Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

ஆயிரத்தில் ஒருவன்

ஆயிரத்தில் ஒருவன்,
25 ஜன, 2010 - 00:00 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » ஆயிரத்தில் ஒருவன்

தினமலர் விமர்சனம்

நிகழ் காலத்தில் ஆரம்பித்து இறந்த காலத்திற்கு போகும் ஆங்கில படங்களின் தற்போதைய பாணி கதை! ஆனால் அதில்  எது இந்த காலம், எது அந்த காலம் என்பது உள்ளிட்ட எதுவுமே புரியாத அளவிற்கு தானும் குழம்பி, நம்மையும் குழப்பி இருக்கிறார் இயக்குனர் செல்வராகவன்.

கதைப்படி பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த சோழர்களுக்கும், பாண்டியர்களுக்கும் நிகழ்ந்த கடும் போரில் தப்பி பிழைத்த சோழ இளவரசரைத் தேடி தீவுப் பகுதி ஒன்றிற்கு போகும் தொல்லியல் து‌றை போராசிரியர் பிரதாப் பேத்தனும் ஆள் அட்ரஸ் இல்லாமல் போக... அவரையும், அந்த இளவரசரின் கடந்த காலத்தையும் தேடி பயணிக்கிறது ரீமாசென் த‌லைமையிலான இந்திய தொல்பொருள்துறை! அந்த குழுவில் பாதுகாப்புப் படை அதிகாரியாக அழகம்பெருமாளும், காணாமல் போன பிரதாப் போத்தனின் மகளாக ஆண்ட்ரியாவும், அவர்களுக்கு சுமை தூக்கிச் செல்லும் கூலிப்படை தலைவனாக கார்த்தியும் இடம் பெற்றிருக்கின்றனர். எழு கடல், ஏழு மலை, எக்கச்சக்க சோதனைகள், இழப்புகளையெல்லாம் தாண்டி அந்த சோழ இளவரசன் தன் படை பரிவாரங்களுடன் வாழ்ந்த இடத்தை கண்டுபிடிக்கும் இவர்கள், ஆச்சர்யம் ப்ளஸ் அதிசயமாக அவர் வாழ்ந்த கால கட்டத்தறி்குள்ளேயே பிரவேசிக்கின்றனர்.

அப்புறம்? அப்புறமென்ன...? சோழ இளவரசை தீர்த்துக் கட்ட வந்த பாண்டிய வம்சாவளியாக கார்த்தியையும், ஆயிரத்தில் ஒருத்தி ரீமாவையும் கட்டி வைத்து புரட்டி எடுக்கிறது பார்த்திபன் தலைமையிலான சோழ இளவரசு அண்‌ட் கோ. அதில் இருந்து தன் மந்திர, தந்திர, மாயா ஜாலங்களால் தப்பிப் பிழைக்கும் ரீமா., தான் சோழ மன்னரிடம் இருந்து இளவரசர் நாடு திரும்பும் செய்தி கொண்டு வந்த நங்கையென கூறி நாடகமாடுகிறார். நிஜத்தில் அவர் பாண்டியர் வம்சாவளியை சேர்ந்த பாவை என்பதும், கார்த்திதான் சோழ மன்னரின் தூதர் என்பதும் இளவரசர் பார்த்திபனுக்கும், ரசிகர்களுக்கும் ‌போகப் போக விளங்கி என்ன பயன்? அதற்குள் பார்த்திபனையும், அவன் தலைமையில் வாழும் ஜனங்களையும் துவம்சம் செய்கிறது ரீமா - அழகம்பெருமாள் அண்ட் கோவினரின் நவீன பாதுகாப்புப் படை. கையறு நிலையில் கைவிலங்குடன் அத்தனையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் ஹீரோ கார்த்தி. இளவரசன் பார்த்தி(பன்)யோ., தப்பித்தோம் பிழைத்தோம்... என இது நாள் வரை தனக்கு அரணாக இருந்த மக்களை அம்போ என விட்டு விட்டு கடலில் கலந்து மறைவது க்ளைமாக்ஸ்!

இப்படி அழகாகவும், ஆழமாகவும் சொல்லப்பட வேண்டிய கதையை, அவசர கோலத்தில் வாரி இறைத்த மாதிரி குழப்பியடித்துச் சொல்லி, இயக்குனர் செல்வராகவன் தன் இடத்தை தக்க வைத்துக் கொள்ள தவறியிருக்கிறார். பாவம்!

