2.25

விமர்சனம்

Advertisement

நடிப்பு - அனந்த்நாக், அஞ்சு குரியன், சம்யுக்தா மேனன் மற்றும் பலர்
தயாரிப்பு - காவ்யா என்டர்டெயின்மென்ட்ஸ்
இயக்கம் - கே.சி. சுந்தரம்
இசை - ஜோஷ்வா ஸ்ரீதர்
வெளியான தேதி - 15 மார்ச் 2019
நேரம் - 2 மணி நேரம் 41 நிமிடம்
ரேட்டிங் - 2.25/5

அறிமுக இயக்குனர்களின் படங்களை, அந்தப் படங்களின் டீசர், டிரைலர், போஸ்டர் ஆகியவையும் பார்க்கத் தூண்டுகிறது. இந்தப் படத்திற்கும் அது பொருந்தும். படத்தின் தலைப்புக்கும் கதைக்கும் சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ, காற்றில் என்று தலைப்பில் வந்துவிட்டால் அது காதல் படமாகத்தான் இருக்கும் என்று நாம் கற்பனை செய்து கொள்ளலாம்.

ஆக, இந்தப் படமும் காதல் படம்தான், ஆனால், இன்றைய காதல் படம். காதலில் தோல்வியடைந்தால் தாடி வளர்த்துக் கொண்டு சுற்றி, அல்லது காதலித்த பெண்ணை மறக்க முடியாமல் தவித்த கதாநாயகர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், இந்தப் படத்தில் காதலிப்பதும், பிரிவதும் என இருப்பதுதான் இன்றைய காதலோ என நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.

இயக்குனர் கே.சி. சுந்தரம் உளவியல் ரீதியான ஒரு கதையை எடுத்துக் கொண்டு, அதற்கேற்றபடி கதாபாத்திரங்களை வடிவமைத்திருக்கிறார். ஆனால், திரைக்கதையாக விறுவிறுப்பு சேர்க்காமல் மெதுவான நகர்த்தலுடன் படத்தைக் கொடுத்திருக்கிறார். அதுதான் இந்தப் படத்தின் தன்மையைக் கெடுப்பதாக அமைந்துவிட்டது.

ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனைப் பிரிவில் உயர்ந்த பதவியில் இருப்பவர் அனந்த்நாக். அவருக்கு அஞ்சு குரியனைப் பார்த்ததும் காதல். இருவரும் காதலித்து திருமண நிச்சயம் வரை செல்கிறார்கள். ஆனால், அனந்த்நாக்கிற்கு திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு அஞ்சு மீது காதல் இல்லை என்ற ஒரு எண்ணம். அதனால், திருமணம் வேண்டாம் என நிறுத்தி விடுகிறார். அதற்கடுத்து சம்யுக்தா மேனனைப் பார்த்து அவர் மீது காதல் கொள்கிறார். சம்யுக்தா கொஞ்சம் பெண்ணுரிமை பேசுபவர். அனந்த்நாக்கின் சந்தேக குணமும், அவருடைய முடிவுகளை தன்னிடம் திணிப்பதும் சம்யுக்தாவுக்குப் பிடிக்கவில்லை. அதனால், இருவரும் பிரேக்-அப் செய்து கொள்கிறார்கள். இந்தப் பிரிவிலிருந்து விடுபட கோவா செல்கிறார். அங்கு ஒரு பெண்ணைப் பார்த்து காதலிக்கலாமா என யோசிக்கிறார். ஆனால், அங்குதான் ஒரு டிவிஸ்ட். அப்புறம் என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

சந்தேக குணம், தனக்கு மட்டுமே சொந்தம் என நினைக்கும் பொசசிவ்னஸ் என்றிருப்பர் அனந்த்நாக். அஞ்சு குரியனைப் பார்த்ததும் பழக ஆரம்பித்து காதலிக்க ஆரம்பிக்கிறார். நெருங்கிய காதலர்களான பின்னும், தனக்குள் அஞ்சு மீது ஒரு பயர் இல்லை எனப் பிரிவது நம்பும்படி இல்லை. ஏதோ, சண்டை வந்து பிரிந்துவிட்டார்கள் என்று கூட சொல்லியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். அடுத்து போட்டோகிராபி மீது ஆசையுள்ள சம்யுக்தாவைப் பார்த்து காதலிக்கிறார். அங்கு பொசசிவ்னஸ் எட்டிப் பார்த்து காதலுக்கு வேட்டு வைத்துவிடுகிறது. ஒரு குழப்பவாதி கதாபாத்திரத்தில் அனந்த்நாக் பொருத்தமாகவே நடித்திருக்கிறார். ஆனால், அடிக்கடி எதையோ பறிகொடுத்தவர் போல உம்மென்று இருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.

