Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

என்னு நிண்டே மொய்தீன்(மலையாளம்)

என்னு நிண்டே மொய்தீன்(மலையாளம்),Ennu ninte moideen
  • என்னு நிண்டே மொய்தீன்(மலையாளம்)
  • பார்வதி
ஆர்.எஸ்.விமல் இயக்கத்தில், ப்ருத்விராஜ் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் இது.
22 செப், 2015 - 13:40 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » என்னு நிண்டே மொய்தீன்(மலையாளம்)

நடிகர்கள் : பிருத்விராஜ், பார்வதி

டைரக்சன் : ஆர்.எஸ்.விமல்


கோழிக்கோட்டில் உள்ள முக்கம் கிராமத்தை சேர்ந்த பிருத்விராஜ் (மொய்தீன்) கால்பந்து வீரர். அதே ஊரை சேர்ந்த தனது நண்பன் பாலாவின் தங்கையான பார்வதியை (காஞ்சனமாலா) காதலிக்கிறார். ஆனால் ஊரே மதிக்கும் பெரியவரான பிருத்விராஜின் தந்தை சாய்குமாரும் பார்வதியின் தந்தையும் நண்பர்கள். இந்து, முஸ்லீம் என்கிற மதம் தாண்டி ஒருவரை ஒருவர் மதிப்பவர்கள்.


பிருத்விராஜ் - பார்வதி காதல் விவகாரம் இரண்டு வீட்டிற்கும் தெரியவருகிறது.. டாக்டருக்கு படிக்கும் பார்வதியின் படிப்பை நிறுத்தி வீட்டிற்குள் சிறை வைக்கிறார்கள் அவரது அண்ணனும் தாய்மாமானும். பிருத்விராஜ் காதலில் உறுதியாக இருப்பது கண்டு கோபம் கொள்ளும் அவரது தந்தை அவரை வீட்டைவிட்டே வெளியேற்றுகிறார். காதலுக்கு குறுக்கே மதம் தடையாக நிற்கிறது.


அங்கே பார்வதிக்கு வேறு இடத்தில் திருமணம் நடத்தி வைக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன.. ஒருகட்டத்தில் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்யப்போகும் முடிவு பிருத்விராஜின் தந்தைக்கு தெரியவர, இதனால் தேவையில்லாமல் இந்து-முஸ்லீம் கலவரம் மூண்டுவிடக்கூடாது என நினைக்கும் அவர் மகனென்றும் பாராமல் பிருத்விராஜை கத்தியால் குத்தி சாய்க்கிறார்.. ஆனாலும் அதிலிருந்து உயிர் பிழைக்கிறார் பிருத்விராஜ். நீதிமன்றத்திலும் தனது தந்தையை காட்டிகொடுக்காமல் தப்பிக்க வைக்கிறார். மகனின் நேர்மையையும் காதலில் கொண்டுள்ள மன உறுதியையும் கண்டு குற்ற உணர்வால் உயிர் துறக்கிறார் தந்தை சாய்குமார்.


மண வாழ்க்கை என்றால் அது பிருத்விராஜுடன் தான் என பிடிவாதம் காட்டுகிறார் பார்வதி. வருடங்கள் உருண்டோட அவருக்குப்பின் உள்ள அவரது ஐந்து தங்கைகளும் வளர்ந்து ஆளாகி திருமணமாகி செல்லும் வரை பார்வதியின் வைராக்கியம் தொடர்கிறது.. அதேபோல அவரது வீட்டாரின் வீம்பும் குறையவில்லை.. அதே வீட்டுக்காவலில் தான் பார்வதி இன்னும் இருக்கிறார்.


கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கழிந்து இருவருக்கும் லேசாக நரை எட்டி பார்க்க ஆரம்பிக்கும் சமயம் இருவரும் ஊரைவிட்டு சென்று திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கும் நேரத்தில் பார்வதியின் மூத்த அண்ணன் இறந்துவிட அந்த முயற்சியும் அப்படியே நின்றுவிடுகிறது.


மீண்டும் சில வருடங்கள் கழித்து இதேபோல ஒரு முயற்சியை எடுக்கும் பிருத்விராஜ், இந்தமுறை இருவரும் வெளிநாட்டுக்கு சென்று வாழ முடிவெடுக்கிறார். இந்தநிலையில் இவர்களது காதலுக்கு வில்லனாக இயற்கை குறுக்கிடுகிறது.. காதலர்களின் நிலை என்ன ஆனது என்பது மனதை கனக்க வைக்கும் க்ளைமாக்ஸ்.


அமரத்துவம் வாய்ந்த காதலை படமாக்கும்போது மட்டும் அதற்கு தனி முக்கியத்துவம் கிடைத்துவிடுகிறது. அந்தவகையில் தான் இந்த என்னும் நிண்ட மொய்தீன் என்ற படம் வெளியாகி இருக்கிறது. 1960களில் கேரளாவின் கோழிக்கோட்டில் புகழ்பெற்ற மொய்தீன் - காஞ்சனமாலா ஜோடியின் அமரத்துவம் வாய்ந்த வெள்ளித்திரை காவியமாக மாற்றியிருக்கிறார் அறிமுக இயக்குனரான ஆர்.எஸ்.விமல்.


