Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

C/O சாயிரா பானு (மலையாளம்)

C/O சாயிரா பானு (மலையாளம்),C/O saira banu (Malayalam)
  • C/O சாயிரா பானு (மலையாளம்)
  • இயக்குனர்:
21 மார், 2017 - 14:57 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » C/O சாயிரா பானு (மலையாளம்)

நடிகர்கள் ; மஞ்சு வாரியர், அமலா, ஷேன் நிகம், நிரஞ்சனா அனூப், ஜெகதீஷ், கணேஷ்குமார், ஜாய் மேத்யூ, சுஜித் சங்கர்

ஒளிப்பதிவு ; அப்துல் ரஹீம்

இசை ; மீஜோ ஜோசப்

கதை ; ஆர்.ஜே.ஷான்

டைரக்சன் ; ஆண்டனி சோனி


தான் பெறாத மகனை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்ற நீதிமன்ற கதவுகளை தட்டும் சாயிரா பானு என்கிற சாதாரண பெண்ணின் பாசப்போராட்டம் தான் மொத்தப்படமும்...நகரத்தில் உள்ள முக்கிய போஸ்ட் ஆபீஸ் ஒன்றில் போஸ்ட் வுமனாக வேலை பார்ப்பவள் சாயிரா பானு (மஞ்சு வாரியர்).. சட்டக்கல்லூரியில் படிக்கும் மகன் ஜோஷுவா பீட்டர் (ஷேன் நிகம்) மட்டும் தான், தனது உலகம் என அவனுக்காகவே வாழ்ந்து வருபவர்.. இத்தனைக்கும் திருமணமே செய்துகொள்ளாத சாயிரா பானுவின் தத்துப்பிள்ளை தான் ஜோஷுவா.. ஆனால் அவனோ கல்லூரி படிப்பை விட தனது தந்தையைப்போல போட்டோகிராபி கலையில் தான் ஆர்வம் காட்டுகிறான்.


மகனின் படிப்பு கெடுகிறதே என்று நினைத்தாலும் அவனது தந்தையைப்போல அவனுக்கும் அது ரத்தத்திலேயே ஊறியுள்ளது என்பதால் படிப்பை பாதிக்காத விதமாக, அரைமனதாக அவன் செயலை ஆதரிக்கிறாள் சாயிரா. மிகப்பெரிய நிறுவனம் ஒன்று வைத்த போட்டியில் தேர்வாகி வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஜோஷுவாவை தேடி வருகிறது.. ஆனால் மகனை விட்டு பிரிய மறுக்கும் சாயிரா அவனை அனுப்ப மறுக்கிறாள்.. சாயிராவின் மீது கோபத்தில் பிணங்கிய ஜோஷுவா, அவள் சொல்ல சொல்ல கேளாமல் தனது தந்தையின் மோட்டார் பைக்கை எடுத்துக்கொண்டு, லைசென்ஸ் கூட இல்லாத நிலையில், இரவு நேரத்தில் வெளியே கிளம்புகிறான்.. வழியில் குடிபோதையில் இருக்கும் அவனது சீனியர் வலுக்கட்டாயமாக அவனது வண்டியை வாங்கி ஓட்ட, வேறு வழியின்றி பின்னால் அமர்கிறான் ஜோஷுவா.. ஆனால் குடி போதையில் வண்டி ஓட்டிய சீனியர் சைக்கிளில் எதிரே வந்த சிறுவயது இளைஞன் மீது மோதியதில் அவன் உயிரிழக்கிறான்.


