4

விமர்சனம்

Advertisement

நடிப்பு - இளங்கோ, அஞ்சலி நாயர், பூ ராம் மற்றும் பலர்
தயாரிப்பு - பி ஸ்டார் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - செல்வகண்ணன்
இசை - ஜோஸ் பிரான்க்ளின்
வெளியான தேதி - 15 மார்ச் 2019
நேரம் - 2 மணிநேரம் 02 நிமிடம்
ரேட்டிங் - 4/5

தமிழ் சினிமாவில் கடந்த ஐந்தாறு ஆண்டுகளில் டிஜிட்டல் வளர்ச்சியில் எண்ணற்ற சிறிய பட்ஜெட் படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. வெளிவந்த பல படங்களில் 90 சதவீதப் படங்கள் தரமற்ற படங்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் அதை எப்படி தரமான படமாக எடுக்க வேண்டும் என்பதை இந்த நெடுநல்வாடை படத்தைப் பார்த்து பலர் கற்றுக் கொள்ள வேண்டும்.

அறிமுக நாயகன், அறிமுக நாயகி, அறிமுக வில்லன், சில படங்களில் மட்டுமே நடித்த குணச்சித்திர நடிகர், இவர்களுடன் அறிமுக இயக்குனர் ஒருவர் தரமான, நெகிழ்வான ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் என்பது ஆச்சரியமான ஒன்று. இப்படிப்பட்ட படங்கள்தான் தமிழ் சினிமாவுக்கு அவசியம் தேவை.

படத்தின் கதையிலும் சரி, காட்சிகளிலும் சரி, நடிப்பிலும் சரி எந்த மிகைப்படுத்தலும் இல்லை. காட்சிகளில் ஒரு யதார்த்தம், நடிப்பிலும் யதார்த்தம் என ஒரு திரைப்படத்தைப் பார்க்கிறோம் என்ற உணர்வு இல்லாமல் இளங்கோ, அமுதா காதலை, செல்லையாவின் தாத்தா பாசத்தை நேருக்கு நேராக நாமும் பார்த்து அனுபவிக்கும் உணர்வைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் செல்வகண்ணன்.

தங்கள் நண்பனுக்காக நம்பிக்கை வைத்து ஒரு படத்தைத் தயாரிக்க முன்வந்த அந்த 50 தயாரிப்பாளர்களுக்கும், ஒரு தரமான படத்தை தன் மீது வைத்த நம்பிக்கையின் பரிசாகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் செல்வகண்ணன்.

பூ ராம், ஒரு கிராமத்தில் வசிக்கும் சாதாரண விவசாயி. காதலித்து யாரோ ஒருவனுடன் ஓடிப் போய் குடும்ப வாழ்க்கையைத் தொலைத்து, பேரன், பேத்தியுடன் வந்து நிற்கும் மகளை மன்னித்து, வீட்டுக்குள் சேர்த்துக் கொள்கிறார். அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார் ராமின் மகன் மைம் கோபி. மகனின் எதிர்ப்பையும் மீறி பேரனை படிக்க வைத்து, அவனை நல்லதொரு வேலையில் அமர்த்திப் பார்க்க ஆசைப்படுகிறார் ராம். பேரன் இளங்கோ பாலிடெக்னிக்கில் படிக்கும் போதே, அதே கிராமத்தைச் சேர்ந்த அஞ்சலி நாயரைக் காதலிக்கிறார். இந்த வயதில் காதல் வேண்டாம், வாழ்க்கையில் வேலை, குடும்பம் என கவனம் வேண்டும் என்கிறார் ராம். அவரது பேச்சையும் மீறி பேரன் இளங்கோ, காதலியுடன் ஊரை விட்டு ஓட முடிவெடுக்கிறார். அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

சினிமாத்தனமில்லாத முகத்துடன் கதாபாத்திரப்படி சிரிக்கவே சிரிக்காத முகத்துடன் இளங்கோ கதாபாத்திரத்தில் அப்படியே வாழ்ந்திருக்கிறார் இளங்கோ. தன்னைச் சுற்றிச் சுற்றி வரும் அஞ்சலி மீது காதல் இருந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவரை விரட்டுகிறார். ஒரு பக்கம் தாய்மாமனின் ஏச்சும், பேச்சும், மறுபக்கம் தாத்தாவின் பாசம், இன்னொரு பக்கம் அம்மா, தங்கையின் நிலைமை, படிப்பு, வேலை என எந்த காட்சியிலும் ஒரு துளி கூட மிகைப்படுத்தல் இல்லாத அவருடைய யதார்த்த நடிப்பு, அவரை ஒரு அறிமுக நடிகர் என்று சொல்ல முடியாத அளவிற்கு நடித்திருக்கிறார்.

கிராமத்தில் சுட்டித்தனமாய் திரியும் பெண் அமுதா-வாக அஞ்சலி நாயர். அவரையும் அறிமுக நடிகை என்று சொல்ல முடியாத அளவிற்கு அந்தக் கதாபாத்திரத்தில் அப்படியொரு நடிப்பு. வாயாடி என்றால் அப்படி ஒரு வாயாடி. எதற்கும் கவலைப்படாத ஒரு கதாபாத்திரம். உதாசீனமானப் பார்வை, இளங்கோவைப் பார்த்தாலே கண்களில் ஒரு ஏளனம், மனதில் ஒரு காதல் என அவரை வம்புக்கிழுப்பது என அஞ்சலி ஒரு அஞ்சாத பெண்மணியாக படத்தில் வலம் வருகிறார். இந்தப் படத்திற்குப் பிறகு அஞ்சலிக்கு தமிழ் சினிமாவில் ஒரு சிறப்பான இடம் காத்திருக்கிறது. அதை அவர் பயன்படுத்திக் கொள்வது அவருக்கு சிறப்பு.

