Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

மிளகா

மிளகா,
 • மிளகா
 • நட்ராஜன் சுப்ரமணியம்
 • பூங்கொடி
 • இயக்குனர்: ரவி மரியா
20 ஜூலை, 2010 - 00:00 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » மிளகா

தினமலர் விமர்சனம்

அடாவடி கும்பல் ஒன்றால் அர்த்தம் இல்லாமல் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இளம்பெண் ஒருத்திக்கு, தன்னை வறுத்திக் கொண்டாலும் வருத்தம் இல்லாமல் விடுதலை பெற்று தந்ததுடன் நிறுத்திக் கொள்ளாமல் பொருத்தமான ஜோடியாகும் இளைஞனின் கதைதான் மிளகா.

மதுரை பக்கம் அழகர்மலையில் மிளகாய் மண்டி வைத்திருக்கும் வயசான அப்பாவிற்கு ஒத்தாசையாக இல்லாமல் ஓயாமல் உபத்திரம் தரும் பிள்ளை அழகர். ஆனால் நண்பர்கள் யாவருக்கும் நல்லவர். தன் தண்பன் ஈசு எனும் ஈஸ்வரனின் பர்னிச்சர் கம்பெனி திவால் ஆகும் அளவிக்கு பதினெட்டரை லட்சம் ரூபாய்க்கு பொருங்கள் வாங்கிக் கொண்டு பணத்தை திருப்பி கட்டாதவர்களிடம் கடனை வசூலிக்கும் ‌பொறுப்பை ஏற்றுக் கொண்டு களம் இறங்குகிறார் அழகர். அவரது அடாவடித்தனதாலும், அதில் தென்படும் நியாய தர்மத்திலும் ஈர்க்கப்பட்டு, தானும் தன் குடும்பமும் அயோக்கிய கும்பல் ஒன்றால் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையை சொல்கிறார் கதாநாயகி தேன்மொழி. தேன்மொழிக்காக மதுரையையே கலக்கும் அந்த அயோக்கிய அண்ணன் - தம்பி கும்பலிடம் மோதும் அழகரும் அவரது நண்பர்களும் சந்திக்கும் சோதனைகளும், சாதனைகளும்தான் மிளகா படத்தின் மீதிக்கதை!

நாளை எனும் படத்தில் சில வருடங்களுக்கு முன் ஷாலினி அஜீத்தின் சகோதரர் ரிச்சர்டுடன் இரண்டு நாயகர்களில் ஒருவராக அறிமுகமாகிய ஒளிப்பதிவாளர் நட்ராஜ்தான் இதில் ஒரே நாயகர். பூங்கொடி, சுஜா என இரண்டு நாயகிகள். அழகராக வரும் நட்ராஜும் சரி... தேன்மொழியாக வரும் பூ‌ங்கொடியும் சரி... வீட்டு ஓனர் சவுமியாவாக வரும் சுஜாவும் சரி... சபாஷ்.. சரியான போட்டி என சொல்லும் அளவுக்கு நடித்திருக்கின்றனர்.

நட்ராஜின் நண்பர்கள் சிங்கம்புலி, ஜெகன்னாத், மாயி சுந்தர் அண்ட் கோவினர் பண்ணும் காமடி கலாட்டாக்கள் படம் முழுக்க சிரிப்பலையை கிளப்பி வயிற்றை புண்ணாக்கி விடுகின்றன என்றால் மிகையல்ல! அண்ணன்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்போகும் நீதிபதியை போட்டுத் தள்ளிவிட்டு, ஜெயிலுக்கு போய் திரும்பி, பின் பைத்தியமாகி கத்தும் ரவிமரியாவும் சரி.. அவரது சகோதரர்கள் நான் கடவுள் ராஜேந்திரன், அஞ்சாதே ஸ்ரீதர், ஆரோக்யதாஸ் ஆகியோரும் சரி... பார்த்தாலே பயமுறுத்தும்படியான வில்லன்கள். ஆனாலும் அடுத்த வீட்டுப் பெண்ணை அடைத்து வைத்துக் கொண்டும், அவளது அப்பா - அம்மா - தம்பியை கடத்தி வைத்துக் கொண்டும் அவர்கள் படுத்தும் பாடு ஏன்? அந்த ஊரில் நல்ல போலீஸ் நாலு பேர் கூட கிடையாதா? எனும் கேள்வியை எழுப்புகிறது.