சரி, அவர்தான் பாவம் என்றால்... பருத்திவீரன் கார்த்தியும், பார்த்திபனும் தங்கள் நடிப்பு மூலம் நம்மை காப்பாற்றுவார்கள் என பார்த்தால்... அவர்களும் முகம் முழுக்க கரியை பூசிக் கொண்டு படம் முழுக்க நம்மை கதறடிக்கின்றனர். அதிலும் கார்த்தி ஆரம்ப காட்சிகளில் ரீமாவிடமும், ஆண்ட்ரியாவிடமும் செய்யும் சேட்டைகள் மூலம் நம்மை உட்கார வைக்கின்றார். தொடர்ந்து அவ்வாறே வைத்திருப்பார் என நினைத்தால், அய்யகோ... பருத்திவீரன் கார்த்தியா இது? என கேட்க வைத்து ரசிகர்களை ‌‌ஙே என விழிக்க வைக்கிறார். பாவம்!. இண்டர்வெல்லுக்கு பிறகு இவருக்கு நடிப்பு வராததற்கு காரணம், இயக்குனரின் தவறா? அல்லது இவரது ஈடுபாடில் இடையில் ஏற்பட்ட கோளாறா? என சாலமன் பாப்பையா தலைமையில் தனியாக ஒரு பட்டிமன்றமே வைக்கலாம் என்றால் பாருங்களேன்!

சாதாரணமாக மேடைகளில் புதுமையை பேசி ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்ளும் பார்த்திபன் இதில் பழமை பேசி நம்மை கொல்கிறார். கார்த்தி, பார்த்தி, செல்வராகவன் அத்தனை பேரிடமிருந்தும் நம்மை காபந்து செய்வது காதாநாயகி ரீமாசென்தான். இடைவேளைக்கு பின் அவர் பண்ணும் கொடுமைகளில் இருந்தும் நம்மை மோனலிசா முகத்துடன் காபந்து செய்வது பிரிதொரு நாயகி ஆண்ட்ரியா என்றால் மிகையல்ல!.

ஏகப்பட்ட கஷ்ட, நஷ்டங்களைத் தாண்டி சோழ இளவரசன் வாழ்ந்த இடத்தை கண்டு பிடித்ததும் கார்த்தி கையில் கிடைக்கும் மது புட்டியில் வற்றாத அருவியாக மது வந்து கொண்டே இருப்பதும், அதை குடித்ததுமே அங்கு மேயும் ஒட்டகத்தை அடித்து தின்று அவர்கள் காலத்தில் நுழைவதும் நம்ப முடியவில்லை என்றாலும், ரசிக்கும்படியானது. அதேசமயம் சோழர் காலத்திற்கு போனதும் ரீமா, நின்று கொண்டே சிறுநீர் கழிப்பதும், அதை இரும்பு சட்டியில் பிடித்து ஏதோ மந்திர, தந்திரம் செய்வதும்‌, பசியோடு இருக்கும் குழந்தைக்காக பெண்மணி ஒருவர் தன் மார்பை திறந்து கசக்கி உதிரத்தை பாலாக எரியும் தீயிலும், அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் விலங்குகளின் இறைச்சியிலும் தெளித்து ஒரு கறிதுண்டை வாங்கி போவது உள்ளிட்ட இன்னும் சில காட்சிகளும் செல்வராகவனின் சகிக்க முடியாத வக்கிர வெளிப்பாடு! இந்த காட்சிகளின் அவசிய அத்தியாவசி‌யம் என்ன? என்பது இயக்குனருக்‌கே வெளிச்சம்! இக்கதையை காட்சிப்படுத்தலுக்கு இரண்டு, மூன்று ஆண்டுகள் எடுத்துக் கொண்ட இயக்குனர், கோர்வையாக எல்லோருக்கும் புரியும்படி கதை சொல்ல இரண்டு, மூன்று வாரங்களையாவது எடுத்துக் கொண்டிருக்கலாம்.

‌சோழ இளவரசின் அடிமைகளாக சிறைபிடிக்கப்பட்ட நிலையில் ஆண்ட்ரியாவின் அப்பா பிரதாப் போத்தனை அடையாளம் கண்டு கொண்டு அவரை சங்கிலியால் பிணைக்கப்பட்ட கல்குண்டு மனிதனிடம் இருந்து காபந்து செய்யும் ஒரு காட்சியில் மட்டும் ஹீரோவாக தெரியும் கார்த்தி, அதற்கு முன்னும், பின்னும் பரிதாபத்திற்குரிய பாத்திரமாகவே வந்து போவது வேதனை. படத்திற்கு ஆயிரத்தில் ஒருவன் என பெயர் சூட்டியதற்கு பதிலாக ஆயிரத்தில் ஒருத்தி என பெயர் சூட்டியிருந்தாலாவது பொருத்தமாக இருந்திருக்கும். காரணம்... ரீமாசென்தான் அத்தனை சாகசங்களும், சூழ்ச்சிகளும் செய்து தப்பி பிழைத்த சோழ இளவரசு பார்த்திபனை மீண்டும் ஓட ஓ‌ட விரட்டி அடிக்கிறார்!

