Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

பீட்சா-2 தி வில்லா

பீட்சா-2 தி வில்லா,Pizza 2 The Villa
20 நவ, 2013 - 17:52 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » பீட்சா-2 தி வில்லா

தினமலர் விமர்சனம்


பீட்சா வின் வெற்றியை தொடர்ந்து அதன் பகுதி-2 என விளம்பரப்படுத்தப்பட்டு வெளிவந்திருக்கும் திரைப்படம்! ஆனால், டெக்னீஷியன்களில் தொடங்கி, கதை, திரைக்கதை மற்றும் நட்சத்திரங்கள் வரை அதற்கும் இதற்கும் துளிகூட சம்பந்தம் இல்லை... என்பது வில்லாவின் பெரும் பலவீனம்!

கதைப்படி, இளம் எழுத்தாளர் அசோக் செல்வனின், அப்பா நாசர் ஓர் ஓவியர்! எழுத்து இலக்கியம்... என பையன் திரிவதால் அவன் மீது கெட்ட அபிப்பிராயம் கொண்டிருக்கும் நாசர், சொத்து, சுகம் எதையும் அசோக் செல்வனுக்கு மிச்சம் வைக்காமல் அகால மரணமடைகிறார். இதனால் காதலி சஞ்சிதா ஷெட்டியுடன் கவலையில் இருக்கும் அசோக்கிற்கு, அப்பா நாசர், பாண்டிச்சேரியில் தனக்காக ஒரு பங்களாவை விட்டு சென்றிருக்கிறார் எனும் விஷயம் குடும்ப வக்கீல் வாயிலாக எட்டுகிறது. குதூகலிக்கும் அசோக், காதலியிடம் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டு பாண்டி பறக்கிறார்(காரில் தான்...) அங்கு அந்த பெரும் பங்களாவில் பூட்டி சீல் வைக்கப்பட்டிருக்கும் ஒரு அறையில், அப்பா நாசர் பல வருடங்களுக்கு முன் வரைந்த சில ஓவியங்கள், தற்போது நடக்கும் சில விஷயங்களையும், எதிர்காலத்தில் நடக்க இருக்கும் சில விஷயங்களையும் சொல்வது போல் இருக்கிறது.

அந்த ஓவியங்களில் இருப்பது போல் தன் தாய்(நாசரின் மனைவி) கார் விபத்தில் இறந்து போனதையும், தான் எழுதிய ஒரு நாவலுக்கு விருது கிடைப்பதையும் பார்த்து திடுக்கிடும் அசோக் செல்வன், அடுத்தடுத்து அந்த ஓவியங்களில் வரையப்பட்டிருக்கும் விஷங்களை பார்க்கிறார். அதில், தன் காதலி சஞ்சிதாவை தானே கொல்வது போலவும், தான் ஒரு தீ விபத்தை ஏற்படுத்தி அந்த பெரும் பங்களாவிலேயே தற்கொலை செய்து கொள்வது போலவும் காட்சிகள் தீட்டப்பட்டிருக்க, கடுப்பாகும் அசோக் எடுக்கும் முடிவு, சஞ்சிதாவின் நிலை இதெல்லாம் தான் வில்லாவின் விறுவிறுப்பான க்ளைமாக்ஸ்!

புதுமுகம் அசோக் செல்வனில் தொடங்கி நாசர், சஞ்சிதா ஷெட்டி, க்ளைமாக்ஸில் வரும் எஸ்.ஜே.சூர்யா(ரொம்ப நாளைக்கு அப்புறம்...) வரை ஏழெட்டு பாத்திரங்கள் தான். எல்லோருமே தங்கள் பங்கை கனகச்சிதமாக செய்திருக்கின்றனர். அதேமாதிரி சந்தோஷ் நாராயணனின் மிரட்டலான பின்னணி, தீபக்குமாரின் இருட்டிலும் ஒளிரும் திகிலில் மிளிரும் ஒளிப்பதிவு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள் இருந்தும் தீபனின் இயக்கத்தில், கரண்ட் கட் ஆன பிறகும் பாடும் பழங்கால கிராமபோன், திடீர் வில்லியாகும் சஞ்சிதா, வலிய திணிக்கப்பட்ட சஸ்பென்ஸ், திரில்லர்கள் உள்ளிட்ட பலவீனங்கள் வில்லாவை எதிர்பார்த்த அளவிற்கு நல்லா - இல்லா என சொல்ல வைக்கின்றன!

பேய், பிசாசு, பில்லி, சூனியம்... இவற்றையெல்லாம் நெகடீவ் தாட்ஸ் என ஆங்கிலத்தில் புரியாத மாதிரி தெரியாத மாதிரி சொல்லி, ஆனந்தபுரத்து வீடு படத்தினை வேறு மாதிரி எடுத்திருப்பதால், வில்லாவை ஆனந்தபுரத்து வீடு படத்தின் பகுதி-2 என வேண்டுமானால் சொல்லலாம்! பீட்சாவிற்கும், வில்லாவிற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை!

