நாயகன் - சாய் தரண் தேஜ்
நாயகி - ராக்ஷி கண்ணா
இயக்குனர் - அணில் ரவிபுடி
வெற்றி தோல்விகளுடன் நிதானமாக திரை உலக வாழ்க்கையில் பயணித்து வரும் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் குடும்ப வாரிசு சாய் தரண் தேஜ் இம்முறை சுப்ரீம் எனும் நகைச்சுவை மற்றும் ஆக்ஷன் கலந்த குடும்ப பொழுபோக்கு திரைப்படத்துடன் களம் காண்கின்றார்.
சுப்ரீம் படத்தின் கதைப்படி, பாலு எனும் டாக்ஸி டிரைவராக வரும் சாய் தரண் தேஜ், சிறுவன் (மிஹைல் காந்தி ) ஒருவனை தனது தந்தை ராஜேந்திர பிரசாத்துடன் சேர்ந்து தனது வீட்டில் வளர்த்து வருகின்றார். திடீரென அச்சிறுவன் கடத்தல் கும்பலால் கடத்தப்படுகின்றார். அச்சிறுவன் ஒரிஸாவிலிருக்கும் தகவல் தெரிந்து அவனை மீட்பதற்காக பாலு ஒரிஸா புறப்படுகின்றார்.
அங்கு சென்றதும் கபீர் சிங் மற்றும் ரவி கிஷான் இருவரும் இந்த கடத்தலின் பின்னணியில் இருப்பது பாலுவுக்கு தெரிய வருகின்றது. தனது காதலியுடன் இணைந்து பாலு வில்லங்களை எதிர்த்துப் போராடி அச்சிறுவனை மீட்டாரா? இல்லையா? கடத்தலின் பின்னணி என்ன? இப்படத்தில் நாயகி ராக்ஷி கண்ணாவின் பங்கு என்ன என்பன போன்ற கேள்விகளுக்கு விடையாக அமைக்கின்றது இப்படத்தின் மீதி கதை.
படத்தின் முதல் பாதி சிரிப்புக்கு பஞ்சமில்லாமல் செல்கின்றது. இயக்குனர் அணில் ரவிபுடி நகைச்சுவை காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது வீண் போகவில்லை. தனது முந்தைய படங்களைக் காட்டிலும் இப்படத்தில் நடிப்பிலும் நடனத்திலும் சாய் தரண் தேஜ் ஒரு படி முன்னேற்றம் கண்டுள்ளார். நாயகனை மட்டும் முன்னிலைப்படுத்தாமல் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து இயக்குனர் அணில் ரவிபுடி சபாஷ் அள்ளுகின்றார்.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிப்புக்கும் முக்கியத்துவம் தரும் வேடத்தில் ராக்ஷி கண்ணா நடித்துள்ளார். திரையில் அழகால் வசீகரிக்கும் ராக்ஷி கண்ணா, கிஷோருடனான நகைச்சுவைக் காட்சிகளில் கிச்சுகிச்சு மூட்டி சாய் தரணுடனான காதல் காட்சிகளில் ரசிக்க வைக்கின்றார். காமெடி வில்லானக வரும் ரவி கிஷான், ராஜேந்திர பிரசாத், சாய் குமார் ஆகியோர் பாத்திரம் அறிந்து பளிச்சிடுகின்றனர். சிறுவனாக நடித்துள்ள மிஹைல் காந்தி உணர்ச்சிகரமான நடிப்பினால் ரசிகர்களைக் கவர்ந்து விட்டார்.
இப்படத்தின் திரைக்கதை அமைப்பே பெரும் பலவீனமாக அமைந்துள்ளது. முதல் 15 நிமிடங்களுக்கு பின்னர் திரைக்கதையில் என்ன நிகழப்போகின்றது என கணிக்கும் வகையில் காட்சிகள் நகர்கின்றன. எதிர்பார்த்தபடியே இரண்டாம் பாதி நகர்வதும் சில லாஜிக் ஓட்டைகளையும் இயக்குனர் கவனிக்க தவறிவிட்டார். சிறுவனைத் தேடும் இடங்களில் சாய் தரண் செய்யும் ஹீரோயிசம் வேலைகள் முகம் சுளிக்க வைக்கின்றன.
மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் அன்டம் ஹின்டோலம் எனும் ரீமேக் பாடலுக்கான மெனக்கெடலில் படக்குழு வெற்றி பெற்றுள்ளது. அப்பாடலுக்கான இடங்களை தேர்வு செய்ததும் ஒளிப்பதிவாளரின் காமிரா ஜாலங்களும் பாராட்டும் படி அமைந்துள்ளன. சாய் கார்த்திக் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். மொத்தத்தில் அணில் ரவிபுடி சுப்ரீம் படத்தின் திரைக்கதையில் கோட்டை விட்டிருந்தாலும், நகைச்சுவை, காதல், ஆக்ஷன் என பொழுதுபோக்கு அம்சங்களைச் சேர்த்து ரசிக்கும்படியே கொடுத்துள்ளார்.