சில அருவருக்கத்தக்க காட்சிகளால் பாடல் காட்சிகளில் பட்டையை கிளப்பும் ரீமா, ஆண்ட்ரியாவின் கவர்ச்சி குத்துக்களையும், இயல்பான மனநிலையுடன் ரசிக்க முடியாதது வருத்தம்! அப்படியும் உம்மேல ஆசதான்... மாலை நேரம்... உள்ளிட்ட பாடல்கள் மதிமயக்கும் ரகம்!

ஒளிப்பதிவாளர் ராம்ஜி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், படத்தொகுப்பாளர் கோலா பாஸ்கர், பாடலாசிரியர் வைரமுத்து என ஜாம்பவான்கள் செல்வராகவனுடன் கைகோர்த்தும் ஆயிரத்தில் ஒருவன், ஆயிரத்தில் ஒருவரையாவது கவருமா என்பதும் ஆயிரத்தில் ஒருவருக்காவது புரியுமா என்பது சந்தேகமே!

ஆயிரத்தில் ஒருவனை ஹாலிவுட்டிற்கு நிகரான டெக்னிக்கல், விஷூவல் எபெக்ட்களுக்காக ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய படமென்று பாராட்டலாம். அதே சமயம் ஒவ்வொரு காட்சிகளும் கதைக்கு வாங்க, கதை என்னங்க, கைடு ‌குடுங்க என சத்யம் சென்னை சத்யம் சினிமாஸ் மாதிரி ஹைகிளாஸ் தியேட்டரிலும் லோ கிளாசாக ரசிகர்களை கத்துவதை தவிர்க்க இயக்குனர் மேலும் முயற்சித்திருக்கலாம். பாவம்!

ஆயிரத்தில் ஒருவன் : லட்சத்தில் ஒருவனுக்காவது புரிந்தால் சரி!

---------------------------------------------

கல்கி விமர்சனம்

* ஹாலிவுட் படங்களுக்கு இணையாக எடுக்கப்பட்டிருக்கும் ஆயிரத்தில் ஒருவன், சில பல  ஆங்கிலப் படங்களை நினைவுறுத்துவதை மறுப்பதற்கில்லை.
* பன்னிரெண்டாம் நூற்றாண்டில் பதுக்கி வைக்கப்பட்ட  சோழர்குல வாரிசையும், பாண்டியனின்  குல தெய்வத்தையும்  தேடிப் புறப்படுகிறது ஒரு படை; ஏழு மலை தாண்டி, ஏழு கடல் தாண்டி.
* திகில்,திரில், ஃபேன்டஸியாகக் கதையை நகர்த்த முற்பட்டிருக்கிறார் இயக்குனர் செல்வராகவன்.
* முதற்பகுதி முழுக்க கார்த்தி என்றால், மறுபாதியில் ரீமாசென் வில்லி அவதாரம் எடுக்கும் ஹீரோ.
* ஆண்ட்ரியா, ரீமாசென் இருவருக்கும் மத்தியில் மாட்டிக்கொண்டு உளறுவதும், ஆதிவாசிகளின் அச்சுறுத்தலில் அலறுவது என காமெடி, த்ரில் எக்ஸ்பிரஷன்களை மாற்றி மாற்றிக் காட்டி நம்பிக்கையூட்டுகிறார் கார்த்தி.
* சோழர்களின் மன்னரான பார்த்திபன், தம் சொந்த மக்களையே நரபலி தருவது நம்பும்படி இல்லை.
* கிராஃபிக்ஸ் காட்சிகளின் ஓப்பனிங் நல்லா இருக்கு. பினிஃஷிங் சரியில்லையேப்பா...!
* பின்னணி இசையில் பம்மும் ஜி.வி.பிரகாஷ் "உன் மேல ஆசதான்'' பாடலில் ""பிரசன்ட் சார்'' சொல்கிறார்.
* முதல் பாதியில் கவர்ச்சியும், மறுபாதியில் குழப்பங்களும் திரைக்கதையை சற்றே டொங்கன் விழுந்தது போல ஆக்குவதை இயக்குனர் கவனித்திருக்கலாம்.
* ஏன் இவ்வளவு நீஈஈஈளம். ஆனாலும், படம் அரைமணி நேரமாவது மனசை ஆக்கிரமிப்பதை மறுப்பதற்கில்லை.