ஆனால் போலீசார் வழக்கு பதியும்போது பைக் ஓட்டியவன் செல்வந்தன் வீட்டு பிள்ளை என்பதால் அவனை நழுவவிட்டு, லைசென்ஸ் இல்லாத ஜோஷுவா மீது கொலைக்குற்றம் சுமத்துகின்றனர். இறந்து போனவன் வங்காளத்தை சேர்ந்த கட்டட தொழிலாளி என்பதால், அவனுக்கு சரியான நீதி கிடைக்கவேண்டும் என்பதால் இந்த வழக்கு நகரத்தில் உள்ள மிகப்பெரிய லாயரான ஆனி ஜான் தரவாடியிடம் (அமலா) ஒப்படைக்கப்படுகிறது. நேர்மைக்கும் கண்டிப்புக்கும் பெயர்பெற்ற அமலா, ஜோஷுவாவுக்கு தண்டனை பெற்றுத்தர தீவிரமாக இறங்குகிறார்... தனது மகன் பக்கம் உள்ள நியாயத்திற்காக சாயிரா பல வக்கீல்களை சந்தித்து கெஞ்சுகிறார்.. ஆனாலும் ஆனிக்கு எதிராக வாதாடினால் தோல்வி என்பதால் அனைவரும் பின் வாங்குகின்றனர்.. ஒரே ஒரு மரத்தடி வக்கீல் மட்டும் சயிராவின் நிலைகண்டு அவருக்கு உதவியாக கூடவே அலைந்தாலும், வழக்கில் இறங்கி வாதாடும் தைரியம் தன்னிடம் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறார்.


அதேசமயம் சில சட்ட பாயிண்ட்டுகளை எடுத்துக்கூறி மகனுக்காக சாயிராவையே நீதி மன்றத்தில் ஆஜராகி வழக்காட தூண்டி உற்சாகப்படுத்துகிறார்.. நீதிமன்றம் என்றாலே பதறும் சாயிராவால், ஆனியை எதிர்த்து வாதாடி தனது மகனை இந்த வழக்கில் இருந்து காப்பாற்ற முடிந்ததா என்கிற பாசப்போராட்டம் தான் மீதிக்கதை. தான் பெறாத மகனுக்குத்தான் திருமணம் ஆகாமாலேயே கன்னித்தாயாக மஞ்சு வாரியர் இருக்கிறார் என்பதும் அதற்கான பின்னணி காரணமும் நமக்கு தெரிந்தவுடனேயே மஞ்சுவின் கேரக்டர் மீது மிகப்பெரிய மரியாதை நம் மனதில் ஒட்டிக்கொள்கிறது.. அந்த மரியாதையுடன் முழுப்படத்திலும் மஞ்சுவின் போராட்டத்தை உடன் இருந்து பார்க்கும் சராசரி பார்வையாளனாக நாமும் மாறிவிடுகிறோம்.. மஞ்சு வாரியாரின் நடிப்பை காட்சி வாரியாக விமர்சிப்பதை விட, 'ஹவ் ஓல்டு ஆர் யூ' படத்தைப்போல அவருக்கான மிகப்பெரிய மரியாதையை இந்தப்படம் தந்திருக்கிறது என ஒற்றை வரியில் சொன்னாலே போதுமானது..


இளங்கன்று பயமறியாது என்பது போல இரண்டுங்கெட்டான் விடலைப்பையனாக (கிஸ்மத் புகழ்) ஷேன் நிகம் அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.. தன்னை வளர்க்கும் தாய் தனக்காக தனது வாழ்க்கையையே தியாகம் செய்த பெண் என்பதை கூட சரியாக உணரமுடியாத தனது தன்மையை பல காட்சிகளில் மிகச்சரியாக பிரதிபலித்து, நமது கோபத்தையும் சேர்த்து வாங்கி கட்டிக்கொள்கிறார்.

