பக்கா,Pakka

பக்கா - பட காட்சிகள் ↓

பக்கா - சினி விழா ↓

Advertisement
0.5

விமர்சனம்

Advertisement

நடிப்பு - விக்ரம் பிரபு, பிந்து மாதவி, நிக்கி கல்ராணி, சூரி, சதீஷ் மற்றும் பலர்
இயக்கம் - எஸ்.எஸ். சூர்யா
இசை - சத்யா
தயாரிப்பு - பென் கன்சோடிரிடியம்
நேரம் - 2 மணி நேரம் 27 நிமிடம்

தமிழ்த் திரையுலகத்தில் நூற்றுக்கணக்கான உதவி இயக்குனர்கள் தங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்காதா என கம்பெனி கம்பெனியாக ஏறிக் கொண்டிருக்கிறார்கள். குறும்பட இயக்குனர்கள் பலர் கோடம்பாக்கத்தை நோக்கி பல கனவுகளுடன் வந்து கொண்டிருக்கிறார்கள்.

எந்த ஒரு தொழிலையும் கொஞ்சம் கூடத் தெரிந்து கொள்ளாமல் அதில் இறங்குவது ஏறக்குறைய ஒரு தற்கொலைக்குச் சமம். இப்படத்தின் தயாரிப்பாளர் எதன் அடிப்படையில் இந்தக் கதை ஒரு சிறந்த கதை என இத்தனை கோடிகளைப் போட்டு படத்தை எடுக்கத் தயாரானார்.

நடிகர் திலகத்தின் குடும்ப வாரிசு விக்ரம் பிரபு எந்த அம்சம் இந்தப் படத்தில் அவரைக் கவர்ந்தது என நடிக்க சம்மதித்தார்.

'பக்கா' என படத்திற்குப் பெயர் வைத்துவிட்டு ஒரு பக்கத்தில் கூட படத்தின் கதையை எழுதாமல் படம் எடுக்க வந்திருக்கிறார் இயக்குனர் எஸ்.எஸ்.சூர்யா. தன்னை நம்பி ஒரு தயாரிப்பாளர் சில பல கோடிகளை இறைக்க முன்வந்ததை மனதில் வைத்தாவது தாமதம் ஆனாலும் ஒரு கதையை எழுதியிருக்கலாம். இல்லை, வேறு யாருடைய கதையாவது வாங்கி படமாக எடுத்திருக்கலாம். நீங்கள் சார்ந்த தொழிலுக்கும், உங்களை நம்பி பணம் முதலீடு செய்த தயாரிப்பாளருக்கும், உங்களை நம்பி நடிக்க வந்த நடிகர்களுக்கும் மிகப் பெரும் துரோகத்தை செய்துவிட்டீர்கள் சூர்யா.

ஊர் திருவிழாவில் பொம்மை கடை நடத்தும் விக்ரம் பிரபுவைக் காதலிக்கிறார் ஊர் பெரிய மனிதர் மகள் பிந்து மாதவி. அந்தக் காதல் குடும்பத்தினருக்குத் தெரிய வர காதலனைத் தேடி ஊரை விட்டு கிளம்புகிறார். வழியில் மற்றொரு விக்ரம் பிரபுவைச் சந்திக்கிறார், ஆனால், அது அவர் காதலன் அல்ல. இரண்டாவது விக்ரம் பிரபுவுக்கு ஒரு பிளாஷ் பேக். அவருடைய ஊரில் நிக்கி கல்ராணியைக் காதலித்து அவரைப் பறி கொடுத்தவர். சரி பிந்து மாதவிக்கு தன்னைப் போலவே இருக்கும் அவருடைய காதலனைக் கண்டுபிடிக்க இரண்டாவது விக்ரம் பிரபு முயற்சி செய்வாரா என்று பார்த்தால், அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை.

படத்தை இயக்கித் தொல்லை கொடுத்தது போதாது என திருவிழாவில் மைக் செட் அறிவிப்பாளராகவும் வந்து இம்சிக்கிறார் இயக்குனர் சூர்யா. 2018ல் இப்படி ஒரு படத்தை எடுக்கவும் தைரியம் வேண்டும். தமிழ் சினிமாவின் தலைசிறந்த படங்களை எப்படி எடுத்திருக்கிறார்கள் என தயவு செய்து பாருங்கள் சூர்யா.

விக்ரம் பிரபுவுக்கு உண்மையிலேயே கதை எல்லாம் கேட்கத் தெரியாதா?. அப்படி கேட்கத் தெரியவில்லை என்றால் அந்த வேலையை நம்பிக்கையான சிலரிடம் கொடுக்கலாமே... இல்லை உங்களது தாத்தா சிவாஜி கணேசன் நடித்த படங்களைப் பார்த்து சினிமாவில் எப்படியெல்லாம் கதையை எழுதியிருக்கிறார்கள் எனப் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் விக்ரம் பிரபு.

படம் இல்லாத குறைக்கு ஏதாவது ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என இந்தப் படத்தில் பிந்து மாதவி நடித்திருக்கிறார் போலிருக்கிறது. அவருடைய மேக்கப்பும், டப்பிங்கும் படத்தில் துளி கூட ஒட்டவில்லை.

நிக்கி கல்ரானிக்கு பல வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டுதானிருக்கிறது. அப்படியிருக்க எதற்காக இந்தப் படத்தில் நடித்தார் என்று தெரியவில்லை. அதிலும் கொஞ்சம் கூட பொருந்தாத ஆடைகளில் வேறு வலம் வருகிறார்.

நகைச்சுவை என்ற பெயரில் சூரி, சதீஷ் நடத்தும் கொடுமைகளை இன்னும் எத்தனை படத்தில்தான் பார்க்க வேண்டுமோ?. ஆங்காங்கே இரட்டை அர்த்த வசனம் வேறு.

ஒன்றுமேயில்லாத படத்தில் இசையும், ஒளிப்பதிவும் என்ன செய்துவிட முடியும்.

தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒரு வேண்டுகோள். புதிதாகப் படம் எடுக்க வரும் தயாரிப்பாளர்களுக்கு குறைந்தபட்சமாக ஆலோசனை மையம் ஒன்றை ஏற்படுத்துங்கள். அவர்களுக்கு நல்ல படங்களை எடுக்க ஆலோசனைக் குழு ஒன்றை நியமனம் செய்யுங்கள். தயாரிப்பாளர் காப்பாற்றப்படுகிறாரா இல்லையோ தமிழ் சினிமாவாவது காப்பாற்றப்படட்டும்.

பக்கா - பாவம்!

 

பக்கா தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

பக்கா

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