Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

வாமனன்

வாமனன்,
19 ஜூலை, 2009 - 00:00 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » வாமனன்


தினமலர் விமர்சனம்


சினிமா நடிகராக வேண்டுமென்ற ஆசையில் "'சிட்டி'க்கு வரும் கிராமத்து இளைஞன் ஜெய், செய்யாத ஒரு கொலைக்காகவும், தன்னிடம் இல்லாத ஒரு கொலை ஆதார டேப்பிற்காகவும் நகரத்து “அரசியல் வாதிகளிடமும் அதிகார வர்க்கத்திடமும் மாட்டிக் கொண்டு படும்பாடுதான் "வாமனன்'.

கதைப்படி, நடிகர் ஆசையில் சென்னை வரும் ஹீரோ ஜெய் தன் ஊர் நண்பன் காமெடி சந்தானம் அறையில் தங்கி வாய்ப்பு தேடுகிறார். யதேச்சையாக ஒருநாள் நாயகி ப்ரியாவை ரெயில்நிலையத்தில் சந்திக்க அதுமுதல் அவர் மீது காதல் கொள்கிறார். இந்நிலையில் நடிப்பிற்காக ரகுமானை ஃபாலோ செய்து அவரது மேனரிசங்களை கற்றுக் கொள்ள முற்பட அவருடன் நெருக்கமான நட்பு ஏற்படுகிறது ஜெய்க்கு. அதுமுதல் பூட்டியிருக்கும் வீட்டிற்குள் போய் பொழுது போக்கி திரும்பும் வழக்கமுடைய  ரகுமான், ஜெய்யையும் தன்னுடன் கூட்டி போக ஆரம்பிக்கிறார். அதுமாதிரி ஒருநாள் மாடனும், நடிகையுமான லட்சுமிராய் வீட்டிற்கு ஜெய்யை அழைத்து போகிறார் ரகுமான். திருடும் நோக்கத்துடன் லட்சுமிராய் வீட்டிற்கு போகாத ஜெய்யின் சட்டை பையில் லட்சுமியின் கழுத்து சங்கிலி ஒன்று வீடு திரும்பியதும் தட்டுப்படுகிறது. அதை திருப்பி கொடுத்தால் லட்சுமிராயுடன் நட்பு ஏற்படும். அதன் மூலம் பெரிய நடிகர் ஆகிவிடலாம் என திட்டமிடும் ஜெய், அவ்வாறே செய்கிறார். அவர் திட்டமிட்டபடியே நட்பும் ஏற்படுகிறது. ஆனால் சில நாட்களிலேயே லட்சுமிராய் கொலை செய்யப்படுகிறார். அந்த கொலைப் பழி ஜெய் மீது தூக்கி போட்டது யார்? காரணம் என்ன? ஜெய்யின் காதல் என்னவாயிற்று....? என இன்னும் பல கேள்விகளுக்கு ஜெய் வாமன அவதாரம் எடுத்து  வில்லன்களை  பந்தாடி பரபரப்பாக பதில் சொல்வதே மீதிக் கதை!

ஹீரோ இமேஜிக்குள் இருந்து கொண்டு ஒரு வட்டத்திற்குள் நடிக்காமல் கதைக்கேற்றபடி நடித்து சபாஷ் வாங்கிவிடுகிறார் ஜெய். அதுவும் நண்பன் சந்தானம் காசில் அவரை ஊரில் நடந்த ஒரு இன்ஸிடண்ட்டை சொல்லி மிரட்டி மிரட்டியே தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் காட்சிகளில் செம காமெடி செய்திருக்கிறார். ப்ரியாவின் காதலுக்காக அவரது அம்மா ஊர்வசியை வீடியோ ஷûட் செய்ய சந்தானத்தை ஏற்பாடு செய்வதில் தொடங்கி, பூட்டிய வீடுகளில் ரகுமானுடன்  போய் பதறுவது வரை ஒவ்வொரு காட்சியிலும் செம நடிப்பு நடித்துள்ளார் ஜெய்!  கீப் இட் அப் ஜெய்!