அஞ்சு குரியன், கதாபாத்திரத்திற்கேற்றபடியே அப்பாவியாக இருக்கிறார். எளிமையான அழகு, தன்மையான பேச்சு என அந்தக் கதாபாத்திரம் மீது நமக்கு பரிதாப உணர்வுதான் அதிகம் வருகிறது. அப்படிப்பட்ட பெண்ணை தனக்குப் பொருத்தமில்லாதவர் என அனந்த்நாக் சொல்லும் போது நமக்கு கோபம்தான் வருகிறது. நல்ல படங்களையும், கதாபாத்திரங்களையும் தேர்வு செய்தால் அஞ்சு குரியன் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வரலாம்.

போட்டோகிராபி மீது லட்சியமாக இருக்கும் ஒரு மாடர்ன் பெண்ணுரிமைவாதி சம்யுக்தா மேனன். பலருக்குப் பரிச்சயமில்லாத ஒரு கதாபாத்திரம். இப்படிப்பட்ட எண்ணம் கொண்ட பெண்கள் இப்படித்தான் இருப்பார்களோ என்று நம்பும்படி நடித்திருக்கிறார். அடுத்தவரின் ஆசை, அது காதலனாகவே இருந்தாலும் தன் மீது திணிக்கப்படுவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள். தனக்கு எது சரி என்று படுகிறதோ அப்படி வாழ்பவர்கள். அதில் தவறொன்றுமில்லை. ஒரு போல்டான கதாபாத்திரத்தில் சம்யுக்தாவின் நடிப்பு சமரசமில்லாமல் இருக்கிறது.

நாயகனின் நண்பனாக சதீஷ். வழக்கம் போல் கொஞ்சம் மொக்கை ஜோக்குகளால் சிரிக்க வைக்க முயற்சிக்கிறார். சில மட்டுமே சிரிப்பை வரவழைக்கிறது. கோவாவில் சர்பிங் பயிற்சியாளராக வரும் அந்தப் பெண் நீச்சல் உடையில் அதிர்ச்சியடைய வைக்கிறார். இருப்பினும் அவ்வளவு இயல்பாக நடித்து ஒரு சிறப்பான காதல் தத்துவத்தை உதிர்க்கிறார்.

ஜோஷ்வா ஸ்ரீதர் இசையில் “கண்களின் ஓரமாய்..., காற்றே...காற்றே..” ஆகிய பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. ஒளிப்பதிவாளர் காதல் படத்திற்குரிய ஒளிப்பதிவை ரசித்துக் கொடுத்திருக்கிறார். படத் தொகுப்பாளர் காட்சிகளுக்கு விறு விறுப்பைச் சேர்க்கும் வரையில் நறுக்கியிருக்கலாம்.

அத்தியாயம் 1, 2, 3..என நாயகன், நாயகிகள் பார்வையில் ஒரே சம்பவங்களை தொகுத்து வழங்கியிருக்கிறார்கள். ஐடியா நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால், அது படத்திற்கு வலு சேர்க்காமல் குழப்பத்தைத்தான் தருகிறது. படத்தில் கதாபாத்திரங்கள் தொடர்ந்து இடைவெளி இல்லாமல் பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். படத்திற்கு இவ்வளவு நீளம் தேவையில்லை. கிளைமாக்ஸ் இதுதான் என்று வந்துவிட்ட பிறகு மீண்டும் கொஞ்சம் இழுத்துவிட்டார்கள்.

ஜுலை காற்றில் - மிக நிதானமாய்...!

 

பட குழுவினர்

ஜூலை காற்றில்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