பூ ராம். தமிழ் சினிமா இன்னும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாத ஒரு நடிகர். இந்தப் படத்தின் முதுகெலும்பே அவர்தான். உடல்மொழி, பார்வை, பேச்சு என அவருக்குள் அந்த செல்லையா கதாபாத்திரம் அப்படியே உள்ளே புகுந்துவிட்டது. எல்லா அப்பாக்களுக்குமே மகள்கள் மீது அப்படி ஒரு பாசம், மகள்களுக்கும் அப்பா மீது அப்படி ஒரு பாசம் இருக்கும். பூராமின் அப்பா பாசத்தை எத்தனையோ தமிழ் சினிமாக்களில் பார்த்திருந்தால் இந்தப் படத்தில் அது நமக்கும் புதிதாக உணர வைக்கிறது. மகள் வழிப் பேரன், பேத்திகளுக்கும் அப்பாக்களுக்கு அதிகமான பாசம் இருக்கும். அதைப் பலரும் தங்கள் குடும்பங்களில் பார்த்திருக்கலாம். இந்தப் படத்தில் அதை மீண்டும் ஒரு முறை ரீவைன்ட் செய்து பார்க்கலாம். பூ ராமுக்கு இந்த ஆண்டின் சிறந்த துணை நடிகர் தேசிய விருதை தாராளமாக அள்ளித் தரலாம்.

நாயகி அஞ்சலியின் அண்ணனாக அஜய் நடராஜ். காதலை எதிர்க்கும் வழக்கமான அண்ணனின் கதாபாத்திரம்தான் என்றாலும் யதார்த்தமாய் நடித்திருக்கிறார். பூராமின் மகனாக மைம் கோபி. காதலித்து ஓடிப் போன தங்கையை சொத்துக்காக ஏற்க மறுக்கும் கோபக்கார அண்ணன். பிளாஷ்பேக்கில் குட்டி இளங்கோ, அமுதாவாக நடித்திருக்கும் அந்த சிறுவன், சிறுமி கூட அவ்வளவு யதார்த்தமாய் நடித்திருக்கிறார்கள். நாயகனின் அம்மாவாக செந்தி, ஊர்க்காரராக ஐந்துகோவிலான் இருவரும் அவரவர் கதாபாத்திரத்தில் சிறப்பு.

ஜோஸ் பிரான்க்ளின் இசையில் கருவாத்தேவா பாடலும், ஏதோ ஆகிப் போச்சு பாடலும் மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும். வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு நெல்லைச் சீமையை அவ்வளவு சிறப்பாய் காட்டியிருக்கிறது. வயலும் வயல் சார்ந்த இடங்களும், அந்த கிராமமும் அவருடைய ஒளிப்பதிவால் ஒரு கதாபாத்திரமாகவே கண்ணுக்குத் தெரிகிறது. காசி விஸ்வாநாதன் படத்தொகுப்பு, படத்திற்கு எது தேவையோ அதை மட்டும் சிறப்பாகத் தொகுத்திருக்கிறது.

ஒரு காதலையும், தாத்தாவின் பாசத்தையும் இவ்வளவு யதார்த்தமாய், ஒரு சேர சொன்ன தமிழ் சினிமா இதுவரை வந்ததில்லை என்றே சொல்ல வேண்டும். ஒரு திரைப்படம் என்பது அந்தப் பகுதி மக்களின் வாழ்வியலைப் பிரதிபலிக்க வேண்டும். அந்த விதத்தில் தன் வாழ்க்கையில் நிஜமாகவே நடந்ததை ஒரு திரைப்படமாக எடுத்திருக்கிறார் இயக்குனர் செல்வ கண்ணன்.

இடைவேளைக்குப் பின் முக்கிய கதாபாத்திரமான அண்ணன் மைம் கோபி படத்தில் காணாமல் போய்விடுகிறார். அதுதான் படத்தின் குறையாக இருக்கிறது. சில சாதியக் குறியீடுகள் படத்தில் உள்ளன, அவற்றைத் தவிர்த்திருக்கலாம். இந்தப் படத்தில் முதலில் நடிக்க வந்து பின்னர் நடிக்க மாட்டோம் என வெளியேறியவர்கள் வல்லினம் படத்தில் நடித்த அம்ஜத்கான், களவாணி மாப்பிள்ளை படத்தில் நடித்த அதிதி மேனன். இந்தப் படத்தை ஏன் தவறவிட்டோம் என காலத்திற்கும் வருந்துவார்கள்.

திருநெல்வேலி பின்னணியுடன் வெளிவந்த பரியேறும் பெருமாள் 2018ன் சிறந்த படமாக அமைந்தது, 2019ல் அந்தப் பெருமை நெடுநல்வாடை படத்திற்குக் கிடைக்கும்.

நெடுநல்வாடை - நல்வரவு!

 

நெடுநல்வாடை தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

நெடுநல்வாடை

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