படத்தின் மூன்றாவது முக்கிய கதாபாத்திரமான அமலா, கிட்டத்தட்ட 25 வருடங்கள் கழித்து மலையாளத்தில் என்ட்ரியாகி இருக்கும் படம் இது.. தனது கார் கண்ணாடியை உடைத்த வழக்கில் மஞ்சுவின் மகன் குற்றமற்றவன் என போலீஸ் ஸ்டேஷன் வரை வந்து நிரூபித்து அவனை விடுவிக்கும் அமலா, ஹிட் அன்ட் ரன் வழக்கில் அவனுக்கு எதிராகவே வாதாட தயாராகும்போது, அவர் தனது கணவனை பிரிந்து வாழ்வது கூட சரியான நிலைப்பாடு தான் என நம்மை நினைக்க வைப்பதுடன் மனதில் மலையளவு உயர்கிறார்.. அதேசமயம் தனது மகனின் வாழ்க்கை என அவருக்குள்ளும் ஒரு சுயநலம் எட்டி பார்க்கும்போது ஒரு சராசரி பெண்ணுக்கே உரிய சராசரி குணத்தையும் பிரதிபலிக்க அவர் தவறவில்லை.


ஷேன் நிகம் தோழியாக, நட்பையும் காதலையும் பிரித்து பார்க்கும் பிராக்டிகலான இளம்பெண்ணாக வரும் நிரஞ்சனாவுக்கு இனி நிறைய வாய்ப்புகள் தேடி வரும் என்பது உறுதி.. படத்தில் மஞ்சு வாரியாருக்கு உதவியாக கூடவே அலையும் அந்த மரத்தடி வக்கீல் கேரக்டரில் நடித்திருக்கும் பிஜூ சோபனம், படம் முடிந்து வீட்டிற்கு வந்தபின்னும் நம் மனதில் இருந்து அகல மறுக்கிறார்..

தனக்கு சஸ்பென்ஷன் வாங்கி தந்தத காரணத்தை மனதில் வைத்து, பொய்வழக்கில் ஷேன் நிகமை சிக்கவைக்கும் சுஜித் சங்கர், அமலாவின் சிக்கலை தீர்ப்பதற்காக மஞ்சுவின் மகனை பலிகடாவாக்கும் போலீஸ் அதிகாரி கணேஷ்குமார், மகனை காப்பாற்ற தத்தளிக்கும் மஞ்சுவிற்கு நீதிமன்றத்தில் வாதாட உற்சாகம் கொடுக்கும் நீதிபதியாக வரும் ராகவன் என படத்தின் மற்ற உப காதாபாத்திரங்களும் நிறைவான நடிப்பை தந்துள்ளனர்..


கண்டிப்புக்கு பெயர் போன அமலா தனது மகனுக்கு செல்லம் கொடுப்பதாக நினைத்து விபரீதத்திற்கு வித்திடும் ஒரு செயலை தெரிந்தே எப்படி அனுமதிக்கிறார் என்கிற கேள்வி நம்முள் எழுகிறது. மகனை காப்பாற்ற துடிக்கும் மஞ்சு வாரியர், துணிச்சலுடன் அதற்கான முயற்சிகளில் இறங்கும்போது அங்கே சரியான இடத்தில் ட்விஸ்ட் வைத்த கதாசிரியர் ஆர்.ஜே.ஷானையும், இயக்குனர் ஆண்டனி சோனியையும் 'சபாஷ்' என முதுகில் தட்டி பாராட்டலாம். ஆனால் கடைசியில் இரண்டு தாய்களின் பாசப்போராட்டத்தில் மனிதாபிமானப்படி தீர்வு சொல்வதற்காக சட்டத்தை பலி கொடுத்தது எந்த விதத்தில் நியாயம் என்கிற கேள்வியும் எழுகிறது. எளிய மனிதர்களுக்கும் சட்டம் பற்றிய அடிப்படை விவரங்கள் தெரிந்திருக்க வேண்டும் என்பதன் அவசியத்தை, பள்ளிப்பாடங்களிலேயே அவை கற்றுகொடுக்கப்பட வேண்டியதன் கட்டாயத்தையும் பளிச்சென பொட்டில் அடித்தமாதிரி சொன்னதற்காக படம் முடிந்ததும் எழுந்து நின்று கைதட்டலாம்.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in