நாயகி ப்ரியா, காமெடி சந்தானம், வில்லன்கள் ரகுமான், சம்பத், தலைவாசல் விஜய் உள்ளிட்டோருடன் ஊர்வசி, ரோகினி, சண்முகராஜேஸ்வரன்,  காவல் அதிகாரியாக வரும் இப்பட தயாரிப்பாளர் ஆர்.ரவீந்திரன் உள்ளிட்ட அனைவரும் பாத்திரத்திற்கேற்ற பன்ச் தேர்வு!

ஐ.அஹமத்தின் எக்ஸ்பிரஸ் கதை, திரைக்கதை, இயக்கத்திற்கு வலு சேர்த்திருக்கின்றன. ஆர்விந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும், யுவன் சங்கர்ராஜாவின் ஒளிப்பதிவும் இந்த இரு கதையிலும் லட்சுமிராயினும் சமீபத்தில் வந்த முத்திரையின் சாயல் தெரிவதும், படங்களும் க்ளைமாக்ஸை முன்கூட்டியே யூகிக்க முடிவது மட்டுமே பலவீனம். எந்த இங்கிலீஷ் படத்தின் உள்டாவோ!

 "வாமனன்' : "வசீகரன்!'


..............................................

விகடன்  விமர்சனம்


ஒரு சாதாரண இளைஞன்... அசாதாரணச் சூழ்நிலை.. அப்புறம் என்ன.... எடுக்கும் அவதாரம்தான் வாமனன் !

நடிகனாகும் ஆசையில் சென்னைக்கு வந்து கண்ணில் படும்  விநோத மனிதர்களின் மேனரிசங்களைப் படித்துத் திரிகிறார் ஜெய். மாடல் லட்சுமிராய் நடிக்கும் ஒரு விளம்பர ஷூட்டிங்கின் போது யதேச்சையாக கேமராவில் பதிவாகிறது ஓர் அரசியல் கொலை. போலீஸ் கமிஷனருக்குத் தகவல் சொல்ல முற்படும் இயக்குனரும் கொலையாகிறார்.  அடுத்த சில தினங்களிலேயே லட்சுமி ராயும்  கொல்லப்பட, பழி விழுவதோ ஜெய் மீது.  போலீஸ் ஒரு பக்கம் துரத்த, வில்லன்கள் மறுபக்கம் துரத்த.. அந்த மகா கும்பல்களிடம் இருந்து ஜெய் எப்படித் தப்புகிறார் என்பது க்ளைமாக்ஸ்.

விறுவிறு திரைக்கதை காரணமாக முன்பாதியில் ரேஸ் கார் வேகம் காட்டுகிறார் அறிமுக இயக்குனர் அஹமது. ஆனால், பின்பாதி தொடங்கியதுமே பெட்ரோல்  தீர்ந்து டிராக்கிலிருந்து விலகித் தட்டு தடுமாறுகிறது படம்.

"தளபதிகள்'' பாணியில் பில்ட் அப் பாடலுடன் என்ட்ரி கொடுத்தாலும், அதற்குப் பிறகு ரொம்பவே அடக்கி வாசித்து சாந்தப்படுத்துகிறார் ஜெய். ஹீரோவாக நினைத்துக்கொண்டு தனக்குத்தானே பேசிக் கொள்ளும் போதும், மப்பில் சந்தானத்திடம் தன் காதலியை கெட்ட வார்த்தைகளால் திட்டச் சொல்லும் இடங்களிலும் ஜெய் ஹோ! ஆக்ரோஷம் பொங்க வேண்டிய ஆக்ஷன் காட்சிகளில் மட்டும் அவரிடம் தேவை இன்னும் பல டிகிரி உஷ்ணம். (அதனால் தானோ என்னவோ அதற்கு இடம் கொடுக்காமல் அவரை ஓட விட்டுக் கொண்டே இருக்கிறார்கள் !)