இதுவரை நாம் பார்த்திராத ஒரு புதிய ஆளாக, புதிய தோற்றத்தில் மொய்தீனாகவே மாறியுள்ளார் பிருத்விராஜ். பார்வதியின் மேல் விரல் நகம் படாமல் காதலை வளர்ப்பதிலும், காதலிக்கு தடைகளை மீறி கடித பரிமாற்றம் நிகழ்த்தும்போதும் பிருத்விராஜை தொடர்ந்து ரசித்துக்கொண்டே இருக்க தோன்றுகிறது. காதலுக்காக தந்தையும் தனது நண்பனும் தரும் எதிர்ப்புகளை புத்திசாலித்தனமாக சமாளிக்கும் பிருத்விராஜ், தனது தந்தையே தன்னை கொல்ல துணியும்போதும் காட்டும் ரியாக்சன் எக்சலண்ட்.


இன்றும் கூட திருமணமே செய்துகொள்ளாமல் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் நிஜ கதாபாத்திரமான காஞ்சனமாலாவின் ஆரம்பகாலம் இப்படித்தான் இருந்திருக்கும் என்பதை ஒரு வாழ்க்கையாக வாழ்ந்தே காட்டியிருக்கிறார் பார்வதி. மேக்கப்பிலும் முகத்தோற்றத்திலும் வித்தியாசம் காட்டியிருக்கும் பார்வதி, நொடிக்கு நொடி முகபாவனைகளை மாற்றி தான் ஒரு நடிப்பு ராட்சஸி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.


பார்வதியின் அண்ணனாக வரும் பாலா (சிறுத்தை சிவாவின் தம்பி) நண்பனாக இருந்தாலும் காதல் என வரும்போது எதிரியாக மாறும் சராசரி மனிதனாக தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார். பார்வதிக்காக ஒருதலையாக ஏங்கும் அவரது முறைப்பையனாக நடித்திருக்கும் டோவினோ தாமஸ், தனது காதலுக்காக பல வருடங்களாக திருமணமே செய்யாமல் இருப்பதை பார்க்கும்போது அவரது கதாபாத்திரத்தின் மேலும் மரியாதை ஏற்படுகிறது.


ஊர்ப்பெரியவராக வரும் சாய்குமார், இந்து-முஸ்லீம் ஒற்றுமை குலைந்துவிட கூடாது என்பதற்காக தனது மகனையே கொல்லத்துணியும் காட்சி எந்த தந்தையும் செய்ய துணியாதது. ஆனால் நிஜத்தில் இப்படித்தான் நடந்திருக்கிறது என நினைக்கும்போது புல்லரிக்கிறது. பிருத்விராஜின் அம்மாவாக வரும் லேனா தனது மன உணர்வுகளை அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார். இறுதியில் பார்வதியின் கைபிடித்து அவளை தன் வீட்டிற்கு அழைத்துச்செல்லும் ஒரு காட்சி போதும் சாம்பிளுக்கு.


படத்தில் நடித்துள்ள மற்ற கதாபாத்திரங்கள் அனைவருமே நிறைவான நடிப்பை வழங்கியுள்ளார்கள்.. கதை 1960களில் நடப்பது என்பதை சத்தியமாக நம்பவைக்கிறது ஜோமோன் டி,ஜானின் பிரமிக்கவைக்கும் ஒளிப்பதிவு. அதுமட்டுமல்ல படம் ஆரம்பம் தொட்டே மழையும் ஒரு கதாபாத்திரமாக படம் நெடுக உடன் வருவது மயிலறகால் வரும் இதமான சிந்தனை. இறுதியாக காதலுக்கு எமனாக வரும் அந்த படகு விபத்து காட்சி நம் மனதை கலங்கடித்துவிடுகிறது. பின்னணி இசையால் காட்சிகளை கவிதையாக்கி இருக்கிறார் கோபிசுந்தர்.


ஐம்பது வருடத்திற்கு முந்திய காதல் கதை என்றாலும் அதை சிறிதுகூட சுவாரஸ்யம் குறையாமல் படமாக தந்திருப்பது இயக்குனர் ஆர்.எஸ்.விமலின் திறமையை பறைசாற்றுகிறது. பிருத்விராஜ் - பார்வதி இருவரும் தப்பிப்போய் திருமணம் செய்துகொள்ள வாய்ப்புகல் பல இருந்தும் தங்கள் காதலால் ஊருக்கும் பெரியவர்களுக்கும் பிரச்சனை வந்துவிடக்கூடாது என்பதற்காகவே தங்கள் காதலை தியாகம் செய்வதை பார்க்கும்போது நெகிழாமல் இருக்க முடியவில்லை.


என்னு நிண்டே மொய்தீன் - காதலை நேசிப்பவர்கள் மட்டுமின்றி ஜாதி மதத்தின் பெயரால் அதை எதிர்ப்பவர்களும் கட்டாயம் பார்க்கவேண்டிய படம்.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in