Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

வெளிப்பாடிண்டே புஸ்தகம் (மலையாளம்)

வெளிப்பாடிண்டே புஸ்தகம் (மலையாளம்),Velipadinte pusthakam
  • வெளிப்பாடிண்டே புஸ்தகம் (மலையாளம்)
  • இயக்குனர்:
04 செப், 2017 - 14:18 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » வெளிப்பாடிண்டே புஸ்தகம் (மலையாளம்)

நடிகர்கள் : மோகன்லால், அன்னா ரேஷ்மா ராஜன், சித்திக், அனூப் மேனன், செம்பான் வினோத், விஜயபாபு, சரத்குமார், 'வெயில்' பிரியங்கா, அலான்சியர் லே

ஒளிப்பதிவு : விஷ்ணு சர்மா

இசை : ஷான் ரஹ்மான்

கதை :
பென்னி பி.நாயரம்பலம்

டைரக்சன் : லால் ஜோஸ்

கடந்த 2௦ வருடங்களாக மலையாள சினிமாவில் முன்னணி இயக்குனராக விளங்கும் இயக்குனர் லால் ஜோஸ். தனது திரையுலக பயணத்தில் அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களையும் இயக்கிவிட்ட நிலையில் இப்போதுதான் முதன்முறையாக மோகன்லால் படத்தை இயக்கியுள்ளார்.. இந்தப்படத்தின் ஹைலைட்டே இதுதான். இந்த இருவர் கூட்டணி ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈடுகட்டியுள்ளதா..?

கடற்கரை கிராமம் ஒன்றில் கிறித்தவர் கல்லூரி ஒன்று இருக்கிறது. மீனவர் குடும்பத்தை சேர்ந்த மாணவர்களும், வெளியிடங்களில் படிக்க இடம் கிடைக்காமல் இங்கே வந்து சேர்ந்த வசதியான வீட்டு பையன்களும் ஒன்றாக படிப்பதால் இரண்டு குரூப்புகளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. இந்த நிலையில் கல்லூரிக்கு புதிய பேராசியராக உள்ளே வருகிறார் மோகன்லால்.

இரண்டு குரூப் மாணவர்களையும் ஒன்று சேர்க்கிறார். கல்லூரிக்கு புதிதாக பாய்ஸ் ஹாஸ்டல் கட்ட பணம் தேவைப்படும் நிலையில் கல்லூரியில் இருக்கும் மாணவர்கள், ஆசிரியர்களை வைத்தே சினிமா எடுக்கலாம் என ஆலோசனை கூறுகிறார் மோகன்லால். இதற்கு தயாரிப்பாளர் விஜய்பாபு பண உதவி செய்ய முன் வருகிறார். கதைக்காக வேறு எங்கும் தேடாமல், அந்த கிறித்தவ கல்லூரியை உருவாக்குவதற்காக தனது உயிரையே கொடுத்த அந்தப்பகுதியை சேர்ந்த இந்து இளைஞன் விஸ்வநாதன் கதையையே படமாக்க முடிவு செய்கிறார்கள்.

உயிரோடு இருக்கும் விஸ்வநாதன் மனைவி பிரியங்கா இதற்கு மனப்பூர்வமாக ஒப்புதல் தருகிறார்.. ஆனால் விஸ்வநாதன் மரணத்திற்கு காரணமானவர் என சொல்லப்படும் சித்திக் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், மோகன்லாலின் எச்சரிக்கை காரணமாக அமைதியாகிறார்.. படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியும் படமாக்கப்பட்ட நிலையில் விஸ்வநாதனை கொலை செய்தது சித்திக் அல்ல என்கிற உண்மை தெரியவருகிறது..

அதனால் ஸ்க்ரிப்ட்டை மாற்றி க்ளைமாக்ஸை ரீ ஷூட் செய்கிறார்கள். இந்தநிலையில் உண்மையான கொலைகாரன் சிறையிலிருந்து ரிலீஸாகி வருகிறான். படப்பிடிப்பை நடத்தக்கூடாது என மிரட்டல் விடுக்கிறான்.. விஸ்வநாதன் கேரக்டரில் நடிக்கும் மோகன்லால் என்ன முடிவெடுக்கிறார் என்பது யாரும் எதிர்பாராத க்ளைமாக்ஸ்.