மொத்தத்தில், வில்லா - கவிழ்ந்த குல்லா!


----------------------------------------------------------------------------------



நமது தினமலர் இணையதளத்தின் சினிமா பகுதியில், பல படங்களின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சில வாசகர்கள் தங்களது பிளாக்குகளில் திரைப்படங்களின் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, வாசகர்களின் விமர்சனங்களும் தினமலர் இணையதள சினிமா பகுதியில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...

வாசகர் சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்

அவரது பிளாக் முகவரி : www.adrasaka.com


ஹீரோ ஒரு க்ரைம் நாவல் எழுத்தாளர். அவரோட அப்பா ஒரு ஓவியர். சில பெயிண்ட்டிங்க்ஸ் எல்லாம் வரைஞ்சு ஒரு வீட்டுல வெச்சிருக்கார். அந்த ஓவியங்கள்ல எதிர் காலத்தில் நடக்கப்போகும் சம்பவங்களை விவரிப்பது போல் சில கலெக்ஷன்ஸ் இருக்கு. ஹீரோவோட அம்மா விபத்தில் இறப்பது போல் ஒரு ஓவியம். அந்த ஓவியம் வரைஞ்ச அடுத்த வருசம் அம்மா டெட். ஹீரோ நாவல் எழுதுனதுக்காக அவார்டு வாங்குவது போல் ஒரு ஓவியம் அதே போல் ஹீரோ அவார்டு வாங்கறார்.

இந்த மாதிரி சில சம்பவங்கள் ஓவியங்கள்ல இருப்பது போலவே ஹீரோ வாழ்க்கைல நடக்குது. ஹீரோவோட அப்பா பிஸ்னெஸ்ல லாஸ் ஆகி கோமா ஸ்டேஜ்ல படுத்து செத்துடறாரு. ஹீரோவுக்கு தற்செயலாக வில்லா அப்டிங்கற வீட்டைப்பத்தி தகவல் கிடைக்குது. அது அவரோட அப்பா வாங்குன வீடுதான், ஆனா ஏதோ சில காரணங்களுக்காக அந்த வீட்டைப்பற்றின தகவல்களை மறைச்சுட்டாரு . அந்த வீட்டில் இதுக்கு முன்னால வாழ்ந்தவங்கள்ல ஒரு ஆள் ஒரு குழந்தையை நர பலி கொடுத்திருக்காரு. அதனால கூட இருக்கலாம்னு ஹீரோ நினைக்கறாரு.

ஹீரோவோட அப்பா வரைஞ்ச ஓவியக்கலெக்ஷன்ல ஹீரோ சாவது போலவும், ஹீரோவோட லவ்வரை ஹீரோவே கொலை செய்வது போலவும் இருக்கு. ஹீரோ அதைத்தடுக்க எடுக்கும் நடவடிக்கைகள் வெற்றியா? தோல்வியா? என்பது க்ளைமாக்ஸ்.

விஜய் சேதுபதி ஹீரோவா நடிச்ச பீட்சா செம ஹிட் ஆனதால், அதே ஃபார்முலாவில் பெரும்பாலான காட்சிகள் ஒரே வீட்டில் எடுக்கப்பட்ட தமிழ் சினிமாவுக்கு மாறுதலான த்ரில்லர் கதை கொண்ட படம். ஹீரோவா அசோக் செல்வன். கச்சிதமான நடிப்பு. அவர் ஏன் படம் முழுக்க இறுக்கமான முகத்துடன் வர்றார்னு தெரியலை. அப்பப்ப ஜாலியா இருப்பது மாதிரி காட்டி இருக்கலாம்.

ஹீரோயின் சஞ்சிதா ஷெட்டி. ஹீரோவை விட அதிக ஸ்கோப் உள்ள கேரக்டர் . இன்னும் நல்லா பண்ணி இருக்கலாம். நாசர் ஹீரோவுக்கு அப்பா கேரக்டர். ஆனா அதிக வாய்ப்பில்லை. பின்னணி இசை பிரமாதம் என சொல்ல முடியாவிட்டாலும் ஓக்கே லெவல்.

பீட்சா 2 -வில்லா - முதல்பாதி ஸ்லோ திரைக்கதை, அபாரமான க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்ஸ், கச்சிதமான இயக்கம்.

சி.பி.கமெண்ட் - த்ரில்லர் மூவி, சஸ்பென்ஸ் பட விரும்பிகள் பார்க்கலாம். தேவையற்ற ரத்தம், கோரக்காட்சிகள் எதுவும் இல்லாத படம். எதுக்கு யு/ஏ, யு சான்றே கொடுத்திருக்கலாம். பெண்களும் ரசிக்கும் வண்ணம் இருக்கு. ஏ சென்டர்களில் மட்டும் சுமாரா ஓடும். பீட்சா படம் அளவு அனைத்து ரசிகர்களிடம் போய்ச்சேராது.


