Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

ஈரம்

ஈரம்,
06 அக், 2009 - 00:00 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » ஈரம்


தினமலர் விமர்சனம்


 வழக்கமான பழிவாங்கும் கதைதான். ஆனால் ஒரு பெண்ணின் ஆவி தன் சாவிற்கு காரணமானவனையும், காரணி ஆனவர்களையும் தண்ணீரை ஆயுதமாக பயன்படுத்தி அழித்து ஒழிப்பதே ஈரம்!

திருச்சியில் படித்தபோது காதலித்து, காதல் கை கூடாமல் போன தனது ஸ்ரீரங்கத்து தேவதை, சென்னையில் அவள் வீட்டில் இறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சியுறும் போலீஸ் அதிகாரி ஹீரோவால் அவளது கொலையை த‌ற்‌கொலையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தற்கொலை என பைலை மூட வேண்டிய அந்த கேஸை தானே வலிய ஏற்று நடத்தும் ஹீரோ, கொலையாளி யார்? என்பதை கண்டுபிடிக்கிறார். அதற்கு முன் த‌ன் கொலைக்கு காரணியானவர்களை கொன்று குவிக்கிறது நாயகியின் ஆவி. இதை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் எத்தனை தூரம் சொல்ல முடியுமோ, அத்தனை தூரம் சொல்லி அசத்தி இருக்கிறார் இயக்குனர் அறிவழகன். சும்மாவா...? ஷங்கரின் சிஷ்யர் ஆயிற்றே..!

ஒரு காவல் அதிகாரியாகவும், அதற்கு முன் கல்லூரி மாணவராகவும் ஹீரோ ஆதி தன் பங்கை கச்சிதமாக செய்திருக்கிறார். மிருகம் ஆதியா இது? நம்ப முடியவில்லை! அத்தனை ஹேண்ட்சம். கல்லூரி மாணவர் பருவத்து காதல், காவல் அதிகாரி கண்டிப்பு.. என இரு வேறு பரிணாமங்களில் கலக்கி இருக்கிறார் ஆதி. மற்றொரு நாயகராக, நாயகியின் கணவராக நந்தா, தமிழ் சினிமாவிற்கு சைக்கோதனமான மற்றொரு வில்லனிக் ஹீரோ. பேஷ்.. பேஷ்..! சபாஷ்!

நாயகி சிந்துமேனன் அழகியாகவும், ஆவியாகவும் அசத்தி இருக்கிறார். இவரை மாதிரியே அவரது தங்கை சரண்யா மோகனும் தங்கை கேரக்டரில் தன் பங்கை சரியாக செய்திருக்கிறார். சரண்யா உடம்பில் சிந்துவின் ஆவி புகுந்து கொண்டு அடிக்கடி ஆதியின் முன் சரண்யா, சிந்துவாக தோன்றும் இடங்களில் சிந்துவை ஓவர்டேக் செய்து விடுகிறார் சரண்யா. இவரை தங்கை என்பதைவிட இரண்டாம் நாயகி என்று சொல்வதே பொருந்தும். இவர்களைப் போலவே கண்ணன், ஸ்ரீநாத், ராஜன், ராஜசேகர், லட்சுமி, ஸ்ரீவத்சன் உள்ளிட்டவர்களும் மிரட்டும் நடிப்பில் நம்மை மிரள வைக்கிறார்கள்.

பிளாஷ்பேக்கில் ஆதி - சிந்து மேனனின் காதல் கண்ணாமூச்சி, சிந்து மேனனின் அப்பா போலீஸ் மாப்பிள்ளை வேண்டாம் என இவர்களது காதலை நாகரிகமாக மறுக்கும் வசனக் காட்சி, சைக்கோ கணவரிடம் தன் பழைய காதலை சொல்லி வம்பில் சிந்து மாட்டிக் கொள்ளும் இடம், அதன் பின் நந்தா, சிந்துவை சந்தேகப்படும் இடங்கள்.. என ஆங்காங்கே அழகாக தெரியும் இயக்குனர் அறிவழகனுக்கு, இசையமைப்பாளர் தமனும், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரம ஹம்சாவும் பலமாகவும், ரசிகர்களிடம் படத்தை கொண்டு சேர்க்கும் பாலமாகவும் அமைந்துள்ளனர்.