மோகன்லாலுக்கென எந்த தனித்துவமும் இல்லாத கதை என்பது படம் ஆரம்பித்த இருபதாவது நிமிடத்திலேயே தெரிந்துவிடுகிறது.. சர்ச் பாதர், கல்லூரி புரபெஷர், கல்லூரிக்காக எடுக்கப்படும் சினிமாவில் ஹீரோ என மூன்றுவிதமான கேரக்டர்களை ஒரே சமயத்தில் செய்திருக்கிறார் மோகன்லால். மூன்றிலும் மூன்றுவிதமான நடிப்பு.. ஆனாலும் அவை விழலுக்கு இறைத்த நீராக ஆகிவிட்டதில் வருத்தமே.

விஸ்வநாதன் என்கிற கேரக்டரில் துடிக்கும் புஜங்களும் முறுக்கு மீசையுமாக செம கெத்து காட்டுகிறார் நடிகர் அனூப் மேனன்.. கதையின் ஆரம்ப காட்சியிலேயே இவர் கொல்லப்பட்டாலும் கூட, படம் முழுவதும் ஆங்காங்கே இவர் வரும்படியாக காட்சிகளை புத்திசாலித்தனமாக கோர்த்திருக்கிறார்கள். நாயகி அன்னா ரேஷ்மா ராஜன் எந்நேரமும் புன்னகை முகமாக பார்க்க பார்க்க பரவசமூட்டுகிறார். 'விஸ்வநாதனின் மனைவியாக வெயில்' பிரியங்காவும் சில காட்சிகளில் தலைகாட்டி இருக்கிறார்.

சலீம் குமார் படம் முழுதும் வந்தாலும் சில இடங்களில் மட்டுமே அவரது ட்ரேட் மார்க் காமெடியை ரசிக்க முடிகிறது. 'அங்கமாலி' டைரீஸ் சரத்குமாருக்கு இதில் கொஞ்சம் அதிகம் விளம்பரம் கிடைத்துள்ளது அவ்வளவுதான். கொஞ்ச நேரமே வந்தாலும் செம்பான் வினோத்தின் நடிப்பில் மூர்க்கம்.. ஹாஸ்டல் கட்ட படமெடுக்க உதவும் தயாரிப்பாளராக தந்து நிஜ கேரக்டரிலேயே நடித்துள்ளார் நடிகர் விஜய்பாபு.

கல்லூரிக்கு ஹாஸ்டல் கட்டுவது, அந்த பணத்தேவைக்காக படம் எடுப்பது என கதை தடம் மாறும்போதே திரைக்கதையும் தடுமாற துவங்குகிறது. க்ளைமாக்ஸிற்கு இருபது நிமிடத்திற்கு முன் மோகன்லாலிடம் வெளிப்படும் அந்த 'சந்திரமுகி' குணம் உண்மையிலேயே ட்விஸ்ட் தான்.. படத்தின் ஆரம்பத்தில் இருந்தே அந்த கேரக்டரை தூக்கி பிடித்திருந்தால் விறுவிறுப்பு கூடியிருக்கும்..

இயக்குனர் லால் ஜோஸ் படங்கள் பொழுதுபோக்கிற்கு உத்தரவாதம் தருபவை. அதேசமயம் உணர்ப்பூர்வமானவை.. இத்தனை வருடங்கள் கழித்து மோகன்லால் படத்தை இயக்கியிருப்பவர் புகுந்து விளையாடி இருக்க வேண்டாமா..? ஆனால் கல்லூரி கதையில் சினிமாவை நுழைத்து, அதில் மோகன்லாலையும் ஒப்புக்கு சப்பாணியாக பயன்படுத்தி சுவாரஸ்ய பற்றாக்குறையை உருவாக்கி விட்டார் லால் ஜோஸ்.

த்ரிஷ்யம், புலி முருகன் என பிரமாண்டங்களை பார்த்து ரசித்து யானைப்பசியுடன் இருக்கும் மோகன்லால் ரசிகர்களுக்கு இந்தப்படத்தில் சோளப்பொறியை மட்டுமே கொடுத்திருக்கிறார் இயக்குனர் லால் ஜோஸ்.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in