------------------------------------------------------------------------


குமுதம் திரைவிமர்சனம்



ஒரு பேய்வீடு. அங்கே நிறைய ஓவியங்கள் இருக்கின்றன. அந்த ஓவியத்தில் இருப்பது அத்தனையும் நிகழ்கிறது. ஹீரோ தாயின் விபத்து, தந்தையின் மரணம், ஏன் ஹீரோ தீயில் எரிந்து விடுவான் போன்று எல்லாமே நடக்கிறது. அந்த வீட்டில் என்ன பயங்கரம்? தீர்வு கிடைத்ததா இல்லையா? இதுதான் வில்லா!

பேய் படம் என்றால் ரத்த வெள்ளம், தலைவிரியாட்டம், திடுக் பி.ஜி.எம்., பய ஓட்டம் என்ற விதிகளை எல்லாம் உடைத்து கொஞ்சம் நம்பும்படியாக எடுத்திருப்பதைப் பாராட்டலாம். ஆனால் "பீட்சா வெற்றியை புத்திசாலித்தனம் என்று நினைத்து தலைப்பில் பயன்படுத்திக் கொண்டிருப்பதுதான் பெரிய அபத்தம்.

பீட்சா படத்தின் தொடர்ச்சியோ, அதில் இருந்த நடிகர்களோ, ஏன் அதன் விறுவிறுப்போ இதில் மிஸ்ஸிங். ஒரு காட்சியில் கதாநாயகி, ஷாப்பில் பீட்சா ஆர்டர் பண்ணுவதோடு சரி. இப்படியெல்லாமா ரசிகர்களை ஏமாற்றுவது? "வில்லா என்று மட்டும் தலைப்பு வைத்திருந்தாலே புது ரசிகர்களை ஈர்த்திருக்கும்!

மாதவனின் மலிவுப் பதிப்பு மாதிரி இருக்கிறார் ஹீரோ அசோக் செல்வன். திகில் படம் என்பதால் ஓவர் ஆக்டிங் செய்யாமல் இருந்திருப்பது நீட்! ஆனால் காதலியுடன் இருக்கும்போதுகூட "உர்ர்ர் ஏனோ?

சஞ்சிதா பளிச். கடைசியில் கதாநாயகனைக் கழற்றிவிட்டுப் போகிறார்.

இடைவேளை வரை படத்தை எதற்காக இத்தனை ஸ்லோவாய் எடுத்தார்களோ தெரியவில்லை. பயமோ, திகிலோ இல்லாததால் ரசிகர்கள் தியேட்டரில் "திகில் குரல் எழுப்பி கலகலக்க வைக்கிறார்கள்!

நாஸர் இதோ என்பதற்குள் அதோ போய்விடுகிறார்! எஸ்.ஜே. சூர்யாவும் அஃதே!

அந்த திகில் பங்களாவில் முன்னர் இருந்த ஒருவர் குழந்தையை நரபலி கொடுத்ததால்தான் தீய எனர்ஜி உண்டாகியிருக்கிறது என்பதை கண்டுபிடிக்கும் காட்சிகள் ரொம்ப வித்தியாசம். அட! டைரக்டர் யாருப்பா? (தீபன் சக்ரவர்த்தி) என்று தோன்றுவது அப்போது மட்டும்தான்.

வில்லா - பயமுறுத்தாத ஆவி!

குமுதம் ரேட்டிங் - ஓகே



வாசகர் கருத்து (13)

seran - chidambaram,இந்தியா
25 நவ, 2013 - 20:19 Report Abuse
seran வித்தியாசமான முயற்சிகளை உற்சாகபடுத்தலமே. நன்றி i
Rate this:
simbu - panruti  ( Posted via: Dinamalar Android App )
24 நவ, 2013 - 00:23 Report Abuse
simbu மொக்கை படம். ஐம்பது ரூபாய் காலி. யாரும் படம் பார்க்க வேண்டாம்
Rate this:
k.sundar babu - thirunelveli  ( Posted via: Dinamalar Android App )
23 நவ, 2013 - 19:02 Report Abuse
k.sundar babu மொக்க படம் போயிடாதீங்க
Rate this:
k.sundar babu - kadayanallur  ( Posted via: Dinamalar Android App )
23 நவ, 2013 - 18:59 Report Abuse
k.sundar babu மொக்க படம்
Rate this:
kalaivanan viji - Ariyalur,இந்தியா
22 நவ, 2013 - 11:09 Report Abuse
kalaivanan viji பரவில்ல பார்ட் 3 யாவது நல்ல பண்ணுக
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in