ஆயிரத்தில் ஒருவன் : நம்மில் ஒருவன்

---------------------------------------------

குமுதம் விமர்சனம்

"லவ், சென்ட்டிமென்ட், ஆக்ஷன், த்ரில்லர் என்ற சிம்பிளான, சிக்கலில்லாத தமிழ் சினிமாவின் அரிச்சுவடியை அப்படியே தள்ளி வைத்துவிட்டு, காலத்திற்கு முன்னும் பின்னுமான முடிவற்ற பயணம் என்று தார்கோ வெஸ்கி, ரஃப்னோவ், குரசோவா வழியில் தமிழில் ஒரு புதிய முயற்சியில் செல்வராகவன் இறங்கியிருப்பது எதிர்பாராத ஆச்சர்யம்.

எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் தாய் மண்ணில் இருந்து வேரோடு பிடுங்கி எறியப்பட்டு, வெளியுலகத்திற்கு தெரியாத வியட்நாம் தீவில் தன் சதையைப் புசித்து, தன் குருதி குடித்து வாழ்கிறது சோழப் பரம்பரை...!

13ம் நூற்றாண்டின் கடைசி சோழ மன்னனின் வாரிசை பாண்டியனிடம் இருந்து பாதுகாக்க பதுங்கி வாழும் இவர்களது ஒரே நம்பிக்கை, "தாய் மண்ணில் இருந்து புறப்பட்டு வரும் தூதுவன் ஒருவன் தங்களை தாய் தேசத்திற்கு அழைத்துச் செல்வான்!'' என்பது மட்டுமே...! சோழ மன்னனும் (பார்த்திபன்) மக்களும் எதிர்பார்த்தபடியே அந்தத் தூதுவன் வருகிறான். ஆனால் ஒருவனல்ல... இருவர் (ரீமாமென், கார்த்தி)

இவர்களில் யார் உண்மையான தூதுவன்? வந்தவர்களின் நோக்கம் என்ன? அவர்களால் சோழர்களின் நூற்றாண்டு கால சோகம் முடிவுக்கு வந்ததா? என்பது மீதிக்கதை.
அதை சராசரி சம்பவங்களாக சொல்லாமல், உருவகங்களாகவும், படிமங்களாகவும் உணர்வு தளத்தில் இயக்குனர் சொல்லியிருப்பது துணிச்சலான முயற்சி...!

ரீமா சென்னின் நவீன படையும், பார்த்திபனின் பாரம்பரிய வீரர்களும், மோதிக்கொள்ளும் போர்க்களக் காட்சியை இருவேறு கலாச்சாரப் பின்னணிகளின் மோதல்களமாக சித்தரித்து, நரமாமிசம் தின்பவனைக் காட்டிலும் இழிவான நிலையில் நாகரிக மனிதன் இருப்பதை இயக்குனர் நறுக்கென சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது.

இப்படி பார்த்துப் பார்த்து செதுக்கிய படத்தின் பின் பாதி காட்சிகளுக்கு முற்றிலும் முரணாக, "டோராவின் பயணங்கள்'' போல் ஆபத்தான கடல், சிவப்பு மனிதர்கள், பாம்புத் தீவு, புதை மணல், நடராஜர் நிழல் என தேவையில்லாத திகில்களையும், வன்முறைகளையும் வலிந்து திணித்தது மெயின் கதையை பில்ட்அப்புக்கு பலி கொடுத்துவிட்டது.
மன்னர் காலத்துக் கதை என்பதற்காக ஆண்ட்ரியாவும், ரீமாசென்னும் அடிக்கடி ஆடையில்லாத புறமுதுகு காட்டுவது அவசியமில்லாதது'' (என்றாலும் ஆர்வத்தைத் தூண்டுவது!!!).

பொருத்தமான இசை (ஜி.வி.பிரகாஷ்), சிரமமான ஒளிப்பதிவு (ராம்ஜி), நேர்த்தியான ஆர்ட் டைரக்ஷன் (சந்தானம்), ரிஸ்க்கான ஸ்டண்ட் (சிவா) என சக தொழில்நுட்பக் கலைஞர்கள் சளைக்காமல் உழைத்தும் செல்வராகவனின் சின்னச் சின்ன ஸ்கிரிப்ட் கோளாறுகளால் "ஆயிரத்தில் ஒருவன்'' சிறிது தடுமாறுகிறான்!''

தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு அழைத்துப் போயிருக்கிறார் செல்வராகவன். ஆனால், சராசரி ரசிகனுக்கு இது புரியாதப் புதிர்.

குமுதம் ரேட்டிங் : நன்று.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

ஆயிரத்தில் ஒருவன் தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in