முன்பாதி காமெடி கதகளி மூலம் அபாரமாக ஸ்கோர் செய்கிறது சந்தானம் & ஊர்வசி பார்ட்னர்ஷிப்.  ஜெய்யின் சதாய்ப்புகளுக்கு எல்லாம் செவி சாய்க்கும் பரிதாப நண்பனாகவும் அப்ளாஸ் அள்ளுகிறார் சந்தானம். (ஆச்சர்யமாக டபுள் மீனிங் டயலாக் இல்லாமல் !)

லட்சுமி ராய் மாடல் என்பதால் அவர் நீச்சலடிக்கும் காட்சிகள் பக்கா. ஆனால், சென்சிட்டிவ்வான ஒரு மரணத்தைப் பற்றிய தகவல் தெரிந்து கொண்டு, அதை ஒரு பொறுப்பான போலீஸ் அதிகாரியிடம் தெரிவிக்க முடியாமல்  திண்டாடுவதும், அதற்குள்ளாகவே அவர் கொலை செய்யப்படுவதும் மெகா லாஜிக் பொத்தல். ( இத்தனைக்கும் பரபரப்பான ஜர்னலிஸ்ட் நண்பரும் இருக்கிறார் !)

அறிமுக நாயகி பிரியா புதுமை இல்லாத பதுமை. ஆடல், பாடவல் அழுகையுடன் ஒதுங்கிக் கொள்கிறார். ""ஏதோ பெரிதாகத் திருப்பம் ஏற்படுத்தப் போகிறார் !'' என்று எதிர்பார்க்க வைத்துக்கொண்டே இருக்கும் ரஹ்மான் கேரக்டரும் இறுதியில் புஸ் ஆகிறது.

""ரோட்டுல பார்க்குற சாதாரண மனுஷங்ககிட்ட இருந்து நடிப்பு கத்துக்கணும் !'' என்று போகிற போக்கில் சந்தானம்  சொல்லும் வார்த்தைகளை கொலைப்பழி அளவுக்கா சின்சியரா  கடைபிடிப்பார் ஜெய் ?

""இணை கமிஷனராக இருந்தவர் கமிஷனர் ஆவது எப்படி ?  என்று எழும் கேள்வியை மறந்தாலும் ஒரு சிட்டி கமிஷனரை இந்தளவு கலாட்டாவாகக் காய்ச்சி இருப்பது டெரர் காமெடி.க்ளைமாக்ஸில் ஜெய் ""அந்த டேப்பை இவங்களும் கேட்குறாங்க''என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லி, பீகார் கடத்தல்காரர்களோடு  உள்ளூர் வில்லன்களைக் கோத்து விடும் இடத்திலும் ரஹ்மானைப் பற்றியே பற்ற வைக்கும் இடத்திலும் ""அட'' போட வைக்கிறது திருப்பம். ஆனால், அட்டைப் பெட்டிகளாக அடுக்கப்பட்டு இருக்கும் கோடவுனில் ""திருடன்-போலீஸ்'' விளையாட்டு கணக்காக டுமீல் டுமீல் என இருதரப்பும் சுட்டுக்கொண்டு மடியும்போது, சீரியஸ் படமா, சிரிப்புப் படமா என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கிறது.

படத்துக்கு  கலர்ஃபுல் ரிச்னெஸ் கொடுக்கிறது அரவிந்த் கிருஷ்ணாவின் கேமரா. ""ஏதோ செய்கிறாய்', "ஒரு தேவதை' பாடல்களில் யுவன் ஷங்கர் ராஜா ஈர்க்கிறார்.

""நான் நடிச்சுட்டு இருக்கறதுல ""வாமனன்'' மட்டும்தான் ஹிட் ஆகும்!'' என்று ஜெய் சொன்னதாக ஒரு சர்ச்சை எழுந்தது. உஷரா இருங்க பாஸ்!

விகடன் மார்க் : 40/100

.......................................


குமுதம் விமர்சனம்


ரோட்டில் ஒரு ஓரமாகப் போய்க்கொண்டிருக்கும் ஹீரோவை வில்லங்கம் தேடி வந்து புல்டோசரில் துரத்துகிற கதைகளின் சீசன் சீக்கிரம் முடிந்தால் தேவலை.