வாட்டர் பில்டரில் இருந்து சொட்டும் தண்ணீர் மூலம்கூட நம்மை பயமுறுத்தும் இயக்குனரும், இசையமைப்பாளரும், இப்பட குழுவினரும் கதையை விட காட்சியமைப்பில் ஹாலிவுட் படங்களையே மிஞலு்சி விடுகின்றனர். அ‌தேநேரம் பிளாக் வாட்டர் எனும் ஆங்கில படத்தையும் அவ்வப்போது ஞாபகப்படுத்துவதையும் தவிர்த்திருந்தால் ஈரம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

ஈரம் : பயம் - ஜுரம்

----------------------------------

குமுதம் விமர்சனம்ஈரத்தால் கொலையாகிற இளம்பெண். ஆவியின் ஆயுதமும் ஈரம்தான். ஈரமே கொலைகளையும் நிகழ்த்துகிறது.

கதை புதுசு, திரைக்கதையை நகர்த்தி சென்ற விதமும் புதுசு.

என் மகள் குடியிருக்க வேண்டிய ஃப்ளாட் இது... என அடிக்கடி கரித்துக் கொட்டும் பக்கத்து ஃப்ளாட் மாமி, வேலைக்காரப் பெண்ணை சில்மிஷம் செய்ய துடிக்கும் முதிய ஆசாமி, காதலனை வீட்டுக்கே வரச்செய்து கூத்தடிக்கும் இளம் யுவதி, எல்லா ரோஜாவும் ஏற்கனவே எவனாவது முகர்ந்து பார்த்ததுதான் என்கிற ரீதியில் பேசித் திரியும் ஹீரோவின் நண்பன் என இந்த ஒட்டுமொத்த கேரக்டர்களின் வார்த்தைகளும் ஒரு அப்பாவிப் பெண்ணின் உயிரை காவு வாங்குவதை தன்னுடைய நேர்த்தியான காட்சியமைப்பினால் கைதட்டல் போட வைக்கிறார் அறிமுக இயக்குநர் அறிவழகன்.

வழக்கமான போலீஸ் டயலாக், செயற்கையான உடலசைவுகள் ஏதுமின்றி நிஜமான ஒரு காக்கி விறைப்பை ஆதியிடம் பார்க்க முடிகிறது. ஸ்ரீரங்கத்து தேவதையாய் சிந்துமேனன் அவ்ளோ அழகு!

குடை கம்பியால் குத்தப்படும் முதியவர், இடைவேளை சமயத்தில் வரும் சிந்துவின் நீரோவிய த்ரில் காட்சி என சில காட்சிகள் நம்மை அடடே போட வைக்கின்றன.

கொலையாளியாக சந்தேகிக்கப்படும் இளைஞன் தியேட்டர் பாத்ரூமில் திடீரென கொல்லப்படும்போது திடுதிடு திருப்பம் சந்தேகக் கணவனாக நந்தா இயல்பாக நடித்திருக்கிறார். அதே சமயத்தில் தனது சைக்கோ பாத்திரத்தை உணர்த்துவதற்காக நிறைய வசனம் பேசி கடுப்படிக்கிறார். சரண்யா யோசனை சரியாக பயன்படுத்தவில்லை.

தமனின் இசையில் யுவனின் சாயல் தென்பட்டாலும், சாரல் என் ஜன்னல் உடைகிறது பாடல் இதமான ஒத்தடம். படத்தின் மிகப் பெரிய பலம் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு. கைகொடுத்து பாராட்டலாம்.

ஒரு தற்கொலைக்காக போலீஸ் டிபார்ட்மெண்டே ஒன்றுகூடிப் பேசுவது, கணவன், காதலன், தங்கை என எல்லோர்  உடல்களிலும் ஆவி புகுந்து புறப்படுவதை நம்ப முடியவில்லை.

