நடிகர்கள் : சோனம் கபூர், ஷபானா ஆஷ்மி
இயக்கம் : ராம் மத்வானி
தயாரிப்பு : பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ
அறிமுக இயக்குநர் ராம் மத்வானி இயக்கத்தில், மறைந்த ஏர்கோஸ்டர்ஸ் நீர்ஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து, அதில் நீர்ஜாவாக சோனம் கபூர் நடித்து வெளிவந்திருக்கும் படம் தான் ''நீர்ஜா''. இப்படம் ரசிகர்களை எந்தளவிற்கு கவர்ந்தது என்று இனி பார்ப்போம்...
எல்லா பெண்களையும் போலவே மிகவும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருபவர் ஏர்கோஸ்டர்ஸ் நீர்ஜா எனும் சோனம் கபூர். மும்பையில் பெற்றோர்கள் மற்றும் இரண்டு சகோதரர்களுடன் வசித்து வரும் நீர்ஜா, நடக்க போகிற விபரீதம் தெரியாமல் வழக்கம் போல் 1986ம் ஆண்டு செப் 5ம் தேதியான அன்று பணிக்கு செல்கிறார்(படத்தின் கதை அந்தக்காலக்கட்டத்தில் நடப்பது போன்று படமாக்கப்பட்டுள்ளது). மும்பையில் இருந்து கராச்சி வழியாக அமெரிக்கா செல்லும் பேன் இந்தியா 3 விமானத்தில் மூத்த விமான பணிப்பெண்ணாக இருக்கிறார் நீர்ஜா.
இந்தநிலையில், திடீரென விமானத்தில் இருக்கும் 4 பயங்கரவாதிகள் விமானத்தையும், விமான பயணிகளையும் கடத்துகின்றனர். அதன்பின் என்ன நடக்கிறது, பயங்கரவாதிகளின் செயல்களை நீர்ஜா எப்படி எதிர்கொள்கிறார், பயணிகளுடன் அவரும் காப்பாற்றப்பட்டாரா.? இல்லை பயங்கரவாதிகளின் துப்பாக்கி பலியானாரா.?, பயங்கரவாதிகளின் நிலை என்ன என்பதை விறுவிறுப்பாகவும், த்ரில்லராகவும் விவரிக்கிறது நீர்ஜா படத்தின் மீதிக்கதை.
நீர்ஜாவாக, அச்சு அசலாக வாழ்ந்திருக்கிறார் சோனம் கபூர். விமானத்தில் பயணிகளை காப்பாற்ற அவர் மேற்கொள்ளும் போராட்டங்கள் சூப்பர்ப். ஆனால் சில சமயங்களில் அவரது நடிப்பு ஓவர் ஆக்டிங்க்காக தெரிவது பலவீனம்.
நீர்ஜாவின் அம்மாவாக வரும் ஷபானா ஆஷ்மியின் நடிப்பு சூப்பர். எமோஷனல் காட்சிகளில் அவரது நடிப்பு பிரமாதம்.
அறிமுக இயக்குநர் ராம் மத்வானி இப்படத்தை இயக்கியுள்ளார். ஒரு வாழ்க்கை வரலாற்று படத்தை, அதுவும் விமான கடத்தலை மையமாக வைத்து உருவாக்கியுள்ள ராம் மத்வானி திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார். மேலும் படம் மெதுவாக நகருவதும் படத்திற்கு பலவீனமாக தெரிகிறது. என்னதான் குறைகள் இருந்தாலும் படத்தின் கடைசி 15 நிமிட காட்சிகள் ரசிகர்களை கட்டிபோட செய்வதுடன், படம் பார்ப்பவர்களின் மனதையும் உருக செய்துவிடுகிறார். அதற்காகவே இயக்குநர் ராமை பாராட்டலாம்.
'நீர்ஜா' படத்தில் ஆங்காங்கே சில குறைகள் இருந்தாலும், சோனம் கபூரின் அற்புதமான 'நீர்ஜா' கேரக்டருக்காகவே ''நீர்ஜா'' படத்தை கண்டிப்பாக அனைவரும் ஒருமுறை பார்க்கலாம்.
மொத்தத்தில், ''நீர்ஜா - சாதாரண பெண்ணின் அசாதாரண சக்தி''