆரம்பத்தில் சில காட்சிகளில் மட்டுமே வருகிறார். இடைவேளைக்குப் பின் வரவேயில்லை. பொருத்தமில்லாத பின்னணிக் குரல் வேறு, கொஞ்சமே கொஞ்சமான காட்சிகளில் கொஞ்சமாக நடிக்க முயற்சித்திருக்கிறார். இவருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் காதல் காட்சிகளும் இல்லை, காதல் பாடல்களும் இல்லை.

இடைவேளை வரை சிவகார்த்திகேயனே ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார். அவருடைய உதவியாளராக இருக்கும் ரோபோ சங்கர் கொஞ்ச நேரமே வருகிறார். அதன்பின் காணாமல் போய்விடுகிறார், படத்திலும், கதையிலும்.

வில்லனாக அபய் தியோல். பொருத்தமான மிரட்டலான பின்னணிக் குரலால் அவர் நடிப்பும் மிரட்டுகிறது. ஆரம்பத்தில் ஒரு கல்லூரியின் உரிமையாளராக என்ட்ரி கொடுக்கிறார். அதன்பின் அவர் யார் என்பதில் கொஞ்சம் குழப்பம் வருகிறது. அவர் ஒரு கார்ப்பரேட் ஏஜன்ட் என நாமே யூகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

ஒரு ஏழை குடும்பத்து சிறுமி இவானா. மிகவும் திறமைசாலியானவர், அவர் மீது அவருடைய அப்பாவுக்கு பெரும் கனவு என ஆரம்பத்தில் அவர் கதாபாத்திரத்தைக் காட்டும் போதே, அடடா...இவர் சீக்கிரமே செத்துவிடுவார் போலிருக்கிறதே, அதன்பின்தான் கதை ஆரம்பமாகப் போகுதோ என யோசிக்க வைத்துவிடுகிறது. இருந்தாலும் இவானா போன்ற பல திறமைசாலிகள் இங்கு இருக்கத்தான் செய்கிறார்கள்.

யுவன் ஷங்கர் ராஜா இசை என்றாலே பாடல்களும், பின்னணி இசையும் ரசிக்க வைக்கும் என்ற எதிர்பார்ப்பு வரும். இந்தப் படத்தில் பாடல்களுக்கு அதிக தேவையில்லை. பின்னணி இசையில் வழக்கம் போல காட்சிகளுக்கேற்ப தனி ராஜ்ஜியம் நடத்தியிருக்கிறார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு இரவுக் காட்சிகளிலும் லைட்டிங்கினால் தனியாகத் தெரிகிறது. படத்தின் நீளம் மூன்று மணி நேரத்திற்குக் கொஞ்சம் குறைவு. இருந்தாலும் தொய்வு தெரியாமல் படத்தைத் தொகுத்திருக்கிறார் ரூபன்.

சூப்பர் ஹீரோ என்று சொல்லிவிட்டால் லாஜிக் பற்றியெல்லாம் யோசிக்கத் தேவையில்லை என இயக்குனர் மித்ரன் நினைத்துவிட்டார் போலும். இடைவேளைக்குப் பின் பல காட்சிகளில் லாஜிக் டோட்டலி மிஸ்ஸிங். அடுத்து இப்படித்தான் கதை நகரும் என எளிதில் யூகிக்க முடிகிறது. முதல் பாதியில் இருக்கும் தெளிவு, இரண்டாவது பாதியில்லை இல்லை. பெரிதாக ஏதோ நடக்கப் போகிறது என்று எதிர்பார்த்தால் அப்படி எந்த மிராக்கிளும் நடக்கவில்லை.

கல்வி முறையில் மாற்றம் வேண்டும், கேப்பிடேஷன் கட்டணம் வாங்கிக் கொண்டு கல்வியை விற்கும் கல்லூரிகள், கார்ப்பரேட்களுக்கு அடிபணியும் அரசு, அதிகாரிகள் என பல கருத்துக்களைச் சொல்ல முயன்றிருக்கிறார்கள். சில ரசிக்க வைக்கின்றன, சில திணிக்கப்பட்டிருக்கின்றன.

சுயமாக சிந்திப்பவர்கள்தான் ஹீரோ, ஆம், மதிப்பெண் எடுக்கவில்லை என்றாலும் புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்த நிஜ ஹீரோக்களைக் படம் முடிந்த பின் காட்டுகிறார்களே, அது போன்று பல நிஜ ஹீரோக்கள் உருவாக வேண்டும் என்பதற்காக இந்த திரை ஹீரோவை ரசிக்கலாம்.

ஹீரோ - போலி அல்ல நிஜம்

 

ஹீரோ தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

ஹீரோ

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

மேலும் விமர்சனம் ↓