'மிளகா' அழகர் - நடராஜின் மிளகா மண்டி அப்பாவாக ஜி.எம்.குமார், சின்ன வீட்டுக்கு கடன் வாங்கிய வகையில் கட்டை விரலை அடுத்தடுத்து பறிகொடுத்து பரிதவிக்கும் தாதா இளவரசு அவர், தனக்கு ஒத்து வராதவர்களுக்கு தரும் வாழைப்பழ அதிரடி அடாவடி என மிீளகா படம் முழுக்க காரசாரமாகவே இருக்கிறது.

கவர்ச்சி ரசமாக சபேஷ் - முரளியின் இசையில் ஒலிக்கும் பாடல்களும், அதற்கு பாலாஜி வி.ரங்காவின் ஒளிப்பதிவும் ஆறுதல். இசை, ஒளிப்பதிவு மாதிரியே வி.ஜெய்சங்கரின் பக்காவான படத்தொகுப்பும், சுப்ரீம் சுந்தரின் சண்டை பயிற்சியும் படத்தின் பெரிய ப்ளஸ்கள்.

மொத்தத்தில் எஸ்.ரவிமரியாவின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தில் 'மிளகா' ரொம்பவே 'அழகா' வந்திருக்கிறது!

------------------------

கல்கி விமர்சனம்

குவாலிஸ் கார்கள், வெள்ளை வேட்டிசட்டை மனிதர்கள், அரிவாள், ரத்தம் என மதுரைரை குறித்து வெளிவந்து கொண்டிருக்கும் படங்களின் லிஸ்ட்டில் மற்றுமொரு  படம் மிளகா, மதுரக்கார பயலுக நட்புக்காக உயிரையும் கொடுப்பாங்க என்று சப் டைட்டில் போடுகிறார்கள். அதோடு அவங்களுக்கு பிடிக்கலைன்னா போட்டுத்தள்ளிடுவாய்ங்க என்று இன்னொரு டைட்டிலையும் காண்பித்திருக்கலாம். அந்தளவுக்கு அரிவாளோடு அலைகிறார்கள்.

மதுரையின் ரவுடி கும்பல் சகோதரர்களில் ஒருவர் ரவிமரியா, ஊர்த்திருவிழாவில், ஹீரோடு நட்ராஜ், ஹீரோனியினிடம் செய்யும் சீண்டலுக்கு தவறுதலாக ஹீரோயின் பூங்கொடி ரவிமரியாவை அடித்து விடுகிறார். அடித்த பெண்ணையே திருமணம் செய்ய வேண்டும் என்ற அரதப்பழசான தமிழச் சினிமா பார்மலாவுக்கு ஏற்ப கதாநாயகியை திருமணம் செய்ய சபதம் செய்கிறார். தப்பித்து ஓடும் பூங்கொடியை  வீட்டுச் சிறை வைத்து விடுகிறார்கள் அவரது வில்லன் சகோதரர்கள்.

மிளகா வற்றல் மண்டி வைத்திருக்கும் ஹீரோ நட்ராஜ், பூங்கொடியின் பிரச்னையை தீர்த்து எப்படி வில்லன்களிடமிருந்து மீட்டுத் திருணம் செய்கிறார் என்பது தான் கதை. பாடிலாங்குவேஜ்,  துருதுரு மூவ்மெண்ட், மதுரைத் தமிழ் என வரும் நட்ராஜுக்கு ஆக்ஷன் நன்றாக வருகிறத. முயற்சித்தால்முன்னணித் தமிழ் ஹீரோவாக வர வாய்ப்புண்டு.

வில்லன்களிடம் மாட்டிக்கொண்டு தவிக்கும் போதம், பிரச்னையை நட்ராஜிடம் சொல்ல முயற்சித்து அது முடியாமல் போகும் போது  வரும் பரிதவிப்பிலும் நமது பக்கத்து வீட்டு பெண்ணை போன்று மனத்தில் ஒட்டிக்கொள்கிறார் பூங்கொடி. இவர்களோடு கவனிக்கப்பட வேண்டியவர் இயக்குநர் ரவிமரியா.  வில்லனாகவும், மனநிலை பாதித்த நபராகவும் மது கேரக்டரை சரியாக செய்திருக்கிறார்.

நகைச்சுவையில் வடிவேலு, விவேக் ரேஞ்சுக்கு சிங்கம்புலி மாறுவார் போல, இசை சபேஷ்முரளி, பழைய டியூன் சாயலில் பாட்டுக்களை போட்டு ஒப்பேத்தியிருக்கிறார்கள். இத்தனை  அடிதடிகள் நடக்கும்போது, காவல்துறை எங்கே போனது என்ற கேள்வி வழக்கம் போல எழும் தான்.

மிளகா - ஓவர் காரம்.