ஈரம்  ஜில் த்ரில்லர் ; குமுதம் ரேட்டிங் - ஓகே

--------------------------------

விகடன் விமர்சனம்


மனதில் ஈரம் இல்லாதவர்களை அந்த “ஈரம்' இல்லாதவர்களை அந்த ஈரம் பழி வாங்கினால்.... அதுதான் கதை!

அபார்ட்மென்ட் குளியல் அறையில் இறந்து கிடக்கிறார் சிந்துமேனன். கள்ளக்காதல் விவகாரம்தான் சிந்துவின் மரணத்துக்கு காரணம் என அடித்து சொல்கிறது அக்கம் பக்கம். ஆனால் நிச்சயம் சிந்து அப்படிப்பட்டவர் அல்ல! என்று உறுதியாக நம்புகிறார் காவல்துறை விசாரணை அதிகாரியான ஆதி. காரணம் அவரும், சிந்துவும் முன்னாள் காதலர்கள். தற்கொலைக்கான ஆதாரங்களை ஒதுக்கிவிட்டு, கொலைக்கான சந்தேகங்களை தோண்டித் துருவுகிறார் ஆதி. ஆனால் சிந்துவின் மரணத்தைத் தொடர்ந்து அதே அபார்ட்மென்ட்டில் வசிப்பவர்கள் மூவர் கொடூரமாக மரணம் அடைகிறார்கள். நான்காவது மரணத்தை நேரில் பார்க்கும் ஆதிக்கு கொலைகளை செய்வது மனிதர்கள் அல்ல; ஒரு அமானுஷ்ய சக்தி என்பது தெரிகிறது. சிந்து மேனனின் மரணம் கொலையா, தற்கொலையா என்பதை முதுகுத் தண்டு ஜில்லிட விளக்குகிறார் ஈரம்!

ஓர் இடத்தில்கூட பேயைக் காட்டாமல், தண்ணீர்த் துளிகள் மூலமாகவே த்ரில் கூட்டும் திரைக்கதை அமைத்து அழுத்த முத்திரை பதிக்கிறார் அறிமுக இயக்குநர் அறிவழகன். மிக இயல்பாக ஆதி - சிந்துமேனன் காதல் நினைவுகளும், சிந்துமேனன் மரணத்தின் சஸ்பென்ஸ் முடிச்சுமாக முதல்பாதி அசத்துகிறது. கொலை நடக்க இருக்கும்போது எல்லாம் ஆதிக்கு குறிப்பு உணர்த்த வரும் சிவப்பு நிறம் ப்ளஸ் தண்ணீர் காம்பினேஷன் ஐடியா... அபாரம்!

மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில் திரையில் விரியும் காட்சிகள்தான் படத்தின் முதல் ஹீரோ. நைச்சியமாக நழுவுவதும் ஆக்ரோஷமாகப் பாய்வதுமாக ஒரு கேரக்டராகவே மாறி பரவசப்படுத்தி திகிலூட்டி மிரட்டுகிறது தண்ணீர் காட்சிகள். காதல் மயக்கமும் போலீஸ் புன்னகையுமாக ஆதி அட்டகாசப்படுத்துகிறார். கல்லூரி இளைஞனின் அசட்டையிலும், காவல் அதிகாரியின் இன்டெலிஜென்ட் விறைப்பிலும் அட்டகாசமான உடல்மொழி வேறுபாடுகள். சிவப்பு ப்ளஸ் தண்ணீர் குறிப்புகளை கடக்கும்போது, எல்லாம் ஆதியின் பதற்றம் நமக்கு உதறலை கொடுக்கிறது. இயல்பான அழகுடன் இருக்கும் சிந்து மேனன், அதே இயல்புடன் நடிக்கவும் செய்கிறார். திருச்சி  கல்லூரியின் சராசரி மாணவி. புது மணப்பெண் எனத் தோன்றும் ஃபிரேம்களில் எல்லாம் கச்சிதக் கவிதை வில்லனாக நந்தா. டி.வி.யில் ஒளிபரப்பாகும் பாடலை சிந்துமேனன் முணுமுணுக்க, அது பிடிக்காமல் நொடிக்கு ஒருமுறை மாறும் நந்தாவின் முகபாவங்கள் க்ளாஸ்.

