3.25

விமர்சனம்

Advertisement

ஒரு குப்பைக் கதை விமர்சனம்
தயாரிப்பு - பிலிம் பாக்ஸ்
இயக்கம் - காளி ரங்கசாமி
இசை - ஜோஷ்வா ஸ்ரீதர்
நடிப்பு - தினேஷ், மனிஷா யாதவ் மற்றும் பலர்
வெளியான தேதி - 25 மே 2018
நேரம் - 2 மணி நேரம் 16 நிமிடம்
ரேட்டிங் - 3.25/5

ஒரு நல்ல படத்தைக் கொடுக்க முயற்சிக்கும் இயக்குனர் தன் முதல் படத்திற்கு ஒரு குப்பைக் கதை எனப் பெயர் வைப்பதற்கும் ஒரு துணிச்சல் வேண்டும். சினிமாவில் பணக்காரத்தனமான, அழகுணர்ச்சியை வெளிப்படுத்தக் கூடிய, பார்ப்பதற்கு அழகாக இருக்கும் ஹீரோக்களைத்தான் அதிகம் காட்டுவார்கள்.

தமிழ் சினிமாவில் குப்பை அள்ளும் ஒரு இளைஞனைப் பற்றிய கதை ஒன்று படமாக வருவது அபூர்வமான ஒன்று. அனேகமாக இதுவே முதல் முறையாகக் கூட இருக்கலாம்.

இப்படி ஒரு தலைப்புடன், அழுத்தமான கதையுடன் தன் முதல் படத்தைக் கொடுத்த இயக்குனர் காளி ரங்கசாமியைப் பாராட்ட வேண்டும்.

மன்னிப்பதை விடப் பெரிய தண்டனை எதுவுமில்லை என்ற ஒரு கருத்தைச் சொல்லியிருக்கும் படம்.

சென்னை மாநகராட்சியில் குப்பை அள்ளும் வேலையைச் செய்பவர் தினேஷ். அவருக்கும் வால்பாறையைச் சேர்ந்த மனிஷா யாதவ்விற்கும் திருமணம் நடக்கிறது. தினேஷின் வேலை என்ன என்பதை மனிஷாவிடம் மறைத்து திருமணம் செய்து வைக்கிறார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் தினேஷ் குப்பை அள்ளும் தொழில் செய்பவர் என்பது மனிஷாவுக்குத் தெரிகிறது. இதனால், தினேஷை அவர் வெறுக்கிறார். பெற்றோரின் கட்டாயத்தால் தினேஷுடனேயே வாழ்கிறார் மனிஷா. இருப்பினும் மனிஷாவுக்காக ஒரு பிளாட்டிற்குக் குடி போகிறார் தினேஷ். அங்கு எதிர்வீட்டில் இருக்கும் சுஜோ மாத்யூ இவர்களுடன் நட்பாகப் பழகுகிறார். ஒரு சந்தர்ப்பத்தில் தன் குழந்தையுடன் சுஜோவுடன் ஓடி விடுகிறார் மனிஷா. துரோகம் செய்த மனைவியைத் தேடி அலைகிறார் தினேஷ். அவர் மனைவியைக் கண்டுபிடித்தாரா, ஓடிய மனிஷாவின் வாழ்க்கை என்ன ஆனது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

முன்னணி நடன இயக்குனராக இருக்கும் தினேஷ், இந்தப் படத்தில் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். நாயகன் என்று சொல்வதைவிட கதையின் நாயகன் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். அவருக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மையை நடிப்பில் மட்டும் வெளிப்படுத்தாமல் குரலிலும் வெளிப்படுத்தியிருக்கிறார். நடிப்பிலும் அவ்வளவு யதார்த்தம். இனி, இவரைத் தேடியும் பல யதார்த்தமான கதைகள் வந்து குவியும்.

மனிஷா இதுவரை நடித்த படங்களை விட இந்தப் படத்தில் அவ்வளவு சிறப்பாக நடித்திருக்கிறார். பெரிய கனவுடன் கல்யாணம் செய்து கொள்பவர், கூவம் கரையில் இருக்கும் கணவன் வீட்டிற்கு வரும் போதே அவருடைய கனவு கலைந்து போவதை முகபாவத்தில் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். அப்பாவி கிராமத்துப் பெண்ணாக மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார். கிளைமாக்சில் இவருடைய நடிப்பு சிறப்பு.

தினேஷின் அம்மாவாக நடித்திருக்கும் ஆதிரா, பாட்டியாக நடித்திருக்கும் கஸ்தூரி இருவரும் அந்தக் குப்பத்துப் பெண்களாகவே மாறிவிட்டார்கள். யோகி பாபு நகைச்சுவை இல்லாமல் நல்ல நண்பனாக மனதில் நிற்கிறார். மனிஷாவின் கள்ளக் காதலனாக சுஜோ மாத்யூ பணக்காரத் திமிரை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார். அவரை விட அவருடைய நண்பராக நடித்திருப்பவர் மனிஷாவைப் பணிய வைக்க முயற்சிக்கும் அந்த ஒரு காட்சியிலேயே வில்லத்தனத்தை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஜோஷ்வா ஸ்ரீதர் இசையில் பின்னணி இசை சிறப்பாக அமைந்துள்ளது. மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு யதார்த்தத்தை அப்படியே பதிவு செய்துள்ளது.

பெரிய நடிகர்கள் நடிகைகள் இல்லாமல் நல்ல கதையை மட்டும் படமாகக் கொடுக்க நினைக்கும் இம்மாதிரியான படங்களில் இருக்கும் சின்னச் சின்னக் குறைகளையும் பெரிதுபடுத்தாமல் இருப்பதே இம்மாதிரியான படங்களுக்குச் செய்யும் சிறப்பு.

இன்றைய பெண்களின் எதிர்பார்ப்பு, சில பணக்கார இளைஞர்களின் நடத்தை, நல்ல குடும்பத்தை நடத்த நினைக்கும் அப்பாவி இளைஞர்கள் என இன்றைய காலகட்டத்திற்குப் பொருத்தமான ஒரு படம் ஒரு குப்பைக் கதை.

ஒரு குப்பைக் கதை - மாணிக்கம்

 

பட குழுவினர்

ஒரு குப்பை கதை

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