முதல்வர் நாற்காலிக்கான ரேஸில் நடக்கிற ஓர் உயர்மட்ட அரசியல் கொலை. அதற்குத் தற்செயலாக சாட்சியாகி, அடுத்தடுத்து கொலை செய்யப்படும் விளம்பர பட குரூப். யாருக்கோ வில்லன்கள் வைக்கும்  கண்ணிகளில் "வாலன்டரி'யாக கால் வைக்கிற வாமனன்... இப்படி உற்சாகமாக திரைக்கதையில் ஆரம்பக்கோடு போட்டவர்கள், துரத்தல்களை சுவாராஸ்யமாக்கி ஆக்ஷன் ரோடு போட மறந்து விட்டார்கள்.

நல்லவேளை, ஹீரோவாக முதன்முதலாய் தனிக்கச்சேரி நடத்தியுள்ள ஜெய்யிடம், "சுப்ரமணியபுரம்' தலையசைப்பு இல்லை. சினிமாவில் நடிப்பதற்காக நிஜவாழ்க்கையில் கேரக்டர்களை அப்சர்வ் பண்ணுகிற அலப்பரையும், விரும்பிய பெண்ணை "எஸ்' சொல்ல வைக்க போடுகிற குட்டிக்கரணங்களுமாக ஜெய் ஜெயிக்கிறார்.

அறிமுக ஹீரோயின் ப்ரியா மனதில் பசையாக ஓட்டிக்கொள்கிற இயல்பான அழகு. ஊர்வசி தமிழ் சினிமாவின் வழக்கமான லூஸூ அம்மாவாக வந்தாலும், சந்தானத்துடன் இணைந்து நடத்தும் சமையல் காமெடியில் சரவெடியாய் சிரிக்க வைக்கிறார். சென்டிமெண்டை அள்ளுவதற்காக ஜெய் சொல்லும் "உப்புகாப்பி' ஃப்ளாஷ்பேக் காமெடி சூயிங்கம்.

விளம்பர மாடலாக வரும் லட்சுமிராஜ் கவர்ச்சிக் கொலு நடத்திவிட்டு, பரிதாபமாய் செத்துப்போகிறார்.

டாப் லெவல் கொலைகளுக்கு அஞ்சாத வில்லன்கள், அப்பாவி விளம்பர மாடல் லட்சுமிராயிடமிருந்து ஆதாரத்தை கைப்பற்றுவதற்காக எக்கச்சக்கமாய் பதறுவதும் இன்டர்நேஷனல் வில்லன் ரேஞ்சுக்கு ஆள் அமர்த்துவதும்... ஏம்பா எந்தக்கடையில் அல்வா வாங்கினீங்க?

"அண்ணே அண்ணே' என ரகுமானுடன் ஒட்டிக்கொண்டு ஆளில்லாத வூடு புகுந்து லூட்டி அடிக்கும் ஜெய்க்கு தன்னை நொண்ணையாக்கி கொலைப்பழியில் அலையவிட்டதே அந்த அண்ணன்தான் என தெரியவரும் போது நமக்குள் "சீக்கிரம் முடிங்கடா' கதறல்.

ரகுமானும் ஜெய்யும் கட்டட உச்சியில் நடத்துகிற க்ளைமாக்ஸ் சண்டையும் அதை வாயைப் பிளந்துகொண்டு போலீஸ் வேடிக்கை பார்ப்பதும் "ச்சூச்சூ மாரி'யாய் முடிந்துவிட்ட சீரியஸ் காட்சிகள். இசை.... யுவனுக்கு என்னாச்சு? ரொமான்ஸ் காட்சிகளில் இருக்கும் உற்சாகத்தை ஆக்ஷன் அத்தியாயங்களில் தவறவிட்டது தான் அறிமுக இயக்குனர் அஹமதுவின் ஒரே தவறு.

வாமனன் : கோமாளிக்குள்ளன்வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

வாமனன் தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in