கிறுகிறு, த்ரில், திகில் கூட்டும் திரைக்கதை இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலேயே சுணங்கி அடங்கிப் போவதுதான் ஏமாற்றம். சிந்துவின் மரணத்துக்கு யார் காரணம் என்கிற  ஃப்ளாஷ்பேக்கை ரொம்ம்ம்பவே நிதானமாக சொல்கிறார்கள். கொலையாளி யார் என்ற உண்மை தெரிந்தவுடனேயே படம் முடிந்துவிடுகிறதே! ஆனால் அதன் பிறகும் க்ளைமாக்ஸ் வருவேனா என்று அடம்பிடிக்கிறது. தண்ணீரை வசப்படுத்தி சகலரையும் சாகடிக்கும் வல்லமைபெற்ற சிந்துவின் ஆவி, நந்தா விஷயத்தில் மட்டும் தட்டுத் தடுமாறுவது ஏனோ? தன்னிடம் ஒருவன் சொன்னதை நந்தாவிடம் சொல்லும் வாட்ச்மேனை கூடவா சிந்து மேனனின் ஆவி கொல்லும்?

அறிமுகம் என்றாலும் தமனின் பின்னணி இசை படத்துக்கு எக்ஸ்ட்ரா டெரர் ஏற்றுகிறது. நேர்த்தியான கதை சொல்லும் பாணியால் தமிழ் சினிமாவில் நம்பிக்கை மனிதர்கள் பட்டியலில் இடம் பிடிக்கிறார் இயக்குநர் அறிவழகன்!

விகடன் மார்க் : 43/100

-------------------------------

கல்கி விமர்சனம்


* மழையின் ஈரத்தை தண்ணீரின் தாய்மை என்பர் கவிஞர் குழாம். அந்த ஈரமே களத்தில் இறங்கி மனிதர்களைக் காவு வாங்கினால் என்னவாகும் என்பதுதான் ஈரம் படத்தின் ஹைலைட். அதில் காதலையும் த்ரில்லையும் புகுத்தி கதையை வலுவேற்றியிருக்கிறார் புதுமுக இயக்குநர் அறிவழகன்.

* மிருகம் படத்தின் ஆதிதான் ஹீரோ. மனிதருக்கு இன்ஸ்பெக்டர் ரோலைவிட காதல் ரோல் கனகச்சிதமாகப் பொருந்துகிறது. காக்கியில் விறைப்பும், காதலில் குழைவும் என மாறி மாறி ஆச்சர்யப்படுத்துகிறார்.

* சிந்துமேனன், சின்னச் சின்ன மேனரிசங்களில் சிந்தை கவர்கிறார். அய்யர் ஆத்துப் பொண்ணாக அவர் வரும் ஸீன் ஒவ்வொன்றும் கவிதை.

* ஓர் இடத்தில்கூட பேயைக் காட்டாமல் ஈரத்தின் மூலம் திரைக்கதையை நகர்த்தி முதுகுத்தண்டை ஜில்லிட வைக்கிறார் இயக்குநர்.

* மனோஜ் பரஹம்சாவின் கேமராதான் படத்துக்கு மிகப்பெரிய ப்ளஸ். அதுவும் ஆக்ரோஷமாகவும், அமைதியாகவும் நகரும் தண்ணீர்க் காட்சிகளில் கேமரா ஒரு கேரக்டராகவே மாறிவிடுகிறது.

* இருந்தும் இரண்டாம் பாதி கொஞ்சம் இழுவை. சிந்துமேனன் ஆவிதான் கொலைக்குக் காரணம் எனத் தெரிந்தவுடன் படம் முடிந்து விடுகிறது. ஆனால் ஹீரோ ஜெயிக்க வேண்டுமென கோடம்பாக்க ஃபார்முலாவுக்கள் விழுந்து விடுகிறார் இயக்குநர்.

* பின்னணி இசையில் பின்னி எடுத்த தமன், பாடல்களில் ஏன் தயக்கம் காட்டினார்?

ஈரம் : திரவத் தீ.வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

ஈரம் தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in