--------------------------------------------------------
குமுதம் விமர்சனம்

மீண்டும் ஒரு மதுரைக்கார பசங்களின் படம். வழக்கமான வீச்சரிவாள், தூக்கி  கட்டிய வேட்டி, ஏஏஏஏஏய்ய்ய்ய் போன்ற சமாச்சாரங்கள் படத்தில் இருந்தாலும் கதையை வித்தியாசமாக சிந்தித்திருக்கிறார்கள்.

இடுப்பு என்னும் இளமை பிரதேசத்தை நம் திமிழ் திரையில் சும்மா ஊறுகாயாகத்தான் பயன்படுத்துவார்கள். ஆனால், இந்த படத்தின் ஆணிவேரே கதாநாயகியின் இடுப்பு தான்.

திருவிழா கூட்டத்தில் கதாநாயகன் நடராஜ், கதாநாயகி பூங்கொடியின் இடுப்பை விடலை தனமாக கிள்ளிவிட்டு மறைய, கொடூரமான அந்த ஊர் வில்லன்தான் அதற்கு காரணம் என்று நினைத்து அவனை அறைகிறாள் நாயகி. வெகுண்ட வில்லன், அடித்த அவளையே திருமணம் செய்து கொள்வேன் என்று துரத்த அப்புறம் என்ன ஆகிறது என்பது தான் மிளகா.

அது என்ன மிளகா?

கதாயகனின் தந்தை மிளகாய் மண்டி நடத்துக்கிறார். இந்தி படங்களின் கேமராமேனாக பணியாற்றும் நடராஜ் கதாநாயகன் .சண்டை நன்றாக போடுகிறார். டான்ஸ் ஆடுகிறார் நம் ஊர் ஹீரோவிற்கு இந்த தகுதி போதாதா? படம் பூராவும் சோகத்துடனேயே வருகிறார் பூங்கொடி. அவர் யார்? என் இப்படி இருக்கிறார் என்பதை சீக்கிரம் சொல்லி தொலையுங்களேன் என்று பொறுமை போகிறது.

படத்தின் பெரும் பலம் ஜெகன், சிங்கம்புலி, பாண்ட்ஸ், சுந்தர் காமெடி தான். அவர்கள் சும்மா பேசி கொண்டிருந்தாலே தியேட்டரில் சிரிக்கிறார்கள். அதுவும் பெரிய குழாயில்  மிளகாய்பொடியை தூவி அவர்களை அதன் மேல் நிர்வாணமாக உட்கார வைத்து வில்லன் கூட்டம் கொடுமை படுத்தும்போது தியேட்டரே குலுங்குகிறது.

அந்த அப்பத்தா கிழவி? அட்டகாசம். தன் பேரனை போட்டுத்தள்ள  எதிரிகள் தேடுவது கண்டு அவர்களுடனேயே காரில் ஏறி கலாய்ப்பது பலே. கொடூர வில்லனாக பிதாமகன் ராஜேந்திரன் முகம் மட்டும் முதிர்ந்தும் உடம்பு  திம்மென்றும் வைத்துக்கொண்டு கம்மலான குரலில் மிரட்டுகிறார் வாழைப்பழத்தை எதிரியின் வயிறு நிரம்ப திணித்து விட்டு அந்த வயிற்றிலேயே கட்டையால் ஊமையடி அடிக்கும்போது நமக்கும் வயிறு வலிக்கிறது.

மிளகா : காரம் கம்மி, உறுமல் அதிகம்.வாசகர் கருத்து (25)

sujenth - qatar,இலங்கை
19 ஆக, 2010 - 17:16 Report Abuse
 sujenth கதாநாயகிக்கு நல்ல நடிப்பு. நான் எல்லா படத்திலும் பார்த்திருகின்றேன்
Rate this:
முத்து - madurai,பஹ்ரைன்
15 ஆக, 2010 - 04:31 Report Abuse
 முத்து good
Rate this:
shaik fareeth - tirupur,இந்தியா
24 ஜூலை, 2010 - 12:25 Report Abuse
 shaik fareeth சீக்கிரமே இதோட இரண்டாம் பாகத்தை எடுக்கனும்னு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
Rate this:
Anitha - Tirunelveli,இந்தியா
08 ஜூலை, 2010 - 16:10 Report Abuse
 Anitha படம் சூப்பர்......I really love this movie....
Rate this:
Arun - saptur,இந்தியா
08 ஜூலை, 2010 - 10:13 Report Abuse
 Arun Comedy film
Rate this:
மேலும் 20 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

 • டாப் 5 படங்கள்

 • Advertisement
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in